Published:Updated:

சித்த மருத்துவம்... மக்களுக்கான சொத்து!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

சித்த மருத்துவம்... மக்களுக்கான சொத்து!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

ஒரு முறை தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் நடைபெற்ற இயற்கை நல்வாழ்வு பயிற்சிக்குச் சென்றிருந்தேன். இது போன்ற முகாம்களில் எளிய அதே சமயம் ஆரோக்கிய மான உணவுகள்தான் வழங்கப்படும். அப்படித் தான், இந்த முகாமிலும் முதல் நாள் காலை உணவுகளைப் பரிமாறினார்கள்.

‘‘யோவ் என்னைக் குரங்குன்னு நினைச்சுக் கிட்டீங்களா, அவல் உப்புமாவும், வாழைப் பழத்தையும் கொடுக்கிறீங்க...’’ என்று சொல்லி விட்டு, உப்புமாவையும் வாழைப்பழத்தையும் தூக்கி எறிந்தார், முகாமுக்கு வந்திருந்த குண்டு மனிதர். உணவுகள் சிதறி அந்த இடமே, போர்க்களம் போல இருந்தது.

‘’காலையில எப்பவுமே ஹோட்டல்ல நாலு மாவு சாப்புடுவேன். அதுதான் வேணும்’’ என்று அடம்பிடித்தார் (தோசையை அந்தப் பகுதி ஹோட்டல்களில் ‘மாவு’ என்று விளிப்பது வழக்கம்).

முகாம் ஏற்பாட்டாளர்கள் வந்து, சமாதானம் செய்தார்கள். ஆனால், அவர் தோசைதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கடைசியில் ஆடுதுறை கடைத் தெருவுக்கு ஆள் அனுப்பி ஹோட்டலிருந்து தோசை வாங்கி வந்து கொடுத்த பிறகுதான், அமைதியானார். மூன்று நாளும் இவருடன் எப்படி இருப்பது என்று பலரும் அதிர்ச்சி யுடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந் தார்கள்.

அதற்குள் இன்னொரு கதையைச் சொல்லி விடுகிறேன். எனக்குத் தெரிந்த நண்பர் தன் இரண்டு சக்கர வாகனத்தை நான்கு மாதங் களுக்கு ஒரு முறை, தவறாமல் சர்வீஸ் செய்து வந்தார். இத்தனைக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன வாகனம் அது. பார்க்க புது வண்டிபோல பளபளவென்று இருக்கும். எதையும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். ஆனால், அவர் உடல் நலனில் மட்டும் அக்கறை செலுத்த மாட்டார். தன் இருசக்கர வாகனத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட தன் உடல் நலனுக்குக் கொடுக்க மாட்டார். மனித உடலும் ஒரு வாகனம்தானே. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டபடியால், ஒரு நாள் உடல் நலன் குன்றிப்போனது. இப்போது, தன் வாகனத்தைப் போல, உடலையும் பேணிக் காக்க வாழ்வியல் நெறிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கி யுள்ளார். நம்மில் பலரும் இவரைப்போல தான், உடல் நலனில் அக்கறையில்லாமல், பாதிப்பு வந்த பிறகுதான் விழித்துக் கொள்கிறோம். வாகனங்களுக்குச் சர்வீஸ் சென்டர் போல, மனித உடம்புக்கு சர்வீஸ் செய்யும் இடம்தான் இயற்கை நல்வாழ்வு பயிற்சி முகாம்கள். ஒரே ஒரு முகாமில் கலந்து கொண்டாலேகூட போதும். அங்கு கற்றுக் கொடுக்கும் நல்வாழ்வு முறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால், வாழ்நாள் முழுக்க நலமாக வாழ முடியும்.

சித்தர்கள் நாள் ஒழுக்கம் மற்றும் கால ஒழுக்கம் என்பதை நமக்கு வகுத்துக் கொடுத்துள்ளார்கள். நாள் ஒழுக்கம் என்பது நாம் காலையில் எந்த நேரத்தில் படுக்கை யிலிருந்து எழ வேண்டும் என்பதில் தொடங்கு கிறது. பல் துலக்குவது எப்படி, குளியல் முறை, யோகாசனம், உணவு, ஓய்வு என்று சொல்லி வைத்துள்ளார்கள். பற்களை உறுதிப்படுத்தும் மூலிகைகளால் பல்துலக்குவது, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, குளிக்கும்போது பயன் படுத்தும் மூலிகைப் பொடிகள், உடுத்தும் உடைகள், அருந்தும் பானங்கள், உணவு சமைக்க, பரிமாற ஏற்ற பாத்திரங்கள்... என வாழ்வியல் சார்ந்த தகவல்கள் அத்தனையும் சொல்லி வைத்துள்ளார்கள்.

சித்தர்கள் நோய் அணுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அழுத்த மாகச் சொல்லியுள்ளார்கள். இதைப் பின்பற்றாமல் விடும்போதுதான், நோய் வந்து துன்பத்தைக் கொடுக்கிறது. அதையும் தகுந்த மருத்துவர் மூலம் வெல்லும் வழியையும்,

“வேர்பாரு தழை பாரு மெல்ல மெல்லப் பற்ப செந்தூரம் பாரே” என்று பாடி வைத்துள்ளார்கள்.

தமிழ் இலக்கியத்தில் சித்தர் இலக்கியம் என்ற பிரிவு உள்ளது. இதைத்தான், சித்த மருத்துவக் கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைத்துள்ளார்கள். சித்த மருத்துவம் படிப்ப வர்கள் சித்தர் பாடல்களையும் அவர்களின் மருத்துவக் குறிப்புகளையும் கற்கிறார்கள். சித்த மருத்துவக் கல்லூரியில் பாடமாக இருப்பதால், அது மருத்துவம் படிப்பவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மண்ணில் வாழும் மக்களுக்கான சொத்து அவை. பற்பம், செந்தூரம் செய்வதைச் சித்த மருத்து வர்களிடம் விட்டுவிடுவோம். நாம் நலமாக வாழ சித்தர்கள் கூறிய நாள் ஒழுக்கம் மற்றும் கால ஒழுக்கம் போன்றவற்றை அனைவரும் கட்டாயம் கற்க வேண்டும். இதை மக்களிடம் கொண்டு செல்லத்தான் நல்வாழ்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


முன்பெல்லாம் மதுரையில் சர்வோதய அமைப்பைச் சேர்ந்த மகரிஷி அண்ணாச்சி, திருவண்ணாமலையில் காந்திய அமைப்பைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ரெட்டியார், ஆடுதுறை யில் இயற்கை மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த தர்மதுரை... போன்றவர்கள் நல்வாழ்வு பயிற்சி முகாம்களை, லாபம் நோக்கம் இல்லாமல் நடத்தி வந்தார்கள். இவர்கள் இயற்கை விவசாயம் செய்பவர்களாகவும், இயற்கை விவசாய ஆதரவாளர்களாகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் காலத்துக்குப் பிறகு, இந்த நற்பணியை வடலூர் வள்ளலார் அமைப்பினர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் என்பது சற்று ஆறுதலான தகவல்.

நல்வாழ்வு முகாம்களுக்கு மூன்று வகையான மனிதர்கள் வருவார்கள். அறுபது வயதைக் கடந்த முதியவர்கள் முதல் வகை. அலோபதி, ஹோமியோபதி... என்று பல பதிகளைப் பார்த்துவிட்டு, தீராத நோய் களுடன் வருபவர்கள் இரண்டாம் வகை யினர். என்னைப்போல உடல் நலனில் அக்கறைகொண்டு வருபவர்கள் மூன்றாம் வகை; இவர்கள் எண்ணிக்கை மிகவும் சொற்பம்தான்.

சரி, நல்வாழ்வு முகாம் கதைக்கு வருவோம். அந்தக் குண்டானவரைப் பார்க்கும்போதே, உடலில் பல கோளாறுகள் உள்ளதை அறிந்து கொள்ள முடிந்தது. பயிற்சி வகுப்பில் அவரால் பொருந்தி உட்கார முடியவில்லை. முதல் நாள் வகுப்பில், நோயின்றி வாழச் சித்தர்கள் கூறிய வாழ்வியல் நெறிகளான

‘‘தமிழ் இலக்கியத்தில் சித்தர் இலக்கியம் என்ற பிரிவு உள்ளது. இதைத்தான், சித்த மருத்துவக் கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைத்துள்ளார்கள்.’’1. இரவில் பசும்பாலையே அருந்த வேண்டும்.

2. எண்ணெய் தேய்த்து தலை முழுகும்போது வெந்நீரில்தான் குளிக்க வேண்டும்.

3. பகலில் உறக்கம் கூடாது.

4. இயற்கை உபாதைகளை நீண்ட நேரம் அடக்கக்கூடாது.

5. முதல் நாள் சமைத்த கறி, அமுதாக இருந்தாலும் உண்ணக் கூடாது.

6. பசிக்காமல் உணவு அருந்தக் கூடாது.

7. மந்தம் தரும் தயிரை இரவில் தவிர்க்க வேண்டும்.

8. உண்டபின் சிறிது தூரம் குறுநடை கொள்ள வேண்டும்.

9. உறங்கும்போது இடதுகையைக் கீழே வைத்து இடது புறமாகவே உறங்க வேண்டும்.

10 நெய்யை உருக்கியே உணவில் சேர்க்க வேண்டும்.

11. தயிரை நீர் மோராக்கியே உணவில் சேர்க்க வேண்டும் (இப்போது தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டு அதை மோர் என்று அழைக்கிறோம்).

12. தினமும் இளம் வெயில் உடலில் படும்படி இருக்க வேண்டும்.

13. கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கை (சேனைக்கிழங்கு) மட்டும் உண்ண வேண்டும்.

14. நீரை நன்றாகக் காய்ச்சியே அருந்த வேண்டும்...

என்பது போன்றவை குறித்து விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், அந்தப் பருமன் நண்பர் பயிற்சியில் ஒன்றாமல், பையில் எதையோ வைத்துக்கொண்டு கொறித்துக்கொண்டிருந்தார். தேநீர் இடை வேளையில், செம்பருத்திப் பூ தேநீர் கொடுத்தார்கள்.

‘‘கஷாயத்தைக் கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறீங்களா... எனக்கு பட்டர் பிஸ்கட்டும், காபியும் வேணும்’’ என்று உடல் குலுங்க மீண்டும் கர்ஜித்தார். வேறு வழியில்லாமல், பிஸ்கட்டும் காபியும் வாங்கி வந்து கொடுத்தார்கள். மதிய உணவின்போதும், இதே களேபரம்தான். ‘‘எங்க பண்ணையில வேலை செய்யுற ஆள்கூட, இதைச் சாப்பிட மாட்டான்’’ என்று தட்டில் இருந்த உணவுகளைக் கீழே கொட்டினார்.

கேழ்வரகு, குதிரை வாலி, தினை... போன்ற சிறுதானியங்கள் மூலம் நெய் மணக்க சாம்பார் சாதம், தயிர் சாதம், பலாப்பழ பாயசம்... என்று அறுசுவை விருந்து படைத் திருந்தார்கள். ஆனால், அந்த நண்பர் தனக்குப் பிடித்த பிரியாணி வேண்டும் என்று மரத்தடியில் சென்று உட்கார்ந்துவிட்டார். அப்புறம் என்ன? பிரியாணி வாங்கிக் கொடுத்தார்கள்.

மாலை நேர யோகா பயிற்சிகளை நாங்கள் செய்துகொண்டிருந்தபோது, பஜ்ஜி, போண்டா, மிக்சர்... என்று பை நிறைய தின்பண்டங்களை வாங்கி வந்து தின்று கொண்டிருந்தார் அந்தப் போஜன பிரியர். இரவு நேர உணவுக்கு ஆளைத் தேடியபோது, ‘‘போங்கய்யா. நீங்களும் உங்கள் சாப்பாடும். இப்படி ஏதாவது நடக்குமென்று தெரிஞ்சுதான், ஒரு கிலோ பிஸ்கெட் வாங்கிட்டு வந்தேன்’’ என்று சொல்லிவிட்டு, பிஸ்கெட்களைத் தின்றுகொண்டிருந்தார். முகாம் முழுக்க அவரைப் பற்றிய பேச்சாகத் தான் இருந்தது.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எல்லோரையும் எழுப்பினார்கள். அந்த நண்பர் வழக்கம்போல சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அதன் பிறகு, அவருக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. காலை உணவைச் சத்தமில்லாமல் சாப்பிட்டார். அடுத்த இரண்டு நாள்களும் பொட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்தார். கூடவே, தரைவிரிப்புகளை மடித்து வைப்பது, மூலிகை தேநீர் வழங்குவது, வயதானவர் களுக்கு உதவி செய்வது... என்று தன்னார்வ தொண்டராகவும் மாறிப்போயிருந்தார். முன்பு தூங்கி வழிவார்; எரிந்்து விழுவார். இப்போது துடிப்பாக இருந்தார். ஆளே மாறிப்போயிருந்தார். இதுபோன்ற முகாம்களில் என்ன மாதிரியான உணவுகள், பயிற்சிகள் வழங்கப்படும் என்று முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள். அதை அறிந்தவர்கள்தான் அங்கு வருவார்கள். எல்லாம் தெரிந்திருந்தும் குண்டு நண்பர் ஏன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்? என்ற கேள்வி எழுந்தது. அதற்கான விடை அவர் வாயிலிருந்தே வந்தது. மூன்றாம் நாள் முகாம் முடிவில், பங்கேற்பாளர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிரச் சொல்வது வழக்கம். அப்போது, முதல் ஆளாக வந்து பேச ஆரம்பித்தார், அந்தக் குண்டு நண்பர்.

அதை அடுத்த இதழில் சொல்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism