Published:Updated:

வேண்டும் கஞ்சி சாதம்... வேண்டாம் ஆஞ்சியோ சிகிச்சை!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

வேண்டும் கஞ்சி சாதம்... வேண்டாம் ஆஞ்சியோ சிகிச்சை!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

அந்த நிகழ்ச்சியின் மதிய விருந்து அறுசுவையுடன் இருக்கும் என்று தெரியும். ஆனால், அசர வைக்கும் ரசனையுடன் அற்புதமான உணவுகளாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் என்று தெரியாது. கோட் சூட் போட்ட கார்ப்பரேட் கம்பெனி கனவான்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அந்தக் கையேந்தி விருந்தில் (Buffet) அணிவகுத்து நின்றார்கள். நானும் அணிவகுப்பு வரிசையில் இணைந்து கொண்டேன்.

என் முறை வந்தபோது உணவுகளை நோட்டமிட்டேன். கேழ்வரகு களி, கம்பு ரொட்டி... என வண்ணமயமாகத்தான் இருந்தன. இதையெல்லாம் தாண்டி, ஒரு வஸ்து புதியதாக இருந்தது. அதை யாரும் சீண்டியதாகத் தெரியவில்லை. நிச்சயம் அது ஓர் அற்புத பண்டமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, அதன் அருகில் சென்றேன். பளீர் சீருடை அணிந்த பரிசாரகர், கரண்டி நிறைய அந்த உணவை அன்புடன் அள்ளி வைத்தார். அணிவகுப்பு நீளமாக இருந்தபடியால், அந்த உணவைப் பற்றி மேற்கொண்டு கேள்வி கேட் காமல், சுவைக்கத் தொடங்கினேன். தொட்டுக்கொள்ள நாரத்தங்காய் ஊறுகாயும் மசாலா நிலக்கடலையும் எடுத்துக்கொண்டேன். இரண்டு, மூன்று கவளம் சென்ற பிறகுதான் அந்த உணவின் பெயரை அறிந்து கொண்டேன். ஆனாலும், ஐயம் இருந்தது. ஆவலுடன் அந்தச் சீருடை பரிசாரகரிடம், ஐயா, இது என்ன உணவு? என்று பணிவாகக் கேட்டேன். ‘‘சவுத் இண்டியன் பொர்ஜி (South Indian Porridge)’’ என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, உணவு மேசை யிலிருந்த அட்டையைக் காட்டினார்.

விருந்தில்....
விருந்தில்....

எனக்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை. நான் நினைத்த அதே உணவுதான். ஆம், கஞ்சி சாதம்தான். என்ன கஞ்சி சாதத்துக்கு இவ்வளவு மகிழ்ச்சியா என்று கேட்கிறீர்களா? ஐந்து நட்சத்திர அந்தஸ்தில் நடக்கும் கையேந்தி விருந்தில் கஞ்சி சாதத்தைச் சேர்த்தவர்கள் நிச்சயம் உணவும் ரசனையும் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர் களாகத்தான் இருக்க முடியும்.

அறுசுவை விருந்தை முடித்த கையோடு, அந்த உணவுப் பட்டியல் தயாரித்தவர்களைத் தேடினேன். அப்போது கஞ்சி சாதத்தின் அருமைகளையும் இன்னும் கூடுதலாக அறிந்துகொண்டேன். அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் முக்கியமானவர் சுசித்ரா கே.எல்லா என்று சொன்னார்கள். இவர் வேறுயாருமல்ல, கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்த பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனர் கிருஷ்ணா எல்லாவின் மனைவி. இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருக்கிறார். கூடவே, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். இந்தப் பெண்மணி உள்ளிட்டவர்களின் கைவண்ணம் நிகழ்ச்சி வடிவமைப்பிலும் விருந்து உணவு வகைகள் தேர்விலும் இருந்துள்ளது.

விருந்தில்....
விருந்தில்....

சென்னையில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த ‘ஃபுட் புரோ 2022’ கண்காட்சி மற்றும் கருத்தரங்குக்குச் சென்ற போதுதான், ‘சோறு வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கலாம்; இதைக் குடிப்பதால் நீண்ட நேரம் சோர்வு இல்லாமல் பணி செய்ய முடியும். மலச்சிக்கல் மூலம் அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் சோறு வடித்த கஞ்சியைக் குடித்தால், உடனடி பலன் கிடைக்கும்; உடலில் உற்சாகம் கிடைக்கும்...’ என்பது போன்ற கஞ்சியின் மகத்துவம் உள்ளிட்ட இன்னும் பல அற்புதமான தகவல்களை அறிந்துகொண்டேன். வாய்ப்புக் கிடைக்கும் போது அதையும் பகிர்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு பசுமை விகடன் ஊடக ஆதரவு அளித்திருந்தது என்பது கூடுதல் சிறப்பு. ஒரு காலத்தில் நம் வீடுகளில் அனுதினமும் அருந்திய சோறு வடித்த கஞ்சியின் மகத்துவத்தை, இப்போது வெளிநாட்டினர் கொண்டாடி வருகிறார்கள். இதனால், இது நம் ஊர் ஐந்து நட்சத்திர உணவு விருந்து களிலும் இடம் பெறும் அளவுக்கு உயர்ந் துள்ளது. கடந்த சில இதழ்களாக நம்முடன் பேசி வரும் ‘மக்கள் மருத்துவர்’ பி.எம்.ஹெக்டேவும்கூட இந்த உணவைக் கொண்டாடுகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

‘‘இந்தியாவில் உள்ள பாரம்பர்ய மருத்துவ முறை மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பாரம்பர்ய மருத்துவ முறைகள் சிறப்பானவை தான். முன்பு நம் பாரம்பர்ய மருத் துவத்தின் பலத்தை அறியாதவனாக இருந்தேன். பிரிட்டிஷ் மருத்துவக் கவுன்சில் சொல்லிய ஓர் ஆய்வு முடிவு, என்னை உண்மையிலேயே வெட்கி தலைகுனிய வைத்தது. அதன் பிறகு, இந்த மண்ணின் மருத்துவ மகத்துவத்தைக் கற்கத் தொடங்கினேன்.

சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் இருக்கின்றன. அவற்றை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிரிட்டிஷ் மருத்துவக் கவுன்சில் சொல்லிய அந்த ஆய்வு முடிவு, என்னை வெட்கம் அடைய வைத்தது. அதாவது, நம் வீடுகளில் பயன்படுத்தும் சோறு வடித்த கஞ்சியில் உப்பு போட்டுக் குடிப்பது, உடலில் நீர் வற்றிப் போகாமல் பாதுகாக்கும் அருமருந்து என ஆதாரங்களுடன் சொல்லியிருந்தார்கள். இது போலக் காயங் களுக்குக் கட்டுப்போட தேன் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நம் விஞ்ஞானி கள்தான் மூலிகை மருத்துவத்தைப் பற்றிப் பேசுவதை அவமானமாக நினைக்கிறார்கள். நாம் பாரம்பர்ய மூலிகைகளை மீள் கண்டுபிடிப்புச் செய்து அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து பார்த்தால், உலக மக்கள் தொகையில் மிகவும் தேவை யுள்ள பெரும் பகுதியினருக்கு அது அருமருந்தாக அமையும். அதாவது, ஏழையிலும் ஏழையாக இருப்பவர்களுக்கு உடல் நலப் பராமரிப்புப் போய்ச் சேரும். அவர்களைத் தான் தொற்றுநோய்கள் மட்டுமன்றி ரத்தக்குழாய் நோய்களும், புற்றுநோயும் பெருமளவில் பாதிக்கின்றன. இந்திய மண்ணில் உதித்த யோகா என்ற அரிய உடல்நலக் கலையை நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை. மூச்சுப் பயிற்சியைச் செய்தாலே இதயம் சம்பந்தமான கோளாறுகள் உங்களை எட்டிப் பார்க்காது.

பி.எம்.ஹெக்டே, சுப்ரமணியன் சுவாமி
பி.எம்.ஹெக்டே, சுப்ரமணியன் சுவாமி


உலகின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் படித்த இதயவியல் நிபுணரான நான் சொல்லும் இந்த அரிய உண்மை இன்னும் பலரையும் தொடவில்லை. முன்பு நகர வாசிகள் மட்டுமே, ஆஞ்சியோ செய்து கொண்டேன், ஸ்டென்ட் வைத்துக் கொண்டேன் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இப்போது, கிராமப்புறத்தில் வசிக்கும் மக்களும், தங்கள் இதயத்தைக் கெடுத்துக்கொள்ளும் வேலையில் இறங்கி விட்டார்கள். ஆஞ்சியோ, ஸ்டன்ட் வைப்பதும் ஏமாற்று வேலைகளின் உச்சக் கட்டம் என்று நான் சொன்னால், நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம்; எல்லாம் பணம் பிடுங்கும் மருத்துவ மாஃபியாக்களின் கை வண்ணம். குடிநீர்க் குழாய்ப் பழுது பார்ப்பவர்கள்போல, இதயக் குழாய் அடைப்பைச் சரி செய்கிறேன் என்று கத்தி, கப்படாவைத் தூக்கிக்கொண்டு இதய மருத்துவர்கள் வரிசையாக நிற்கின்றார்கள்; உஷார்.

நண்பர்களே! இதயத்தில் அடைப்பு இருந்தால் தயவு செய்து அதை நீக்க வேண்டாம். ஸ்டன்ட் வைக்கிறோம், ஆஞ்சியோ பிளாஸ்டி மூலமும் பைபாஸ் மூலமும் அடைப்புகளை நீக்குகிறோம் என்று சொல்வதெல்லாம் மருத்துவத் துறையில் உள்ள ஊழல். நம் உடலே ஒரு நல்ல மருத்துவர் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். ஓர் இடத்தில் இதய அடைப்பு ஏற்பட்டால், வேறு பாதையில் ரத்தம் செல்ல இயற்கை ஏற்பாடு செய்துவிடும். இது இயற்கை நமக்குக் கொடுத்த வரம்.

இமயமலையில் உள்ள யோகிகள் நம்மை விட அதிக நாள்கள் உயிர் வாழும் உண்மை தெரியுமா? இதற்குக் காரணம், குறைந்த அளவு காற்றைச் சுவாசிக் கிறார்கள். இதனால், கூடுத லாக உயிர் வாழ்கிறார்கள். யோகா பயிற்சிகள் குறைவாகக் காற்றைச் சுவாசிக்க வைக்கும் கலை.

இதயம் வலிக்கிறது என்று வருந்தி வருபவர்களுக்கு மருந்துகளைவிடவும் நற்சொற்கள் நன்றாக வேலை செய்யும்.

இதை ஆய்வு மூலம் கண்டுபிடித் துள்ளார்கள். சயின்ஸ் டிரான்சேஷனல் மெடிசின் (Science Translational Medicine) என்ற மருத்துவ இதழில் இது சம்பந்தமான கட்டுரை யும் வெளிவந்துள்ளது. இந்த ஆய்வை செய்தவர்கள் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ்... உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகங் களைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள்தான்.

30 இதய நோயாளிகளைத் தேர்வு செய் தார்கள். அவர்களிடம் சக்திவாய்ந்த வலி நிவாரணியான மார்பின் (Morphine) விடச் சிறந்த மருந்து உங்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று மீண்டும் மீண்டும் மருத்துவர்கள் சொல்லியுள்ளார்கள். சில நாள்களில் இந்த நோயாளிகளின் உடல் நலனில் சிறந்த மாற்றம் கிடைத்தது. முன்பை விட இப்போது நலமாக இருப்பதாக நோயாளி களும் மகிழ்ச்சியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

உண்மையில், அந்த 30 நோயாளிகளுக்கும் கொடுக்கப்பட்டது வலிநிவாரணி மருந்து அல்ல. வெறும் வைட்டமின் மாத்திரைகள் தான். மருந்தைவிட மருத்துவர் சொல்லும் வார்த்தைகள் குணமாக்கும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. இதை மருந்து போலி நிகழ்வு (Placebo Effect) என்கிறார்கள். இது போலவே ஆஞ்சியோ செய்துகொண்டோம், ஸ்டென்ட் வைத்துக் கொண்டோம். இதனால் நலமாக இருப்போம் என்று நினைப்பதுகூட அவர்களுக்குத் தற்காலிக நிவாரணம் அளிக்கலாம்.

மற்றபடி இதயத்தைப் பொறுத்தவரைச் சரி செய்கிறேன் என்று அதன் உள்ளே கைவைத்தால், முன்பைவிடக் கோளாறுகள் மேலும் அதிகரிக்கும். ஆகையால், அவசியம் இல்லாமல் அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டாம். அப்படிச் செய்தால், முன்பை விட இதய வலி அதிகரிக்கவே செய்யும். மேலும், இதய அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மற்றவர்களைவிட 50 மடங்கு முடக்கு வாதம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்னும் பல கோளாறுகள் ஏற்படும். ஆகையால், நல்ல இதய மருத்துவரை அணுகினால், நிச்சயம் அறுவைசிகிச்சை செய்ய பரிந்துரை செய்ய மாட்டார். மாறாக யோகா பயிற்சிக்குச் செல்ல ஆலோசனை சொல்வார்.

இப்படித்தான் ஒரு முறை பிரபல அரசியல் கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி என்னைச் சந்திக்க வந்திருந்தார். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், 1998-ம் ஆண்டு அவர் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்ட நேரம்.

‘ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி படித்தேன். பிரபல அரசியல்வாதி யாக இருப்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. உடல் நலனிலும் அக்கறை செலுத்த முடிய வில்லை. இதனால் என் இதயம் பாதிக்கப் பட்டிருக்கலாம். ஆகையால், விரைந்து எனக்கு மருத்துவம் செய்யுங்கள்; உடனே என் இதயத்தில் உள்ள அடைப்பை நீக்க ஆஞ்சியோ செய்யுங்கள்’ எனத் தன் அருமை பெருமைகளைப் படபடவென்று சொல்லி முடித்து அறுவைசிகிச்சை செய்ய உத்தரவிட்டார்.

அவரை நன்றாகப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, ‘மிஸ்டர் சுவாமி... நீங்கள் ஆரோக்கியமாகவே உள்ளீர்கள். உங்களுக்கு ஓய்வு தேவை. அறுவைசிகிச்சை தேவை யில்லை’ என்றேன். அவ்வளவுதான், அவருக்கு மூக்கு மேல் கோபம் வந்துவிட்டது. ‘வெளிநாட்டில் படித்த ஹார்ட் ஸ்பெஷலிஷ்ட் என்று நம்பி வந்தேன். ஆனால், நீங்களோ, நான் நினைத்தது போல இல்லை...’ என்றெல்லாம் ஆங்கிலத்தில் கண்டபடி திட்டித் தீர்த்துவிட்டுச் சென்றார். பிறகு, வேறு ஒரு மருத்துவமனையில் ஆஞ்சியோ செய்துகொண்டார் என்பது வேறு கதை.

‘‘இதயம் வலிக்கிறது என்று வருந்தி வருபவர்களுக்கு மருந்துகளை விடவும் நற்சொற்கள் நன்றாக வேலை செய்யும்.’’

இந்த உலகில் உண்மையைச் சொன்னால், பெரும்பாலானவர்கள் கேட்க தயாராக இல்லை; அவர்கள் விரும்பும் வகையில் பூசி மெழுகி எனக்குப் பேசத் தெரியாது. நேர்படப் பேசுவது என் குணம். என் வார்த்தைகள் அத்தனையும் உண்மை. அதுவும் சுப்பிரமணியன் சுவாமி போன்ற மெத்தப் படித்த மேதாவிகள் எது உண்மை யான மருத்துவம்? எது வியாபார மருத்துவம்? என்று அறியாமல் உள்ளதைப் பார்த்தபோது எனக்கு வருத்தம் வரவில்லை. என் பணியை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொண்டேன்’’ என்று இதமாகச் சொல்கிறார் ‘இதய மருத்துவர்’ பி.எம்.ஹெக்டே.

‘‘இந்த நாட்டுக்கு, அதுவும் கிராமப் புறங்களுக்கு மருத்துவர்கள் தேவையில்லை. நர்ஸ் போன்ற மருத்துவப் பணியாளர்களே போதும்...’’ அதிரடியாகச் சொல்லி பல புதுமையான ஆலோசனைகளை முன் வைக்கிறார் ‘மக்கள் மருத்துவர்’ பி.எம்.ஹெக்டே.

அதை அடுத்த இதழில் பார்ப்போம்.