Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : சாரா கிறிஸ்டினா - பாலைவன தேசத்தின் பசுமை நாயகி!

வெள்ளரிக்காய் வயலில் சாரா...
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளரிக்காய் வயலில் சாரா...

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 12

யற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகளை உண்பது என்பது நவீனம் அல்ல. அது நம் பாரம்பர்யத்தை நோக்கித் திரும்பும் உன்னதமான செயல்.

குளுகுளு சுவிட்சர்லாந்தின் ஸூரிச் நகரத்தில் பிறந்த பெண், சாரா கிறிஸ்டினா ஹேனிக் நூர் (Sara Kristina Hannig Nour). அவருடைய அம்மாவுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது. வீட்டுக்கு வெளியே தோட்டம் இருந்தது. எனவே சிறுவயதிலேயே விவசாயம் குறித்துக் கொஞ்சம் கற்றுக்கொண்டிருந்தார் சாரா. அரசியல், பொருளாதாரம், தத்துவம் ஆகிய பாடங்களை எடுத்துப் பட்டப்படிப்பை முடித்தார். ‘விவசாயி ஆக வேண்டும்’ என்ற கனவெல்லாம் சாராவுக்கு இல்லை.

சாரா கிறிஸ்டினா ஹேனிக் நூர்
சாரா கிறிஸ்டினா ஹேனிக் நூர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எகிப்தைச் சேர்ந்த கரீம் நூர் மீது சாராவுக்குக் காதல் பிறந்தது. 2011-ம் ஆண்டில் கரீம் - சாரா திருமணம் நடைபெற்றது. புகுந்த வீடான எகிப்து தேசத்துக்குள் அடியெடுத்து வைத்தார். குளுமைக்கு மட்டுமே பழகிய சுவிட்சர்லாந்து மகள், கடும் வெப்ப தேசமான எகிப்தின் மருமகளாக மாற காலம் அதிகம் தேவைப்படவில்லை. அதற்குள் எகிப்திய புரட்சியும் ஆரம்பமாகியிருந்தது. ஸ்திரமற்ற சூழலுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டார் சாரா.

இன்னொரு புறம், கெய்ரோவின் சந்தையிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் மாம்பழம், வெள்ளரி, மாதுளையெனப் பலவும் சாராவின் கண்களைக் கவர்ந்தன. சுவிட்சர்லாந்தில் காணவே முடியாத கனிகள், காய்கறிகள் எல்லாம் பளபளவெனக் கவனம் ஈர்த்தன. வாங்கிப் பார்த்தபோதுதான் சுவையும் தரமும் ஏமாற்றத்தைத் தந்தன. எகிப்தில் விவசாயத்துக்கெனத் தர நிர்ணய விதிகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. பூச்சிக்கொல்லிகளையும், செயற்கை உரங்களையும் அளவின்றி உபயோகித்து விளைவித்திருந்தனர் விவசாயிகள். அதனால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்று தெரிந்திருந்தாலும், விவசாயிகளும் வியாபாரிகளும் அதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. பாலைவன தேசத்தில் டன் கணக்கில் விளைவிக்க என்ன செய்ய வேண்டுமோ, அந்த அறமற்ற செயல்களை மனசாட்சியேயின்றிச் செய்து வந்தனர். ‘எகிப்தில் விளைவிக்கப்படும் பொருள்களில் ரசாயனத்தின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. இனி அங்கிருந்து இறக்குமதி செய்ய வேண்டாம்’ என்று சில மத்திய கிழக்கு நாடுகள் தடை செய்யுமளவுக்கு நிலைமை மோசமாகிப் போயிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சாராவின் மனத்திலும் அதே கவலைதான். அவரது வயிற்றில் கரு வளரத் தொடங்கியிருந்தது. நாளைக்கு என் மகளுக்கும் இதே நஞ்சு கலந்த காய்கறிகளையும் பழங்களையும்தான் கொடுக்க வேண்டியிருக்குமா, வேறு வழியே கிடையாதா? கரீம் நூரின் குடும்பத்தினருக்கு சில ஏக்கர் நிலங்கள் இருந்தன. அது அலெக்ஸாண்டிரியா நகரத்திலிருந்து கெய்ரோவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது.

மாண்புமிகு விவசாயிகள் : சாரா கிறிஸ்டினா - பாலைவன தேசத்தின் பசுமை நாயகி!

இருபது ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படாத, பண்படுத்தப்பட வேண்டிய நிலம். அவரது குடும்பத்தில் யாருக்குமே விவசாயம் செய்யும் எண்ணம் இருக்கவில்லை. சாரா, ‘நான் விவசாயம் செய்யப் போகிறேன்’ என்று கரீமிடம் சொன்னார். கரீம் மறுப்பேதும் சொல்லவில்லை. அடுத்த முயற்சியாக கெய்ரோ பல்கலைக்கழகத்தில் இயற்கை விவசாயத்துக்கான பட்ட மேற்படிப்பில் இணைந்தார் சாரா. கர்ப்பிணிப் பெண்ணாக, தன் கணவரது நிலத்திலும் வலம் வந்தார். வறண்டு கிடந்த நிலம் மலைப்பைத் தந்தது. இதில் என்ன செய்ய முடியும், எப்படிச் செய்ய முடியும்? ஒன்றும் புரியவில்லை. அப்போது குடும்ப நண்பரான அடெல்சலாம் என்பவர், சாராவுக்கு உதவ முன்வந்தார்.

அடெல்சலாம் நாற்பது வருடங்களுக்கும் மேல் விவசாயத்துறையில் அனுபவம் கொண்டவர். இயற்கை விவசாயம் குறித்த சரியான புரிதலும், மேம்பட்ட அறிவும் அவரிடமிருந்து சாராவுக்குக் கிடைத்தது. வறண்ட நிலத்தை வளப்படுத்தினால் பசுமையாகும். அருகிலிருக்கும் ஏரி ஒன்று கைகொடுக்கும். பொறுமையுடன், அர்ப்பணிப்புடன் உழைத்தால், பசுமையான எதிர்காலம் நிச்சயம் என்று மனத்தில் தோன்றியது. சாரா, முழு கவனத்துடன் உழைக்கத் தொடங்கினார், பிறக்கப்போகும் தன் மகளுக்காக; இயற்கை உணவுக்காக ஏங்கும் எகிப்தின் மக்களுக்காக.

ஆரம்பத்தில் கொஞ்சம் நிலத்தை மட்டும் எடுத்துக்கொண்டார். பண்படுத்தப்பட்ட நிலத்தில் சாராவின் முதல் முயற்சி, வெள்ளரி. நிலத்தில் பசும்போர்வையாக வெள்ளரிக் கொடிகள் படர்ந்த நேரத்தில், நம்பிக்கையுடன் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்தார் சாரா. மஞ்சள் பூக்கள் பூத்த வேளையில், மனதில் நம்பிக்கையும் பூத்தது. முற்றிலும் இயற்கையான முறையில் வெள்ளரிக்காய்கள் வனப்புடன் காய்த்தன. சாரா, சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு எடுத்துச் சென்றார். ‘ஆர்கானிக் வெள்ளரிக்காய் விற்பனைக்கு உள்ளது எடுத்துக் கொள்வீர்களா?’ என்றார். ‘வைத்துவிட்டுச் செல்லுங்கள்’ என்றார்கள். சாரா, சில கிலோ வெள்ளரிக்காய்களை அடுக்கி வைத்துவிட்டு வந்தார். சூப்பர் மார்க்கெட்டிலிருந்து அடுத்த நாளே தொலைபேசி அழைப்பு வந்தது. ‘வெள்ளரிக்காய்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இன்னும் இருந்தால் கொண்டு வாருங்கள்’. சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார் சாரா. ‘எகிப்திய மக்கள், இயற்கையாக விளையும் காய்கறிகளுக்காகவும் பழங்களுக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவை கிடைக்கும்போது, விலை சற்றே அதிகம் என்றாலும் கவலைப்பட மாட்டார்கள்; அள்ளிக் கொள்வார்கள்’ என்ற பேருண்மை சாராவுக்குத் தெளிவாகப் புரிந்தது. தனது விவசாய முயற்சிகளை முழு நம்பிக்கையுடன் ஏக்கர் கணக்கில் விரிவுபடுத்தினார். ‘சாரா இயற்கை வேளாண்மைப் பண்ணை’ (Sara’s Organic Farm) பிறந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓர் இயற்கைப் பண்ணை செழிப்பாக, வளமாக அமைய வேண்டுமெனில் மண்ணை நேசிக்கும் ஒரு குழு அமைய வேண்டும். ஒரே அலைவரிசை எண்ணம் கொண்டவர்கள் ஒவ்வொருவராகச் சாராவிடம் வந்து சேர்ந்தார்கள். இயற்கையின் நுட்பம் தெரிந்தவர்கள் தோள் கொடுத்தார்கள். உழைக்கத் தயங்காமல் வியர்வை சிந்தினார்கள். தன்னை நம்பும் மனிதனை இயற்கை ஒருபோதும் கைவிட்டதே இல்லை. திராட்சைத் தோட்டம் ஒன்று உருவாக ஆரம்பித்தது. மாங்கன்றுகள் துளிர்க்கத் தொடங்கின, மாதுளைச் செடிகள் கிளை பரப்பின, கீரைத் தோட்டங்கள் பசுமை பாய்ச்சின, பேரீச்சங்காய்கள் கண்ணைக் கவர்ந்தன, வெள்ளரிக்காய்களின் எல்லைகள் பரந்து விரிந்தன, பிளம்ஸ் பழங்கள் புன்னகை பூத்தன, ஆலிவ் மரங்கள் அழகு காட்டின, பேரிக்காய்கள் பெருமையுடன் காய்த்தன, தக்காளிகள் தளதளத்தன, எலுமிச்சைப் பழங்கள் பளபளத்தன, பூண்டு, குடை மிளகாய், முட்டைகோஸ், கத்திரிக்காய் மற்றும் இன்ன காய்கறிகளும், கனிகளும், மூலிகைகளும் கண்களை நிறைத்தன. சாராவின் இயற்கைப் பண்ணை, ஏராளமான பணியாளர்களுடன் முழு வேகத்தில் இயங்க ஆரம்பித்தது.

வெள்ளரிக்காய் வயலில் சாரா...
வெள்ளரிக்காய் வயலில் சாரா...

தொடக்கத்தில் சாராவின் இயற்கைப் பண்ணையிலிருந்து கெய்ரோ வாழ் மக்களுக்கு வாரந்தோறும் இயற்கையான காய்கறிகளும் பழங்களும் நிரம்பிய கூடைகள் அனுப்பப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாகக் கூடைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. பிறகு சூப்பர் மார்க்கெட்களுக்கும் காய்கறிகளை, பழங்களை விநியோகம் செய்ய ஆரம்பித்தார்.

மாண்புமிகு விவசாயிகள் : சாரா கிறிஸ்டினா - பாலைவன தேசத்தின் பசுமை நாயகி!

அடுத்த முயற்சியாகப் பெரிய ரெஸ்டாரன்ட்டுகள் சாராவிடமிருந்து காய்கறிகளை, கனிகளை வாங்கத் தொடங்கின. ‘நாங்கள் இயற்கையாக விளைந்தவற்றைக் கொண்டே எங்கள் உணவுகளைத் தயாரிக்கிறோம்’ என்று விளம்பரப்படுத்துவது அந்த ரெஸ்டாரன்ட்டுகளுக்குப் பலம் சேர்த்தது. தற்போது, கெய்ரோ மக்களுக்கு மட்டுமல்லாமல் அலெக்ஸாண்டிரியா மக்களுக்கும் இயற்கைக் கூடைகளை வாரந்தோறும் அனுப்பிக் கொண்டிருக்கிறார் சாரா. வாடிக்கையாளர்களே தங்களுக்குத் தேவையானதை ஆன்லைனில் தேர்ந்தெடுத்து வாங்கும் வசதியும் உண்டு. பருவங்களுக்கேற்ப காய்கறிகள், கீரைகள், பழங்களின் பட்டியல் மாறுபடும். ஆரோக்கியமாக எப்படிச் சமைக்கலாம் என்ற சாராவின் டிப்ஸும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. எகிப்தின் பல பகுதிகளுக்கும் சாராவின் பண்ணையில் விளைந்த இயற்கையான பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. 972 ஏக்கர் பரப்பளவில் சாராவின் இயற்கை சாம்ராஜ்ஜியம் எகிப்தை ஆண்டுக் கொண்டிருக்கிறது.

இயற்கை மீதான காதலுடன், தனி ஒரு விவசாயி வெல்வது வெற்றிதான். ஆனால், அந்த விவசாயி சார்ந்த சமூகமும் சேர்ந்து முன்னேறுவதுதானே முழுமையான வெற்றி. சாரா, அக்கம் பக்கத்திலிருக்கும் விவசாயிகள் பலரையும் இயற்கை விவசாயம் நோக்கித் திரும்பச் செய்திருக்கிறார். முழுமையான இயற்கை விவசாயிகளாக மாறியிருக்கும் அவர்கள் விளைவிக்கும் பொருள்கள் அனைத்தையும் விற்பனை செய்வதற்காகவே, லாரா பிரிமியம் புரடுயூஸ் (Lara’s Premium Produce) என்ற தனிப் பிராண்டு ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறார். அவர்கள் அனைவருமே குளோபல் ஜி.ஏ.பி (GLOBAL G.A.P) எனப்படும் விவசாயத்துக்கான சர்வதேச தர நிர்ணய விதிகளுக்கு உட்பட்டு, இயற்கை விவசாயம் மட்டுமே மேற்கொள்கின்றனர்.

சாரா கிறிஸ்டினா ஹேனிக் நூர்
சாரா கிறிஸ்டினா ஹேனிக் நூர்

‘பண்ணையிலிருந்து நேரடியாக உங்கள் உணவு மேஜைக்கு’ என்பதே சாராவின் நோக்கம். உண்ணும் உணவு எப்படிப்பட்டது, எங்கிருந்து வருகிறது என்று வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்வது ஆனந்தமானது. நாம் நல்ல உணவைத்தான் உண்கிறோம் என்ற நம்பிக்கையே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. அதைத்தான் எகிப்தில் சாராவின் இயற்கைப் பண்ணை செய்து கொண்டிருக்கிறது. இந்த ‘இயற்கையான’, ‘ஆரோக்கியமான’ சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்த வேண்டும் அல்லவா?

அதற்காக, பண்ணையைப் பார்வையிடக் குறிப்பிட்ட தினங்களில் மக்கள், ‘இயற்கைச் சுற்றுலா’வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பல பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் திரண்டு வந்து இயற்கை விவசாயம் குறித்துத் தெரிந்துகொண்டு போகிறார்கள். விவசாயத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் வரும் இளைஞர்களுக்கும் வழிகாட்டுகிறார் சாரா. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறித்த கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இயற்கை உணவுத் திருவிழாக்களும் களைக்கட்டுகின்றன.

சுவிட்சர்லாந்தின் மகள், இன்றைக்கு எகிப்து நாட்டு இயற்கை விவசாயத்தின் முகமாகப் பார்க்கப்படுகிறார். 2017-இல் சாராவுக்குச் சர்வதேச விருதான Cartier Women’s Initiative Award, அவரது இயற்கை விவசாய முயற்சிகளுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.

தனது இரு மகள்களும் இப்போது ஆரோக்கியமான உணவையே உண்கிறார்கள் என்பதில் அந்தத் தாய்க்கு அளவில்லா மகிழ்ச்சி.

சரித்திரம் தொடரும்...