Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : மிளகாய் நாயகர் காமா மபிவே!

மாண்புமிகு விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாண்புமிகு விவசாயிகள்

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 11

ரு விவசாயி, தனது நிலத்தின் நலம் குறித்து அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நிலத்தை வளமானதாக விட்டுச் செல்வதற்காகப் பாடுபட வேண்டும்.

ஸாம்பியா, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று. ஆப்பிரிக்க நாடுகளுக்குரிய சர்வ பிரச்னைகளும் கொண்ட நாடு. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே இங்கும் விவசாயம்தான் பிரதானத்தொழில். ஆனால், விளைவிப்பதை வைத்து, உண்டு பிழைத்துக்கொண்டால் போதும் என்ற அளவுக்கு மிகவும் பாவப்பட்ட விவசாயிகள்தான் அங்கே அதிகம். அவர்கள் தேவைப்போக, விற்பனைக்கென்று எதுவும் மிஞ்சாது. 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் பரம்பரை பரம்பரையாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள்.

முகில்
முகில்

இப்படிப்பட்ட தேசத்தில், சிபாடா என்ற சிறிய கிராமத்தில் சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் 1964-ல் பிறந்தவர் காமா மபிவே (Kama Mbewe). பிஞ்சு கரங்களினால் மண்வெட்டி பிடிக்கப் பழகிக்கொண்டார். ஆடு, மாடுகள் அண்ணன் தம்பிகளாக வளர்ந்தன. வயல் வேலையை அவர் வாழ்க்கை முழுவதும் என்பதை வழக்கப்படுத்திக் கொண்டார் மபிவே...

படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்றுதான் மபிவேவின் பெற்றோர்களும் ஆசைப்பட்டனர். அவரின் சகோதரர்களுக்குப் படிப்புச் சரியாக வரவில்லை. அவர்கள் வயலையே வாழ்வாக எடுத்துக்கொண்டனர். ஆனால், மபிவேக்குப் படிப்பில் நாட்டமிருந்தது. கணக்கிலும் கணக்கியலிலும் ஆர்வம் இருந்தது. ஸாம்பியா சென்டர் ஃபார் அக்கவுன்ட்டன்சி ஸ்டடிஸ் (Zambia Centre for Accountancy Studies)-ல் கணக்கியலும் நிதி மேலாண்மையும் பயின்றார். 1986-ல் அது சார்ந்த பணி கிடைத்தது. உட்கார்ந்து பார்க்கும் வேலை. உழுது களைக்க அவசியமில்லை. ‘மழை வருமா’ என்று வானம் பார்த்திருக்கத் தேவையில்லை. மாத சம்பளம் தவறாமல் வந்துவிடும். மபிவே, அந்த அலுவலக வாழ்க்கைக்குப் பழகியிருந்தார்.

20 வருடங்கள் ஓடிப்போயின. அந்த வாழ்க்கை அலுக்க ஆரம்பித்தது. ‘நெல்லாடிய நிலம் எங்கே’ என்று மனம் வயலோரமாக அலையத் தொடங்கியது. அறைக்குள் இருந்ததைவிட மனத்துக்குள் புழுக்கம் அதிகமாக இருந்தது. வெளியில் கணக்காளராகத் தெரிந்தாலும், அவரது ஆணிவேரானது விவசாயியின் மகனாகவே உயிர்த்திருந்தது.

2006-ம் ஆண்டு, நல்லதொரு நாளில் தன்னை இறுகப் பற்றியிருந்த வரவுச் செலவு எண்களை எல்லாம் உதறித் தள்ளினார் மபிவே. ஆம், ஆடிட்டர் வேலைக்கு குட்பை சொன்னார். ‘நான் விவசாயம் பார்க்கப்போகிறேன்’ என்றார். யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குடும்பத்தில் அவரது பங்காக 15 ஏக்கர் நிலம் கையிலிருந்தது. இயற்கை விவசாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்.

மிளகாய் சாஸ்
மிளகாய் சாஸ்

மபிவேவின் மனைவியும் ஆடிட்டர் அலுவலகப் பணியாளர்தான். அவர், மபிவேயின் விவசாய முயற்சிக்குப் பரிபூரண ஆதரவு கொடுத்தார். கையில் ஒன்றரை லட்சம் ரூபாய் முதலீடாக வைத்திருந்தார்கள். ஆனால், எப்படித் தொடங்குவது, யாரிடம் கற்றுக்கொள்வது ஒன்றும் புரியவில்லை. ‘நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், வழி தெரியவில்லையே’ என்று தூக்கமில்லாத இரவுகளில் மபிவே புலம்புவது வாடிக்கையானது.

பிறகு, அருகிலிருந்த காஸிஸி விவசாயப் பயிற்சி மையத்தை அணுகினார். அங்கே வழிகாட்டச் சிலர் கிடைத்தனர். மலடாகிக் கிடக்கும் மண்ணை வளப்படுத்தும் முறையைக் கற்றுக்கொண்டார். மிக நிதானமாக ஒவ்வொரு விஷயமாகத் தெரிந்துகொண்டார். குறிப்பாக ‘எதையெல்லாம் செய்யவே கூடாது’ என்பதில் தெளிவுகொண்டார்.

மலட்டுத்தன்மை கொண்ட மண், மண்புழுக்களுடன் உயிர்க்கத் தொடங்கிய தருணத்தில் எதை விதைக்கலாம் என்று யோசித்தார். மிளகாய் விதைகளைக் கையில் எடுத்தார். அங்கே மிளகாயின் தேவை அவ்வளவு இல்லை. மிளகாய்க் கரைசலை இயற்கையான பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தலாம். அப்படி இருக்கும்போது மபிவே, மிளகாயை மட்டும் பிரதான பயிராகப் பயிரிட்டார். காரமாகக் காய்த்துத் தொங்கிய மிளகாய், மபிவேவின் வாழ்க்கைக்கு இனிப்பான வழிகாட்டியது.

தனது மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் குறித்து விளக்கும் மபிவே
தனது மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் குறித்து விளக்கும் மபிவே

இயற்கை விவசாயத்தில் விளைவித்த மிளகாய் என்றால் எவருக்கும் அதன் மதிப்பு புரியவில்லை. சந்தையில் அதற்கான தேவையும் குறைவாகத்தான் இருந்தது. எந்தவொரு விவசாயியும் தன் விளைபொருளைச் சந்தைக்குக் கொண்டு சென்று, நிறைவுடன் விற்று, நினைத்த லாபத்துடன் வீடு திரும்பியதாகச் சரித்திரம் பூகோளத்தில் எங்கும் கிடையாதல்லவா?

மூட்டை மூட்டையாக இருக்கும் மிளகாயை என்ன செய்யலாம் என்று யோசித்தார் மபிவே. எந்த ஒரு பொருளையும் மதிப்புக்கூட்டி விற்றால் கவனம் கிடைக்கும் என்று நினைத்தார். மிளகாயை என்ன செய்யலாம்? மிளகாய் வற்றலாக மாற்றலாம். காய்ந்த மிளகாயைத் தூள் செய்து விற்கலாம். அப்புறம் மிளகாயைக் கொண்டு ‘சாஸ்’ தயாரிக்கலாம். மபிவேக்குள் மறைந்து கிடந்த தொழில்முனைவோர் விழித்துக்கொண்டார். ஸாம்பிய மக்களுக்கு மிளகாய் சாஸ் பிடிக்கும். அதுவும் மிளகாயும் பூண்டும் கலந்த சாஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சந்தையில் கிடைப்பதெல்லாம் அயல்நாட்டுச் சரக்குகளே. அசல் ருசியுடன், அடக்கமான விலையில், உள்ளூர்ச் சரக்கை எடுத்துச்சென்றால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள்?

மாண்புமிகு விவசாயிகள்
மாண்புமிகு விவசாயிகள்

மிளகாயுடன், பூண்டும் வெங்காயமும் இயற்கையான முறையில் பயிரிடத் தொடங்கினார் மபிவே. சில தடுமாற்றங்களுக்குப் பிறகு அவையும் செழித்து விளையத் தொடங்கின. எந்திரங்களை வாங்கிச் சாஸ் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை ஒன்றைக் கட்டமைத்தார். இயற்கையான பொருள்கள், சிவந்த சாஸ், காரமும் புளிப்பும் சற்றே இனிப்பு கலந்த சிறப்பான சுவை. லுமுனோ (Lumuno) என்று தனது பிராண்டுக்குப் பெயர் வைத்தார். அந்தச் சொல்லுக்கு ‘அமைதி’ என்று பொருள். அமைதியான புரட்சி படிப்படியாக அரங்கேறியது.

மபிவே, தனது தொழிற்சாலையின் தேவைக்காகக் கூடுதல் மிளகாய், பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட பொருள்களை விளைவிக்க வேண்டியதிருந்தது. தனது ஊரைச் சேர்ந்த, தனது பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளை, இயற்கை விவசாயிகளாக மாற்றும் பணியைத் தொடங்கினார். ‘இயற்கையான முறையில் நீங்கள் விளைபொருள்களைக் கொடுத்தீர்கள் என்றால், நான் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்’ என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்தது.

லுமுனோ சாஸ் ரகங்கள், ஸாம்பியாவின் பல நகரங்களைச் சென்றடைந்தன. ஸாம்பியர்கள் விரும்பும் உன்னத சாஸாக உயர்ந்தன. ஆப்பிரிக்கர்கள் விரும்பும் ஆர்கானிக் சாஸாகச் சந்தையை விரிவுபடுத்தும் நோக்குடன் உழைப்பை விரிவுபடுத்தினார் மபிவே. 2015-ல் அவரது மனைவி இறந்தபோது மனம் உடைந்து நின்றார். மிளகாய்ச் செடிகள் அவரை மீட்டுக் கொண்டு வந்தன. ஸாம்பிய அரசின் வேளாண் துறையின் ஆதரவு மபிவேக்குக் கிடைத்தது. அரசின் உதவியுடன் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் பயிற்சி அளித்து அவர்களையும் நல்வழிப்படுத்தியிருக்கிறார் மபிவே. தவிர, சர்வதேச அமைப்புகள் சில மபிவேவின் உதவியுடன் ஆப்பிரிக்க விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொடுத்து வருகின்றன.

இப்போது லுமுனோ சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் 12 பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். மாதந்தோறும் சுமார் 20,000 சாஸ் பாட்டில்கள் அங்கே தயாரிக்கப்படுகின்றன. அவை தென் ஆப்பிரிக்காவின் சூப்பர் மார்க்கெட்களில் உடனடியாக விற்பனையாகின்றன. தவிர, ஆப்பிரிக்காவின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களை மதிப்புக்கூட்டும் பொருள்களாக மாற்றினால் புதிய சந்தை வாய்ப்பு உருவாகும். அதன் மூலம் தேசத்தின் ஏற்றுமதியை அதிகரித்துப் பொருளாதாரத்தை உயர்த்தலாம் என்று ஸாம்பிய அரசுக்குப் புதிய பாதை காட்டியிருக்கிறார் மபிவே.

மிளகாய்
மிளகாய்

800-க்கும் மேற்பட்ட சிறு, குறு இயற்கை விவசாயிகளின் வாழ்க்கை, மபிவே என்ற ஒற்றை மனிதரால், அவரது இயற்கையை நோக்கிய பாதையால் வளமடைந்திருக்கிறது. வயிற்றுக்கே உணவு இல்லாமல் திரிந்தவர்கள், அடுத்தவர்களுக்கு உதவும் அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள். ஸாம்பிய விவசாயிகள், தங்களது ‘இயற்கை விவசாயக் குரு’ என்று மபிவேவை அழைக்கிறார்கள். மபிவே, ஸாம்பியாவின் ஏழைக் குழந்தைகள் பலரது கல்வித் தேவைகளுக்காகவும் உதவி வருகிறார். ஆப்பிரிக்கக் கண்டத்தின் முதுகெலும்பே விவசாயம்தான். அங்கே நில வளம் அதிகம். உழைக்கும் மனிதர்களும் அதிகம். உலகின் வருங்கால உணவுத் தேவையைப் பூர்த்தி செய்பவையாக ஆப்பிரிக்க நாடுகளே இருக்கப்போகின்றன என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. இந்தச் சூழலில் இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருள்கள், அவை கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களுக்கு உலகமெங்கும் ஏற்றுமதி வாய்ப்பு உண்டு என்று நிரூபித்திருக்கிறார் மபிவே. இது ஆப்பிரிக்க நாடுகள் ஒவ்வொன்றுக்குமான பசுமைச் செய்தி.

‘இயற்கை விளைபொருள்கள் மற்றும் அவை கொண்டு தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டுப் பொருள்களுக்கான தேவை என்பது உலகமெங்கும் இருக்கிறது. அது ஆப்பிரிக்கக் கண்டத்துக்கான நல்ல செய்தி. நிச்சயம் பல புதிய வாய்ப்புகள் உருவாகும். புதிய முதலீடுகள் வரும். இயற்கை விவசாயத்துக்கு மாறினால் ஸாம்பியாவின் விவசாயிகளுக்கும், ஆப்பிரிக்காவின் விவசாயிகளுக்கும் வளமான எதிர்காலம் நிச்சயம் காத்திருக்கிறது’ என்று நம்பிக்கை கொடுக்கிறார் ஸாம்பியாவின் இயற்கை விவசாயக் குரு!

சரித்திரம் தொடரும்...