Published:Updated:

`அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு; விளைச்சல் முளைக்கும் பரிதாபம்!'- தொடர் சோகத்தில் தஞ்சை விவசாயிகள்

அறுவடை இயந்திரம்
அறுவடை இயந்திரம்

தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஒரே நேரத்தில் அறுவடைப் பணிகள் நடப்பதால் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சம்பா நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாட்டால் அறுவடைப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு
அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு

தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் காவிரி நதி நீா்ப் பங்கீடு பிரச்னை காரணமாக நெல் சாகுபடி பெரும் சவாலாகி வருகிறது. முப்போக சாகுபடி நடைபெற்ற இப்பகுதிகளில், தற்போது சம்பா சாகுபடி மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்டத்தில் மட்டும் நிகழாண்டில் 1.32 லட்சம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்றன. நெற் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி இருக்கும் நிலையில், அண்மையில் பெய்த மழையால் நெல் பயிர்கள் நிலத்தில் முழுவதுமாக சாய்ந்துவிட்டன. நிலத்தில் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கியிருப்பதால் மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

சே.மதியழகன்
விவசாயி
அறுவடை இயந்திர முகவர்
வைத்தீஸ்வரன்கோயில்
சே.மதியழகன் விவசாயி அறுவடை இயந்திர முகவர் வைத்தீஸ்வரன்கோயில்

பெரும்பாலான பகுதிகளில் அறுவடை இயந்திரங்களைக் கொண்டே நெல் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு, நிர்ணயிக்கப்பட்ட வாடகையைவிட கூடுதலாக தொகை கோரும் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் என அறுவடை சாா்ந்த பிரச்னைகள் பரவலாக காணப்படுகின்றன.

டயர் மிஷின் உதவியோடு அறுவடை செய்ய வேண்டியிருந்த வயல்கள் மழையால் வயல்கள் சகதியானதால் பெல்ட் டைப் மிஷின்களை வயலில் இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சேறுகண்ட வயல்களில் அறுவடை தொடங்கப்பட்டுள்ளதால் பெல்ட் டைப் செயின் டைப் மிஷின்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உட்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் அறுவடை மிஷின்களுக்காக காத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு
அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு

இதுகுறித்து விவசாயியும், நெல் அறுவடை இயந்திர முகவருமான மதியழகன் கூறியதாவது, ``ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை முடிந்த சில தினங்கள் ஒரே நேரத்தில் விவசாயிகள் அறுவடைப் பணிகள் மேற்கொள்ளுவதால் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு நிலவுவது இயல்புதான். இம்முறை சரியான நேரத்தில் மழையும், தட்டுப்பாடு இல்லாமல் காவிரி நீரும் உதவியதால் சம்பா சாகுபடி அதிக அளவில் நடந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஒரே நேரத்தில் அறுவடைப் பணிகள் நடப்பதால் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் அறுவடை இயந்திரம் வாடகை 1 மணி நேரத்துக்கு ரூ.3,000 வரை இருப்பதால் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் அதிக லாபம் தேடி பிற மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். தமிழகத்தில் விவசாயிகள் நலன் கருதி 1 மணி நேர இயந்திர வாடகையை குறைத்து நிர்ணயித்ததுதான் தட்டுப்பாட்டுக்கு காரணம்.

வயலில் விளைச்சல் சாய்ந்துள்ளதால் அறுவடைப் பணிகளை முடிக்க இயந்திரத்துக்குக் கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. இயல்பைவிட வாடகை இரட்டிப்பாக கொடுக்க வேண்டி இருப்பதால் விவசாயிகள் பெருமளவு நஷ்டம் அடைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. ஆனால், நெல்லை வயலிலே விட்டு விடவும் முடியாது. முடிந்தவரை அறுவடைக்கு உதவுகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு