Published:Updated:

கனமழையால் அழுகும் குறுவை நெற்கதிர்கள்; காப்பீடும் இல்லாததால் தவிப்பில் விவசாயிகள்!

``இந்த ஆண்டு குறுவைக்கு பயிர் இன்ஷுரன்ஸ் திட்டம் செயல்படுத்தாமல் போனது, விவாயிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செய்த தவறுக்கு, விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்."

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், தொடர் கனமழையால் கீழே சாய்ந்தன. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார்கள். தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், ஒட்டுமொத்த மகசூலும் பாதிக்கப்பட்டு, கடுமையான நஷ்டம் ஏற்படும் எனவும், இந்த ஆண்டு குறுவை நெற்பயிர்களுக்கு பயிர் இன்ஷுரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படாததால், இழப்பீடும் கூட கிடைக்காது எனவும் கவலை தெரிவிக்கிறார்கள்.

File Pic
File Pic
மதுரை: கோடை மழையால் நாசமான நெற்பயிர்கள்... கலங்கும் விவசாயிகளுக்கு உதவுமா அரசு?

இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மிகுந்த உற்சாகத்தோடு குறுவை சாகுபடியில் தீவிரம் காட்டினார்கள். இதனால் இந்த ஆண்டு காவிரி டெல்டாவில் சுமார் 4.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இவை செழிப்பாக வளர்ந்து, தற்போது நெற்கதிர்கள் முதிர்ச்சி அடைந்து, அறுவடை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை இப்பகுதி விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களில், கடந்த இரு தினங்களாகப் பலத்த மழை பெய்ததோடு, வேகமாகக் காற்றும் வீசியது. இதனால் இப்பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த, குறுவை நெற்பயிர்கள் கீழே சாய்ந்து தண்ணீரில் கிடக்கிறது.

வயலில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் நெற்கதிர்கள் சாய்ந்து கிடப்பதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளார்கள். இதுகுறித்துப் பேசும் இப்பகுதி விவசாயிகள், ``கடந்த ஆண்டு நிவர், புரெவி புயல் அடிச்சதுனாலயும், சம்பா அறுவடை நேரத்துல பருவம் தவறிப் பெய்த மழையாலும் எங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டமாச்சு. இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக அமைஞ்சதுனால, ஓரளவுக்கு நிம்மதியோடு இருந்தோம். ஆனால், அந்த நிம்மதி நிலைக்காமல் போயிடுமோனுதான் பயமா இருக்கு. தொடர்ச்சியாக மழை பேஞ்சிக்கிட்டே இருந்தால். எங்களோட நெற்கதிர்களை கரை சேர்க்க முடியாது. முளைக்க ஆரம்பிச்சுடும். கடுமையான நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியதுதான். இந்த ஆண்டு குறுவைக்கு பயிர் இன்ஷுரன்ஸ் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தலை. இழப்பீடும் கிடைக்காது’’ எனக் கவலை தெரிவித்தார்கள். அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள விவசாயிகளுக்கு இந்த நிலை என்றால், அறுவடை செய்து, கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யக் காத்திருக்கும் விவசாயிகளின் நிலைமையும் பரிதாபமாக உள்ளது. தொடர்ச்சியாகக் கனமழை பெய்வதால் தங்களது நெல்மணிகளைப் பாதுகாக்க, மிகவும் சிரமப்படுகிறார்கள்.

ஜீவக்குமார்
ஜீவக்குமார்

குறுவை நெல் அறுவடையில் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து நம்மிடம் பேசிய வேளாண் செயற்பாட்டாளர் ஜீவக்குமார், ``டெல்டா மாவட்டங்களில் 50 சதவிகிதம் குறுவை அறுவடை முடிவடைந்துள்ளது, கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் காலதாமதத்தால், நெல்மணிகள் மழையில் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. மீதியுள்ள 50 சதவிகித நெற்பயிர்களை விவசாயிகள் வெற்றிகரமாக அறுவடை செய்து, கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்துவிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காற்றில் நெற்பயிர்கள் கீழே சாய்வதோடு, மட்டுமல்லாமல், கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் தொடர் மழையால், வேர் அழுகத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு குறுவைக்கு பயிர் இன்ஷுரன்ஸ் திட்டம் செயல்படுத்தாமல் போனது, விவாயிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செய்த தவறுக்கு, விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம்; தீக்குளிக்க முயன்ற 2 விவசாயிகள்; போராட்டத்தில் என்ன நடந்தது?

தொடர் மழையால் மகசூல் இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஏக்கருக்கு 40,000 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்’' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு