Published:Updated:

மூலிகைகள், காய்கறிகள்... மரங்கள்... 20 ஏக்கரில் வியப்பூட்டும் வேளாண் காடு... ஆண்டுக்கு ரூ.20 லட்சம்!

கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...
பிரீமியம் ஸ்டோரி
கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...

முயற்சி

மூலிகைகள், காய்கறிகள்... மரங்கள்... 20 ஏக்கரில் வியப்பூட்டும் வேளாண் காடு... ஆண்டுக்கு ரூ.20 லட்சம்!

முயற்சி

Published:Updated:
கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...
பிரீமியம் ஸ்டோரி
கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள கானூர்புதூரில் அமைந்துள்ளது, ஶ்ரீவனவிருட்சா மூலிகைப் பண்ணை. வேளாண் காடாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்பண்ணையை விவசாயிகள், வேளாண் மற்றும் வனக்கல்லூரி மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள் எனப் பல தரப்பினரும் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

20 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து செழிப்பாக காட்சியளிக்கும் இப் பண்ணையைப் பார்வையிட ஒரு பகல்பொழுதில் சென்றோம். இதன் உரிமையாளர் தேவராஜன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று, பண்ணை முழுவதும் சுற்றிக் காண்பித்தார். வெளியில் வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்க... இங்கோ இதமான சூழல்... மரங்களிலிருந்து வீசிய குளிர் காற்றும், மூலிகைச் செடிகளில் இருந்து வியாபித்த வாசமும் நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...
கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...

சிறுகுறிஞ்சான், சித்திரத்தை, மஞ்சள் கரிசாலை, வெள்ளை கரிசாலை, தூதுவேளை, நித்யகல்யாணி, ஆடாதொடை, பிரண்டை, நொச்சி, எருக்கன் என ஆயிரத்துக்கும் அதிகமான மூலிகைச் செடிகள்... குமிழ்தேக்கு, தான்றிக்காய், மலைவேம்பு, ஈட்டி, சந்தனம், வெள்ளைக் கடம்பு, செம்மரம், கொய்யா, மா, பலா, அத்தி, தென்னை எனப் பல்லாயிரக்கணக்கான மரங்கள்... வெண்டை, கத்திரி, பாகல், புடலை, அவரை, தீவனப்புல், வாழை, துளசி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பசுமையைப் பறைசாற்றுகின்றன.

‘‘இந்த வேளாண் காட்டை உருவாக்குறதுக்கு முன்னாடி, பண்ணையில எங்க தண்ணி கிடைக்கும்னு ஏங்கித் தவிச்சு, மாத்தி மாத்தி 22 இடங்கள்ல ஆழ்துளைக் கிணறுகள் அமைச்சு ஏகப்பட்ட பணத்தை இழந்திருக்கேன். கடைசியா ஒரே ஓர் இடத்துல மட்டும் அதுவும் 1,200 அடி ஆழத்துல தண்ணி கிடைச்சது. சொன்னா ஆச்சர்யப்படுவீங்க.. இப்ப 100 அடி ஆழத்துலயே தண்ணி கிடைக்குது. இந்த 20 ஏக்கருமே முன்னாடி தென்னந்தோப்பா இருந்துச்சு. தண்ணி பற்றாக்குறையால பெரும்பாலான மரங்கள் பட்டுப் போயிடுச்சு. தென்னை சாகுபடியை கைவிட்டு வேற ஏதாவது பயிர் செய்யலாம்ங்கற முடிவுக்கு வந்துட்டேன். `இதை வேளாண் காடா உருவாக்கலாம்... அதுக்கு அதிகமா தண்ணி தேவைப்படாது... மழை தண்ணியிலயே செழிப்பா வளர்ந்துடும்’னு வனத்துறை அலுவலரா இருந்த என்னோட நண்பர் குமாரவேலு யோசனை சொன்னாரு.

கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...
கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...

அவர் சொன்ன யோசனை எனக்கும் சரினு பட்டுச்சு. தென்னையை அப்புறப்படுத்திட்டு, 2006-ம் வருஷத்துல இருந்து மரங்களும் மூலிகைகளும் வளர்க்க ஆரம்பிச்சேன். முதல்கட்டமா 10 ஏக்கர்ல வேளாண் காட்டை உருவாக்கினேன்’’ என்று சொன்னவர், இது குறித்த தகவல்களை விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

‘‘மண்ணை வளப்படுத்த பல தானிய விதைப்பு செஞ்சு, ஏக்கருக்கு 10 டன் வீதம் எரு போட்டேன். 10 ஏக்கர் பரப்புல மொத்தம் 5,000 மரக்கன்றுகள் நடவு செஞ்சேன். மரத்துக்கு மரம் 8-லிருந்து 15 அடி இடைவெளி இருக்கு. குமிழ்தேக்கு, மலைவேம்பு, சந்தனம், வேங்கை, மகோகனி, செம்மரம், ஈட்டி, பலாசு, புன்னை, தான்றிக்காய், கடுக்காய், அத்தி, விலா, வில்வம், மருதம் உட்பட இன்னும் பல வகையான மரங்கள் இங்க இருக்கு. இங்க 300 தென்னை மரங்களும் இருக்கு. இவை தவிர மா, பலா, கொய்யா, நெல்லி, பப்பாளி, மாதுளை, அவகோடா, சீத்தா, ராம்சீத்தா, நோனி, எலுமிச்சைனு பழ வகை மரங்களும் நிறைய இருக்கு.

கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...
கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...

இந்த 10 ஏக்கர்ல மொத்தம் 40 வகையான மரங்கள் இருக்கு. மரங்களுக்கு இடையில ஊடுபயிரா... சிறுகுறிஞ்சான், சித்திரத்தை, மஞ்சள் கரிசாலை, வெள்ளை கரிசாலை, தூதுவேளை, நித்யகல்யாணி, ஆடாதொடை, பிரண்டை, நொச்சி, எருக்கன் உட்பட 90 வகையான மூலிகைச் செடிகளைப் பயிர் பண்ணினேன். ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில மூலிகைச் செடிகள் இருக்கு. அதிக பராமரிப்பு இல்லாமலே இங்கவுள்ள மரங்களும் மூலிகைச் செடிகளும் செழிப்பா வளருது. அதிக அளவுல இலைதழைகள் உதிர்ந்து இந்த வேளாண்காடு முழுக்கவே வருஷம் முழுக்க மூடாக்கு இருக்கு. அதனால மண்ணுல ஈரப்பதம் தக்க வைக்கப் படுது. இலைதழைகள் மட்கி உரமாகி, மண்ணை வளப்படுத்திக்கிட்டே இருக்கு. இதனாலதான் இங்க இவ்வளவு மரங்களும் மூலிகைச் செடிகளும், கடுமையான வெயில் காலங்கள்லகூட பசுமையாவே இருக்கு. நிறைய மண்புழுக்கள் உருவாகியிருக்கு. என்னோட வேளாண் காடு, சோலைவனம் மாதிரி இருக்குறதுனால, சிட்டுக்குருவி, பச்சைக்கிளி, வெளவால், மயில் உட்பட ஏகப்பட்ட பறவைகள் இங்க வருது.

கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...
கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...

சந்தன மரங்களைப் பரவலாக்கம் செய்த பறவைகள்

15 வருஷத்துக்கு முன்னாடி, இங்க 2 சந்தன மரக்கன்றுகள்தான் நடவு செஞ்சேன். ஆனா, இப்ப 300 சந்தன மரங்கள் இருக்கு. பறவைகளாலதான் இந்தப் பரவலாக்கம் நடந்திருக்கு. சந்தன பழங்களைச் சாப்பிட்டு அங்கங்க பறவைகள் போட்ட எச்சத்துல விதைகள் முளைச்சு நிறைய சந்தன மரங்கள் உருவாகி இருக்கு.

கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...
கழுகு பார்வையில் கண்ணைக் கவரும் வேளாண் காடு...

இடுபொருள்கள்

மாசம் ஒரு தடவை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் ஜீவாமிர்தத்தைப் பாசனநீர்ல கலந்து விடுவேன். மூணு மாசத்துக்கு ஒரு தடவை 500 லிட்டர் தண்ணீர்ல 10 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து பாசனநீர்ல விடுவோம். அவ்வளவுதான் வேற எந்த வித பராமரிப்பும் கிடையாது.

அத்தி
அத்தி

மீதி 10 ஏக்கர்

இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு 20 ஏக்கர். இதுல 10 ஏக்கர்ல மட்டும்தான் கடந்த 16 வருஷமா மரங்களும் மூலிகைகளும் வளர்த்துக்கிட்டு இருந்தேன். மீதி 10 ஏக்கர்ல நிலக்கடலை, எள்ளு, உளுந்து சாகுபடி செஞ்சு கணிசமான வருமானம் எடுத்துக்கிட்டு இருந்தேன். அதைச் சமீபத்துல கைவிட்டுட்டேன். வேளாண் காட்டை விரிவுபடுத்தணும்ங்கற ஆசையில, 6 ஏக்கர்ல இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, தலா 500 சந்தனவேம்பு, செம்மரம், தேக்கு, பலா, கருங்காலி மரக்கன்றுகள் நடவு செஞ்சேன். இப்ப அதுவும் நல்லா செழிப்பா வளர்ந்துகிட்டு இருக்கு.

காளைமாடு
காளைமாடு

2 ஏக்கரில் ஐந்தடுக்குப் பண்ணை

2 ஏக்கர்ல ஐந்தடுக்குப் பண்ணை உருவாக்குறதுக்காக, கடந்த நவம்பர் மாசம் அதுக்கான பணிகளைச் செஞ்சேன். மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி முதல்வர் பார்த்திபன்தான் இந்த யோசனையை எனக்குச் சொன்னார். பண்ணையோட நடுவுல முதல் அடுக்காக... தலா 6 அடி இடைவெளியில 25 முருங்கையைப் பயிர் பண்ணினேன். இரண்டாவது அடுக்குல... தலா 6 அடி இடைவெளியில ஆப்கன் அத்தி. கொய்யா, மா, பலா மரங்கள் 56 நடவு செஞ்சேன். மூன்றாவது அடுக்குல... தலா 10 அடி இடைவெளியில மலைவேம்பு, வெள்ளைக் கடம்பு, ஈட்டி மரக்கன்றுகள் 60 நடவு செஞ்சேன். நாலாவது அடுக்குல... தலா 8 - 10 அடி இடைவெளியில தேக்கு, தான்றிக்காய் மரங்கள் 80 நடவு செஞ்சேன். அஞ்சாவது அடுக்குல... தலா 8 - 10 அடி இடைவெளியில செம்மரம், சந்தனம் மரக்கன்றுகள் 90 நடவு செஞ்சேன். பத்தே மாசத்துல 15 அடி உயரத்துக்கு இந்த மரங்கள் வளர்ந்துருக்கு. நாலு எல்லைகள்லயும் அகத்தி, சூப்பர் நேப்பியர், கோ-4 தீவனப்புல் பயிர் பண்ணியிருக்கேன். நான் வளர்த்துக் கிட்டு இருக்குற மூணு மாடுகளுக்கு இந்தத் தீவனப்பயிர்கள் பயன்படுது.

நன்கு வளர்ந்த மரத்துடன் தேவராஜன்
நன்கு வளர்ந்த மரத்துடன் தேவராஜன்

2 ஏக்கரில் காய்கறிகள், வாழை, துளசி

ஒன்றரை ஏக்கர்ல வாழை, காய்கறிகள் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். அரை ஏக்கர்ல துளசி பயிர் பண்ணிக்கிட்டு இருக்கேன். துளசியை மண் தரையில விதைப்பு செஞ்சு, 40-50 நாள் நாற்றுகளா வளர்த்து அதுக்குப் பிறகு பாலித்தீன் பையில வச்சு 10-20 நாள்கள் வளர்த்து, ஒரு நாற்று 6-8 ரூபாய் விலையில விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். இதுமூலமா மாசத்துக்கு 10,000 ரூபாய் வருமானம் கிடைச்சுகிட்டு இருக்கு. வாழை, காய்கறிகள்ல இருந்து கணிசமான வருமானம் கிடைச்சுகிட்டு இருக்கு.

கொய்யா
கொய்யா
பப்பாளி
பப்பாளி

மொத்த வருமானம்

2006-ம் வருஷம் நடவு செஞ்ச பழ வகை மரங்கள்ல இருந்து 5 வருஷமா நிறைவான வருமானம் கிடைச்சிருக்கு. பழங்கள் விற்பனை மூலம் வருஷத்துக்கு 15 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இது தவிர தென்னை, வாழை, காய்கறிகள், பால் விற்பனை மூலமா வருஷத்துக்கு 5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. ஆக மொத்தம் 20 ஏக்கர் பண்ணையிலிருந்து இப்போதைக்கு வருஷத்துக்கு 20 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. மர வகை மரங்கள் எதிர்காலத்துல மிகப் பெரிய வருமானம் கொடுக்கும். ஆனா, எனக்குப் பெரிய எதிர்பார்ப்புகள் கிடையாது. சுற்றுச்சூழலுக்குப் பங்களிப்பு செய்யணும்கிறதுதான் என்னோட நோக்கம்’’ என மனநிறைவுடன் தெரிவித்தார்.


தொடர்புக்கு: தேவராஜன்,

செல்போன்: 9843484464

தான் வளர்த்த மரங்களுடன் தேவராஜன்
தான் வளர்த்த மரங்களுடன் தேவராஜன்
மூலிகைகள், காய்கறிகள்...
மரங்கள்... 20 ஏக்கரில் வியப்பூட்டும் வேளாண் காடு... ஆண்டுக்கு ரூ.20 லட்சம்!

சிறந்த விவசாயி விருது!

‘‘தரிசு நிலத்துல தோட்டக்கலை பயிர்களைச் சிறப்பாக சாகுபடி செய்யும் விவசாயியா என்னைத் தேர்ந்தெடுத்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்புல 2021-22-ம் ஆண்டுக்கான விருது வழங்கினாங்க. வேளாண் காடுகள் உருவாக்கத்துல நான் சிறப்பான பங்களிப்பு செஞ்சுகிட்டு இருக்குறதா பாராட்டி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் எனக்கு விருது வழங்கியிருக்கு’’ என்கிறார் தேவராஜன்.

காய்கறிகள்
காய்கறிகள்

220 கூட்டங்கள்!

‘‘2002-ம் ஆண்டு, கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தை உருவாக்கினேன். இந்தச் சங்கம் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கிட்டு இருக்கு. இதுவரைக்கும் 220 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியிருக்கோம். இதனால் 450-க்கும் மேற்பட்டவர்கள் மூலிகை, வேளாண் காடு வளர்ப்புல ஈடுபட்டிருக்காங்க.

தேக்கு மரங்கள்
தேக்கு மரங்கள்


அவசர வைத்திய தேவைக்காக, இந்தப் பகுதி மக்கள் நிறைய பேர், இங்க வந்து மூலிகைகளை இலவசமா வாங்கிக்கிட்டு போறாங்க. என்னோட பையன் நேச்சுரோபதி படிச்சிட்டு, இயற்கை மருத்துவரா பணியாற்றிக்கிட்டு இருக்கார். மருந்துகள் தயாரிக்க, இங்கவுள்ள மூலிகைகளைப் பயன்படுத்திக்கிறார்’’ என்கிறார் தேவராஜன்.