Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த சீன தேவதை... ஷி யான்!

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 5

பிரீமியம் ஸ்டோரி
யற்கை முறையில் விளைந்த உணவுப் பொருள்களை வாங்குவது கூடுதல் செலவு என்று கணக்குப் பார்க்காதீர்கள். அது நம் உடல் ஆரோக்கியத்துக்காக நாம் செய்யும் முதலீடு. உலகின் ஆரோக்கியத்துக்காக நாம் கொடுக்கும் நன்கொடை.

இந்தியாவைப்போலவே சீனாவின் மரபு சார்ந்த விவசாயம் என்பது மிக மிகப் பழைமையானது, வளமையானது, ஆரோக்கியமானது. சென்ற நூற்றாண்டில் நாம் எப்படி மரபு விவசாய முறைகளைத் தொலைத்து, நவீன விவசாய முறைகளுக்கு அடிமையானோமோ அதேபோலத்தான் சீன விவசாயிகளும். விவசாயப் புரட்சிகளுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும், செயற்கை உரங்களுக்கும் அடிமையாகி, `மகசூலைப் பெருக்கலாம்’ என்று நினைத்து நிலங்களை மலடாக்கினார்கள். போகப்போக விவசாயம் பொய்த்தது. பல கிராமவாசிகள் பிழைப்புத் தேடி நகரங்களை நோக்கி நகர்ந்தனர். கிராமங்களில் தலை நரைத்த சில விவசாயிகள் மட்டும் எஞ்சி நின்றார்கள். அவர்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு தொழில் தெரியாது என்பதால், செய்த தவற்றையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். `மரபுக்குத் திரும்பினால் மண் மீண்டும் உயிர் பெறும்’ என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

ஷி யான்
ஷி யான்

1982-ம் ஆண்டு, சீனாவின் தலைநகரமான பீஜிங்குக்கு அருகில் ஒரு விவசாயக் கிராமத்தில் பிறந்த பெண் ஷி யான் (Shi Yan). சிறு வயது முதலே விவசாயமும் அது சார்ந்த வாழ்க்கையுமாக அவரது ஆரம்பகாலங்கள் அமைந்தன. பீஜிங்கின் ரென்மின் பல்கலைக்கழகத்தில் விவசாயம் சார்ந்த படிப்பில் இணைந்து பட்டம் பெற்றார். ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வி எழுந்தபோது, பீஜிங்கின் சுற்றுப்புற கிராமங்களில் வாழ்ந்த விவசாயிகளின் நிலை ஷி யானைக் கவலைக்குள்ளாக்கியது.

மாண்புமிகு விவசாயிகள் : பத்மஸ்ரீ ஹூகும்சந்த் பட்டிதார்... இயற்கை விவசாயம் கொடுத்த வெகுமதி!

1970-களில் சீன விவசாயிகளிடம் நவீன பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை எங்கும், எளிதாக, குறைந்த விலையில் கிடைத்தன. அவற்றை வாங்க அரசின் மானியமும் கிடைத்தது. `பெருகிவரும் சீன மக்கள்தொகைக்கு ஏற்ப உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்றால், செயற்கை உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் மட்டுமே கைகொடுக்கும்’ என்று சீன விவசாயிகள் நம்ப வைக்கப்பட்டனர். அதற்கு முந்தைய காலகட்டங்களில் ஏற்பட்ட பஞ்சம், பட்டினி, இழப்புகள் தந்த பயத்தால், சீன விவசாயிகள் மரபைத் துறந்து நவீனத்தில் விழுந்தனர்.

ஷி யான்
ஷி யான்

2008-இல் சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் உணவுகள் குறிப்பாக, பழங்கள், காய்கறிகள், தானியங்களின் தரம் குறித்துச் சர்வதேச அளவில் புகார்கள் கிளம்பின. குறிப்பாக, அமெரிக்க ஆய்வாளர்கள் நீளமாகவே புகார் வாசித்தார்கள். `சீன இறக்குமதி உணவுப் பொருள்களில் 32 விதமான பூச்சிக்கொல்லிகள் தென்படுகின்றன. அவை பல வகையான நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன. சாதாரணத் தலைவலி முதல் புற்றுநோய்வரைக்கும் பாதிப்பை உண்டாக்குபவையாக இந்த உணவுப் பொருள்கள் இருக்கின்றன’ என்றார்கள். 2009-இல் வெளியான அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று, `இப்படிப்பட்ட பூச்சிக்கொல்லிகள், குழந்தைகள் ஊனமாகவோ அல்லது வேறு நோய்களுடனோ, குறைகளுடனோ பிறப்பதற்குக் காரணமாக அமைகின்றன’ என்று உரக்கச் சொன்னது.

இந்தக் காலகட்டத்தில்தான் ஷி யானும், `சீனாவில் மரபுவழி விவசாயத்தை மீட்டெடுப்பது எப்படி...’ என்று சிந்தித்துக்கொண்டிருந்தார். மேற்கத்திய நாடுகளில் செயல்பாட்டிலிருந்த ‘சமூக ஆதரவு விவசாயம்’ (Community Supported Agriculture - CSA) என்ற முறை குறித்து ஷி யான் கேள்விப்பட்டார். அதைப் பற்றி மேலும் அனுபவபூர்வமாகத் தெரிந்துகொள்ள அமெரிக்காவுக்குக் கிளம்பினார்.

‘ஒரு நிமிடம்… நீங்கள் உண்டு கொண்டிருக்கும் இந்தக் கத்திரிக்காயை விளைவித்த விவசாயி யார் தெரியுமா... உங்கள் கையிலிருக்கும் அந்தத் தர்பூசணியை விதைத்த உழவர் யார் தெரியுமா?’ இப்படி யாரிடமாவது கேட்டால், பெரும்பாலான நுகர்வோருக்கு பதில் தெரியாது. ‘நீங்கள் விளைவிக்கும் இந்தக் காயையும் கனியையும் உண்ணப்போகும் நுகர்வோர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று விவசாயியிடம் கேள்வி எழுப்பினால் அவருக்கும் நிச்சயம் பதில் தெரியாது.

சமூக ஆதரவு விவசாய முறையின் நோக்கம் மேற்படி கேள்விகளுக்கான பதிலைத் தெளிவிப்பதே. விளைபொருளைத் தரும் விவசாயிக்கும், அதை வாங்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடியாகப் பாலம் அமைப்பது. நுகர்வோர்கள் இங்கே முதலீட்டாளர்கள். அதாவது விளையும் பொருளில் பங்கு பெறுவதற்காக முதலீடு செய்கிறார்கள். இப்படிச் சில நுகர்வோர்கள், விவசாயியுடன் சேர்ந்து கூட்டாக இயங்குகிறார்கள். அந்த நிலத்தின் உற்பத்தியை விவசாயியின் குடும்பமும், நுகர்வோர் குடும்பங்களும் பகிர்ந்து கொள்கின்றன. இதில் இயற்கை வேளாண்மையே பிரதானம்.

விவசாயி கடனுக்கு ஏங்கி நிற்க வேண்டிய அவலம் இல்லை. முதலீடு உறுதி. விளைவிக்கும் பொருள்களுக்கான சந்தையும் உறுதி. அரசின் தலையீடோ, தரகர்களின் தலையீடோ கிடையவே கிடையாது. நஷ்டத்தில் நுகர்வோரும் பங்கெடுத்துக்கொள்வதால் விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் நிலை இல்லை. தாங்கள் உண்ணும் காய்கறிகளும் பழங்களும் இந்தப் பெயர்கொண்ட விவசாயியால், இங்கே அமைந்த நிலத்தில் இயற்கையாகவே விளைவிக்கப்படுகிறது என்று நுகர்வோருக்கும் முழு நம்பிக்கை கிடைக்கிறது.

தேவைக்கேற்ப மட்டுமே உற்பத்தி நடைபெறுவதால் அதிக மகசூல், லாப வெறி போன்றவற்றுக்கெல்லாம் இடமே கிடையாது. சூழலும் மண்ணும் கெடாது. மனிதனின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, சமூக உறவும் பலப்படுகிறது என்பதே இந்த சிஎஸ்ஏ (CSA) முறையின் அசாத்தியமான வெற்றி.

சென்ற நூற்றாண்டில் இறுதியிலேயே, அமெரிக்காவில் சமூக ஆதரவு விவசாய முறை ஓரளவுக்கு வெற்றிகரமாகப் பரவியிருந்தது. 2008-ம் ஆண்டில் ஷி யான், அமெரிக்காவின் ‘மினசோட்டா’ மாகாணத்திலிருந்த ‘எர்த்ரைஸ்’ என்ற CSA பண்ணைக்குச் சென்றார். அங்கே சமூக ஆதரவு விவசாய முறையை ஆர்வத்துடன், அர்ப்பணிப்புடன் கற்றார். அந்தப் பண்ணையிலிருந்து ஒவ்வொரு வாரமும் நுகர்வோருக்குக் காய்கறிகள், பழங்கள், இறைச்சி, முட்டை அடங்கிய பெட்டி அனுப்பப்பட்டது. எல்லாமே இயற்கையானவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஷி யான், ஆறுமாதப் பயிற்சிக்குப் பிறகு சீனாவுக்குத் திரும்பினார். அதுவரை சீனாவில் சமூக ஆதரவு விவசாய முறை என்பது கிடையாது. ஷி யான் அப்படியொரு பண்ணையை அமைக்கத் திட்டமிட்டார். அதன் முதற்கட்டமாக, தான் கற்றுக்கொண்ட விஷயங்களை ஒரு புத்தகமாக (I Worked as a Farmer in USA) எழுதி வெளியிட்டார். அதற்கு ஓரளவு கவனம் கிடைத்தது.

மாண்புமிகு விவசாயிகள் :  இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த சீன தேவதை... ஷி யான்!

2011-ம் ஆண்டில் சீனாவின் முதல் சமூக ஆதரவுப் பண்ணை ஷி யானால் தொடங்கப்பட்டது. அதற்கு அவர் வைத்த பெயர், `குட்டிக் கழுதை’ (Little Donkey). ஷி யான் இந்த விவசாய முறை குறித்து விளக்கியதில் ஆர்வம்கொண்ட பல சீனர்கள் நுகர்வோர்களாக இணைந்தனர். முதலீடு செய்தனர். மொத்தம் 400 குடும்பங்கள். அவர்களில் 260 பேர் அந்தப் பண்ணை நிலத்தில் துண்டு நிலங்களை வாடகைக்கு எடுத்து, சொந்தத் தோட்டங்களை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. போதிய அனுபவமின்மை. ஆரம்பகாலத் தடுமாற்றம், வேறு சில பிரச்னைகள் எல்லாம் சேர்ந்து, `குட்டிக் கழுதை’ பண்ணையிலிருந்து வெளியேறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார் ஷி யான்.

அதற்காக அவர் சோர்ந்துவிடவில்லை. அடுத்த அடியைப் போதிய திட்டமிடலுடன் நிதானமாக எடுத்துவைத்தார். 2012-ம் ஆண்டு ஷி யான், `பகிரப்பட்ட அறுவடை’ என்ற அர்த்தத்தில் `ஷேர்டு ஹார்வெஸ்ட்’ (Shared Harvest) என்ற பண்ணையைத் தொடங்கினார். இதுதான் சீனாவில் முழு இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும், முதல் சமூக ஆதரவு விவசாயப் பண்ணை. கொஞ்சம் கொஞ்சமாக நுகர்வோரைச் சேர்த்துக் கொண்டார். `இந்தத் திட்டத்தில் பங்குபெற நினைக்கும் நுகர்வோர், பண்ணைக்கு நேரடியாக வந்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டே ஆக வேண்டும்’ என்பது விதி.

அந்த நபர் ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்தாலும், நேரடிப் பயிற்சிக்கு வந்து பண்ணையும் திட்டமும் இயங்கும் முறையைக் கற்றுக்கொள்ளாவிட்டால் உறுப்பினராக முடியாது. தன் வகுப்பில் நுகர்வோருக்கும், பிற விவசாயிகளுக்கும் ஷி யான் அழுத்தமாகச் சொன்ன செய்தி இதுதான்.

‘இந்தச் சமூக ஆதரவு விவசாயம் என்பது லாபகரமான வேளாண் முறை அல்ல. இது ஒரு வாழ்க்கை முறை!’

இது நல்ல பலனைக் கொடுத்தது. பீஜிங் நகரத்தைச் சார்ந்த பலரும் ஷி யானின் பண்ணைக்குத் தேடி வந்து தம்மை நுகர்வோராக இணைத்துக்கொண்டனர். இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகளும், பழங்களும், இறைச்சியும் அடங்கிய பெட்டி நுகர்வோரின் வீடு தேடி வாரந்தோறும் செல்லத் தொடங்கியது. முதலீட்டுக்குப் பிரச்னையில்லை. தேவைக்கு ஏற்ற விளைச்சல். ஆரோக்கியமான விவசாயம். ஆனந்தமான நுகர்வோர்கள். இந்த முறை ஷி யான் அழுத்தமான வெற்றி பெற்றார்.

பீஜிங்கைச் சுற்றியிருக்கும் கிராமங்கள் பலவற்றிலிருந்தும் விவசாயிகள், ஷி யானைத் தேடி வந்தனர். அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். ‘பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்கள் பயன்படுத்துவது என்பது புகைபிடிக்கும் பழக்கம் மாதிரி. நாம் நினைத்தால் அதிலிருந்து மீள முடியும்’ என்று எடுத்துச் சொன்னார். மரபு வழி விவசாயத்தின் பலன்களைத் தெளிவாகப் புரியவைத்தார். சமூகநலன், விவசாயிகளின் நலன், பொருளாதாரநலன் மூன்றுமே இதில் அடங்கியிருப்பதை வந்தவர்கள் உணர்ந்தார்கள்.

இன்றைக்கு ஷேர்டு ஹார்வெஸ்ட் பண்ணை மற்றும் அதனுடன் இணைந்த வேறு சில பண்ணைகள் வழியாக பீஜிங்கில் சுமார் 40% மக்கள் நுகர்வோர்களாக ஆரோக்கியமான விளைபொருள்களை உண்கிறார்கள். ஷி யான் மூலமாக ஆயிரக்கணக்கானோர் மரபுவழி விவசாயிகளாக மாறியிருக்கிறார்கள்.

பல புதிய இளைய தலைமுறை இயற்கை விவசாயிகளையும் ஷி யான் உருவாக்கியிருக்கிறார்.

இன்றைக்கு பீஜிங்கைச் சுற்றியிருக்கும் கிராமங்கள் பலவற்றிலும் இளைஞர்கள் வெற்றிகரமான விவசாயிகளாக வலம்வருகிறார்கள். ஷி யான் மூலமாக, சீனாவெங்கும் ஏறத்தாழ 1,000 சமூக ஆதரவு விவசாயப் பண்ணைகள் தொடங்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை வெற்றிகரமாக இயங்கியும் வருகின்றன. தாராளமாகச் சொல்லலாம். ஷி யான் - சீனாவின் மரபு விவசாயத்தை மீட்டெடுத்த தேவதை!

- சரித்திரம் தொடரும்.

புராக்கோலி பூங்கொத்து

2011-ம் ஆண்டு, ஷி யான் தன்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் பயின்ற செங் கன்வாங்கைத் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமண விழாவில் வெள்ளை உடை அணிந்த ஷி யான், கையில் பூங்கொத்துக்கு பதிலாக தன் பண்ணையில் விளைந்த புராக்கோலியை ஏந்தியிருந்தார். திருமண விருந்துக்கு அவரது பண்ணையில் விளைந்த காய்கறிகளும் பழங்களுமே பயன்படுத்தப்பட்டன.

ஷி யான் - செங் கன்வாங்
ஷி யான் - செங் கன்வாங்

2013-ம் ஆண்டில் ஷி யான், குழந்தைகளுக்கு இயற்கை விவசாயம் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை (Children of the Earth of Sharing Harvest) ஆரம்பித்தார். விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து ‘விளையும் பயிர்’களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அதன் மூலம் வளமான வேளாண் எதிர்காலத்துக்கு வழிவகுப்பது. இந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்.

சமூக ஆதரவு விவசாய முறை குறித்து ஷி யான் சொன்ன ஒரு கருத்து உலகப்புகழ் பெற்றது. ‘சமூக ஆதரவு விவசாய முறையில் ஐந்து நுகர்வோர்கள் இணைந்தால் ஒரு Mu* அளவு நிலம் வேதித்தன்மையிலிருந்து மீட்டெடுக்கப்படும். பத்து நுகர்வோர்கள் இணைந்தால், ஒரு விவசாயி பண்ணையை வளமாக நடத்த முடியும். நூறு நுகர்வோர்கள் இணைந்தால், ஐந்து இளைஞர்கள் தங்கள் கிராமத்துக்கு விவசாயம் செய்வதற்காக மகிழ்ச்சியோடு திரும்ப முடியும்.

ஆயிரம் நுகர்வோர்கள் இணையும்போது ஒரு கிராமமே பொருளாதாரத் தன்னிறைவு பெற்று, செழிப்பாக மாறும்.

ஒவ்வொருவரும் இணையும்போது நாம் விரும்பும் பசுமையான உலகை உருவாக்கிட முடியும்!’

(*Mu என்பது சீன நில அளவை முறை. சுமார் 6 Mu என்பது ஏறத்தாழ ஒரு ஏக்கருக்குச் சமம்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு