Published:Updated:

ஊரடங்கில் கைகொடுத்த வீட்டுத்தோட்டம்!

காய்கறிகள்
பிரீமியம் ஸ்டோரி
காய்கறிகள்

தற்சார்பு

ஊரடங்கில் கைகொடுத்த வீட்டுத்தோட்டம்!

தற்சார்பு

Published:Updated:
காய்கறிகள்
பிரீமியம் ஸ்டோரி
காய்கறிகள்
வீட்டுத்தோட்டம் இன்றைக்கு நகரத்தில் இருப்பவர்களின் விவசாயக் கனவை நிறைவேற்றி வருகிறது. நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமான சூழல். கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலருக்கும் இது பல வகைகளில் உதவியாக இருக்கிறது.

இதை வைத்திருப்பவர்கள் காய்கறிக்காகக் கடைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே பறித்து, தற்சார்பு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு காலத்தில் பலர் புதிதாக இதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். வீட்டுத்தோட்டம் மூலம் நஞ்சில்லாக் காய்கறிகளை உற்பத்தி செய்யும் நகர விவசாயிகள் நல்ல மகசூலையும் எடுத்துவருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாநகரில் தொழிற்சாலை நடத்திவரும் சிவசுப்பிரமணியன் 30 சென்ட் அளவில் வீட்டுத்தோட்டம் அமைத்து, இயற்கை முறையில் காய்கறி விவசாயம் மேற்கொண்டுவருகிறார்.

பாலு
பாலு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். ‘‘என்னை திருப்பூர்ல `ஜூப்ளி பாலு’னு சொன்னாத்தான் தெரியும். நீங்களும் அப்படியே சொல்லுங்க’’ என்ற முன்னுரையோடு பேசத் தொடங்கினார் ஜூப்ளி பாலு. ‘‘திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பொம்மநாயக்கன் பாளையம் பகுதியில என்னோட கம்பெனியும், வீடும் இருக்கு. அடிப்படையில் நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன். அதனால விவசாயம் செய்யணும்கிற எண்ணம் மனசை அரிச்சுக்கிட்டே இருக்கும். அதுக்குத் தூண்டுகோலா இருந்தது `வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்புதான். அதுல உறுப்பினரா இணைஞ்சு, பல இடங்கள்ல மரக்கன்றுகளை நடவு பண்ற வேலைகள்ல விவசாயிகளைச் சந்திப்போம். அது என்னோட விவசாயக் கனவை ரொம்ப அதிகமாக்கிச்சு. எப்படியாவது விவசாயம் செஞ்சே ஆகணும்கிற எண்ணம் வலுவாகிட்டே போச்சு. அந்த நேரத்துலதான் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் துணை அமைப்பாக ‘அறப்பொருள் வேளாணகம்’ங்கிற பேர்ல இயற்கை விவசாயப் பண்ணை ஒன்றை உருவாக்கினார் வெற்றி அமைப்பின் தலைவர் சிவராமன். கிளாசிக் போலோ கம்பெனி நிர்வாக இயக்குநராக இருக்கும் சிவராமன் இயற்கை விவசாயிகளை உருவாக்குறதுக்காகவே அந்தப் பண்ணையை ஆரம்பிச்சார்.

அந்தப் பண்ணையில அடிக்கடி இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புகள் நடக்கும். ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி அப்படி நடந்த ஒரு பயிற்சியில நானும் கலந்துக்கிட்டேன். இயற்கை வேளாண்மைப் பயிற்சியாளர் ரேவதி மூலமா அந்தப் பயிற்சியில பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். மூணு நாள் நடந்த அந்தப் பயிற்சியிலதான் வீட்டுத்தோட்டம் எப்படி அமைக்குறது, இயற்கை இடுபொருள்களை எப்படித் தயாரிக்கிறதுனு சொல்லிக்கொடுத்தாங்க. எல்லாத்தையும் மனசுலயும் புத்தியிலயும் பதிவு பண்ணிக்கிட்டேன்.

‘‘வீட்டுத்தோட்டத்துல எல்லாமே கிடைச்சுட்டா, நாம எதுக்காகவும் யாருக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. இதுதான் தற்சார்பு வாழ்க்கை.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பயிற்சி முடிஞ்சு வந்ததும் வீட்டுத்தோட்டம் அமைக்கிற வேலையை ஆரம்பிச்சேன். என் வீட்டை ஒட்டி 30 சென்ட் இடம் காலியா இருந்துச்சு. பல வருஷம் விவசாயம் செய்யாம தரிசா இருந்த பூமி. அதனால மண்ணு பாறை மாதிரி இறுக்கமா மாறிப்போய் இருந்துச்சு. ஜே.சி.பி வெச்சு, மண்ணைத் தோண்டி, கட்டிகளை உடைச்சேன். அதுக்குப் பிறகு மட்டமாக்கி, உழுது, விவசாய நிலமா மாத்தினேன். அது பெரிய வேலை. மண்ணைப் பொலபொலன்னு ஆக்குறதுக்குள்ளே தாவு தீர்ந்துபோச்சு. ஏகப்பட்ட செலவு. ஆனாலும், வீட்டுத்தோட்டம் அமைச்சே ஆகணும்கிறதுல உறுதியா இருந்தேன். அதனால, கஷ்ட நஷ்டத்தைப் பத்தியோ, செலவைப் பத்தியோ கவலைப்படலை. `நம்ம வீட்டு ஆரோக்கியத்துக்கான முதலீடு’னு நினைச்சுக்கிட்டேன். ஒருவழியா நிலத்தைத் தயார் செஞ்ச பிறகு, பக்கத்துல இருக்கற மாட்டுப்பண்ணையில இருந்து ஒரு டிராக்டர் தொழுவுரம் வாங்கிட்டு வந்தேன். அதை அடியுரமாப் போட்டு பாத்திகளை அமைச்சேன். பிறகு காய்கறி நாற்றுகள், விதைகளை நடவு பண்ணி வீட்டுத்தோட்ட விவசாயத்தை ஆரம்பிச்சோம். இப்போ நானும் விவசாயியாகிட்டேன்.

வீட்டுத்தோட்டத்தில் ஜூப்ளி பாலு
வீட்டுத்தோட்டத்தில் ஜூப்ளி பாலு

இந்த ஒன்றரை வருஷமா என் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளைச் சுழற்சி முறையில விளையவெக்கிறேன். காய்கறிகளுக்காகக் கடைக்குப் போறதேயில்லை’’ என்ற ஜூப்ளி பாலு, சிறிது இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

‘‘கத்திரி, மிளகாய், தக்காளி, முள்ளங்கி, பீட்ரூட், கீரைகள், கொத்தமல்லி, பீர்க்கன், அவரை, வெள்ளரி, சுரைக்காய்னு எல்லாக் காய்கறிப் பயிர்களையும் சாகுபடி செய்யறேன். அதோடு, வாழை, கொய்யா, தென்னை, முருங்கை, கறிவேப்பிலை மாதிரியான நீண்டகாலப் பயிர்களும் என் வீட்டுத்தோட்டத்துல இருக்கு. அறுவடை முடிஞ்ச காய்கறி ரகத்தை எடுத்துட்டு, வேற செடிகளை நடுவேன். இதுக்கான நாற்றுகளை நானே உருவாக்கிக்கிறேன். செறிவூட்டம் செய்யப்பட்ட தென்னைநார்க் கழிவுகள் மூலமா, குழித்தட்டு மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்வேன். விதைகளா நடுறதா இருந்தா பஞ்சகவ்யாவுல விதைநேர்த்தி செஞ்சுதான் விதைப்பேன். இதுவரைக்கும் மூணு போக வெள்ளாமை எடுத்தாச்சு.

சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய்னு விலை எகிறிப் போயிருந்த நேரத்துல ஊரே அதைப் பத்திக் கவலைப்பட்டுக்கிட்டு இருந்துச்சு. ஆனா, நான் கவலையேபடலை. அந்த நேரத்துல வீட்டுத்தோட்டம் எனக்குக் கைகொடுத்துச்சு. ஒரு சென்ட் நிலத்துல நடவு செஞ்ச வெங்காயம், 60 நாள்ல 65 கிலோ மகசூலைக் கொடுத்துச்சு. அரைக் கிலோ வெங்காயத்துக்கு மக்கள் வீதி வீதியா அலைஞ்சாங்க. எனக்கு அந்தக் கஷ்டம் இல்லாம பார்த்துக்கிச்சு என்னோட வீட்டுத்தோட்டம். எப்போ வெங்காயம் அறுவடை செஞ்சாலும், அடுத்த போக நடவுக்காக 10 கிலோ விதை வெங்காயத்தைச் சேமிச்சுவெச்சிருவேன். அதேபோல கத்திரி 300 கிலோ, தக்காளி 200 கிலோ, மிளகாய் மாதம் 10 கிலோ, வெண்டை மாதம் 30 கிலோ, கொத்தமல்லித்தழை 30 கிலோ, கீரைகள்ல தினமும் தலா ரெண்டு கட்டுனு மகசூல் கிடைக்குது. பீர்க்கன், அவரை, சுரை, வெள்ளரி இந்த மூணு கொடிவகைப் பயிர்கள் காய்ப்பு முடிஞ்சிருச்சு. அடுத்த நடவுக்கான நிலத் தயாரிப்பு வேலை நடக்குது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் வீட்டுத்தோட்டத்துல நாட்டுரகக் காய்கறிகளை மட்டும்தான் விதைக்கிறேன். அதனால அடுத்த போக நடவுக்குத் தேவையான விதைகளைத் தரமான காய்களிலிருந்து எடுத்து, நேர்த்தி செஞ்சு வெச்சுக்குறேன். வெளியில போய் விதைகளை வாங்குறதில்லை. எல்லாக் காய்கறிப் பயிர்களுக்கும் 15 நாள்களுக்கு ஒரு தடவை 10 லிட்டர் தண்ணியில 300 மி.லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்கிறேன். நோய்த் தாக்குதல் இல்லாம செடிகள் ஊக்கமா வளர பஞ்சகவ்யா உதவி செய்யுது. தேவையான பஞ்சகவ்யாவை இயற்கை விவசாயி ஒருத்தர்கிட்ட இருந்து வாங்கிக்கிறேன்.

அறுவடையான காய்கறிகள், வெங்காயம்
அறுவடையான காய்கறிகள், வெங்காயம்

அசுவினி, அந்துப்பூச்சி, இலைப்பேன், கதிர்நாவாய்ப்பூச்சினு பயிரைச் சேதமாக்கும் பூச்சிகளைச் செடியில பார்த்தா உடனே வேப்பெண்ணெய் ஒரு லிட்டர், புங்க எண்ணெய் மூணு லிட்டர் எடுத்து, ரெண்டையும் கலந்து, அதுல 50 கிராம் காதிசோப் கரைசலையும் சேர்த்துக்குவேன். அதை கேன்ல ஊத்தி, நாலஞ்சு தடவை குலுக்கினா மூணும் நல்லா கலந்துக்கும். பிறகு அதுல இருந்து 100 மி.லி எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலமா புகை மாதிரி செடிகள்ல தெளிப்பேன். பூச்சிகள் பிரச்னை சரியாகிடும்’’ என்ற பாலு, தனது வீட்டில் மழைநீர்ச் சேகரிப்புச் செய்துவருகிறார். அது குறித்துப் பேசியவர்,

‘‘மழைநீர்ச் சேமிப்புக்காக 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுகொண்ட மழைநீர்ச் சேகரிப்புத் தொட்டியை வீட்டுல அமைச்சிருக்கேன். வீட்டுக் கூரையில விழும் ஒரு சொட்டு மழைநீர்கூடச் சேதாரம் இல்லாம தொட்டியில சேகரமாகும். ஒரு வருஷத்துக்குத் தேவையான சமையல், குடிநீர்த் தேவைகளுக்கு மழைநீரைப் பயன்படுத்திக்கிறோம். வீட்டுத் தோட்டத்துக்குத் தேவையான தண்ணீரை போர்வெல் மூலமா எடுத்துக்கிறோம். காய்ச்சலும் பாய்ச்சலும் முறையிலதான் வீட்டுத்தோட்டத்துல பாசனம் செய்யறேன்.

தினமும் காலையில 7 மணிக்கு ஆரம்பிச்சு, 9 மணி வரைக்கும் தோட்ட வேலைதான்.

களையெடுக்கிறது, உரம் போடுறது, மருந்து தெளிப்பு, அறுவடைனு ஏதாவது ஒரு வேலை இருந்துக்கிட்டே இருக்கும். அந்த வேலைகளை முடிச்சிட்டுதான் என்னோட வழக்கமான வேலைகளைப் பார்க்க ஆரம்பிப்பேன். பறிப்பு முதலாக அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டு, வழக்கமான பணிகளைத் தொடங்குவேன். இதனால உடம்பும் மனசும் ஆரோக்கியமா இருக்கு. 7 கிலோவாட் திறன் கொண்ட சோலார் கருவியை வீட்டில் பொருத்தும் வேலையும் நடந்துக்கிட்டு இருக்கு. சீக்கிரம் வேலை முடிஞ்சிடும். அடுத்தகட்டமா பாரம்பர்ய நெல், சிறுதானிய விவசாயம் செய்யற யோசனை இருக்கு. இப்படி எல்லாமே இங்கே கிடைச்சுட்டா நான் எதுக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. இதுதான் தற்சார்பு வாழ்க்கை’’ என்றவர் நிறைவாக,

‘‘ஒரு வருஷம் ஊரடங்கு போட்டாலும் எனக்குக் கவலை இல்லை.

எங்க குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள் இங்கேயே கிடைச்சிடும். இப்்படிப்பட்ட தன்னிறைவு வாழ்க்கையை ஒவ்வொரு மனுஷனும் வாழணும். இதை என்னோட நிறுத்திக்கலை. நண்பர்கள், உறவினர்கள்னு பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு வர்றேன். ‘வீடுதோறும் தோட்டம் அமைப்போம்... விஷமில்லா நல் உணவு சமைப்போம்’கிற தாரக மந்திரத்தோடு எனது இயற்கைப் பயணம் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கு’’ என்று பேசி முடித்தார் பாலு.

தொடர்புக்கு, ஜூப்ளி பாலு, செல்போன்: 98430 38751

ஆட்சியருக்கு கொத்தமல்லி!

சுமை விகடன் மற்றும் அறப்பொருள் வேளாணகம் இணைந்து, இயற்கை வேளாண்மை களப்பயிற்சியை மூன்று நாள்கள் திருப்பூரில் நடத்தியது. அதன் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜய கார்த்திகேயன். அவருக்குப் பொன்னாடை, பூச்செண்டு என்று கொடுத்துப் பலரும் மரியாதை செய்ய, வீட்டுத்தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த கொத்தமல்லித்தழைக் கட்டு ஒன்றைக் கமகமக்கக் கொடுத்து மரியாதை செய்தார் ஜூப்ளி பாலு. அதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட ஆட்சியர், அவரைச் சிலாகித்துப் பாராட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism