Published:Updated:

பூக்களை வளர்த்து பூமியைக் காப்போம்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

பூக்களை வளர்த்து பூமியைக் காப்போம்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

உலக அளவில் சிந்திப்போம், உள்ளூர் அளவில் செயல்படுவோம்’ (Think Globally, Act Locally) அறிவுஜீவிகள் மத்தியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று. இந்த வாசகம் எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கொரோனாவுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமாக உள்ளது. உலகத்துக்கும் உள்ளூருக்கும் தொடர்பு உள்ள இன்னொரு விஷயத் தைப் பார்ப்போம்.

ஊரடங்கில் அதிகம் பாதிக்கப்பட்டது பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தாம். சில மாதங்களுக்கு முன் கிலோ 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி, வாங்க ஆள் இல்லாமல் செடியிலேயே வாடி வதங்கின. இந்தத் தீமையிலும் சிறு நன்மை நடந்துள்ளது. ஆந்திரா மாநிலம் அருகில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்திருந்த விவசாய நண்பர், அதை விற்பனை செய்ய வழியில்லாமல் செடியிலேயே விட்டுவிட்டார். சில வாரங்கள் கழித்து வயலில் பார்த்தால், தேனீக்களின் வருகை அதிகரித்திருந்தது. சிலந்தி வலைகள் ஆங்காங்கே பின்னிக் கிடந்தன. வயலில் புழுக்களே தென்படவில்லை. காரணம், தேனீக்களும் சிலந்திகளும் தீமை செய்யும் புழுக்களைத் தின்று தீர்த்திருந்தன. இந்தக் காட்சிகளைச் சொல்லிய அந்த நண்பர், ‘‘ஊரடங்கு முடிந்தாலும் என் வயலில் தேனீக்களுக்காக ஒரு பகுதியில் பூக்களை வளர்ப்பேன்’’ என்றார்.

கடந்த ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள ஸ்லோ ஃபுட் (Slow Food) அமைப்பு ஆன்லைனில் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அதில் பேசிய இங்கிலாந்து நாட்டில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் (University of Sussex) பேராசிரியர் டேவ் கோல்சன், “அன்பானவர்களே, இந்தப் பூவுலகு சிறப்பாக இருக்கப் பூச்சிகள் அவசியம். பூச்சிகள் உயிர் வாழப் பூக்கள் அவசியம். பூச்சிகள் இல்லை என்றால் மகரந்தச் சேர்க்கை நடக்காது. உணவுப் பயிர்களின் வளர்ச்சிக்குப் பூச்சிகளின் பணி முக்கியமானது. பூச்சிகள் இல்லை என்றால் உணவு உற்பத்தி நடக்காது. மண்ணில் மனித இனம் வாழ முடியாது. எனவே, பூக்களை வளர்த்து பூமியைக் காப்போம்’’ என்று இதற்கான ஆதாரங்களைக் காட்டி அக்கறையுடன் பேசினார்.

பூக்கள்
பூக்கள்


சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா யூனியனில் ‘தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன’ என்று அங்குள்ள விவசாயிகள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். ஆறுமாதம் பனியும் ஆறுமாதம் வெயிலும் அடிக்கும் தேசத்தில் உள்ளவர்களுக்குத் தேனீக்கள் என்பது தேவதைபோல. பக்கத்து நாடுகளிலிருந்து தேனீக்களைக் கடன் வாங்கி வந்து வளர்க்கும் நாடுகளும் கூட உண்டு. தேனீக்கள் இல்லாமல் விவசாயம் செய்வது, முழுமை அடையாது என நம்புகிறார்கள். அறிவியல் பார்வையில் அது உண்மையும்கூட. தேனீக்கள் மூலம் மகரந்தச் சேர்க்கை உருவாகும்போது 30 சதவிகிதம் விளைச்சல் கூடுகிறது என்று புள்ளிவிவரம் சொல்கிறது. எதையும் வணிகமாக்கும் சீனாக்காரர்கள் தேனீக்களை வைத்து, கொட்ட கொட்டப் பணம் சம்பாதிக்கிறார்கள்.

‘‘உணவுப் பயிர்களின் வளர்ச்சிக்குப் பூச்சிகளின் பணி முக்கியமானது. பூச்சிகள் இல்லை என்றால் உணவு உற்பத்தி நடக்காது.’’


சீனாவில் `பீ வெனம் தெரபி’ என்கிற பெயரில் செய்யப்படும் மருத்துவ முறை (தேனீயை உடலில் கொட்டவிடுவது) பிரபலமாக உள்ளது. ‘உடலில் என்ன பிரச்னை என்றாலும் தேனீக்கள் கொட்டினால், அந்த நோய் குணமாகிவிடுகிறது’ என்கிறார்கள். இந்த முறையில் மருத்துவம் செய்துகொள்ள வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள் என்று சீனா பெருமைப்பட்டுக்கொள்கிறது.

இயற்கை விவசாயத்தில் நெடுங்காலம் அனுபவம் கொண்ட நபர், வயலை ஒருமுறை சுற்றிப்பார்த்துவிட்டே, அது இயற்கை விவசாயம் செய்யும் நிலமா, ரசாயன விவசாயம் செய்யும் நிலமா என்று சொல்லிவிடுவார். இதற்கான அளவுகோலில் முதலில் இருப்பது தேனீக்கள்தான். தோட்டத்தில் தேனீக்களின் நடமாட்டம் இருப்பதும் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதுமே, அந்த நிலத்தின் பல்லுயிர்ச்சூழலைப் பறைச்சாற்றிவிடும். சிலந்தி, மண்புழுக்கள்… போன்றவை அடுத்த நிலையில் உள்ளன. மேலை நாடுகளில் தேனீக்களைத் தேவதை என்று கொண்டாடு கிறார்கள். அந்த அளவுக்குக்கூட வேண்டாம், அதை நம் தோட்டத்தில் வேலை செய்யும் பணியாள்போல நடத்தினாலே போதும். விவசாயம் செய்பவர்கள் ஆடு, மாடு வளர்ப்பதுபோல தேனீக்களை வளர்த்தால், நிச்சயம் அந்த நிலத்தின் வளம் பெருகும்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

2018-ம் ஆண்டு, ஒன்றிய அரசின் கதர் மற்றும் கிராம தொழில்கள் நிறுவனம் அசாம் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் மத்தியில் தேனீக்களை வளர்க்கும் முயற்சியில் இறங்கியது. மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரம் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை விநியோகிக்க வேண்டும் என்பதே கதர் மற்றும் கிராம தொழில்கள் நிறுவனத்தின் குறிக்கோள். அந்த இலக்கை எட்டும் நோக்கில் இதுவரை 27 ஆயிரம் தேனீ பெட்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தேனீக்கள் வளர்ப்பதற்கான உபகரணங்கள் வழங்குவதோடு தேனைப் பிரித்தெடுப்பது எப்படி? தேனீக்களின் எதிரிகள் யார்? அவற்றிடமிருந்து எப்படி தேனீக்களை பாதுகாக்க வேண்டும்? தேன்கூடுகளிலிருந்து பிரித்தெடுத்த தேனை எப்படி சுத்திகரிக்க வேண்டும் போன்ற பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.

‘‘மலை வாழ்விடங்களில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. அதனால் விலைமதிக்க முடியாத அரிய தாவர இனங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. தேனீக்கள் நடமாட்டம் இருந்தால்தான் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று தாவர இனங்கள் அதிகரிக்கும். மலைவாழ் மக்களுக்குத்தான் தேனீக்களுடன் நெருங்கிய பந்தம் இருக்கிறது. அது காலம் காலமாக தொடர வேண்டும். தற்போதைய தலைமுறையினருக்கும் தேனீ வளர்ப்பு பற்றிய ஆர்வம் பெருக வேண்டும். தேனீக்கள் வளர்ப்பு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய அங்கம். தற்போது வழங்கப்பட்டிருக்கும் தேனீ பெட்டிகள் மூலம் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காஸிரங்கா வனப்பகுதியில் ஆண்டுக்கு 30 ஆயிரம் கிலோ தேன் சேகரிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்கிறது கதர் மற்றும் கிராம தொழில்கள் நிறுவனம்.

உலக அளவில் சிந்திப்போம், உள்ளூர் அளவில் செயல்படுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism