Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : சுந்தரராமன் நடமாடும் வேளாண் பல்கலைக்கழகம்!

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 20

பிரீமியம் ஸ்டோரி

அதிக விளைச்சலையும் லாபத்தையும் ஈட்டித்தரும் விஷயமாக மட்டுமே இயற்கை விவசாயத்தைப் பார்க்கக் கூடாது. அதை நம் மண்ணின் வளத்தை என்றென்றைக்கும் உயிர்ப்போடு பாதுகாக்கும் செயல்முறையாக நோக்க வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டில் மனிதர்களிடையே, மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட ஆகப்பெரிய மோசடி எதுவென்றால் அது பசுமைப்புரட்சிதான். ‘மக்கள்தொகைப் பெருக்கத்தால் உணவுத் தட்டுப்பாடு, பஞ்சம், வறுமையெல்லாம் கோர தாண்டவம் ஆடும். அதனால் உடனடியாக நவீன முறையில் விளைச்சலை அதிகரித்தே தீர வேண்டும்’ என்ற விஷமப் பிரசாரத்தால், செயற்கை உரம், பூச்சிக்கொல்லி போன்ற ‘ரசாயன ஆயுதங்களால்’ நிலங்களையெல்லாம் விஷமாக்கிய நீண்ட கால யுத்தம் அது. இந்தியாவின் மரபு சார்ந்த வேளாண்மையை வீழ்த்துவதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி. உணவு விஷமானால் நோய்கள் பெருகும். நோய்கள் பெருகினால் அது சார்ந்த தொழில்கள் செழிக்கும். இப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த மாயவலைக்குள் அப்பாவி மக்கள் மீளவே இயலாமல் வீழ்த்தப்பட்ட சோகச் சரித்திரம். அந்தப் ப‘சுமை’ புரட்சி உண்டாக்கிய பாதிப்புகளிலிருந்து நிலங்களும் விவசாயிகளும் மீள்வதென்பது இன்னொரு சுதந்திரப் போருக்கு ஒப்பான நெடிய போராட்டமாகத்தான் இருந்து வருகிறது.

முகில்
முகில்

அப்படிப்பட்ட போராட்டத்துக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் போராளிகளுள் ஒருவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ‘சத்தியமங்கலம்’ சுந்தரராமன். அவரது பரம்பரையில் எல்லோரும் விவசாயிகளே. அவரின் சகோதரர்களுக்குக் கைகொடுத்த படிப்பு சுந்தரராமனுக்குக் கைகொடுக்கவில்லை. ஆனால், இயற்கையிடம் கற்றுக்கொள்வதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. சுந்தரராமனின் தந்தை மறைவுக்குப் பிறகு, குடும்பத்தின் பண்ணைப் பொறுப்புகளை அவர் தாயார் ஏற்றுக்கொண்டார். வயதான தாயார் தனியாகக் கஷ்டப்படுவதைக் கண்ட சுந்தரராமன், முழு நேரமாக விவசாயத்தைக் கையில் எடுத்தார்.

பசுமைப் புரட்சி, வெள்ளாட்டுத் தோல் போர்த்திய குள்ளநரியாக உள்ளே நுழைந்திருந்த சமயம் அது. சுந்தரராமனின் மூத்த சகோதரர் ராமகிருஷ்ணன், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பயிர்களுக்கான ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதற்குச் சகோதரர் வழிகாட்டினார். அதன்படி ரசாயன விவசாயத்தை மேற்கொள்ளும் வெற்றிகரமான விவசாயியாகச் சுந்தரராமன் வலம் வரத் தொடங் கினார். அந்த உர நிறுவனத்தின் சோதனைக்களமாக அவரது விளை நிலம் பயன்படத் தொடங்கியது.

சுந்தரராமன்
சுந்தரராமன்

சுந்தரராமனின் நலனில் அக்கறை கொண்ட பெரியவர் எஸ்.என்.நாகராஜன். இயற்கை விவசாயத்தின் மீது அதீத அக்கறை கொண்ட போராளி. ‘இந்தப் பசுமைப் புரட்சி என்பதே பெரிய ஏமாற்று வேலை. பிற்காலத்துல நிலமெல்லாம் கெட்டுப்போகும். உரமும் பூச்சிக் கொல்லியும் தயாரிக்கிறவன் பெரும் பணக்காரன் ஆவான். புதுசு புதுசா நோய்கள் எல்லாம் வரும். டாக்டரும், மருந்து கம்பெனிக்காரனும் சம்பாதிப்பான். ஆனா, விவசாயிங்க நீங்க கஷ்டத்துலதான் இருப்பீங்க!’ என்று அப்போதே நாகராஜன், சுந்தரராமனை எச்சரித்தார். ஆனால், பசுமைப் புரட்சியின் ரசாயன விவசாயத்தில் இரண்டு, மூன்று மடங்கு விளைச்சலைக் கண்டு பயன் பெற்றுக்கொண்டிருந்த சுந்தர ராமனைப் போன்ற விவசாயிகள் அதைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை.

சுந்தரராமன்
சுந்தரராமன்

சுமார் 30 ஆண்டுகள் சுந்தரராமனின் பண்ணை, வேதி உரங்களின் ஆராய்ச்சிக்கூடமாகத் திகழ்ந்தது. பல விஞ்ஞானிகள் வந்து அங்கே அவருடன் இணைந்து சோதனைகளை மேற்கொண்டனர். அவர்களிடம் பல விஷயங்களை நேரடியாகவே கற்றுக்கொண்டார் சுந்தரராமன். அப்போது மேற்கொண்ட ரசாயன விவசாயம்தான், அவர் நிரந்தரமாக ‘இயற்கை விவசாயம்’ நோக்கித் திரும்பக் காரணமாகவும் அமைந்தது.

ஒரு காலத்தில் 5 மி.லி மட்டுமே தேவைப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து, பிறகு 60 மி.லி பயன்படுத்தியும் பூச்சிகளை அழிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் அதிக விளைச்சலைத் தந்த ரசாயன உரங்களெல்லாம் விலையில் மட்டும் பல மடங்கு உயர்ந்து நின்றன. விளைச்சலில் ஏமாற்றத்தைப் பெருக்கின. எல்லா வற்றுக்கும் மேலாகச் சுந்தரராமனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்துமா தொந்தரவு தொடங்கிப் பல்வேறு உபாதைகள்வரை அனுபவித்தார். பட்டுத் தெளிந்து கிடைத்த ஞானம், அவரை இயற்கை வழி நோக்கித் திருப்பியது.

1990-களின் ஆரம்பத்தில் ரசாயன விவசாயத்தை முற்றிலும் ஒதுக்கி வைத்தார் சுந்தரராமன். இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொள்வதற்காகவே பல பேரைத் தேடிச் சென்றார். அவர்களோடு தங்கி, அந்த நிலங்களி ளெல்லாம் பணிபுரிந்து ஞானம் பெற்றார். சுந்தரராமன் முக்கியமாகக் கற்றுக்கொண்ட விஷயம், ‘இயற்கை வேளாண்மையை யாரும் கற்றுத் தர முடியாது. அதை நோக்கி வழிகாட்ட முடியும். அவரவர் நிலங்களின் தன்மை, அந்தந்தப் பகுதி தட்பவெப்பநிலைக்கு ஏற்ப அனுபவங்களின் மூலமாகவே ஒவ்வொருவரும் இயற்கை வேளாண்மையைக் கற்றுக்கொள்ள முடியும்’ என்பதுதான்.

சுந்தரராமன், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தபோல்கரைத் தன் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார். பாஸ்கர் சாவே மற்றும் நாராயண ரெட்டியிடமிருந்து கற்றுக்கொண்டார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் அவரின் சகோதரர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். இயற்கையை நோக்கித் திரும்பியதில் சுந்தரராமனுக்குக் கிடைத்த முதல் பலன் அவரது ஆரோக்கியம் முழுமையாக மீண்டது. ஆஸ்துமாவும் இன்ன பிற உபாதைகளும் ஐந்தே வருடங்களில் காணாமல் போயின. இத்தனை காலமாக மண்ணை மட்டுமல்ல, தன் உடலையுமே உரக் கம்பெனிக்காரன் சோதனைக் களமாகப் பயன்படுத்தி வந்துள்ளான் என்பதை உணர்ந்துகொண்டார். ‘இயற்கை எப்போதும் உனக்கு உதவத் தயாராகவே இருக்கிறது. நீ அதற்கு ஒத்துழைக்கத் தயாராக, தகுதியுள்ளவனாக இருக்கிறாயா?’ என்று அனுபவத்தால் அவருக்குள் எழுந்த கேள்வி, சுந்தரராமனை ‘இயற்கை வல்லுநராக’ மாற்றத் தொடங்கியது.

அதுவரை ரசாயன விவசாயத்தில் அவர் கற்றுக் கொண்ட அனுபவங்கள், எவற்றையெல்லாம் செய்யவே கூடாது என்பதில் தெளிவைக் கொடுத்தன. ‘தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் பூச்சிக்கொல்லிகள், பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே கொல்கிறது. நன்மை செய்யும் பூச்சிகளை விட்டு வைத்தால் அவையே தீமை செய்யும் பூச்சிகளை அழித்துப் பயிர்களையும் பாதுகாக்கும்’ என்று மற்றவர்களுக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார். தென்னை மரங்களுக் கிடையில் கால்நடைத் தீவனம், பப்பாளிக்கிடையில் மிளகாய், அதற்குக் கீழடுக்கில் மஞ்சள் என்று பல அடுக்கு வெள்ளாமையை மேற்கொண்டு வருகிறார். சுழற்சி முறையில் பயிர்களை மாற்றிக் கொண்டு வருகிறார்.

சுந்தரராமன்
சுந்தரராமன்

சுந்தரராமனின் நிலத்தில் இருந்த கிணற்று நீர் மிகவும் கடினத் தன்மையுடன் பயன்படுத்தவே இயலாத அளவுக்கு மாறிப் போயிருந்தது. இயற்கை விவசாய முறைகளும், அதனால் மண்புழுக்களின் பெருக்கமும், மழைநீர்ச் சேகரிப்பும், அந்த நீரை நாளடைவில் நல்ல நீராக மாற்றியுள்ளன. பெய்யும் மழையின் பெரும்பான்மையான நீர், அந்த நிலத்தைவிட்டு வெளியேறுவது கிடையாது. காரணம், மண்புழுக்கள் உருவாக்கியுள்ள நுண்துளைகள் வழியே நீர் உள்ளிறங்கிவிடுகிறது. எனவே, நிலத்தடி நீர்மட்டமும் பெருமளவு உயர்ந்திருக்கிறது.

சுந்தரராமன் அமைத்துள்ள சாண எரிவாயு கலன் மூலமாகவே அவர் வீட்டுச் சமையல் நடைபெறுகிறது. அவரது, ஒருங்கிணைந்த இயற்கை விவசாயப் பண்ணையில், சாண எரிவாயுக் கலனிலிருந்து வரும் சாணிப்பால், பண்ணைக் குப்பைகளை எளிதில் மக்க வைக்கிறது. பாசன நீருடன் அது கலந்து மற்ற பயிர் ஊக்கிகள் சிறப்பாகச் செயல்படத் துணைபுரிகிறது. நுண்ணுயிர்களுக்கும் மண்புழுக்களுக்கும் சிறந்த நண்பனாகவும் விளங்குகிறது.

இயற்கை விவசாயச் செயல்பாட்டில் சுந்தரராமனின் முக்கியமான சாதனை, அவர் நடத்திக்கொண்டிருக்கும் ‘தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகம்’. இந்த அமைப்பின் மூலம் ரசாயன விவசாயத்திலிருந்து, இயற்கை விவசாயத்துக்கு மாற விரும்பும் விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறார். அவர்கள் அடிப்படையாகச் செய்ய வேண்டிய மாற்றங்கள், இயற்கை வேளாண்மைக்குத் தேவையான இடுபொருள்கள் உருவாக்கும் முறைகள், பயிர் சுழற்சி முறைகள் போன்ற பல்வேறு விஷயங்களைக் கற்றுத்தருகிறார். இதற்காகப் பல இயற்கை வேளாண் நிபுணர்களும் சுந்தரராமனின் பண்ணைக்கு வந்து வகுப்புகள் எடுத்திருக்கின்றனர். அதில் மறைந்த நாராயண ரெட்டி அவர்களது பங்கு அளப்பரியது. இந்த அமைப்பால் ஏராளமான விவசாயிகள் மீண்டும் இயற்கை வழியை நோக்கித் திரும்பி யிருக்கின்றனர்.

சுந்தரராமன் நடத்தி வரும் இன்னொரு அமைப்பு, ‘தாளாண்மை உழவர் இயக்கம்.’ கோவை, ஈரோடு மாவட்டங்களில் இயங்கும் இயற்கை விவசாயிகளுக்கான‌ கருத்துப் பரிமாற்றம், ஒருவருக்கொருவர் தேவைப்படும் உதவிகள், களப்பணி களுக்கான ஒருங்கிணைப்பு போன்ற வற்றைச் செயல்படுத்தும் அமைப்பாக இது வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

‘உழவர் ஆற்றுப்படை’ என்ற அமைப்பையும் சுந்தரராமன் நடத்தி வருகிறார். வேதிபொருள்களால் பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் அமைப்பு இது. புதிதாக இயற்கை வேளாண்மைக்கு மாறும் விவசாயிகளுக்கு, மண்புழுக்களை எவ்வாறு மண்ணில் பெருக்க வேண்டும் என்பது குறித்த பயிற்சிகளை இந்த அமைப்பு வழங்குகிறது. சக விவசாயிகளை இயற்கை வேளாண்மையை நோக்கித் திரும்பச் செய்தால் மட்டும் போதுமா? அவர்களது விளைபொருள்களைச் சந்தைப்படுத்தவும் வழிகாட்ட வேண்டுமல்லவா... அதற்காகவே ‘அடிசில் சோலை’ என்றோர் அமைப்பைச் சுந்தரராமன் உருவாக்கியிருக்கிறார். இதன் மூலம் இயற்கை விளைபொருள்களை நேரடியாகவோ, மதிப்புக்கூட்டியோ விற்பனை செய்யச் சந்தை அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

‘‘தென்னை மரங்களுக்கிடையில் கால்நடைத் தீவனம், பப்பாளிக்கிடையில் மிளகாய், அதற்குக் கீழடுக்கில் மஞ்சள் என்று பல அடுக்கு வெள்ளாமையை மேற்கொண்டு வருகிறார்.’’

வேளாண் மாணவர்களும் சுந்தரராமனிடம் வந்து பயிற்சி பெற்றுச் செல்கிறார்கள். ஆய்வாளர்களும் வந்து மரபு விவசாயத்தை உணர்ந்து செல்கிறார்கள். மலைவாழ் பழங்குடியினருக்கும் இயற்கை வேளாண்மையைக் கற்றுக்கொடுக்கும் அற்புதமான பணியைச் செய்து வருகிறார் சுந்தரராமன். 78 வயதிலும் சுணங்காமல் மேன்மேலும் விவசாயிகளை இயற்கையை நோக்கித் திரும்பச் செய்ய வேண்டும் என்று சுறுசுறுப்பாக உழைத்துக்கொண்டிருக்கும் இவர் ஒரு ‘நடமாடும் வேளாண் பல்கலைக்கழகம்!’

சுந்தரராமன் வேளாண் சமூகத்துக்குச் சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்.

‘விவசாயிக்கு இன்னொரு பெயர் உண்டு. பசிப்பிணி மருத்துவன். பசி என்னும் பிணியை நீக்குபவன். பிணியை நீக்க அவன் தரும் உணவானது நஞ்சற்றதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அந்தச் சமுதாயப் பொறுப்பு விவசாயிக்கு இருக்கிறது. அதற்கு இயற்கை வேளாண்மை மட்டுமே ஒரே வழி!’

நிறைவாக…

இந்தத் தொடரில் இதுவரை பேசப்பட்டிருக்கும் இருபது விவசாயிகளும் இன்றைய உலகத்தின் முன் மாதிரிகள். இயற்கை வேளாண்மையால் தன்னையும் மேம்படுத்திக்கொண்டு, ஒரு சமூகத்தையே வளப்படுத்தும், ஆரோக்கியமான வழிக்குத் திரும்பச் செய்யும் அரிய பணியைச் செய்து கொண்டிருப்பவர்கள். இதில் எழுதப்படாத இதுபோன்ற எண்ணற்ற மாண்புமிகு விவசாயிகளுக்கும் இந்தத் தொடர் சமர்ப்பணம்.

நன்றி.

முற்றும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு