Published:Updated:

அரை ஏக்கர்... மாதம் ரூ. 10,000 - வெகுமதி கொடுக்கும் புழக்கடை தோட்டம்!

வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் தோட்டம்

வீட்டுத்தோட்டம்

‘‘வீட்டுல காய்கறித் தோட்டம் அமைச்சு கத்திரி, வெண்டை, கீரைனு சாகுபடி செய்றதால மாத பட்ஜெட்ல காய்கறிகளுக்கு ஆகுற செலவு மிச்சமாகுது. அதோட, மிச்சமான காய்களை விற்பனை செய்றது மூலமா மாசம் 10,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. விஷமில்லா உணவு, வருமானம் ரெண்டும் கிடைக்கிறதால உடம்புல தெம்பும், மனசுல மகிழ்ச்சியும் இருக்கு’’ உற்சாகமாகப் பேசுகிறார் மகேஷ்.

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சித்தர்காடு என்ற ஊர். ஒருகாலத்தில் மூலிகைச் செடிகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் சித்தர்காடு என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் மகேஷ். தனது வீட்டின் பின்புறம் (புழக்கடை) அரை ஏக்கர் நிலத்தில் காய்கறித் தோட்டம் அமைத்து நாட்டுக் கத்திரிக்காய், வெண்டை, கொத்தவரை, தக்காளி, வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளையும், முளைக்கீரை, தண்டு, சர்க்கரை, புளிச்சக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளையும் சாகுபடி செய்து வருகிறார்.

காய்கறிகளுடன் மகேஷ்
காய்கறிகளுடன் மகேஷ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தோட்டத்தில் விளையும் காய்கறிகளைத் தன் குடும்பத் தேவைக்குப் போக மீதியை விற்பனை செய்கிறார். ரசாயன உரம் எதுவும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விளைவதால் காய்கறி வியாபாரிகள் முதல் அக்கம் பக்கத்தினர் வரை மகேஷின் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள். ஒரு காலைப் பொழுதில் மகேஷை அவரது தோட்டத்தில் சந்தித்தோம்.

‘‘நான் தனியார் கல்லூரியில பேராசிரியரா இருக்கிறேன். எனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில நெல் சாகுபடி செய்றேன். நம்மாழ்வார் ஐயாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘உனக்கான உணவை நீயே உருவாக்கு’னு அடிக்கடி சொல்வாரு. அது என்னோட மனசுல விதையா விழுந்துடுச்சு. அதனால அதைச் செய்யத் தொடங்கினேன்.

என் வீட்டுக்குப் பின்பகுதியில அரை ஏக்கர் நிலம் பயன்பாடு இல்லாம கிடந்தது. புல், பூண்டு மண்டி கிடந்துச்சு. பூச்சிகள், பாம்புகள் அங்க நடமாட்டம் அதிகமாச்சு. அதைச் சரிசெய்யணும்னு யோசனை. அந்த நேரத்துல, கடையில வாங்குற ஒவ்வொரு தடவையும், இந்தக் காய்கறிகள் என்னென்ன ரசாயன உரம் போட்டு விளைய வெச்சாங்களோங்கிற பயம் வரும். அதுக்கு பிறகு, அதை வாங்கிச் சாப்பிட்டாலும், வயிறு நிறையுமே தவிர, மனசு நிறையாது.

இதையடுத்து ‘நாமே ஒரு காய்கறித் தோட்டம் அமைச்சு, நமக்குத் தேவையான காய்கறிகளைச் சாகுபடி செய்யலாம்’னு முடிவு செஞ்சேன். ‘கல்லூரிப் பேராசிரியரா இருக்க உனக்கு, எதுக்கு இந்த வேண்டாத வேலை’னு அக்கம் பக்கத்தில இருக்கவங்க கேலி பேசினாங்க. விடாப்பிடியா இருந்த நான், அந்த அரை ஏக்கர் நிலத்தைச் சுத்தம் பண்ணி, மண் வெட்டி, களைக்கொத்து மூலமா காய்கறிப் பயிரிடத் தகுந்த மாதிரி மாத்தினேன்.

‘‘எங்க வீட்டுல காய்கறிகளுக்குத் தினமும் 75 ரூபாய் வரைக்கும் செலவாகும். இப்ப நாங்க தோட்டம் போடுறதால அந்தச் செலவு மிச்சமாகுது.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதல்ல மண், தொழுஉரம், மணல் மூணையும் ஒண்ணா சேர்த்து விதைக்குற இடத்தில நல்லா பரப்பி விட்டேன். அதுக்கு மேல இயற்கை முறையில விளைஞ்ச கத்திரி, தக்காளி, பச்சை மிளகாய் விதைகளை வாங்கிட்டு வந்து தனித்தனியா விதைச்சு நாற்று உருவாக்கினேன். பிறகு, தினமும் ஒருமுறை தேவையான அளவுக்குத் தண்ணி தெளிச்சேன். விதை முளைச்சு 25 நாளைக்குப் பிறகு, நாற்றுகளைப் பிடுங்கி, தயார் செஞ்சு வெச்சிருந்த பாத்திகள்ல நடவு செஞ்சேன். பிறகு, 15 நாள்கள் வளர்ந்த நிலையில களைக்கொத்து மூலமா செடியைச் சுற்றியும் கொத்திவிட்டேன்.

வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் தோட்டம்
வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் தோட்டம்

பிறகு, வாரம் ஒரு முறை சுழற்சி முறையில பஞ்சகவ்யா கரைசலை இலை பகுதியிலும், அமுதக்கரைசல், ஜீவாமிர்தத்தைத் தண்டு மற்றும் அடி பகுதியிலும் தெளிச்சேன். செடி நல்லா வளர்ந்து கனம் கூடுச்சு. அதனால செடி சாயாம இருக்க, அடிப் பகுதியில மண்ணை அணைச்சு முட்டுக் கொடுத்தேன். சுமார் 60 நாளைக்குப் பிறகு, கத்திரிக்காய் காய்க்க ஆரம்பிச்சது. தொடர்ந்து மூணு மாசம் காய்ப்பு இருந்துச்சு.

இந்த முறையிலதான், வெண்டைக்காய், வெள்ளரி, கொத்தவரை விதைகளை விதைப்பேன். அதுக்கும் வாரம் ஒரு முறை சுழற்சி முறையில பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல்னு தெளிச்சேன். இவற்றை யெல்லாம் வீட்டிலயே தயார் செய்றோம். பூச்சித் தாக்குதலைச் சமாளிக்க ஐந்திலைக் கரைசலைத் தயார் செஞ்சு, வாரம் ஒரு தடவை தெளிப்பேன்’’ என்றவர் கீரைச் சாகுபடி பற்றிப் பேசினார்.

கத்திரிக்காய்...   சர்க்கரைக்கீரை...
கத்திரிக்காய்... சர்க்கரைக்கீரை...

18 நாள்களில் கீரை

“கீரையை நிலத்தோட ஒரு ஓரத்துல சாகுபடி செய்றேன். மண்ணைக் களைக்கொத்தை வெச்சு, கொத்திவிட்டு மண், தொழுஉரம், மணல் மூன்றையும் கலந்து, பரப்பி நிலத்தைத் தயார் செய்வேன். 3 நாளைக்குப் பிறகு கீரை விதைகளைத் தனித் தனியாகத் தூவிவிடுவேன். ஒரு வாரத்துக்குள்ள முளைக்கத் தொடங்கிடும். அதுமேல அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் தெளிப்பேன். கீரை நல்ல பச்சை நிறத்தில் தளதளனு வளரும். 18-ம் நாள்ல இருந்து கீரையை அறுக்க ஆரம்பிப்போம்.

எங்க வீட்டுல என்னோட மனைவி, ரெண்டு பிள்ளைகள், அம்மானு மொத்தம் 5 பேர். காய்கறிகளுக்குத் தினமும் 75 ரூபாய் வரைக்கும் செலவாகும். இப்ப நாங்க தோட்டம் போடுறதால அந்தச் செலவு மிச்சமாகுது. அதோடு நாமளே விளைய வைக்கிற நஞ்சில்லாக் காய்கறிகளைச் சாப்பிடுறோம்’ங்கிற முழுத் திருப்தி கிடைக்குது. கொரோனா ஊரடங்கு நேரத்தில கடைக்குப் போய்க் காய்கறி வாங்கினாலே கொரோனா பாதிப்புக்கு ஆளாவோம்’ங்கிற பயம் எல்லோருக்கும் உண்டாச்சு. அந்த நேரத்துல எங்களுக்குக் காய்கறிகள் பிரச்னையே இல்ல. அப்பத்தான், ‘நமக்கான உணவை நாமே உருவாக்க வேண்டும்’னு நம்மாழ்வார் சொன்னதோட அர்த்தம் எனக்குப் புரிஞ்சது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தை விலையைவிட கிலோவுக்கு 10 ரூபாய் அதிகம்

வீட்டுத் தேவைக்குப் போக மத்த காய்கறிகளை விற்பனை செய்வோம். வழக்கமா சந்தை விலையைவிட, ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகம் வெச்சு விற்பனை செய்வோம். இப்ப ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.40, தக்காளி ரூ.40, கொத்தவரை ரூ.40, வெள்ளரி ரூ.20, ஒரு கட்டுக் கீரை ரூ.15-க்கு விற்பனை செய்றோம். அக்கம் பக்கம் இருக்கிறவங்க, காய்கறி மொத்த வியாபாரிக நேரடியாக வந்து வாங்கிட்டுப் போறாங்க.

புளிச்சக்கீரை... முளைக்கீரை...
புளிச்சக்கீரை... முளைக்கீரை...

வருஷம் முழுசும் மகசூல் கிடைக்கிற வகையில திட்டமிட்டு வெவ்வேறு இடத்தில சுழற்சி முறையில் சாகுபடி செஞ்சுக்கிட்டு வர்றேன். உதாரணமா, ஓர் இடத்தில விதைக்கிற கத்திரிக்காயோட விளைச்சல் முடிவுக்கு வர்ற நேரத்தில, வேற இடத்தில புதுசா விதைச்சிடுவேன். இதனால சில நாள்கள் தவிர எப்பவும் காய்கறிகள் கிடைக்கும். அதனால ஏரியாவுல நம்ம தோட்டத்து காய்கறிக்கு ஏக கிராக்கியும் இருக்கு.

புழக்கடை தோட்டத்தில் மகேஷின் பிள்ளைகள்...
புழக்கடை தோட்டத்தில் மகேஷின் பிள்ளைகள்...

இதுமூலம், மாசம் தோராயமா 8,000 முதல் 10,000 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கிது. காலையில எழுந்தவுடனே உடல் ஆரோக்கியமா இருக்க, எல்லோரும் உடற்பயிற்சி செய்வோம். நாங்க வீட்டுலயே ஒரு தோட்டம் அமைச்சு, அதைப் பராமரிக் கிறது மூலமா உடல்பயிற்சி செஞ்சிடுறோம். இதன்மூலமா உடல் உறுதியாகுறதோடு நமக்கான காய்கறிகளும் கிடைக்குது. நஞ்சில்லா உணவை எடுத்துக்கிறதால ஆரோக்கியமும் உறுதியாகுது. வீட்டுல எல்லோரும் தோட்டத்துக்காகக் கொஞ்ச நேரத்தை ஒதுக்கிப் பராமரிப்போம். பொதுவா பிள்ளைங்க, செல்போன்ல கேம் விளையாடுறதுல நேரத்தைச் செலவு செய்றாங்க. ஆனா, என் பிள்ளைங்க தோட்டத்தில ரம்மியமான சூழல்ல காய்கறிச் செடிகளோட நேரத்தைச் செலவு செய்றாங்க. இதன் மூலம் நஞ்சில்லா உணவின் அருமையை என் பிள்ளைகளுக்கும் புரிய வெச்சுட்டேன். இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி’’ என்று விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, மகேஷ், செல்போன்: 96262 61892

ஐந்திலைப் பூச்சிவிரட்டிக் கரைசல்

நொச்சி, ஆடாதொடா, எருக்கு, வேம்பு, பப்பாளி ஆகியவற்றின் இலைகளைத் தலா ஒரு கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் போட்டு, 50 கிராம் பெருங்காயம் சேர்க்க வேண்டும். பிறகு, பாத்திரத்தில் வைத்துத் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். இலைகளிலிருந்து அதன் சாறு இறங்கும் வகையில் நன்கு வேக வைத்து இறக்கி விட வேண்டும். அதை அப்படியே 7 நாள்கள் வைத்திருந்தால் ஒரு வகையான நாற்றம் வரும். அதன் பிறகு எடுத்துத் தேவையான அளவு நீரைக் கலந்து செடிகளில் தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இதைத் தெளித்தால் பயிருக்குத் தீமை செய்யும் பூச்சிகள் பயிரை விட்டு ஓடிவிடும். நன்மை செய்கிற பூச்சிகள் செடியிலேயே தங்கும்.

அரை ஏக்கர்... மாதம் ரூ. 10,000 - வெகுமதி கொடுக்கும் புழக்கடை தோட்டம்!

கத்திரிக்காயைக் காய்ப்புழு, தண்டுப்புழு அதிகமாகத் தாக்கும். சாறுண்ணி மற்றும் வெள்ளை ஈக்களும் பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தடுக்க அக்னி அஸ்திரம் என்ற கரைசலைத் தயார்செய்து தெளித்தால் எந்தப் பிரச்னையும் இருக்காது.

பச்சை மிளகாய், பூண்டு, காம்பு புகையிலை ஆகியவற்றைத் தலா 100 கிராம், வேப்ப இலை 250 கிராம் ஆகியவற்றை 4 லிட்டர் மாட்டுச் சிறுநீருடன் சேர்த்துத் தேவையான தண்ணீரில் கலந்து அடுப்பில் வைத்து, நன்கு வேக வைக்க வேண்டும். இறக்கிய பிறகு 48 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். பிறகு, 3 லிட்டர் அளவுக்கான அக்னி கரைசல் கிடைக்கும். இதில் 300 மி.லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வந்தால் எந்தப் பிரச்னையும் இருக்காது. செடிகள்மீது அதிகம் தெளித்தாலும் செடிகளுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது.