Published:Updated:

வறட்சியிலும் எங்கள் வீட்டில் தண்ணீர் இருக்கிறது! - வீட்டுத்தோட்ட முன்னோடி 'பம்மல்' இந்திரகுமார்!

வீட்டுத்தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
வீட்டுத்தோட்டம்

மறுபயணம் - பதிவுகளின் பாதையில் - 6

வறட்சியிலும் எங்கள் வீட்டில் தண்ணீர் இருக்கிறது! - வீட்டுத்தோட்ட முன்னோடி 'பம்மல்' இந்திரகுமார்!

மறுபயணம் - பதிவுகளின் பாதையில் - 6

Published:Updated:
வீட்டுத்தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
வீட்டுத்தோட்டம்

டந்த 14 ஆண்டுகளாக, பசுமை விகடனுடன் பின் ஏர் பிடித்த விவசாயிகள் ஏராளம். புதிய தொழில்நுட்பம், மீட்டெடுக்கப்பட்ட பாரம்பர்ய விதைகள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்கள், இடுபொருள் தயாரிப்பு, மதிப்புக்கூட்டல் உள்ளிட்ட ஒவ்வொன்றிலும் முன்னோடி விவசாயிகள் இருக்கிறார்கள். பசுமை விகடன் ஆரம்பக் காலங்களில் இத்தகைய முன்னத்தி ஏர்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது. அந்த விவசாயிகளைப் பலரும் பின்பற்றினார்கள். அந்த வகையில் பசுமை விகடன் ஆரம்ப காலங்களில் பதிவு செய்த பண்ணைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன. அந்தப் பதிவால் சமூகத்துக்கு ஏற்பட்ட நன்மைகள், சம்பந்தப்பட்ட விவசாயிகள் கற்றுக்கொண்ட பாடங்கள்பற்றிப் பேசுகிறது இந்தப் பகுதி.

முன்மாதிரி வீடு

மழைக்காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடக் கூடாது என்பதற்காகச் சாலையின் உயரத்தைவிட அதிக உயரத்தில் வீடு கட்டுவோம். அதேபோல வீட்டைக் கட்டும்போது, கார் நிறுத்துவதற்கு முன்னால் இடம் விட்டு, வீட்டைப் பின்னால் கட்டுவார்கள். இப்படிப் பார்த்துப் பார்த்து வீடு கட்டுவது வழக்கம். ஆனால், இதையெல்லாம் அறவே ஒதுக்கி, ‘சாலையில் பெய்யும் மழைநீர் வீட்டுக்குள் வர வேண்டும். காலி இடம் வீட்டுக்குப் பின்னால்தான் இருக்க வேண்டும்’ என முன்மாதிரியான வீட்டைக் கட்டியிருக்கிறார், சென்னை பம்மலைச் சேர்ந்த இந்திரகுமார்.

‘காய்கறி வாங்க கடைக்கு போறதில்லை!’ என்ற தலைப்பில் 2007 செப்டம்பர் 10-ம் தேதியிட்ட பசுமை விகடன் இதழில் இவரைப் பற்றி ஒரு கட்டுரை வெளியானது. இன்று வரை மாடித்தோட்ட காய்கறிச் சாகுபடி, நிலத்தடி நீர் பாதுகாப்பு ஆகியவற்றில் முன்னத்தி ஏராக இருந்து ஆயிரக்கணக்கானோருக்கு வழிகாட்டி வருகிறார். பசுமை விகடனில் வெளியான கட்டுரையில் தனது வீட்டுத்தோட்ட காய்கறி பற்றியும், நிலத்தடி நீர் மேலாண்மையின் நன்மைகளையும் பட்டியலிட்டிருந்தார் இந்திரகுமார். அந்தக் கட்டுரையில் நிறைவாக, ‘‘வீட்டுக்காக தொடங்கின ஒரு விஷயம், இப்ப நாட்டுல நாலுபேருக்கு பயன்படக்கூடியதாவும் மாறியிருக்கிறதை நினைக்கும்போது மகிழ்ச்சியா இருக்கு’’ என்று சொல்லியிருந்தார்.

பசுமை நிரம்பிய வீட்டின் மாடியில் இந்திரகுமார்
பசுமை நிரம்பிய வீட்டின் மாடியில் இந்திரகுமார்

இந்த நிலையில் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது எப்படி இருக்கிறது அவரது வீட்டுத்தோட்டம் என்பதைப் பற்றி அறிய அவரது வீட்டுக்குச் சென்றோம். முன்பைவிட அதிக காய்கறிகள், மரங்கள் என ஒரு விவசாயமே நடந்துகொண்டிருந்தது. ஏராளமான மூலிகைகள், அசோலா, மண்புழு உரத் தயாரிப்பு எனப் பயிர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. வறட்சியில் தவிக்கும் சென்னை மக்களுக்கிடையே தண்ணீர் பிரச்னையே இல்லாமல், இன்னும் கிணற்றில் இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறார். வீட்டைச் சுற்றிலும் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்.

2007-ல் வெளியான கட்டுரை
2007-ல் வெளியான கட்டுரை

தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த மழைநீர் சேகரிப்பு

“எனக்கு 1972-ம் வருஷம் பல்லாவரத்தில் வேலை கிடைச்சது. அப்போது வாடகை வீட்லதான் இருந்தேன். 1986-ம் வருஷம் பம்மல்ல இடம் வாங்கி வீடு கட்டி குடியேறிட்டேன். அப்போ, இந்த இடத்தில வெறும் 40 வீடுகள்தான் இருந்துச்சு. வீடுகள் குறைவா இருந்ததால முகமூடி கொள்ளை சம்பவங்களும் நடந்துச்சு. என் வீட்ல, ‘ஏன் இங்க வீடுகட்டினீங்க’னு அர்ச்சனையும் நடக்கும். ஆனால், எனக்கு இந்த இயற்கைச் சூழல் பிடிச்சிருந்தது. நான் வீடு கட்டும்போது கிணற்றையும் சேர்த்துக் கட்டினேன். 10 வருஷம் கழிச்சு வீடுகள் பெருக ஆரம்பிச்சது. அப்போ கிணத்துல இருந்த தண்ணீர் உப்பா மாற ஆரம்பிச்சது. அதிகமான மக்கள் குடியேற்றத்தால நிலத்தடிநீர் குறைய ஆரம்பிச்சது. மக்கள் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பிச்சாங்களே தவிர, உயர்த்த விரும்பல. அதற்கான தீர்வை நோக்கி இறங்கினேன்.

நான் ‘எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்’ அமைப்பில் உறுப்பினரா இருக்கேன். மழைநீர் சேகரிப்புத் தொடர்பா பல தகவல்கள சேகரிச்சேன். பிறகு வீட்டுல மழைநீர் சேகரிப்பை அமைச்சேன். 6 மாசத்துல அதுக்கான பலன் கிடைச்சது. கிணற்றுத் தண்ணீரோட சுவையும், கிணற்று நீர் மட்டமும் கூடிச்சு. இதைப் பார்த்த என் மகனோட பள்ளி தலைமை ஆசிரியர், என்னை அழைச்சு மழைநீர் சேகரிப்பு பத்தி பள்ளியில் பேசச் சொன்னார். அப்போதான் எனக்கு இதை மற்றவர்களுக்குக் கொண்டு சேர்க்கணும்ங்குற எண்ணம் வேரூன்றியது. இதுவரை இந்த அமைப்பை ஆயிரக்கணக்கான வீடுகள்ல செய்து கொடுத்திருக்கிறேன். 2002-ம் ஆண்டு ஒரு வறட்சி வந்தது. அப்போது மழைநீரைச் சேமித்திருந்ததால், என் வீட்டில் தண்ணீர் பிரச்னை அறவே இல்லாமல் போனது” என்றவர், வீட்டைச் சுற்றிக் காட்டிக்கொண்டே தொடர்ந்து பேசினார்.

மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு

உரமாகும் இலைகள்

“வீட்டின் முன்னால் இரண்டு உறிஞ்சுக் குழிகளை அமைச்சிருக்கேன். சாலைகளில் விழும் மழைநீர் இந்த உறிஞ்சுக் குழிக்குள் போகும். உறிஞ்சுக் குழிகளை 2 அடி அகலம், 4 அடி ஆழம் என்ற அளவுல அமைக்கணும். கீழ்ப்பகுதியில ஜல்லிக் கற்கள் மற்றும் மண்ணை வச்சு நிரப்பணும். அப்போதான் மழைத்தண்ணீர் விரைவாக இறங்கும். வீடுகளில் மட்டும் சேமிப்பது மழைநீர் சேமிப்பு அல்ல, இதுவும் ஒருவகை மழைநீர் சேமிப்புதான். இப்படிச் செய்தால் மழைநீர் சாக்கடையில் கலந்து வீணாகாது. தண்ணீர் தேங்காமல் இருப்பதால கொசுக்களும் உற்பத்தியாகாது. பெரும்பாலானோர் வீட்டில் பயன்படுத்துற குப்பைகளை வெளியில் கொட்டுறது வழக்கம். என் வீட்டுக்கு முன் இருக்குற மர இலைகள், காகிதங்களை எடுத்து வந்து என் வீட்ல உரமாகவும், மரங்களுக்கு மூடாக்காகவும் பயன்படுத்துறேன். இந்த உரங்களைத்தான் மண்புழு உரமாக மாற்றி விற்பனை செய்றேன். இந்த உரமும் என் வருமானத்துக்குக் கைகொடுக்குது.

வீட்ல சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறைனு மூணு வகையான கழிவுநீர் வெளியேறும். அதையும் முறைப்படி சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்திக்கிறோம். நான், வீட்ல இருக்குற கழிப்பறைத் தொட்டி நிரம்பி வழியுதுனு எப்போதும் கவலைப்பட்டதில்லை. 2002-ம் வருஷம், ‘பேசில்லஸ் சப்டிலிஸ்’ என்ற பாக்டீரியாவைக் கழிப்பறை தொட்டியில விட்டேன். தொட்டியில இருந்த கழிவுகளைப் பாக்டீரியா எடுத்துக்கிட்டு, நீரைச் சுத்தப்படுத்தி நல்ல நீராகக் கொடுக்குது. அந்த நீரை மோட்டார்மூலம் வெளியே எடுத்துச் செடிகளுக்குப் பயன்படுத்திக்கிறேன். அந்த நீர்ல யூரியா இருப்பதால செடிகளுக்கு இயற்கையான உரம் கிடைச்சிடுது. பாக்டீரியாவை விட்ட பின்னால ரசாயனங் களை வச்சு கழிப்பறையைச் சுத்தம் செஞ்சா, பாக்டீரியாக்கள் இறந்துடும். கிறிஸ்துவக் கல்லூரி பேராசிரியர் பாலுசாமி, இந்த நீரைக் குடிக்கும் தண்ணீராகவே மாத்திட்டார்” என்று சொன்னவர், மோட்டாரை இயக்கித் தொட்டியிலிருந்த நீரை வெளியேற்றிக் காண்பித்தார். குழாயிலிருந்து வெளியேறிய நீர் எந்தவிதமான அசுத்த மணம் இல்லாமல் செடிகளுக்குப் பாய்ந்தது.

அழகுத் தாவர வகைகள்
அழகுத் தாவர வகைகள்

“குளியலறை நீர் வெளியேறும் இடங்களில் கல்வாழை, அலகேசியா செடிகளை வைச்சிருக்கேன். அவை சோப்புநீரில் உள்ள சோப்பை மட்டும் எடுத்துகிட்டு தூய தண்ணீரை வெளியேற்றுகிறது. இதை மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில் ஆராய்ச்சியா செய்து காட்டியிருக்கார். அதைத்தான் நான் செய்திருக்கேன். சமையலறைக் கழிவுநீரை நேரடியா செடிகளுக்குப் பயன்படுத்துறேன். வீட்ல சேரும் காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளைத் தனியா கூடாரம் அமைச்சு உரமா மாத்துறேன். இதில் மண்புழுக்களை விட்டால், மண்புழு உரமும் தயாராகிடுது. இந்த உரங்களை வீட்டுச் செடிகளுக்கும் விற்பனைக்கும் பயன்படுத்திக்கிறேன். வீட்ல சேரும் முட்டை, நண்டு இவற்றின் ஓடுகளைச் செடிகளுக்கு உரமாகக் கொடுக்கலாம்.

வறட்சிக் காலங்களிலும் செடிகள் வாடாது

மாடியிலிருந்து வரும் நீரை மாடியிலேயே சுத்தம் செஞ்சு கிணத்தில நேராக விடுறேன். கிணற்றுத் தண்ணீர்ல 50 கிராம் தேற்றான் கொட்டைகளைத் தூவிவிட்டேன். அந்தத் தண்ணீரைத்தான் குடிக்கப் பயன்படுத்துகிறோம். வீட்டின் பின்புறமும் இரண்டு உறிஞ்சுக் குழிகளை அமைச்சிருக்கேன். வீட்டுப் பின்னால விழும் மழைநீரை, இந்தக் குழிகள் உறிஞ்சிடும். அதேபோல வீட்டுக்குப் பின்னால இருக்கும் இடத்தில், தென்னை மட்டைகளைப் புதைச்சு வச்சிருக்கேன். அதுமேல மண்ணைக் கொட்டி அந்தப் பகுதியை ஸ்பான்ச் போல வச்சிருக்கேன். அங்கே ரெண்டு உடைஞ்ச பானைகளைக் கொஞ்சம் இடைவெளிவிட்டு மண்ணுக்குள்ள புதைச்சிருக்கேன். வறட்சிக் காலத்தில மண் பானைகள்ல நீரை விடுறப்போ அது மற்ற இடங்களுக்கும் எளிதாப் பரவும். இதனால வறட்சிக் காலத்தில் செடிகளையும், மரங்களையும் வாடாம பாதுகாக்கலாம்.” என்றவர் இறுதியாக மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றார்.

பசுமை ஏ.சி
பசுமை ஏ.சி

“எனக்குனு இருந்த 3,200 சதுர அடி நிலத்துல 600 சதுர அடிக்குச் சின்னதா வீடு கட்டி யிருக்கேன். மீதி நிலத்துல பிற்காலத்துல தோட்டம் போடலாம்னு முடிவு செஞ்சு ஒதுக்கி வெச்சேன். வீட்டுல இருக்கற இடம் பூராவும் மா, கொய்யா, சப்போட்டா, பாதாம், சீத்தா, ராம் சீத்தா, பாக்கு, பப்பாளி அப்படினு மர வகைகளையும்... 6 வகையான மல்லிகை, விதவிதமான ரோஜா, மனசை மயக்குற மனோரஞ்சிதம், சம்பங்கி, கோழி சம்பங்கி, காகிதப்பூ, செம்பருத்தி, நித்திய கல்யாணினு நம்ம ஊரு பூக்களையும், லில்லி மாதிரி வெளிநாட்டு வகைப் பூக்களையும் தோட்டத்துல பயிர் செய்திருக்கேன்.

‘‘கடந்த 13 வருஷத்துல சுமார் 5,000 பேருக்கு மேல மாடித்தோட்டம் அமைக்க வழி சொல்லியிருக்கேன். அவங்கள்ல சிலருக்கு நேரடியா அமைச்சும் கொடுத்திருக்கேன்."

என் குடும்பத்துக்குத் தேவையான காய்கறி, மூலிகைகளை வளர்க்க நினைச்சேன். வீட்டைச் சுற்றி இருந்த இடத்துல பலவகையான மரங்களை நடவு செஞ்சிட்டதால... காய்கறிச் செடிகளுக்கு இடமில்ல. ஒரு நாள் மொட்டை மாடியைப் பார்த்தப்ப, ஆகா நிலம் கிடைச்சாச்சினு எனக்குள்ள ஒரு மின்னல். உடனே தோட்டம் போட்டுட்டேன். வெண்டை, கத்திரி, தக்காளி, மிளகாய், கொத்தவரங்காய், கீரைகள்னு விதவிதமான காய்கறிகள் இங்க விளைஞ்சி கிடக்கு. சீஸனுக்குத் தகுந்த மாதிரிதான் நான் விளைவிப்பேன். பாரம்பர்ய விதைகளைத் தேடிப்பிடிச்சு வாங்கி வந்து சேகரிச்சு வெச்சிருக்கேன். அதையேதான் மறுபடி மறுபடி விதைச்சு பலன் பார்க்கிறேன்.

மூங்கில்
மூங்கில்

இதோ பாருங்க, இது சாதாரணச் சிமென்ட் பைப். புகை போக்கியா பயன்படுத்துவாங்க. இது முழுக்க மண், இயற்கை உரம் போட்டுக் கம்பம் மாதிரி நிக்க வெச்சிருக்கேன். பைப்புல அங்கங்க துளை போட்டுத் தக்காளி, கத்திரி செடிகளை நட்டிருக்கேன். பயறு விதைகளயும் போட்டிருக்கேன். ஈரம் காயாம தண்ணி ஊத்திக்கிட்டே இருக்கேன். 40-ம் நாள்ல வீட்டுக்கு வேண்டிய காய்கறிங்க இந்தப் பைப்புல இருந்தே எனக்குக் கிடைச்சுடும். சில வருஷமாவே எங்க வீட்டுக்குக் காய்கறி வாங்குற செலவே இல்லை’’ என்று சந்தோஷம் பொங்கச் சொன்னவர், தொடர்ந்தார்.

கழிவுகளே உரம்

‘‘மாடியில செடிகளை வளர்க்குறப்போ, நல்ல காய்கறிகளும் மூலிகைகளும், காற்றும் கிடைக்குது. என் வீட்டில் கைப்பிடிச் சுவரையே தொட்டியா மாத்தி செடிகளை வச்சிக்கேன். மூலிகைச் செடிகள்மீது மழைநீர் பட்டுச் சுத்தம் செய்து கிணற்றுக்குள் சேகரமாவதால், தண்ணீர் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. முன்பெல்லாம் வீட்டில் முற்றம் இருக்கும். அப்போது அறையின் வெப்பநிலை வெளியேறி வீடு குளுமையாக இருக்கும். இப்ப, முற்றங்கள் கொண்ட வீடுகளே அரிதாகி போச்சு. அதனால்தான், முற்றம் போன்ற சிறிய அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறேன். இது வீட்டு அறையின் வெப்பநிலையை வெளியேற்றிச் சமநிலையுடன் வைத்துக் கொள்ள உதவுது. என் வீட்டில் ஃபிரிட்ஜ் கிடையாது, எல்.இ.டி பல்புகளை மட்டும்தான் பயன்படுத்துகிறேன். இதனால் என் வீட்டில் மின்சாரக் கட்டணமும் குறையுது. இப்படி வீட்டுக் கழிவுகளை உரமாக்குவதுடன், சூழலுக்கும் நன்மை ஏற்படுத்தி, வீட்டிலும் செலவை மிச்சப்படுத்தலாம்.

மலர்ச் செடிகள்
மலர்ச் செடிகள்

‘நாம் வீடு கட்டும்போது, இயற்கை ஏ.சி வைத்துதான் கட்டணும்’னு முடிவு செஞ்சேன். இது, விமான நிலையப் பகுதி. அதனால ஒரு மாடிக்கு மேல் கட்ட அனுமதி இல்ல. ஒரு மாடி கட்டி அதுக்கு மேலே இந்த இயற்கை ஏ.சி-யை அமைச்சிட்டேன்’’ சிரித்தபடி சொன்னவர் நிறைவாக,

“மொட்டை மாடியில், நீளம், அகலம், உயரம் அனைத்தும் நான்கு அடி உள்ள கான்கிரீட் கூரையை அடிப் பாகத்தில் அரை அடி இடைவெளிவிட்டு அமைக்க வேண்டும். இந்த இடைவெளி வழியாகக் காற்றுக் கான்கிரீட் கூரைக்கு உள்ளே புகுந்து வீட்டுக்குள் செல்வதால் வீடு எப்போதும் குளுமையாக இருக்கும். இந்தக் கூரையின் மீது கண்ணாடி பதித்தால் வீடும் வெளிச்சமாக இருக்கும். இதைக் கட்டுவதற்கு 15,000 ரூபாய்தான் செலவானது. கரன்ட் பில் எகிறாமல் வீடு ஜில்லுனு இருக்கு.

கடந்த 13 வருஷத்துல சுமார் 5,000 பேருக்கு மேல மாடித்தோட்டம் அமைக்க வழி சொல்லியிருக்கேன். அவங்கள்ல சிலருக்கு நேரடியா அமைச்சும் கொடுத்திருக்கேன். இன்னைக்கு அவங்கயெல்லாம் அதிக அளவுல மாடித்தோட்டம் அமைச்சு பராமரிச்சுக்கிட்டு இருக்காங்க’’ என்று சொல்லி விடைகொடுத்தார் இந்திரகுமார்.


தொடர்புக்கு,
இந்திரகுமார்,
செல்போன்: 99410 07057.

அடிப்படை விஷயங்கள் கவனம்

‘‘வீட்டுல காய்கறித்தோட்டம் போடுறதுக்குப் பெருசா இடத்தைத் தேடி அலைய வேண்டாம். மனசு வெச்சாலே போதும். மொட்டை மாடியில காய்கறி, மாடிப்படிகள்ல கீரை, ஜன்னல் ஓரங்கள்ல ரோஜானு எல்லாவித செடிகளையும் நட்டு பலன் பார்த்திட முடியும். பத்தடி உயரத்துல இருக்கற பைப்புல கூட விதவிதமான காய்கறிச் செடியைப் பயிர்செய்ய முடியும். தேங்காய்த் துருவினதும் தூக்கி எறியற கொட்டாங்குச்சியில கீரை வளர்க்கலாம். உடைந்த மண்பானையில கத்திரிக்காய் வளர்க்கலாம். எதுல செடி வளர்க்கணும்னாலும் அடிப்படையான சில விஷயங்கள மனசுல வெச்சிக்கிட்டா போதும். நீங்க செடி வளர்க்க நினைக்கற இடத்துல ஒரு பங்கு மண்ணு, ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம், இது மூணையும் கலந்து போட்டு அதுல விதைச்சிடலாம். செடி வளர்க்கறதுக்காக நீங்க பயன்படுத்துறது கொட்டாங்குச்சியோ, மண்பானையோ... எதுவா இருந்தாலும் அடியில தண்ணி கசியறதுக்காகச் சிறு துளைபோட வேண்டியது அவசியம்’’ என்கிறார் இந்திரகுமார்.

தொட்டிகளில் செடிகள்
தொட்டிகளில் செடிகள்

கொட்டாங்குச்சியில் கீரை

‘‘சத்தான சமாசாரம்னு கீரைகளை வாங்கிப் பலரும் சாப்பிடுறாங்க. ஆனா, அதுல எந்தளவுக்குப் பூச்சி மருந்து தெளிச்சு எடுத்துக்கிட்டு வர்றாங்கனு பலருக்கும் தெரியாது. தயவு செஞ்சு கீரையை மட்டுமாவது வீட்டுலயே வளர்த்துச் சாப்பிடுங்க. ஒரு கொட்டாங்குச்சி, கொஞ்சம் மண், கொஞ்சம் மணல், கொஞ்சம் இயற்கை உரம், இதோட ஒரு பிடி வெந்தயம் இருந்தா போதும், அடுத்த 20-ம் நாள் தளதளனு வெந்தயக் கீரை வளர்ந்திருக்கும். கொட்டாங்குச்சியில மண்ணையும் மணலையும் நிரப்பி, உரத்தையும் போட்டுத் தண்ணியை ஊத்தி, வெந்தயத்தைப் போட்டு வெயில் படுற மாதிரியான இடத்துல வெச்சிட்டா போதும். இதே முறையில அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரைனு பல கீரைகளையும் வளர்க்க முடியும். கொத்தமல்லி, புதினாவையும் கூட இதேபோல வளர்க்கலாம்’’ என்கிறார்.