Published:Updated:

ஆப்கான் அசல் பெருங்காயமும் வைரஸ் நோய்க்கு அருமருந்தும்!

மாத்தியோசி

பிரீமியம் ஸ்டோரி

முதல்முறை காபூல் வந்தது 1982-ம் ஆண்டு. அப்போது ரஷ்யாவின் மேற்பார்வையில் பாப்ரக் கர்மால் ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்தார். டம்மி பீஸ். ரஷ்யாதான் அங்கே எல்லாம். வருடாந்தர நியூஸ் பிரின்ட் பேப்பர் தேவைகளுக்கான டெண்டருக்காகச் சென்றேன். ரஷ்யன் நியூஸ் பிரின்ட் அண்டு ஸ்வீடிஷ் பல்ப் அண்டு பேப்பர் அசோசி யேஷன் (Russian Newsprint and Swedish Pulp & Paper Association) -க்கு நான்தான் இந்தியன் ஏஜென்ட். டெல்லியில் விமானம் ஏறும் முன்பே எல்லாம் நிச்சயமாகி இருந்தது. என்ன விலையில், எத்தனை டன், யார், யாருக்கு எத்தனை (ஊழல்) கமிஷன், எனக்கான லாபம் எல்லாமே முடிவாகி விட்டது. டெண்டர் நடைமுறைக்காக (Tender Formalities) போக வேண்டும். சின்ன கான்ட்ராக்ட் என்பதால் ரஷ்யர்கள் அதை என்னிடம் தள்ளிவிட்டார்கள். நான் சற்று வேறுமாதிரி. உலகம் சுற்றுபவர்கள் லண்டன், பாரீஸ், சிங்கப்பூர், டோக்கியோ என்று பெரிய நகரங்களை மட்டும் பார்த்திருப்பார்கள். நான் இதோடு பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, கென்யா, ருமானியா என்று சிறிய நாடுகளுக்கும் போயிருக்கிறேன்.

காபூலில் என் சகலதேவைகளையும் கவனித்துக்கொள்ள அமீன்ஸாய் என்ற தொழிலதிபர் இருந்தார். நாட்டின் பத்து பெரிய செல்வந்தர்களில் அவரும் ஒருவர். அவரது தனி விருந்தினர் விடுதியில் வாசம். ஒருவாரம் ஊரைச் சுற்றிப்பார்த்துவிட்டு, அம்மாவுக்கு அரைக்கிலோ பால் காயமும், குழந்தைகளுக்கு மார்க்கெட்டிலிருக்கும் அத்தனை பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு வகைகளைக் எடுத்துச் செல்ல வேண்டு மென்பது திட்டம். உங்களுக்குத் தெரியுமோ? இரு ஆண்டுகளுக்கு முன் ஏதோ காரணங் களுக்காக இந்தியாவுக்கான ஏற்றுமதியைத் தடுத்திருந்தார்கள். இந்தியாவுக்கு வரும் பால் காயத்தில் 95 சதவிகிதம் ஆப்கானிஸ் தானத்திலிருந்து வருகிறது. அந்தச் சமயம் பெருங்காய கம்பெனிகள் டி.வி-யில் மாமிகள் மூலம் பெருங்காயம் என்று சொல்லி விற்றது 95 சதவிகிதம் கோதுமை மாவு என்பது பலருக்குத் தெரியாது. இப்போதும் நாம் வாங்கும் கூட்டுப்பெருங்காயத்தில் (Compound Asafoetda) 95 சதவிகிதம் கோதுமை மாவும், 5 சதவிகிதம் பால் காயமும் உள்ளது. அந்த ஏற்றுமதித் தடையை விலக்கியதும் முதலில் இந்தியாவுக்கு ஏற்றுமதியான ஒரே பொருள், பால் பெருங்காயம்தான். எத்தனையோ மில்லியன் டாலர் விலையென்று சொன்னார்கள். என்னைப் போன்ற நாக்கு நாலு முழம் உள்ளவர்களும் நம்ம ஊர் ஊறுகாய், சாம்பார் ரசப் பிரியர்களும் காபூலிவாலாக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்’’ என்று ரசனையுடன் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகரும் எழுத்தாளருமான பாரதி மணி.

பாரதி மணி.
பாரதி மணி.

தருமமிகு சென்னையில் தரமான பதார்த்தங்கள் கிடைக்கும் இடங்களில் முக்கியமானது கோபாலபுரத்தில் உள்ள அமுதம் அங்காடி. விளக்கு வைக்கும் நேரத்தில் சென்றால் வித விதமான கார்களைக் காணலாம். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அன்றைய நாளில் முன்னாள் நடிகையோ, மூக்குக் கண்ணாடி போட்ட பிரபல எழுத்தாளர்களோ நம்முடன் சேர்ந்து மளிகைப் பொருள்களை வாங்குவார்கள். அதிகாரப் பீடத்தில் உள்ளவர்கள் வீடுகளுக்கு இந்த அங்காடி மளிகைப் பொருள்கள் செல்கின்றன என்று ஒரு முறை அங்கிருந்த ஊழியர் பெருமையுடன் சொன்னார்.

தரமான பொருள்களுக்குப் பெயர் பெற்ற இந்த அங்காடியிலேயே, ஆப்கான் பிரச்னையால் தற்போது பால் பெருங்காயம் கிடைப்பதில்லை. விதவிதமான டப்பாக்களில் கூட்டுப்பெருங்காயம்தான் உள்ளன. விலைக்குத் தக்கபடி 10, 20, 30 சதவிகிதம் பால் காயம் கலந்தது என்ற கூட்டுப்பெருங்காயம்தான் உள்ளன.

பெருங்காயச் செடி
பெருங்காயச் செடி


வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ பால் பெருங்காயத்தின் குறைந்த பட்ச விலை 15,000 ரூபாய். இவ்வளவு விலை கொடுத்து, பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதால், மசாலா நிறுவனங்கள் ஒரு யுக்தியைக் கடைப்பிடித்து வருகின்றன. கொஞ்சம் பால் காயம், நிறைய கருவேல மர பிசின் மற்றும் கோதுமை மாவைக் கலந்து கூட்டுப்பெருங்காயம் என்ற பெயரில் விற்பனை செய்கின்றன நிறுவனங்கள். சில நிறுவனங்கள் கோதுமைக்குப் பதிலாக விலை மலிவாகக் கிடைக்கும் மைதாவைப் பெருங்காயத்தில் கலக்கின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு. பால் காயம் எத்தனை சதவிகிதம் டப்பா உள்ளே உள்ளது என்று யாரும் ஆராய்ச்சிக் கூடத்துக்குக் கொண்டு சென்று கண்டுபிடிக்கப்போவதில்லை. இதனால், ஏதோ பிழைத்துப் போகட்டும் என்று கருணையுடன் நமக்கு விற்பனை செய்துவருகிறார்கள். இதைக் கண்டுபிடிக்க வேண்டிய உணவுப் பாதுகாப்புத்துறையின் கடமை உணர்ச்சி நாடறிந்தது.

பெருங்காயம்
பெருங்காயம்


சரி, பெருங்காயம் எதிலிருந்து கிடைக்கிறது. அதை நாம் விளைவிக்க முடியாதா? என்று தானே நினைக்கிறீர்கள்.

பெருங்காயத்தின் தாவரவியல் பெயர் `பெருலா அசஃபெட்டிடா’. ஆங்கிலத்தில் அசஃபெட்டிடா (Asafoetida) என்று அழைப்பார்கள். இது குட்டையாக வளரும் தாவரம். ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளில் மட்டும்தான் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. இந்த நாடுகளிலிருந்தே உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது. பெருங்காயச் செடிகள் ஐந்து ஆண்டுகளில் பூத்து அறுவடை பருவத்துக்கு வரும். அப்போது தண்டை வெட்டினால் அதிலிருந்து பிசின் வடியும். அந்தப் பிசின்தான் பால் பெருங்காயம். இதை மூலப்பொருளாக வைத்துக் கூட்டுப் பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது.

பெருங்காயம்
பெருங்காயம்

உலகில் விளைகின்ற பெருங்காயத்தில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் நாம்தான் பயன் படுத்திக்கொண்டிருக்கிறோம். நமக்குத் தேவையான பெருங்காயத்தை இதுவரை ஆப்கானிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். இதில் பெரும்பகுதி ஆப்கானிஸ்தானில் இருந்துதான் இறக்குமதியாகிறது. கோடிக்கணக்கான ரூபாய்க்கு இறக்குமதியாகும் பெருங்காயத்தை நாமே சாகுபடி செய்யலாம் என்று 1963-லிருந்து 1989 வரைக்குமான காலத்தில், ‘நேஷனல் பீரோ ஆஃப் பிளான்ட் ஜெனிடிக் ரிசோர்ஸ்’ அமைப்பு ஆராய்ச்சி செய்து பார்த்தது. பலன் பூஜ்யம்தான்.

2017-ம் ஆண்டு, இந்நிறுவனம் இமயமலைப் பகுதியில் பெருங்காயத்தைப் பயிரிடும் முயற்சியில் இறங்கியது. இந்த முறை ஆராய்ச்சி வெற்றி கிடைக்கவே, கடந்த ஆண்டு ஈரானிலிருந்து 6 வகையான பெருங்காய ரகங்களை வாங்கி, நாற்றுகளாக உருவாக்கி விவசாயிகளுக்குக் கொடுத்துள்ளது. இவை வளர்ந்து பலன் கொடுப்பதற்கு, இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அதன் பிறகே, பெருங்காயச் சாகுபடி இந்திய மண்ணில் வேகமெடுக்கும். அதுவரை, வெளிநாட்டுப் பெருங்காயம்தான், நம் காயத்தை (உடம்பை) காக்கப்போகிறது.

பெருங்காயச் செடி
பெருங்காயச் செடி

``அடடா! போட மறந்துட்டோமே!” என்று நினைக்க வைக்கும் இந்த மூக்கைத்துளைக்கும் மணம் கொண்ட பெருங்காயம், உடலுக்குச் செய்யும் மருத்துவ நன்மை பெரிதினும் பெரிது. பெருங்காயத்தின் மணத்தைக் கண்டு முகம் சுளித்த அமெரிக்கர், ஒருகாலத்தில் அதைப் ‘பிசாசு மலம்’ என ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸ் பல்லாயிரம் பேரை 1910-களில் பலி வாங்கியது. பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராகச் செயலுற்றதைக் கண்டறிந்து, பெருங்காயத்தைக் கழுத்தில் தாயத்து மாதிரி அவர்கள் கட்டித் திரிந்ததும், அதன்பின், அதற்கு ‘கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டதும் வரலாறு சொல்லும் செய்திகள்.

தைவானில் உள்ள ஆய்வாளர்கள் இந்தப் பெருங்காயம் பன்றிக்காய்ச்சலுக்குப் பயன்படும் அமாட்டடின்/சைமடின் வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தனர். அதன் பின், ஏன் இந்தப் பெருங்காயம் நல்ல மாத்திரைகளாக வரவில்லை என்ற செய்தி தெரியவில்லை. மருந்து அரசியல், காப்புரிமை மருத்துவ வணிகத்தில் சிக்கி, ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கலாம். நாம், இப்போது கொளுத்தும் வெயிலில், தினம் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டு அருந்தினால், உடலும் குளிரும், கால்சியமும் பெருகும், லாக்டோபேசில்லஸ் எனும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, வைரஸ் உருவாக்கும் நுண்ணுயிரியும் வாலைச் சுருட்டிக் கொண்டுவிடும்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், கன்றுக்குட்டி காய்ச்சல்... என இனி வருஷத்துக்கு நான்கு காய்ச்சல் வரக்கூடும். இயற்கையில் அவை வருகிறதா? அல்லது ஏதும் மருந்து கம்பெனி உருவாக்கி உலகச் சந்தையில் ஓட்டி விடுகிறதா என்பது தெரியவில்லை. இருந்தாலும் எந்த விஷ சுரத்துக்கும், நம்மைக் காத்துக்கொள்ள ஒரு சிட்டிகை பெருங்காயம், மோரிலோ/சாம்பாரிலோ/ரசத்திலோ தினம் சேர்ப்பதே பலனளிக்கக்கூடும். எனக்குத் தெரிந்து இந்த மாதிரி நல்ல விஷயங்கள் பர்கர், பீட்சா போன்ற வெளிநாட்டுக் குப்பை உணவுகளில் சேர்ப்பது கிடையாது’’ என்று சித்த மருத்துவர் கு.சிவராமன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

கு.சிவராமன்
கு.சிவராமன்

வைரஸ் நோய்களை அண்ட விடாமல் தடுக்கும் பெருங்காயத்தை நம்மையெல்லாம் படுத்தி எடுக்கும் கொரோனாவுக்கும் கூட வேலை செய்கிறதா? என்று இந்தச் சமயத்தில் ஆய்வு செய்து பார்ப்பது அவசியம். குத்து மதிப்பாக பார்த்தால், எந்த வைரஸ் வந்தாலும் பெருங்காயம் எதிர்ப்பு தன்மையுடன் செயல்படும் என்பது கண்கூடாகத் தெரிகிறது. பெருங்காயத்தின் பலனை அறிந்த மருந்து மாஃபியாக்கள் பெருங்காய டப்பாவைத் திறக்கவிடாமல் கூடச் செய்திருக்கலாம். யார் கண்டது! மருத்துவம், சமையலுக்கு மட்டுமல்ல, விவசாயத்திலும் பெருங்காயத்தின் பணி பெரியது. காய்க்காத மரங்களுக்குப் பெருங்காயத்தைத் தண்ணீரில் கலந்துவிட்டால், காய்த்துக் குலுங்குவதை பார்த்துள்ளேன். இதை பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்துகிறார்கள். இது குறித்த கட்டுரை, இந்த இதழில் இடம் பெறுகிறது. அதையும் மணக்க, மணக்கப் படியுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு