Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : பத்மஸ்ரீ ஹூகும்சந்த் பட்டிதார்... இயற்கை விவசாயம் கொடுத்த வெகுமதி!

ஹூகும்சந்த் பட்டிதார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹூகும்சந்த் பட்டிதார்

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 4

‘இந்த பூமியில் உலவும் மிகப்பெரிய மூடநம்பிக்கை அல்லது அச்சுறுத்தல் எதுவென்றால், அழிக்கப்படும் இயற்கையை யாராவது ஒருவர் நிச்சயம் காப்பாற்றுவார் என்று ஒவ்வொருவரும் எண்ணுவதே.’

- ராபர்ட் ஸ்வான்.

அன்றைக்கு மயில் ஒன்று இறந்து கிடந்தது. `வேறெதற்கோ வைத்த மருந்தைத் தின்று மயில் இறந்திருக்கலாம்’ என்றார்கள். ஆனால், அங்கே யாரும் மருந்து வைத்ததுபோலவும் தெரியவில்லை. அங்கே உலவும் வேறு சில மயில்களையும் கவனித்தார் ஹூகும்சந்த் (Hukumchand Patidar). அவையும் நோய்வாய்ப்பட்டிருந்தன. அடுத்ததாக வேறு சில பறவைகளும் இறந்துபோனபோது ஹூகும்சந்த் கவலையில் ஆழ்ந்தார். சில நாள்கள் கழித்து நாய் ஒன்று நோயில் விழுந்தது. அவரின் காலையே சுற்றிச் சுற்றி வரும் பாசக்கார நாய். அடுத்ததாக அவருடைய பண்ணை மாடுகள் ஒவ்வொன்றாக நோயில் விழத் தொடங்கின. பசு ஒன்றின் இறப்பு என்பது ஒரு விவசாயியை மீளாத்துயரில் ஆழ்த்தும் சம்பவம்.

மாண்புமிகு விவசாயிகள் : பத்மஸ்ரீ ஹூகும்சந்த் பட்டிதார்... இயற்கை விவசாயம் கொடுத்த வெகுமதி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நொடிந்துபோய் உட்கார்ந்திருந்த நேரத்தில்தான் ஹூகும்சந்துக்கு புத்தி தெளிந்தது. சோயாபீன்ஸ் விளைச்சலுக்காகப் பயன்படுத்திய ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இத்தனை உயிர்களை வீழ்த்தியிருக்கின்றன என்ற விஷயம் புரிந்தது. ‘விவசாயத்தில் அதிக விளைச்சல் காண வேண்டும் என்ற நோக்கத்துடன் ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் இந்த மண்ணை விஷமாக்கி வைத்திருக்கிறோம். விஷமேறிய மண்ணில் விளைந்ததை உண்ட உயிரினங்கள் மடிகின்றன அல்லது நோயில் வீழ்கின்றன. எங்கள் மண்ணையும், பிற உயிரினங்களையும் கொன்றது மனிதர்களாகிய நாங்களே!’ - ஹூகும்சந்தின் மனம் உறுத்தியது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலவார் அருகில் அமைந்துள்ள மன்புரா கிராமம்தான் ஹூகும்சந்த் பட்டிதாருக்குச் சொந்த ஊர். விவசாயக் குடும்பம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவர், தன் வாழ்நாள் முழுக்க விவசாயியாகத்தான் இருக்க வேண்டும் என்பது அப்போது எழுதப்படாத விதி. ஹூகும்சந்த் பத்தாவது வரை படித்தார். பிறகு முழுநேர விவசாயியானார். பெரிய விவசாயி, சிறு விவசாயி என்பதைத் தாண்டி, எல்லோருக்கும் கஷ்டம் ஒன்றுதான். பயிர் நன்கு விளைந்தால் லாபம். இல்லாவிட்டால் கூடுதல் கடன் சுமை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`நல்ல விளைச்சல் வேண்டுமென்றால் ஒரே வழி, செயற்கை ரசாயன உரங்கள் மட்டுமே’ என்று அவர்கள் நம்பினார்கள். `பயிர்கள் குறுகியகாலத்தில் விளைந்தால் தப்பிக்கலாம்’ என்ற எண்ணமே எல்லோருக்குள்ளும் ஊறிப்போயிருந்தது. 2004-ம் ஆண்டுவரை ஹூகும்சந்தும் அதே மனநிலையில்தான் விவசாயம் செய்துகொண்டிருந்தார்.

ஹூகும்சந்த் பட்டிதார்
ஹூகும்சந்த் பட்டிதார்

மயில்களும் மாடுகளும் இறந்துபோனது அவருடைய மனத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. ‘நான் இனி இயற்கை விவசாயம் செய்யப்போகிறேன்’ என்ற நல்ல முடிவை எடுத்தார். அப்போது வரை இயற்கை விவசாயம் குறித்த பொதுவான மூட நம்பிக்கைகள் ஹூகும்சந்தையும் ஆட்கொண்டிருந்தன. இயற்கை விவசாயம் செய்வது கடினம். அதிகம் செலவு வைக்கக்கூடியது. விளைச்சல் குறைவாகத்தான் இருக்கும். நஷ்டம் பெருமளவில் உண்டாகும். இந்த நிலையில், அவருக்குள் உண்டான மனமாற்றத்தால், `எப்பாடுபட்டாவது இயற்கை விவசாயமும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று நினைத்தார்.

ஹூகும்சந்த் தனது முடிவைக் குடும்பத்தினரிடம் சொன்னபோது, அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். `பைத்தியக்காரத்தனம்...’ என்று எச்சரித்தனர். ஆனால், அவர் விடவில்லை. ‘எனக்குக் கொஞ்சம் நிலம் மட்டும் கொடுங்கள். அங்கே நான் என் இஷ்டப்படி இயற்கை விவசாயத்தைப் பரிசோதனை முறையில் செய்து கொள்கிறேன்’ என்றார்.

‘ஏதாவது செய்து தொலை’ என்று சிறு துண்டு நிலத்தை அவருக்கு ஒதுக்கினார்கள் குடும்பத்தினர்.

இயற்கை விவசாயத்தில் முன் அனுபவம் இல்லாத ஹூகும்சந்துக்கு முதலாம் ஆண்டு விளைச்சல் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஆம், அவர் நினைத்ததில் 10 சதவிகிதம் மட்டுமே விளைச்சல் கிடைத்தது. குடும்பத்தினர் தலையில் அடித்துக்கொண்டனர். ஹூகும்சந்த் மனம் தளரவில்லை. ‘அனுபவத்தின் மூலமாக மட்டுமே இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொள்ள முடியும்’ என்று உறுதியாக நின்றார். அவர் செயற்கை உரங்களையும், கலப்பின விதைகளையும் தொடவே இல்லை. அந்தச் சமயத்தில் உதய்பூரின், மஹாராணா பிரதாப் வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாந்திலால் மேத்தா, ஹூகும்சந்துக்கு இயற்கை விவசாயம் குறித்த நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தார். தொடர்ந்து ஆலோசனைகளையும் வழங்கினார்.

ஹூகும்சந்த் தெம்புடன் தன் நிலத்துக்கான இயற்கை உரங்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கினார். இயற்கை உரத் தயாரிப்புக்காக இன்னும் கொஞ்சம் நிலத்தைக் குடும்பத்தினரிடம் கேட்டு வாங்கிக் கொண்டார். ஜீவாமிர்தம் தயாரிக்கக் கற்றுக்கொண்டார். பிறகு 40 வகையான காய்ந்த இலைகளைச் சேகரித்துத் தனியே வைத்தார். பின் அவற்றை ஜீவாமிர்தக் கலவையுடன் சேர்த்து நொதிக்கச் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னொரு பக்கம் மண்புழு உரம் தயாரிப்பதில் முனைப்பு காட்டினார். விதைகளை விதைத்து பிறகு இயற்கை உரம் தூவுவதற்கு பதிலாக, இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுத்திய நிலத்தில் விதைகளை விதைத்தார். அதில் மண்புழு உரத்தையும் தூவினார். பயிர் வேர்பிடித்து வளரத் தொடங்கிய பருவத்தில் ஜீவாமிர்தக் கரைசலைத் தெளித்தார். ஏற்கெனவே அறுவடை செய்த நிலத்தில் கிடக்கும் வைக்கோலை எரித்துச் சாம்பலை உரமாகத் தூவலாம். எரித்தால் காற்று மாசுபடும் அல்லவா... எனவே, அவற்றை நிலத்திலேயே மட்கச் செய்து மண்ணுக்கு உரமாக்கினார். அது, காற்றாலும் மழையாலும் நிலத்தில் உண்டாகும் மண் அரிப்பைத் தடுக்கும் கவசமாகவும் மாறியது. இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அனுபவத்தில் இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொண்டார் ஹூகும்சந்த்.

ஹூகும்சந்த் பட்டிதார்
ஹூகும்சந்த் பட்டிதார்

அடுத்தகட்டமாக ராஜஸ்தான் மாநில, இயற்கை விவசாயச் சான்றளிக்கும் நிறுவனத்தை (Rajasthan State Organic Certification Agency) நாடினார் ஹூகும்சந்த். உரிய ஆவணங்கள் மற்றும் மாதிரிகளைக் கொடுத்து இயற்கை விவசாயியாகப் பதிவு செய்துகொண்டார். பிறகு அந்த நிறுவனம், `ஹூகும்சந்த் இயற்கை முறையில் விளைவித்த பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்’ என்று அனுமதிச் சான்றிதழ் அளித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஹூகும்சந்தின் குடும்பத்தினரிடமும் ‘இயற்கையான’ மனமாற்றம் உண்டானது. அவர்களும் தங்களுடைய மொத்த நிலமான 40 ஏக்கரிலும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஆரம்பித்தனர். பலன் 100 சதவிகிதமல்ல; 120 சதவிகிதம். ஹூகும்சந்தின் ‘இயற்கை விவசாயப் பண்ணை’ அந்த மாநிலத்துக்கே முன்மாதிரிப் பண்ணையாக மாறியது. பலரும் அவரிடம் வந்து இயற்கை விவசாயம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள்.

ஹூகும்சந்துக்கு இரண்டு மகன்கள். இரண்டு பேருமே கணினி அறிவியல் பட்டதாரிகள். விவசாயத்துடன் புரோகிராமிங்கும் தெரிந்த புத்திரர்கள். அவர்கள் தங்கள் பண்ணையில் விளைந்த இயற்கையான பொருள்களுக்கு, சர்வதேச அளவில் சந்தையை உருவாக்க, இணையத்தில் விதை போட்டார்கள். மின்னஞ்சல்களின் வழியே பலன் அறுவடையானது. முதலில் பிற மாநிலங்களுக்குத் தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கிய ஹூகும்சந்த் குடும்பத்தினர், அடுத்ததாக அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கினர்.

பல நாடுகளிலிருந்தும் ஹூகும்சந்த்தின் இயற்கை விவசாயப் பண்ணையைப் பார்வையிட மக்கள் வரத் தொடங்கினார்கள். இப்போது ஹூகும்சந்தின் குடும்பப் பண்ணை நிலத்தில் தானியங்கள், பழங்கள், பூண்டு, வெந்தயம், கொத்தமல்லி போன்ற பல பொருள்கள் முற்றிலும் இயற்கையான முறையில் விளைவிக்கப்படுகின்றன. அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 120 விவசாயிகள் ஹூகும்சந்த் வழிகாட்டுதலில் முழுமையான இயற்கை விவசாயம் செய்துவருகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 2,000 கிலோ பூண்டு அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 50 டன் வெந்தயம் ஜெர்மனிக்கும், 100 டன் கொத்தமல்லித்தூள் ஜப்பானுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சுமார் 28 நாடுகளுக்கு மன்புரா கிராமத்திலிருந்து பொருள்கள் ஏற்றுமதியாகின்றன.

இயற்கை முறையில் விளைந்த தானியங்களும், பழங்களும், காய்கறிகளும் ராஜஸ்தானின் பல பகுதிகளுக்கும், வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

ஹூகும்சந்த் என்ற ஒரு விவசாயிக்குள் ஏற்பட்ட மனமாற்றம், இன்று அந்த கிராமத்தையே இயற்கை விவசாயத்துக்குப் பெயர் பெற்றதாக மாற்றியிருக்கிறது.

இப்போது அங்கே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில்லை. லாபகரமாக விவசாயம் செய்துவருகிறார்கள்.

ஹூகும்சந்தின் விவசாய அனுபவங்கள், இந்தி திரைப்பட நடிகர் அமீர்கானால் தொகுத்து வழங்கப்பட்ட ‘சத்ய மேவ ஜயதே’ நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு விருதுகளை வென்ற ஹூகும்சந்துக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்திருக்கிறது.

‘இயற்கை விவசாயம் குறித்துப் பொதுவாக நிலவும் மூடநம்பிக்கை ஒவ்வொன்றையும் நான் தகர்த்தெறிந்தேன். அதனால் இன்றைக்கு என் கிராமத்தில் பெரும்பாலானோர் இயற்கை விவசாயிகளாக மாறியிருக்கின்றனர். வருங்காலத்திலும் இயற்கையின் வளம் அழியாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு விவசாயிக்கும் இருக்கிறது. என் விவசாயத் தோழமைகள் அனைவரிடமும் நான் வைக்கும் வேண்டுகோள், தயவுசெய்து ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் தூக்கி எறியுங்கள்; இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள் என்பதுதான்’ என்கிறார் ஹூகும்சந்த்.

- சரித்திரம் தொடரும்.