Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : மேகாலயாவின் மஞ்சள் தேவதை!

மாண்புமிகு விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
மாண்புமிகு விவசாயிகள்

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 10

மாண்புமிகு விவசாயிகள் : மேகாலயாவின் மஞ்சள் தேவதை!

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 10

Published:Updated:
மாண்புமிகு விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
மாண்புமிகு விவசாயிகள்
யற்கை விவசாயி தன் பயிர்த்தொழிலில் வெற்றியடையும்போது, அவர் சார்ந்த சமூகத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ளது முலியா என்ற கிராமம். சுமார் இருநூற்று சொச்சம் குடும்பங்கள் மட்டும் வசிக்கும் விவசாயப் பூமி. மஞ்சள் சாகுபடியே முக்கியமான தொழில். அந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பழங்குடி இனப் பெண்தான் ‘டிரினிடி சாயோ’ (Trinity Saioo). அவரின் தாய்க்கும் மஞ்சள் பயிரிடுதலே தொழில்.

மாண்புமிகு விவசாயிகள் : மேகாலயாவின் மஞ்சள் தேவதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாய்வழிச் சமூக நடைமுறைகளைப் பின்பற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, வீட்டுத்தலைவி வைப்பதே சட்டம். குடும்பத்தை நிர்வகிப்பதெல்லாம் பெண்களே. சாயோவின் தாய், தன் மகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். படித்து முடித்த சாயோ, பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைக்குச் சேர்ந்தார். பிறகு திருமணம் ஆனது. ஆறு குழந்தைகள் பிறந்தன. குடும்பத்தின் தேவைகள் பெருகின. விவசாயத்திலும் ஈடுபட்டுக் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று முடிவெடுத்தார் சாயோ.

அதிக மழைப்பொழிவையும் வளமான மண்ணையும், அற்புதமான ஈரப்பதத்தையும் கொண்ட மேகாலயாவின் சூழல் மஞ்சள் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றது. சாயோவின் சிறு வயதில் காணும் இடமெல்லாம் மஞ்சள் தோட்டங்களாக இருக்கும். காலப்போக்கில் அங்கே மஞ்சள் விவசாயம் குறைந்து போயிருந்தது. காரணம்?

மேகாலயாவின் நிலக்கரிச் சுரங்கத்துக்குப் பலரும் கூலிவேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தனர். விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தைவிட, சுரங்கத்தின் மூலம் அதிகம் வருமானம் கிடைத்தது. எனவே அந்தப் பகுதியில் மஞ்சள் உற்பத்தி குறைந்து போயிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2003-ம் ஆண்டில் சாயோ, மஞ்சள் விவசாயத்தில் இறங்க முடிவெடுத்தார். அதுகுறித்து நிறைய கற்றுக்கொள்ளவும் களமிறங்கினார். மஞ்சள் என்றாலே அதில் உள்ளடங்கியிருக்கும் ‘குர்குமின்’ வேதிப்பொருளின் அளவுதானே முக்கியம். மஞ்சள் கிழங்கின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் இளஞ்சிவப்பு நிற சதைப் பகுதியில்தான் இந்த ‘குர்குமின்’ வேதிப்பொருள் இருக்கும். இதுவே மஞ்சளின் நிறம், சுவை, மணம், தரத்தை நிர்ணயிக்கிறது. குர்குமினின் அளவு 5 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் நல்ல தரமான மஞ்சள். தமிழகத்தின் ‘மஞ்சள் சந்தை’ என்றழைக்கப்படும் ஈரோடு மஞ்சளில் 3 முதல் 5 சதவிகிதம் வரை குர்குமின் அளவு காணப்படுகிறது. 3 சதவிகிதத்துக்குக் குறைவாக இருந்தால் அது தரம் குறைந்த மஞ்சள்.

சாயோ
சாயோ

குர்குமின் அளவு அதிகமான மஞ்சள் நல்ல கிருமிநாசினி. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. புற்றுநோய்க்கு மருந்து என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாயோ, தங்கள் ஊரில் அப்போது விளைவிக்கப்பட்ட லகாசீன் (Lakachein) ரக மஞ்சளில் குர்குமினின் அளவு இரண்டுக்கும் குறைவுதான் என்று தெரிந்து கொண்டார். அதனால் அந்த மஞ்சள் ரகத்துக்குக் குறைவான விலையே கிடைத்தது. மஞ்சள் விவசாயத்தில் பெரிய லாபம் இல்லாத நிலையிலும், அதையே தொடர்ந்து அவர்கள் விளைவித்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் படிப்பறிவற்ற தனது ஊர் விவசாயிகளுக்கு மஞ்சளின் தரம்குறித்த புரிதல் இல்லை என்பதை அவர் புரிந்துகொண்டார்.

மஞ்சளுடன் சாயோ
மஞ்சளுடன் சாயோ

தோட்டக்கலைத்துறையின் உதவியை நாடினார். மஞ்சள் பயிரிடுவதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். அதேசமயம், மேகாலயாவில் தங்களது முன்னோர்கள் எந்த ரக மஞ்சளைப் பயிரிட்டார்கள் என்ற தேடலைத் தொடங்கினார். அதன் முடிவில் லகாடாங் (Lakadong) என்ற பாரம்பர்ய மஞ்சள் ரகம் குறித்துத் தெரிய வந்தது. அதில் குர்குமின் 6 முதல் 7.5 சதவிகிதம் வரை உண்டு என்ற தகவல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த மஞ்சள் பொக்கிஷம் தங்கள் முன்னோர்களால் இயற்கையான முறையில் பயிரிடப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் மேகாலயாவின் மஞ்சளுக்கு நல்ல மதிப்பு இருந்தது என்ற தகவல் சாயோவுக்குத் தெம்பூட்டின.

தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் நறுமணப்பொருள்கள் வாரியம் ஆகிய துறைகளின் உதவியுடன், லகாடாங் மஞ்சள் ரகத்தை மீண்டும் பயிரிடும் முயற்சியை ஆரம்பித்தார். தன் நிலத்தில் அதற்கான விதைகளை விதைத்தார். முழுக்க முழுக்க இயற்கையான முறையில் மஞ்சளை விளைவித்தால் மட்டுமே குர்குமினின் அளவு கூடுதலாகக் கொண்ட மஞ்சள் கிழங்குகள் கிடைக்கும் என்பதில் தெளிவாக இருந்தார். மஞ்சள் கிழங்குகள் விளைய ஆரம்பித்த தருணத்தில் இலைச்சுருட்டுப் புழுக்கள், நூற்புழுக்கள், இலைப்பேன்கள் அராஜகம் செய்தன. அதற்காக சாயோ, வேதியியல் பூச்சிக்கொல்லிகளைக் கையில் எடுக்கவே இல்லை. பசுஞ்சாணம், மாட்டுச் சிறுநீர், பஞ்சகவ்யா என முழுக்க முழுக்க இயற்கையான முறையிலேயே பூச்சிகளைத் தடுக்கும் நுட்பங்களைக் கையாண்டார். மண்புழு உரம் நல்ல விளைவுகளைத் தந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் முயற்சியிலேயே சாயோவின் தோட்டத்தில் லகாடாங் மஞ்சள் கிழங்குகள் திரட்சியுடன் விளைந்தன. சந்தையில் அந்த லகாடாங் ரக மஞ்சளுக்கு, லகாசீன் ரக மஞ்சளைவிட மூன்று மடங்கு அதிக விலை கிடைத்தது. விஷயத்தைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்து மக்களும் அருகில் வசிக்கும் ஊர்த் தலைவர்களும் சாயோவைத் தேடி வரத் தொடங்கினர். கற்றுக்கொடுக்கும் ஆசிரியை அல்லவா? தம் மக்களுக்கு இயற்கை மஞ்சள் விவசாயத்தை மகிழ்வுடன் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.

மாண்புமிகு விவசாயிகள் : மேகாலயாவின் மஞ்சள் தேவதை!

ஆரம்பத்தில் சுமார் 25 விவசாயிகள், அவரிடம் பயிற்சி பெற்றனர். முதல் சவால், லகாடாங் மஞ்சள் விதைகள் விலை அதிகமாக இருந்தன. அந்த விதைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று வேளாண்மைத் துறையினரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். மானியம் கிடைத்தது. மேற்கு ஜெயின்டியா மலைப்பகுதியின் மஞ்சள் தோட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்பத் தொடங்கின.

மஞ்சளை விளைவித்தால் மட்டும் போதுமா? அதற்கான சந்தையை உருவாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டார். மேகாலயாவின் பிற பகுதிகளுக்கும், வட கிழக்கு மாநிலங்களுக்கும் லகாடாங் மஞ்சளைக் கொண்டு செல்ல அரசின் உதவியை நாடினார். ‘ஆர்கானிக் மஞ்சள்’ என்ற அரசின் சான்றிதழ் அந்த விளைபொருள்களுக்குக் கிடைத்தது. அது புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கியது.

2014-ம் ஆண்டு. சுற்றுச்சூழல் சீர்கேடு காரணங்களை முன்வைத்து மேகாலயா நிலக்கரிச் சுரங்கத்தை மூடச்சொல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பலரும் வேலை இழந்தனர். மஞ்சள் முகத்துடன் பசுமையான புன்னகையுடன் அவர்களை வரவேற்றார் சாயோ. நறுமணப் பொருள்கள் வாரியத்தின் உதவியுடன் அவர்களுக்கு லகாடாங் மஞ்சள் பயிரிடப் பயிற்சிகள் கொடுத்தார். லகாடாங் மஞ்சள் விதைகளுக்கான தேவைகள் அதிகரித்தன. விவசாயிகளின் கோரிக்கை களாலும் சாயோவின் இடையறாத முயற்சிகளாலும் 2018 முதல் அந்த மஞ்சள் விதைகளை இலவசமாக வழங்க அரசு ஒப்புக்கொண்டது.

ஜெயின்டியா பகுதியில் ‘லைஃப் ஸ்பைஸ் பெடரேஷன் ஆஃப் ஷெல்ப் ஹெல்ப் குரூப்ஸ்’ (Life Spice Federation of Self-Help Groups) என்ற மகளிர் சுய உதவிக்குழு முன்பு இயங்கி வந்தது. பின்பு முடங்கிப்போனது. அதற்கு மீண்டும் உயிர்கொடுத்தார் சாயோ. அதன் மூலம் மஞ்சள் சேமிப்புக் கிடங்கு ஒன்றைத் தொடங்கினார். லகாடாங் மஞ்சளைக் கொள்முதல் செய்வது, அவற்றைச் சீவிக் காய வைப்பது, சேமித்துப் பராமரிப்பது, மஞ்சள் பொடி தயார் செய்வது, அவற்றை பேக்கிங் செய்வது, விற்பனைக்கு அனுப்புவது போன்ற பணிகள் அங்கே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பல பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறார்.

மகளிர் சுய உதவிக் குழுவினருடன்...
மகளிர் சுய உதவிக் குழுவினருடன்...

அவரது முயற்சியால் ‘லெங் ஸ்கெம் ஸ்பைஸ் ப்ரடூசர் இண்டஸ்ட்ரியல் கோஆப்ரேட்டிவ் சொசைட்டி’ (Leng Skhem Spice Producer Industrial Cooperative Society) என்ற பெயரிலான கூட்டுறவுச் சங்கமும் இயங்கிக் கொண்டிருக் கிறது. லகாடாங் மஞ்சளுக்கான புதிய சந்தை வாய்ப்புகளை விரிவாக்குவதிலும், விவசாயி களுக்கு நல்ல விலையைப் பெற்றுத் தருவதிலும் இந்தக் கூட்டுறவுச் சங்கம் சிறப்பாகச் செயலாற்றுகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்லாமல், மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகாவிலும் லகாடாங் மஞ்சளுக்கான சந்தை விரிவடைந்துள்ளது. படிப்பறிவில்லாத மேகாலயாப் பழங்குடிப் பெண்கள் விளைவிக்கும் லகாடாங் ஆர்கானிக் மஞ்சள் தூளுக்கு, இப்போது ஆன்லைன் ஸ்டோர்களில் நல்ல கிராக்கியும் உண்டாகியிருக்கிறது.

நிலமற்ற நூற்றுக்கணக்கான விவசாயிகள், லகாடாங் மஞ்சளால் இப்போது சொந்த நிலங்களில் மகிழ்ச்சியாக விவசாயத்தைத் தொடர்கின்றனர். சாயோ என்ற ஒரு பெண் முன்னெடுத்த இயற்கையான முயற்சிகளால் மேகாலயாவின் ஜெயின்டியா மலைப்பகுதியில் சுமார் 900 விவசாயிகளின் வாழ்க்கை வளமாக மாறியிருக்கிறது. லகாடாங் மஞ்சள் உற்பத்தியால் மேகாலயா அரசின் பொருளாதாரமும் மேம்பட்டிருக்கிறது.

பேரன், பேத்திகள் எடுத்துவிட்டார் சாயோ. இன்னமும் ஓர் ஆசிரியையாக, பெண்களுக்குக் கல்வி அறிவு ஊட்டும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். நிறைய மரக்கன்றுகளை உருவாக்கி, மேகாலயாவின் வனப்பகுதியைக் காக்கும் முயற்சிகளையும் தொடர்கிறார். அந்தச் சமூகத்தின் வழிகாட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2023-ம் ஆண்டுக்குள் 50,000 டன் லகாடாங் மஞ்சள் உற்பத்தி என்பதே அவரது அடுத்த இலக்கு.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் ‘சிறந்த விவசாயி விருது’ பெற்ற சாயோவுக்கு, 2020-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.

சாயோ - மேகாலயாவின் மஞ்சள் தேவதை!

சரித்திரம் தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism