Published:Updated:

ஆண்டுக்கு ரூ.11 லட்சம்... இனிப்பான லாபம் கொட்டும் தேனீ வளர்ப்பு!

தேனீக்களுடன் ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
தேனீக்களுடன் ஆனந்த்

உற்பத்தி

ணவுப் பொருளாக இருந்து வந்த தேன், தற்போது மருந்துப் பொருளாகிவிட்டது. அதனால் கலப்படமில்லாதத் தேனின் தேவையும் அதிகமாகிவருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகில் உள்ள சாயர்புரத்தில் முருங்கைத் தோட்டத்தில் தேன் பெட்டிகள் வைத்து, ‘முருங்கைத்தேன்’ உற்பத்தி செய்து வருகிறார் ஆனந்த். தேன் பெட்டிகளிலிருந்து தேன் அடைகளைப் பிரித்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். ‘‘அடிப்படையில விவசாயக் குடும்பம்தான். சின்ன வயசுலயே சொந்தமா ஏதாவது தொழில் செய்யணும்னு ஆர்வம் இருந்துச்சு. பி.ஏ பொருளாதாரம் படிச்சு முடிச்சதும், காளான் பண்ணை வைக்கலாம்னு அதுக்கான பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன். தொடர்ந்து, மதுரையில் காளான் பண்ணை ஆரம்பிச்சேன். அறுவடை செஞ்ச காளான்களை ஒரே நாள்ல விற்பனை செய்துடணும். ஆனா, போதுமான அளவுக்கு விற்பனை செய்ய முடியல. அதனால, காளான்கள் வீணாகி, நஷ்டம் ஆகிடுச்சு.

தோட்டங்களில் வைக்கப்பட்டிருக்கும் தேனீப் பெட்டிகள்
தோட்டங்களில் வைக்கப்பட்டிருக்கும் தேனீப் பெட்டிகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விவசாயம் செஞ்சாலும் சரி, உற்பத்தி செஞ்சாலும் சரி அதன் மூலமா கிடைக்கிற பொருளை இருப்பு வெச்சுதான் விற்பனை செய்யணும்னு முடிவெடுத்தேன். அப்படியொரு தொழிலைத் தேடினேன். அப்பத்தான் தேன் வியாபாரம் செய்யலாம்னு ஒரு யோசனை தோணுச்சு. கோயம்புத்தூர் மாவட்டம், விவசாயம் நிறைஞ்ச பகுதி. அதனால அந்தப் பகுதியில தேன் உற்பத்தி செய்றவங்ககிட்ட, தேனை வாங்கி விற்பனை செய்ற தொழிலை ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷம் போச்சு. என்கிட்ட தேன் வாங்குறவங்கள்ல 90 சதவிகிதம் பேர், “இது ஒரிஜினல் தேன்தானா?”னு ஒரே கேள்வியைத் தொடர்ந்து கேட்க ஆரம்பிச்சாங்க. இதனால, எனக்கே ஒருகட்டத்துல ‘நாம வாங்கி விற்பனை செய்ற தேன் ஒரிஜினல்தானா’னு சந்தேகம் வர ஆரம்பிச்சது. அந்த நேரத்துலதான் ‘நாமளே தேனை உற்பத்தி செஞ்சா என்ன?’னு யோசிச்சேன்.

கோயம்புத்தூர்ல இருக்கிற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துல தேனீ வளர்ப்பு குறித்த ஒரு வாரப் பயிற்சியில கலந்துகிட்டேன். பிறகு, நண்பர் ஒருவர் தோட்டத்துல 10 பெட்டிகளை மட்டும் வெச்சு, வளர்த்துப் பார்த்தேன். ஆரம்பத்துல தேனீக்கள் பெட்டிகள்ல தங்காம பறந்து போயிடும். பல்கலைக்கழகப் பூச்சியியல்துறைப் பேராசிரியர்களான சீனிவாசன், சரவணன்கிட்ட ஆலோசனை கேட்டேன். அவங்க சொன்ன யோசனையைச் செயல்படுத்துன பிறகு, இந்தப் பிரச்னை இல்லை. பிறகு, பெட்டிகளை அதிகமா வைக்க ஆரம்பிச்சேன். பெட்டிகளோட எண்ணிக்கையும் உற்பத்தியும் அதிகமாகிடுச்சு. இப்ப ‘மதுரம் இயற்கை தேனீ பண்ணை’ங்கற பேர்ல கோயம்புத்தூர்லயும், தூத்துக்குடியில இருக்க என் சொந்த நிலத்துலயும் 950 பெட்டிகள்மூலம் தேன் உற்பத்தி செய்துட்டு வர்றேன்” என்றவர் தொடர்ந்து, தேனீப் பெட்டிகள் அமைப்பது குறித்துப் பேசினார்.

“சாதாரணமாக ஒரு பெட்டியின் உயரம் ஒண்ணேகால் அடி, அகலம் முக்கால் அடி இருக்கும். இந்தப்பெட்டிகளை ‘மார்த்தாண்டம் வகைப்பெட்டி’னு சொல்லுவாங்க. இந்தப் பெட்டிகளைத் தயார் செய்யத் தேக்கு, புன்னை மரப்பலகைகள்தான் ஏற்றது. தரையில இருந்து ரெண்டரை அடி உயரத்தில பலகையுடன் கூடிய மர ஸ்டாண்டுகள்லதான் தேனீப்பெட்டிகளை வைக்க வேண்டும். பலகை மேல பெட்டிகளை வெச்சு, பெட்டியைக் கயிறு மூலமா கட்டிவிடணும். ஒரு பெட்டியில இரண்டு அறைகள் இருக்கும். கீழே இருக்குறது புழுஅறை, மேலே இருக்குறது தேன்அறை. கீழ் அறையில 6 சட்டகங்கள் இருக்க, தேன் அடையில் ராணித்தேனீ முட்டை வெச்சு, இனத்தைப் பெருக்கும். மேல் அறையில 4 சட்டகங்கள் இருக்கும். இந்த 4 சட்டகங்கள்லதான், தேனீக்கள் தேனைச் சேமிச்சு வெச்சிருக்கும். தேன் வரத்து அதிகம் வர்ற காலங்கள்ல கூடுதலாக ஒரு தேன் அறையை அமைக்கலாம்’’ என்றவர் தேனீப் பெட்டிகள் பராமரிப்புக் குறித்துப் பேசினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“தேனீப் பெட்டிகளை இரவில்தான் எடுத்து வர வேண்டும். பெட்டிகளைப் பூக்கள் அதிகமுள்ள பகுதிகளிலும், அதிக நிழலான இடங்களிலும் வைக்க வேண்டும். அதிக தண்ணீர் தேங்குமிடங்கள், எறும்பு மொய்க்கும் இடங்கள், மரங்கள், தூண்கள், மரக்கட்டைகளின் அருகில் வைக்கக் கூடாது. மர ஸ்டாண்டு வழியாக எறும்புகள் ஏறிச் செல்லாமல் இருக்கத் தூர்ப்பகுதியைச் சுற்றி எறும்புப்பொடியைத் தூவிவிட வேண்டும். தேனீக்களை ஓணான், பல்லி போன்றவை தாக்கும் என்பதால், ஸ்டாண்டில் கிரீஸ் அல்லது கழிவு ஆயிலைத் தடவி வைக்க வேண்டும். ஒவ்வொரு பெட்டிக்குமான இடைவெளி 4 முதல் 6 அடி இருக்க வேண்டும். சாதாரணமாக ஒரே இடத்தில் 5 முதல் 20 பெட்டிகள்வரை வைக்கலாம். பூக்கள் அதிகமுள்ள இடங்களில் 30 பெட்டிகள்வரை வைக்கலாம். தேனீப் பெட்டிகளுக்கு அருகில் செல்லும்போது வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தக் கூடாது. அதேபோலப் புகைப்பிடித்த பிறகும், மது அருந்திவிட்டும் செல்லக் கூடாது.

தேனீக்களுடன் ஆனந்த்
தேனீக்களுடன் ஆனந்த்

தேனீக்களுக்குப் புது இடத்தில் பழக 3 முதல் 5 நாள்கள் ஆகும். அந்த நாள்களில் மட்டும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீனி கலந்து கூட்டின் மேல் அறையில் வைத்துவிட வேண்டும். தட்டுகளில் உள்ள சீனித் தண்ணீருக்குள் தேனீக்கள் விழுந்து இறந்துவிட வாய்ப்புள்ளதால், தட்டின் மீது ஏதாவது நான்கைந்து இலைகளைப் பரப்பிவிட வேண்டும். இதனால் தேனீக்கள், இலைகளின் மீது அமர்ந்து இனிப்புத் தண்ணீரை உறிஞ்சும். புதிதாகக் கூடுகட்டி தேன் அறுவடை செய்ய 3 மாதங்கள் ஆகும். வாரம் ஒருமுறை கட்டாயம் பெட்டிகளைத் திறந்து, ஒவ்வொரு சட்டகத்தையும் எடுத்துப் பார்க்க வேண்டும். தேனீக்கள் சரியாகக் கூடு கட்டுகிறதா? நோய்கள் ஏதும் தாக்கியுள்ளதா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். தேவையில்லாத இடத்தில் உபரியான மெழுகு கட்டியிருந்தால் அதை, கத்தியால் வெட்டி நீக்க வேண்டும். அந்த உபரி மெழுகைச் சேகரித்து வரலாம்.

சட்டகங்களில் ஒட்டியிருக்கும் தேனீக்கள்
சட்டகங்களில் ஒட்டியிருக்கும் தேனீக்கள்

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலும், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் அதிகமாகப் பூப்பூக்கும். இந்த மாதங்களில் அதிகமாகத் தேன் சேகரிக்கலாம். ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலும், செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் பூக்கள் குறைவாகப் பூக்கும். இந்த மாதங்களிலும், மழைக் காலங்களிலும் தேனீக்கள் கூட்டைவிட்டு வெளியே பறக்காது. இறகுகளில் மழைநீர் பட்டால் அவற்றால் பறக்க முடியாது. அதனால், உணவும் தேட முடியாது. எனவே, அந்த நேரத்தில் உணவுப் பற்றாக்குறையைப் போக்க, தேன் அறையில் சீனித்தண்ணீரை வைக்க வேண்டும்’’ என்றவர் முருங்கைத் தேன் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முருங்கைத்தேனுக்கு நல்ல வரவேற்பு!

‘‘பொதுவா ‘தேனீ வளர்த்தா வருஷம் முழுக்கத் தேன் கிடைக்காது’னு சொல்லுவாங்க. தேனீக்களுக்கு வேண்டிய பூக்கள் அங்கு இல்லாதததும் ஒரு காரணம். ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்தப் பகுதியில பூக்கள் அதிகமாகப் பூக்கும் என்பதைத் தெரிஞ்சுக்கணும். அந்த இடங்கள்ல பெட்டிகளை வெச்சாதான், வருமானம் கூடும். இந்தச் சாயர்புரம் சுற்றுவட்டாரப் பகுதியில ஆயிரக்கணக்கான ஏக்கர்ல செடி முருங்கை விவசாயம் நடக்குது. அதனால, முருங்கை மரத்தடியில பெட்டிகள் வெச்சு, தேன் சேகரிக்கிறேன். இந்த முருங்கைத்தேன் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும். அதனால அதிக வரவேற்பு இருக்கு” என்றவர் நிறைவாக,

தேனைப் பிழிந்து சேகரிக்கும் பணியில்
தேனைப் பிழிந்து சேகரிக்கும் பணியில்

“தேன் உற்பத்தியைப் பொறுத்தவரைக்கும் வருஷத்துல ஆறு மாசம்தான் அதிக உற்பத்தி நடக்கும். மழைக்காலம் உள்ளிட்ட மற்ற 6 மாசங்கள் உற்பத்தி குறைவாக இருக்கும். என்கிட்ட இருக்க 950 பெட்டிகள் மூலமா, ஒரு வருஷத்துக்குச் சராசரியா 12,000 கிலோ தேன் கிடைச்சுக்கிட்டு இருக்கு. இதில், 3,000 கிலோ முருங்கைத்தேனும், 9,000 கிலோ பலமலர்த்தேனும் கிடைச்சுக்கிட்டு இருக்கு. ஒரு கிலோ (650 மி.லி) முருங்கைத்தேன் ரூ.300-க்கும், பலமலர்த்தேன் ரூ.250-க்கும் விற்பனை செய்றேன். அந்த வகையில, பலமலர்த்தேன் விற்பனை மூலமா 22,50,000 ரூபாயும், முருங்கைத்தேன் விற்பனை மூலமா 9 லட்சம் ரூபாயும் என மொத்தம் ரூ.31,50,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல, தேனைப் பிரிச்சு எடுக்கிறது, பேக்கிங், பெட்டிகள் பராமரிப்பு, போக்குவரத்து, இயற்கை இடர்ப்பாடுகளைச் சரிசெய்றதுனு ரூ.20 லட்சம் செலவாகுது. மீதமுள்ள ரூ.11,50,000 லாபமாகக் கிடைக்குது. இதுதவிர வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்து கொம்புத்தேன் சேகரித்தும் விற்பனை செய்யுறேன். எனது பண்ணையிலேயே தேனீ வளர்ப்பு குறித்துப் பயிற்சிக் கொடுத்து, என்னைப்போலப் பல தேனீ உற்பத்தியாளர் களையும் உருவாக்கிக்கிட்டு வர்றேன். இத்தொழில் எளிமையான, அதிக வேலைப்பளு இல்லாதது. இதை முதன்மைத் தொழிலாக இல்லாமல் உபதொழிலாகச் செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும்” என்றார்.

தொடர்புக்கு, ஆனந்த், செல்போன்: 95666 10023.

பயிற்சி இல்லாமல் தேனீ வளர்ப்பில் இறங்கக் கூடாது!

தேனீ வளர்ப்பு குறித்துப் பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வத்திடம் பேசினோம்.

ஆண்டுக்கு ரூ.11 லட்சம்... இனிப்பான லாபம் கொட்டும் தேனீ வளர்ப்பு!

‘‘லாபகரமான தொழில்களில் தேனீ வளர்ப்பும் ஒன்று. அதிக நிலப்பரப்பு இல்லாதவர்கள்கூட இத்தொழிலைச் செய்யலாம்.

விவசாய ரீதியிலான தேனீ வளர்ப்பு, வியாபார ரீதியிலான தேனீ வளர்ப்பு என இரண்டு வளர்ப்புமுறை உண்டு. விவசாய ரீதியான தேனீ வளர்ப்பதற்கு ‘இந்தியத்தேனீ’க்களே போதும். ஆனால், வியாபாரரீதியான தேன் உற்பத்தியில் இந்தியத் தேனீக்களைவிட, ‘இத்தாலியத்தேனீ’க்கள் சிறந்தவை. இவை இல்லாமல், மலைத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ போன்ற தேனீக்களும் உள்ளன. தேனீக்களால் பயிர்களில் மகரந்தச்சேர்க்கை ஏற்படும். ஆண் பூவில் உள்ள மகரந்தங்கள் தேனீக்களில் ஒட்டிக்கொள்ளும். அடுத்த மரத்தில் உள்ள பெண் பூவில் அந்தத் தேனீ அமரும்போது, அப்பூவின் சூல் முடியில் மகரந்தம் பட்டுப் பூ, காயாக மாறும். இதனால், 10 முதல் 30 சதவிகிதம் வரை விளைச்சல் அதிகமாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. விவசாயத் தேனீ வளர்ப்பைப் பொறுத்தவரையில் அடிக்கடி பெட்டிகளை இடம்விட்டு இடம் மாற்றக் கூடாது. ஆனால், வியாபார தேன் உற்பத்தியைப் பொறுத்தவரையில் பூக்கள் அதிகம் காணப்படும் பகுதியைப் பொறுத்து இடம் மாற்றினால் அதிக தேன் உற்பத்தி செய்யலாம்.

தேனீ வளர்ப்பைப் பொறுத்தவரையில் முறையான பயிற்சி இல்லாமல் இறங்கக் கூடாது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்புக்கான கட்டணப் பயிற்சி நடக்கிறது. அனுபவம் வாய்ந்த, திறம்படத் தேன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தேனீ உற்பத்தியாளர்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தேனீப்பெட்டிகள் வைத்தால் வீட்டுக்குத் தேவையான தேனை நாமே உற்பத்தி செய்ய முடியும். தேனீக்களைப்போல நாமும் சுறுசுறுப்பா இருந்தால்தான் இந்தத் தொழிலில் லாபம் பார்க்கமுடியும். பெட்டியை மட்டும் வைத்துவிட்டுப் பராமரிப்பு, கண்காணிப்புச்செய்யாமல் விட்டு விட்டால் வருமானம் இனிக்காது” என்றார்.

நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம்!

தேனைப் பிழிந்தெடுப்பதற்கென்றே தகரம் மற்றும் சில்வரால் ஆன ஓர் இயந்திரம் உள்ளது. இதில் பல்சக்கரத்துடன்கூடிய கைப்பிடி இருக்கும். இந்த டிரம்மில் அடையை வைத்துக் கைப்பிடியைச் சுற்றினால் தேன் வடிந்து டிரம்மில் சேகரமாகும். பிழிவதற்கு முன்பாக அறுங்கோண வடிவ துளைகளை அடைத்துக்கொண்டிருக்கும் மெழுகுகளைக் கத்தியால் சீவி விட வேண்டும். அப்போதுதான் தேன் சுலபமாக வடியும். பின்னர், அதை வெள்ளைத் துணியில் வடிகட்டிவிட்டு ஒரு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். அதை, ஒன்று முதல் மூன்று நாள்கள் வெயிலில் வைத்து ஈரப்பதத்தைக் குறைத்தால், அத்தேனை நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம்.

காலனி பிரித்தல்!

தேன்பெட்டியின் புழு அறையில் ஆறு சட்டகங்களில் எதில் ராணித்தேனீ உள்ளதோ, அந்தச் சட்டகத்தைப் புதிய காலிப்பெட்டியில் வைக்க வேண்டும். ஒருபெட்டியில் ஒரே ஒரு ராணித்தேனீதான் இருக்கும். எல்லாத் தேனீயைவிடச் சற்று நீளமாக இருப்பதுதான் ராணித்தேனீ. அதேபோல, மேலும் இரண்டு சட்டகத்தை எடுத்து வைக்க வேண்டும். பழைய பெட்டியில் அதற்குப் பதிலாகப் புதிய காலியான சட்டகத்தை வைத்து விட வேண்டும். புதிய பெட்டிகளைப் பழைய பெட்டியின் அருகில் வைத்தால், ராணித்தேனீயின் வாசனையை அறிந்து, வேலைக்காரத் தேனீக்கள் ஒரே பெட்டியை நோக்கிச் செல்லும் என்பதால், புதிய பெட்டியை அரை கிலோமீட்டர் தூரத்தில் வைக்க வேண்டும். அதைத்தொடர்ந்து இரண்டு பெட்டிகளிலுமே தேன் உற்பத்தி தொடங்கும். இப்படிச் சட்டகங்களைப் பிரித்துப் புதிய பெட்டிகளில் வைத்துத் தேன் உற்பத்தியைத் தொடங்குவதை ‘காலனி பிரித்தல்’ என்பார்கள். ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறை காலனி பிரிக்கலாம்.