Published:Updated:

விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் நபார்டு வங்கி!

தோட்டத்தில் கார்த்திக் ராஜன்...
பிரீமியம் ஸ்டோரி
தோட்டத்தில் கார்த்திக் ராஜன்...

தெளிப்புநீர்ப் பாசனம்... மண்புழு உரம் தயாரிப்பு... அசோலா வளர்ப்பு...

விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் நபார்டு வங்கி!

தெளிப்புநீர்ப் பாசனம்... மண்புழு உரம் தயாரிப்பு... அசோலா வளர்ப்பு...

Published:Updated:
தோட்டத்தில் கார்த்திக் ராஜன்...
பிரீமியம் ஸ்டோரி
தோட்டத்தில் கார்த்திக் ராஜன்...

திட்டம்

லகின் பெரும் பிரச்னை காலநிலை மாற்றம். புவி வெப்பமாவதால் சூழலியல் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. அதில் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயம்தான். காலநிலை மாற்றத்தால் உலக அளவில் பல்வேறு சவால்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது, விவசாயம். அதிக வெப்பம், குறைவான மழை, பருவம் தப்பிய மழை போன்ற காரணங்களால், வளமான வயல்களெல்லாம் தரிசாகி வருகின்றன. இப்படிக் காலநிலை மாற்றத்தால் சிக்கல்களைச் சந்திக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் களத்தில் நிற்கிறது, தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி).

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டத்துக்குத் தேசிய செயலாக்க நிறுவனமாக நபார்டு வங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், அடாப்டேஷன் ஃபண்டு (Adaptation Fund) என்ற நிதி மூலமாக, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 20 நீர்வடிப்பகுதிகளில் பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளன. விவசாயிகள், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, தங்கள் விவசாய செயல்பாடுகளைத் தகவமைத்துக் கொள்வதுதான் திட்டத்தின் நோக்கம்.

விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் நபார்டு வங்கி!

தமிழகத்தில் தற்போது 10 திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சின்னக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டத்தை நபார்டு வங்கி செயல்படுத்தி வருகிறது. அய்யம்பாளையம் நீர்வடிப்பகுதியில் காலநிலை மாற்றத்துக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள, ‘ஸ்ரீசக்தி அறக்கட்டளை’யை மேலாண்மை நிறுவனமாக அனுமதித்துள்ளது, நபார்டு வங்கி.

அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜன், ஒரு காலத்தில் காய்கறி விவசாயி. தற்போது மழையில்லாத சூழ்நிலையில், கிணற்றில் இருக்கும் குறைவான தண்ணீரை வைத்து, தீவனச்சோளம் விதைத்து, மாடுகளை வளர்த்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவருக்கு, நபார்டு வங்கிமூலம் தெளிப்புநீர்ப் பாசன வசதி செய்து தரப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுகுறித்துப் பேசிய கார்த்திக் ராஜன், “எனக்கு அப்பா, அம்மா இல்லை. தாத்தா மட்டும்தான். ஐ.டி.ஐ முடிச்சிட்டு ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துல ஆர்வம். அதனால, வேலையை விட்டுவிட்டு தாத்தாவுக்குத் துணையா விவசாயம் பாக்க வந்துவிட்டேன். எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 150 தென்னை மரங்கள் இருக்கு. மீதி இடத்தில் மாடுகளுக்குத் தீவனம் போட்டிருக்கோம். ஒரு காலத்துல கத்திரிக்காய், தக்காளினு விளைஞ்ச நிலம்தான். இப்ப தண்ணியில்ல.

பாலசந்திரன்
பாலசந்திரன்

சில நாள்களுக்கு முன்னாடி, தீவனப்பயிருக்குக்கூட தண்ணி பாய்ச்ச முடியாததால, மாடுகளையும் குறைச்சிட்டோம். இப்போ மூணு பால் மாடுங்க மட்டும்தான் இருக்கு. பக்கத்துல சப்போட்டா மரங்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கேன். ரொம்ப கஷ்டமான சூழ்நிலையிலிருந்த சமயத்தில்தான் சக்தி டிரஸ்ட்ல இருந்து, நபார்டு வங்கி மூலமா தெளிப்புநீர்ப் பாசன அமைப்பை (ஸ்பிரிங்ளர்) போட்டுக் கொடுத்தாங்க.

ஸ்பிரிங்ளர் பாசனத்தில் 60 சென்ட் நிலத்தில் கோ-4 தீவனப்புல்லையும், 30 சென்ட் நிலத்தில் தீவனச்சோளத்தையும் போட்டிருக்கோம். முன்னாடி, வாய்க்கால் மூலமா தண்ணி பாய்ச்ச மூணு மணி நேரம் ஆகும். அதுக்குள்ள தண்ணி தீர்ந்து போயிடும். இப்போ ஒரு மணி நேரத்திலேயே வயல் முழுக்க தண்ணி பாய்ஞ்சிடுது. கோ-4 பசுந்தீவனம் சாப்பிடுவதால், மாடுகள் அதிகமா பால் கறக்குதுக. சக்தி டிரஸ்ட் மூலமா அசோலாவும் போட்டுக்கொடுத்திருக்காங்க. இனிமேதான் மாடுகளுக்கு அதைக் கொடுக்கணும். நபார்டு வங்கி உதவியால, எங்க நிலம் மறுபடியும் பசுமையா மாறிடுச்சு” என்றார்.

இதுபோலப் பல விவசாயிகளுக்குத் தெளிப்பு நீர்ப் பாசனம், கிணற்று நீர் உறிஞ்சு குழி, மண்புழு உரம் தயாரிப்புக் குழி, சாண எரிவாயுக் கலன், அசோலா வளர்ப்புத்திடல்… எனப்பல உதவிகளைச் செய்து வருகிறது, நபார்டு வங்கி.

தீவனப்பயிர்கள்...
தீவனப்பயிர்கள்...

இத்திட்டம் குறித்துத் திண்டுக்கல் மாவட்ட நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பாலசந்திரனிடம் பேசினோம். “நபார்டு வங்கி, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் நீர்ச்செறிவு மேலாண்மை முக்கியமான திட்டம். மழைநீரைச் சேமிக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும் உருவாக்கப்பட்ட திட்டம். திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 11 நீர்ச்செறிவு மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, 11,000 ஹெக்டேர் பரப்பு நிலங்கள் பயன்பெற்றுள்ளன. தற்போது பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். மாவட்டத்தில் 8 இடங்களில் பருவகால மாற்றத்துக்கான தகவமைப்புச் செறிவு மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் நபார்டு வங்கி!

திண்டுக்கல் மாவட்டத்தில் நபார்டு வங்கியின் நிதியுதவி மூலம் 14 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அவற்றில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குதல்-2020 திட்டமும் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம் ஆகிய பகுதிகளில் நபார்டு வங்கி மூலமாக 24.34 லட்சம் ரூபாய் மானிய உதவியுடன் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இதைத்தவிர, கிராம அங்காடி மற்றும் கிராமப்புறச் சந்தை உருவாக்குதல், கூட்டுப்பொறுப்புக்குழுக்கள், ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, வளம் சார்ந்த கடன் திட்டம், சிறுதொழில் பயிற்சி திட்டம் எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். தேவையுள்ள விவசாயிகள் எங்களை அணுகினால் உதவ காத்திருக்கிறோம்” என்று அழைப்புவிடுத்தார்.

தொடர்புக்கு: பாலசந்திரன், செல்போன்: 99406 15500, கார்த்திக் ராஜன், செல்போன்: 97506 86497

விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்!

சக்திஜோதி
சக்திஜோதி

க்தி அறக்கட்டளையின் செயலாளர் சக்திஜோதியிடம் பேசியபோது, “காலநிலை மாற்றத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்துக்கொடுத்த மாதிரிக் கேள்விகள் அடிப்படையில் அய்யம்பாளையம் பகுதி விவசாயிகளிடம் கலந்துரையாடினோம். கோடை உழவு, தெளிப்புநீர்ப் பாசனம், காலநிலை ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் ஆகிய செயல்பாடுகள் மூலமாகக் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் முறைகளை விவசாயிகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறோம். நாட்டுக்கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றை நபார்டு வங்கி வழிகாட்டுதலோடு செயல்படுத்தி வருகிறோம். இத்திட்டங்கள் மூலம், தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக விவசாயம் செய்யாமல் இருந்த விவசாயிகளுக்கு நீர் சிக்கன முறைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

தொடர்புக்கு, சக்திஜோதி, செல்போன்: 98652 81618