Published:Updated:

வந்தது மழைக்காலம்... கால்நடைகளைக் காக்கும் மூலிகை மருத்துவம்!

பராமரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
பராமரிப்பு

பராமரிப்பு

வந்தது மழைக்காலம்... கால்நடைகளைக் காக்கும் மூலிகை மருத்துவம்!

பராமரிப்பு

Published:Updated:
பராமரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
பராமரிப்பு

‘ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா’ இது கிராமங்களில் சொல்லப்படும் சொலவடை. அந்த அளவுக்கு மழைக்காலங்களில் கால்நடைப் பராமரிப்பு கடினமானது. மழை, பனி எனச் சூழல் மாற்றம் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைந்துவிடும். அதனால் மழைக்காலங்களில் வழக்கத்தைவிடக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

வந்தது மழைக்காலம்... கால்நடைகளைக் காக்கும்  மூலிகை மருத்துவம்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முறையான பராமரிப்பும் இல்லையென்றால் கால்நடைகளுக்கு சளி, காய்ச்சல், ஜன்னி, கழிச்சல், உடலில் புண் உள்ளிட்ட பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டு, விபரீதமான சூழல் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். மழைக்கால பாதிப்புகளிலிருந்து விவசாயிகள் தங்கள் ஆடு, மாடு, கோழிகளைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து கால்நடை மூலிகை மருத்துவர் புண்ணியமூர்த்தியிடம் பேசினோம். இவர் தஞ்சாவூரிலுள்ள மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது தேசிய பால்வள நிறுவனத்தின் மூலமாக மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், அஸ்ஸாம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலுள்ள அரசு பால்வள நிறுவனங்களில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு மூலிகை மருத்துவப் பயிற்சி அளித்துவருகிறார். மழைக்காலத்தில் மாடுகளைத் தாக்கும் நோய்கள், அவற்றைச் சமாளிக்கும் எளிமையான வைத்திய முறைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளைச் சொன்னார் புண்ணியமூர்த்தி. அவை, இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புண்ணியமூர்த்தி
புண்ணியமூர்த்தி

கதகதப்பான சூழல்

‘‘மழைக்காலங்களில் அதிகளவில் கொசுக்கள் உருவாகி மாடுகளைக் கடித்து, ஆழமான புண்களை உருவாக்கிவிடும். இந்தப் புண்கள் புரையோடி உயிருக்கே ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, கொசுக்களைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, கொட்டகைப் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆடு, மாடுகள் கட்டும் இடங்களில் ஈரம், சேறு, சகதி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப் புறங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் அந்திசாயும் நேரத்தில்தான் கொட்டகைக்குள் கொசுக்கள் அதிகளவில் படையெடுக்கும். எனவே, மாலை 6 மணியளவில் இரும்புச்சட்டியில் பாதியளவு மணலை நிரப்பி, அதில் சிறு துண்டுகளாகக் காய்ந்த விறகுகளைப் போட்டு நெருப்பு மூட்டி, நொச்சி, ஆடாதொடை, வேம்பு, எருக்கன் இலைகளைப் போட்டு மூட்டம் போட வேண்டும். சுமார் இரண்டு மணி நேரம் கொட்டகையிலேயே மூட்டம் இருக்க வேண்டும். இதனால் கொசுக்கள் தடுக்கப்படும்.

வந்தது மழைக்காலம்... கால்நடைகளைக் காக்கும்  மூலிகை மருத்துவம்!

பகல் நேரங்களில் மாடுகளைக் கொசுக்கள் தாக்காமலிருக்க, ஒரு மடல் சோற்றுக்கற்றாழை, 10 ஓமம் இலைகளை ஒன்றாகக் கலந்து அரைத்து நீர்க் கரைசலாக மாடுகளின் மேல் தடவலாம். மாடு தன் வால் மூலம் கொசுக்களை விரட்ட முடியாத பகுதிகளில் மட்டும் இதைத் தடவினால் போதும்.

கால்நடை மருத்துவர்களுக்கு மூலிகை மருத்துவப் பயிற்சி அளித்துவருகிறார். மழைக்காலங்களில் பொதுவாகக் கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

மேற்சொன்ன அளவு மூன்று மாடுகளுக்குத் தடவுவதற்குப் போதுமானது. சோற்றுக் கற்றாழை வாசனை இருந்தால் மாடுகள்மீது கொசுக்கள், ஈக்கள் மொய்க்காது. இதனை ஆடுகளுக்குத் தடவக் கூடாது. குளிர்ச்சி தாங்காது. சாரல், பனி, குளிர்ச்சி ஆகியவற்றால் கால்நடைகளுக்குச் சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும். எனவே கொட்டகை கதகதப்பாக இருக்க, கொட்டகையைச் சுற்றிலும் தார்ப்பாய்கள் அல்லது படுதா கட்டினால் நல்லது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நோய் எதிர்ப்புத்திறனை அதிகப்படுத்தும் வழிகள்

பொதுவாக, மழைக்காலங்களில் கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கும் விவசாயிகள் அனைவரும் தங்கள் பகுதியிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி, அவர்கள் பரிந்துரைக்கும் கோமாரி, துள்ளுமாரி, சப்பை, ஜன்னி மற்றும் கோழிகளுக்கு ஏற்படக்கூடிய கழிச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளைப் போட வேண்டும். தங்கள் பகுதியிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்புகொண்டு மழைக்கால நோய்த் தடுப்பு ஆலோசனைகளைப் பெறலாம். இவற்றோடு மேலும் முன்னெச்சரிக்கைத் தடுப்பு மருந்துகளாக மிக எளிமையாகக் கிடைக்கக்கூடிய மூலிகைகளையும் பயன்படுத்தலாம். நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்த 15 நாள்களுக்கு ஒரு முறை கீழ்க்காணும் அளவில் சோற்றுக்கற்றாழை கொடுக்க வேண்டும். ஒரு ஆட்டுக்கு 100 கிராம், மாட்டுக்கு 250 கிராம், கன்றுக்கு 150 கிராம் என்ற அளவில் வாய்வழியாகச் சோற்றுக்கற்றாழை கொடுக்க வேண்டும். மழைக்காலம் முடியும் வரை இதுபோல் கட்டாயம் கொடுக்க வேண்டும். அதன் பிறகும் தொடரலாம்.

வந்தது மழைக்காலம்... கால்நடைகளைக் காக்கும்  மூலிகை மருத்துவம்!

காய்ச்சல்

ஆடு, மாடுகளுக்குக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் தலா 10 கிராம் மிளகு, சீரகம், மல்லி ஆகியவற்றை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இதை வடிகட்டி எடுத்து, இவற்றோடு இரண்டு சின்ன வெங்காயம், இரண்டு பல் பூண்டு, ஐந்து வெற்றிலை, தலா இரண்டு கைப்பிடி பிரண்டை, முருங்கை இலை, நிலவேம்பு இலை, வேப்பங்கொழுந்து இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் 100 கிராம் நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 10 கிராம் கல் உப்புத் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

‘‘பகல் நேரங்களில் மாடுகளைக் கொசுக்கள் தாக்காமல் இருக்க, ஒரு மடல் சோற்றுக்கற்றாழை, 10 ஓமம் இலைகளை ஒன்றாகக் கலந்து அரைத்து நீர்க் கரைசலாக மாடுகளின் மேல் தடவலாம்.’’

கயிற்றை அவிழ்த்து, மாட்டின் தலையை நம் தோளின் உயரத்துக்கு உயர்த்திக்கொள்ள வேண்டும். மூன்று விரல்களால் கலவையை வழித்து, கல் உப்புத் தொட்டு, மாட்டின் நாக்கில் சிறிது சிறிதாகத் தடவி உள்ளே செலுத்த வேண்டும். இது ஒரு மாட்டுக்கு, ஒரு வேளைக்குரியது. இதுபோல் தினமும் இரு வேளை வீதம் மூன்று நாள்களுக்குக் கொடுக்க வேண்டும். கன்றுகளாக இருந்தால், மேற்சொன்ன அளவு, மூன்று கன்றுகளுக்கு ஒரு வேளைக்குரியது.

வந்தது மழைக்காலம்... கால்நடைகளைக் காக்கும்  மூலிகை மருத்துவம்!

ஆடுகளென்றால், மேற்சொன்ன அளவு ஐந்து ஆடுகளுக்கு ஒரு வேளைக்குரியது. ஏற்கெனவே சொன்னதுபோல் மூன்று நாள்களுக்கு இதுபோல் மூலிகை மருந்து தயாரித்துக் கொடுக்க வேண்டும். காய்ச்சலைப் போக்குவதற்கு மட்டுமல்ல, வருமுன் காப்போம் நடவடிக்கையாகவும் இதைப் பயன்படுத்தலாம். மழைக்காலம் மற்றும் குளிர்காலம் முடியும் வரை காய்ச்சல் தடுப்பு மருந்தாக வாரத்துக்கு இருமுறை இதைக் கொடுக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சளியுடன்கூடிய காய்ச்சல்

ஆடு, மாடுகளுக்குச் சளியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டால் அதைக் கட்டுப்படுத்த தலா ஐந்து கிராம் மிளகு, சீரகம், வெந்தயம், 10 கிராம் மஞ்சள், ஒரு பல் பூண்டு, தலா ஒரு கைப்பிடி துளசி மற்றும் முருங்கை, தலா இரண்டு இலைகள் தூதுவளை, ஆடாதொடை, ஓமவள்ளி ஆகியவற்றை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, அதோடு 50 கிராம் நாட்டுச்சர்க்கரை கலந்து நாக்கில் தடவ வேண்டும்.

இந்த அளவு ஒரு மாடு அல்லது நான்கு ஆடுகளுக்கு ஒரு வேளைக்குப் போதுமானது. தினமும் இரு வேளை வீதம் மூன்று நாள்களுக்கு இதுபோல் கொடுக்க வேண்டும். கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வராமல் தடுக்க, வாரம் ஒரு முறை அரிசி குருணையில் 50 கிராம் கீழாநெல்லி, ஐந்து கிராம் சீரகம் கலந்து 10 கோழிகளுக்குக் கொடுக்க வேண்டும். மழைக்காலம் முடியும் வரை கொடுக்க வேண்டும். அதன் பிறகும் தொடரலாம்.

புண்களை குணப்படுத்துதல்

மழைக்காலங்களில் ஆடுகளுக்குக் கால்களில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை குணப்படுத்த ஒரு கைப்பிடி துளசி, ஒரு கைப்பிடி குப்பைமேனி, நான்கு பல் பூண்டு, ஐந்து கிராம் மஞ்சள் ஆகியவற்றைக் கலந்து அரைத்து 100 மி.லி நல்லெண்ணெயில் வதக்கி, சூடு ஆறியதும் ஆடுகளின் குளம்பில் தடவ வேண்டும். இது ஐந்து ஆடுகளுக்கு இரண்டு நாள்களுக்குப் புண்களில் தடவ போதுமானதாக இருக்கும்.

உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளம்புகளைக் கழுவி, ஈரத்தைத் துடைத்து அதன் பிறகுதான் மேற்கண்ட மூலிகை மருந்தைத் தடவ வேண்டும். மாடுகளின் கால் குளம்புகளில் புண்கள் ஏற்பட்டாலும் இதே மருந்தைத் தடவலாம். மேற்சொன்ன அளவு ஒரு மாட்டுக்கு இரண்டு நாள்களுக்குத் தடவப் போதுமானது.

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பு முறை

வெள்ளைக்கழிச்சல் நோய் வராமல் தடுக்க, வாரம் ஒருமுறை அரிசி குருணையில் 50 கிராம் கீழாநெல்லி, ஐந்து கிராம் சீரகம் கலந்து 10 கோழிகளுக்குக் கொடுக்க வேண்டும். மழைக்காலம் முடியும் வரை கொடுக்க வேண்டும். அதன் பிறகும் தொடரலாம்’’ என ஆலோசனை வழங்கினார்.

தொடர்புக்கு, மருத்துவர் புண்ணியமூர்த்தி, செல்போன்: 98424 55833.

மூலிகை வைத்தியம்தான் கைகொடுக்குது!

மாடுகளுக்கு மூலிகை மருத்துவம் செய்துவரும் ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த தளவாய்ப்பேட்டையைச் சேர்ந்த சங்கீதம் செல்லகிருஷ்ணனிடம் பேசினோம். “எங்ககிட்ட 20 உருப்படி மாடுகள் இருக்கு. மூணு வருஷமா மூலிகை வைத்தியம் செஞ்சுட்டு வர்றோம். மாடு சினைப் பிடிக்கலைன்னா நாலு நாளுக்கு முள்ளங்கி, அடுத்த நாலு நாளுக்கு சோத்துக்கத்தாழை, அதற்கடுத்த நாலு நாளுக்கு முருங்கைக்கீரை, அடுத்த நாலு நாளுக்கு ஒரு கைப்பிடி பிரண்டைன்னு 16 நாள்களுக்குக் கொடுத்துவந்தா மாடுக உடனே சினைக்கு வந்திடுது.

சங்கீதம்
சங்கீதம்

அதேமாதிரி கன்னு போட்ட மாடுகளுக்கு கால்சியம் பற்றாக்குறை இருக்கும். அதுக்கு முருங்கைக்கீரையும், பிரண்டையும் தலா நாலு கைப்பிடி எடுத்து நாட்டுச்சர்க்கரை சேர்த்து அரைச்சுக் கொடுத்தா குணமாகிடும். செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம் இருந்தா 6 வெத்தலையையும் 10 மிளகையும் சேர்த்து அரை மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடக் கொடுத்தா உடனே குறைஞ்சிடும். எங்க அனுபவத்துல 99 சதவிகிதம் மூலிகை வைத்தியம்தான் கைகொடுக்குது. இந்த வைத்தியத்தை மழைக்காலம், வெயில்காலம்னு எல்லாக் காலத்திலேயும் செய்யலாம்” என்றார்.

தொடர்புக்கு, செல்போன்: 97880 08409

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism