மயிலாடுதுறை மாவட்டம், ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஏழ்மையிலும், பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்த நிலையிலும் உயிர்க் காக்கும் மூலிகைச் செடிகள், பலவகையான கீரைகள், காய்கறிகள் பலவற்றையும் இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து மிக குறைந்த விலைக்கு விற்பனைச் செய்து வருகிறார் பாலகுரு. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த எடுத்துக்கட்டிச்சாத்தனூர் ஊராட்சியிலுள்ள ஆத்துப்பாக்கம் கிராமத்தில் வசிக்கிறார் பாலகுரு. இவர் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பராக பணிசெய்து வருகிறார். இவர் சிறு வயது முதலே மூலிகைச் செடிகள், கீரை வகைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்காக தன்னுடைய வீட்டின் பின்பகுதிலுள்ள சின்ன இடத்தில் வால்லாரைக் கீரை, நாட்டு வெற்றிலை, மிளகு, திப்பிலி, லவங்கம், பெரியா நங்கை, சிறியா நங்கை, கறுந்துளசி, மென்டோஸ், தூதுவளை, நொச்சி, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மூலிகைச்செடிகள் மற்றும் முளைக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை அகத்திகீரை உள்ளிட்ட பலவகை கீரைகள், கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரை, சுண்டைக்காய், மணத்தக்காளி போன்றவற்றை உற்பத்தி செய்கிறார். இதனைக் மிக குறைந்த விலைக்கும் விற்பனைச் செய்கிறார்.
இதுபற்றி பாலகுருவிடம் பேசியபோது, "எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்தின் மீது ஆசை. ரசாயன உரங்களால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், கீரைகள் மனித உடலுக்கு தீங்கு தருபவை. அதனை இயற்கை முறையில் நாமே உற்பத்தி செய்து நம்ம கிராம மக்களுக்கு நல்லது செய்தாலென்ன?.. என்ற எண்ணம் தோன்றியது.
அதன்படி வீட்டுக் கொல்லையில் 10 சென்ட் இடத்தில் மூலிகைச் செடிகளையும், காய்கறி பயிர்களையும், மண்புழு உரத்தையும் பயன்படுத்தி உற்பத்தி செய்து, லாப நோக்கம் இல்லாமல் விற்பனை செய்து வருகிறேன். இச்செடிகளில் பூச்சிகள் தென்பட்டாலும்கூட மீன் கழிவுகள், வெல்லம் கலந்து மட்க வைத்த கரைசலையே பூச்சிக்கொல்லியாக தெளிப்பேன். ரசாயன உரங்களை நான் பயன்படுத்தியதே இல்லை. பல ஊர்களிலிருந்தும் என்னிடம் மூலிகைச் செடிகள், காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். வீட்டில் வளர்க்க விருப்பப்படும் பலருக்கு நான் இலவசமாகவே மூலிகைச்சடிகள் வழங்கி அவற்றின் பயன்பாடுகளை சொல்வேன்.

என்னுடைய பணியைக் கண்ட ஒருவர் அவருக்கு சொந்தமான 20 சென்ட் இடத்தை எனக்குத் தந்தார். அதிலும் காய்கறி மற்றும் மூலிகைச் செடிகள் பயிர் செய்து வருகிறேன். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் எனக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் என்னால் எலக்ட்ரீசியன் வேலை செய்ய முடியவில்லை. தற்போது முழுமூச்சாக இத்தொழிலை செய்கிறேன். எனக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள். இத்தொழில் மூலம் மாதம் ரூ.8,000 தான் வருமானம் வரும்.
இருந்தாலும் மக்களுக்கு உன்னத பொருளை உற்பத்தி செய்து தருகிறோம் என்ற மனநிறைவு இருக்கிறது. தற்போது மாடித்தோட்டம் அமைத்து அதில் மூலிகை மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்ய வழிவகை செய்யும் தொழிலையும் தொடங்கியுள்ளேன். எல்லாவற்றுக்கும் மேலாக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் எனக்கு உதவி செய்தால் விஷமில்லாத காய்கறிகளையும் ,உயிர் காக்கும் மூலிகைச் செடிகளையும் என்னால் வழங்க முடியும்" என்றார்.