Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : தலேப் பிராஹிம்... பாலைவனத்தில் பயிர் வளர்த்தவர்!

மாண்புமிகு விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாண்புமிகு விவசாயிகள்

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 13

நாம் உண்ணும் உணவானது, நம் உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் அதிகரிப்பதாக இருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலுக்குள் விஷத்தை ஏற்றுவதாக இருக்கக் கூடாது.

மேற்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஒரு நிலப்பரப்பு மேற்கு சகாரா. பெரும்பாலும் பாலைவனப் பிரதேசங்களைக் கொண்ட பகுதி. இதன் வடக்கில் மொரோக்கோவும், வடகிழக்கு எல்லையில் அல்ஜீரியாவும், கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் மவுரித்தோனியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. சென்ற நூற்றாண்டில் ஸ்பெயினின் காலனியாதிக்கப் பிரதேசமாக இது இருந்தது. 1975-ம் ஆண்டில் ஸ்பானியர்கள் இந்தப் பகுதியை விட்டு வெளியேறினர். அப்போது அண்டை நாடான மொரோக்கோ, இந்த மேற்கு சகாரா பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டது. மொரோக்காவுக்கு எதிராக, மேற்கு சகாராவின் பொலிசாரியோ முன்னணிப் படையினர் போரிட ஆரம்பித்தனர். அது மேற்கு சகாரா போர் என்று அழைக்கப்படுகிறது. ஐ.நா. சபை, பல காலமாகத் தீர்வு காண முடியாமல் திணறும் பல பிரச்னைகளில் மேற்கு சகாரா பிரச்னையும் ஒன்று. அதன் அரசியலை நீட்டி முழக்கிப் பேச வேண்டும். ஆனால், நாம் பேச வேண்டியது அந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட அகதிகளின் வாழ்க்கை குறித்து. அந்த அகதிகளில் ஒருவர் நிகழ்த்தி வரும் ‘பசுமைப் புரட்சி’ குறித்து...

மாண்புமிகு விவசாயிகள் : தலேப் பிராஹிம்... பாலைவனத்தில் பயிர் வளர்த்தவர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1975-ம் ஆண்டில் மேற்கு சகாரா பிரச்னை தீவிரமாகத் தொடங்கியபோது ஆயிரக்கணக்கானோர், அல்ஜீரியாவுக்குள் அகதிகளாக நுழைந்தனர். அல்ஜீரியாவின் ‘டிண்டவுஃப்’ நகரத்தின் அருகில் சஹ்ரானி அகதிகள் முகாமில் ஏராளமானோர் தஞ்சமடைந்தனர். தலேப் பிராஹிம் (Taleb Brahim), தன் குடும்பத்தினருடன் அங்கே வந்து தஞ்சமடைந்தபோது அவருக்கு வயது ஆறு. எதுவும் புரியவில்லை. பசிக்கு உணவு அடுத்து எப்போது கிடைக்கும் என்பது மட்டுமே ஒரே நினைப்பாக இருந்தது. யாராவது பாவப்பட்டு உணவு கொடுத்தால் உண்டு. ஒரு நாளைக்கு ஒரு ரொட்டித் துண்டு ஒருவருக்குக் கிடைத்தாலே மிகப்பெரிய விஷயம். சர்வதேச அமைப்புகள் செய்த உதவிகளால் மட்டுமே அந்த அகதிகள் முகாம்களில் இருந்தவர்கள், உயிர் பிழைத்துக் கிடந்தார்கள் அல்லது உயிர் பிழைத்திருக்கும் வரை கிடந்தார்கள். ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கு அளவு கிடையாது. கெட்டுப்போன உணவுகளும், குப்பையில் கிடைக்கும் உணவுக் கழிவுகளும்கூட அவர்களது பசி போக்கின. மனிதர்களுக்கே உணவில்லாதபோது கால்நடைகளை எப்படி வளர்க்க முடியும்? இருந்த சில கால்நடைகளும் மெலிந்து சாவது வாடிக்கையான விஷயம்தான். இந்த அவலமான சூழலில்தான் தலேப் பிராஹிம் தனது பெற்றோருடன், சகோதர, சகோதரிகளுடன் வளர்ந்தார்; வாழ்ந்தார்.

சொந்த நாடு கிடையாது. சொந்த வீடு கிடையாது. கல்வியையாவது எப்பாடு பட்டாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தலேப்பின் எண்ணமாக இருந்தது. கற்கும் கல்வியே தன்னை உயர்த்தும். தன் போன்றோரை உயர்த்துவதற்கும் வழிகாட்டும் என்ற தெளிவு தலேப்புக்கு இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, தலேப் விவசாயக் கல்வி படிக்க நினைத்தார். விவசாயத்துக்கும் அவர்களது பரம்பரைக்கும் கொஞ்சம்கூடத் தொடர்பு கிடையாது. ஆனால், வாழ்நாள் முழுக்க உணவுக்காக அடுத்தவர்களை அண்டிக் கிடக்கும் அவலநிலை, தலேப்பை ஒரு விவசாயியாக மாறச் சொல்லி உந்தியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மேற்கு சிரியாவில் அமைந்துள்ள திஷ்ரீன் பல்கலைக்கழகத்தில் விவசாயம் கற்க, கல்வி உதவித்தொகையுடன் இடம் கிடைத்தது. தலேப் மகிழ்வுடன் அங்கே சென்றார். கசடறக் கற்றார். படிக்கும் வருடங்களிளெல்லாம் குடும்பத்தைப் பிரிந்து கிடந்தது கடும் மன அழுத்தத்தைத் தந்தாலும், வருங்கால நலன் கருதி அனைத்துச் சோகங்களையும் விழுங்கிக்கொண்டார்.

மாண்புமிகு விவசாயிகள் : தலேப் பிராஹிம்... பாலைவனத்தில் பயிர் வளர்த்தவர்!

1996-ம் ஆண்டில் தலேப் மீண்டும் அல்ஜீரியாவில் தனது முகாமுக்குத் திரும்பினார். ‘நமக்குத் தேவையான உணவை நாமே விளைவித்துக்கொள்வோம்’ என்று நம்பிக்கையுடன் சொன்னார். எல்லோரும் தலேப்பை மேலும் கீழும் பார்த்தனர். ‘நீ விவசாயம் படிச்சிருக்க. அதுக்காகப் பாலைவனத்துல இருந்துக்கிட்டு என்ன பண்ண முடியும்?’ என்று கேள்வி எழுப்பினர். மிக மிக நியாயமான கேள்விதான். அந்தப் பாலைவனப்பகுதியில் கோடையில் 49 டிகிரி செல்சியஸ் வரை வெயில் போட்டுத்தாக்கும். குளிர்காலத்தில் கொடும்பனியும் குடைச்சல் கொடுக்கும். நீர் வளமெல்லாம் கிடையாது. அங்கே கனவில் வேண்டுமானால் விவசாயம் செய்யலாம். ஆனாலும் தலேப் உறுதியாக நின்றார். ‘அடுத்த தலைமுறை குழந்தைகளாவது மேன்மையுடன் வாழ வேண்டும். உணவுக்காகக் கையேந்தும் நிலை ஒழிய வேண்டும்’ அழுத்தமாகச் சொன்னார். வீட்டுத்தோட்டம், சிறிய அளவில் விவசாயம் என்ற தலேப்பின் பல ஆண்டு முயற்சிகளில் தோல்வி மட்டுமே விளைந்தது. ஆனால், அவர் மனம் தளரவில்லை. ஏதாவது ஒரு வழி இருக்கும். அதைக் கண்டடைய வேண்டும் என்று அவரது உள்ளம் சொல்லிக்கொண்டே இருந்தது. ஒருநாள், தலேப்பின் அமெரிக்க நண்பர், வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த தலேப்பின் முகத்தில் பிறந்தது மகிழ்ச்சி. அந்த வீடியோ சொன்ன விஷயம் ‘ஹைட்ரோபோனிக்ஸ்’.

பசுமைக் குடிலுக்குள் தலேப்
பசுமைக் குடிலுக்குள் தலேப்

மண் இல்லாமல், குறைந்தளவு தண்ணீரை மட்டும் கொண்டு, குறைந்த காலத்தில் பயிர்களை வளர்க்கும் முறையே ஹைட்ரோபோனிக்ஸ். குறைந்த செலவு, குறைந்த இட வசதி, குறைந்த வேலையாள்கள் போதும். இதோடு பசுமைக் குடில்களை அமைத்தும் பயிரிடலாம். மிகக்குறைந்த இடத்தில் அதிக அளவு உற்பத்தி என்பது இதன் மிகப்பெரிய ப்ளஸ். கடும் வறட்சிக் காலத்தில் கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களைத் தயாரிக்க உலகின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிரிடும் முறைதான். எப்போதும் வறட்சி நிலவும் தன் பிரதேசத்தின் விவசாய முறையாக அதைத் தேர்ந்தெடுத்தார் தலேப். அதே சமயத்தில் உலக உணவு திட்டம் (World Food Programme -WFP) அமைப்பிலிருந்து தலேப்பை அணுகினார்கள். ‘உங்கள் முகாமின் உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்ய ஏதாவது புதுமையான திட்டம் வைத்திருக்கிறீர்களா?’ தலேப், ஆர்வத்துடன் ஹைட்ரோபோனிக்ஸ் குறித்து எடுத்துரைத்தார். அந்த அமைப்பினர், தலேப்புக்கு முழு அளவில் ஒத்துழைப்பு தர முன்வந்தனர். 2017-ம் ஆண்டில் உலக உணவு அமைப்பு, ஆக்ஸ்பேம் (Oxfam) என்ற வறுமைக்கு எதிராகப் போராடும் சர்வதேச அமைப்பு, இன்னோவேஷன் ஆசிலரேட்டர் (Innovation Accelerator) என்ற தனியார் அமைப்பு எல்லாம் இணைந்து, அந்த அகதிகள் முகாமில் பசுமைப் புரட்சியை நிகழ்த்த, தலேப்புக்கு உதவின. பசுமைக் குடில்கள் உருவாகின. அவை மின்சாரத்தாலும் சூரிய ஒளியாலும் இயங்கும்படி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. சிறு சிறு தட்டுகளில் மண்ணில்லா விவசாயத்துக்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. நீரைச் சேகரித்து, ஈரப்பதத்தைக் காக்கும் வடிவமைப்புகள் பிறந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆடுகளுக்கு உணவாக
ஆடுகளுக்கு உணவாக

விளைச்சலுக்காக தலேப் நம்பிக்கையுடன் காத்திருந்தார். ‘பைத்தியக்காரத்தனம். இதெல்லாம் சரி வராது. இந்தப் பாலைவனத்துல இருந்து ஒண்ணும் பண்ண முடியாது’ என்று அவநம்பிக்கை சொற்கள் அகதிகள் முகாமில் எதிரொலித்தன. தலேப், புன்னகையுடன் காத்திருந்தார், பார்லி பயிர்கள் விளையும் என்று. ஆம், அவர் பார்லி பயிரைத்தான் சோதனை முறையில் விளைவிக்கத் தேர்ந்தெடுத்திருந்தார். எந்தவித ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ பயன்படுத்தப்படவில்லை. நவீன முறையில் இயற்கை வேளாண்மை. தலேப்பின் நம்பிக்கை வீண் போகவில்லை. பொதுவாகப் பார்லியை விளைவிக்கத் தேவையானதில் 90 சதவிகிதம் குறைவான நீரே பயன்படுத்தப்பட்டிருந்தது. பார்லி நிறைவாக விளைந்து பலரது வயிற்றில் கஞ்சியை வார்த்தது. தான் பரிசோதனை செய்து கற்றுக்கொண்ட நவீன விவசாயத்தை, தன் சக மக்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார் தலேப். புதிய பசுமைக் குடில்கள் பிறந்துகொண்டே இருந்தன. பசி போக்கும் பார்லி பற்றாக்குறையின்றி நிறைந்தது. முகாமில் வளர்க்கப்படும் கால்நடைகள் சந்தோஷமாக அசைபோட ஆரம்பித்தன. கால்நடைகளின் வயிறு நிறைய, நிறைவாகப் பால் உற்பத்தி நடைபெற ஆரம்பித்தது.

அகதிகள் முகாம்
அகதிகள் முகாம்

சுவையான இறைச்சியும் கிடைக்கத் தொடங்கியது. தலேப்பின் கனவு நிறைவேறியது. ஆம், அந்த அகதிகள் உணவுக்காகக் கையேந்தும் நிலை மாறிவிட்டது. இப்போது அவர்கள் பார்லி போன்ற சில பயிர்களை ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வெற்றிகரமாக விளைவித்துச் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கால்நடை வளமும் அங்கே பெருகியிருக்கிறது. பாலைவனப் பிரதேசத்தில் பசுமைப் புரட்சியை அரங்கேற்றியிருக்கிறார் தலேப் பிராஹிம். பல அமைப்புகளின் உதவியுடன் தலேப் செயல்படுத்தி வரும் இந்தத் திட்டத்தின் பெயர் ‘எச்2குரோ ஹைட்ரோபோனிக்ஸ்’ (H2Grow hydroponics). அல்ஜீரியா மட்டுமன்றி, சாட், ஜோர்டான், பெரு எனப் பிற இடங்களிலும் தலேப்பின் ஆலோசனைப்படி இந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வறட்சியான பிரதேசங்களிலும் வசந்தம் வீசத் தொடங்கியிருக்கிறது. 2019 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையில் பேசும் வாய்ப்பும் தலேப்புக்கு வாய்த்தது. ‘பசி இல்லாத உலகை உருவாக்க வேண்டும். உலகின் பசி போக்க இது போன்ற திட்டங்களை அசாதாரணமான சூழல் நிலவும் ஒவ்வொரு இடங்களிலும் செயல்படுத்த)) வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

தனக்குச் சிறுவயதில் கிடைக்காத பாலும் இறைச்சியும், இப்போது தன் முகாமில் வாழும் குழந்தைகளுக்குக் கிடைப்பதில் தலேப்புக்கு அளவில்லா மகிழ்ச்சி.

-சரித்திரம் தொடரும்