Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : டிம் & ஜோ பட்டென் - இங்கிலாந்தில் இயற்கை இறைச்சிப் பண்ணை!

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 8

பிரீமியம் ஸ்டோரி
ன்று நாம் ‘இயற்கை உணவு’ (Organic Food) என்று அழுத்தம் கொடுத்துச் சொல்வதைத்தான், அன்று நம் தாத்தாவும் பாட்டியும் ‘உணவு’ என்று சாதாரணமாகச் சொன்னார்கள்.

இங்கிலாந்தின் டெவோன் மாகாணத்தைச் சேர்ந்தவர் டிம் பட்டென். எண்பதுகளில் அங்கே விவசாயக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். ஆனால், கல்லூரியில் கற்றுக்கொடுக்கப்பட்ட விவசாயப் பாடங்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கால்நடைகளுக்கு என்னென்ன ஊசிகள் போட்டால் அவற்றைக் கொழுக்க வைக்கலாம் என்று குறுக்குவழிகளைச் சொல்லிக் கொடுத்தார்கள். பயிர்களுக்கான செயற்கை உரங்கள் குறித்துப் பக்கம் பக்கமாகப் படிக்கச் சொன்னார்கள். பூச்சிக்கொல்லிகள் குறித்துச் சிலாகித்துச் சொல்லப்பட்டவை அவருக்கு அருவருப்பையே தந்தன.

மாண்புமிகு விவசாயிகள் : டிம் & ஜோ பட்டென் - இங்கிலாந்தில் இயற்கை இறைச்சிப் பண்ணை!

அதேசமயம் இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலரும், சூழலியலாளருமான ஜான் சீமோரின் (John Seymour) கருத்துகள் டிம்மைக் கவர்ந்தன. இருப்பதைக்கொண்டு வாழ்வை அமைத்துக் கொள்ளல், தற்சார்பு வாழ்க்கை முறை, இயற்கைக்கு எதிராக எதையும் செய்யாதிருத்தல் உள்ளிட்ட பல விஷயங்களை ஜானின் எழுத்துகளிலிருந்து டிம் உள்வாங்கிக்கொண்டார்.

விவசாயத்தில் ஆர்வம்கொண்ட ஜோவைச் சந்தித்தார் டிம். இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற ஆசை இருவருக்குமே இருந்தது. ஆகவே, வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றிணைந்தார்கள். பிறகு உலகப் பயணம் ஒன்றுக்குத் திட்டமிட்டார்கள். வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்குச் சென்றார்கள். அங்கே இயற்கை விவசாயம் செய்துவந்த விவசாயிகளைத் தேடிச்சென்று சந்தித்தார்கள். அவர்களோடு தங்கியிருந்த நாள்களில் பல அனுபவங்கள் கிடைத்தன. இயற்கை விவசாயம் மீதான அவர்களது காதலுக்கு அந்த நாள்கள் அடித்தளமிட்டன. நம்பிக்கையோடு டெவோனுக்குத் திரும்பினார்கள்.

தங்கள் பகுதியில் இயற்கை விவசாயப் பண்ணை அமைக்க வேண்டும் என்று இருவருமே திட்டமிட்டார்கள்.

என்னென்ன செய்ய வேண்டும் என்பதைவிட, எதையெல்லாம் செய்யவே கூடாது என்பதில் இருவரும் கவனமாக இருந்தார்கள்.

டெவொனின் வடக்குப் பகுதியில் அமைந்த உயரமான பண்ணை நிலமொன்றை விலைக்கு வாங்கினார்கள். 1985-ம் ஆண்டு ‘ஹையர் ஹேக்னெல்’ (Higher Hacknell) இயற்கைப் பண்ணை உருவாக ஆரம்பித்தது.

இங்கிலாந்து மக்கள் உண்ணும் உணவின் தரம் என்ன, அது இயற்கையானதா, தினமும் இறைச்சி உண்கிறார்களே... அது ஆரோக்கியமான இறைச்சிதானா, தாங்கள் உண்ணும் இறைச்சி எங்கிருந்து வருகிறது என்று மக்களுக்குத் தெரியுமா, அது பாதுகாப்பான உணவுதானா? யதார்த்தமான வாழ்வியல் கேள்விகளுக்குப் பதில் தேடும் விதமாகவே டிம்மும் ஜோவும் தங்களது பண்ணைக்கான செயல் திட்டங்களுக்கு வடிவம் கொடுத்தார்கள்.

டிம் & ஜோ பட்டென்
டிம் & ஜோ பட்டென்

முதல் விஷயம், கால்நடை வளர்ப்பு. தங்கள் பண்ணையில் வளரும் கால்நடைகள் முற்றிலும் இயற்கையான சூழலில் வளர வேண்டும். இயற்கையான மேய்ச்சல் நிலத்தில் அவை உலாவ வேண்டும் என்று திட்டமிட்டார்கள். அதற்கேற்ப காட்டுப்புற்கள், புதர்களுடனான மேய்ச்சல் நிலம் அப்படியே விடப்பட்டது. மாடுகளும், ஆடுகளும், குட்டிகளும் சுதந்திரமாக மேய்ந்தன. கோழிகள் மரங்களின் நிழலில் கொண்டாட்டத்துடன் கொத்திக்கொண்டு திரிந்தன. இன்னொரு பக்கம் பயிரிடுவதற்கான நிலங்களை இயற்கையான முறையில் செப்பனிட்டார்கள். அங்கே இயற்கை விவசாயம் செய்தார்கள். டிம்மும் ஜோவும் தங்களின் ஆரம்பகாலங்களில் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம், ‘இயற்கை விவசாயத்துக்கென்று துல்லியமான முறை எதுவும் கிடையாது. இயற்கையைச் சேதப்படுத்தாமல் அல்லது தொந்தரவு செய்யாமல், அது என்ன தருகிறதோ அதை உவகையுடன் ஏற்றுக்கொள்வதே இயற்கை விவசாயத்தின் அடிப்படை. எதுவொன்றும் இங்கே இழப்பு அல்ல. இயற்கையை நீ வஞ்சிக்காமலிருந்தால் அது என்றென்றைக்கும் உன் தேவைக்கும் அதிகமாகவே தரும்!’

1988-இல் மண் கூட்டமைப்பு (Soil Association), ஹையர் ஹேக்னெல் பண்ணைக்கு, ‘இயற்கை விவசாயப் பண்ணை’ என்ற அங்கீகாரத்தைக் கொடுத்தது. அதன் பிறகு வணிகம் என்ற கட்டத்துக்குள் டிம்மும் ஜோவும் அடியெடுத்துவைத்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த விவசாயிகளே புலம்பிக்கொண்டுதான் இருந்தார்கள். விவசாயத்தைவிட்டு விலகிக் கொண்டுமிருந்தார்கள். எவ்வளவு உழைப்பைக் கொட்டுகிறோம்; ஆனால், பலன் இல்லையே; விலை கிடைக்கவில்லையே; இடைத்தரகருக்குக் கிடைக்கும் லாபம் விளைவித்தவனுக்குக் கிடைப்பதில்லையே! ஆம், உலகம் முழுக்க விவசாயியின் வேதனைக் குரல் ஒன்றுதான்.

மாண்புமிகு விவசாயிகள் : இயற்கைப் பாடம் சொல்லும் கிருஷ்ணா மெக்கன்சி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சூழலில்தான் டிம்மும் ஜோவும், தங்கள் விளைபொருள்கள் நுகர்வோரை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்று திட்டமிட்டார்கள். தங்கள் பண்ணையில் விளையும் இயற்கையான காய்கறிகளை, பழங்களை நேரடியாக நுகர்வோருக்கே கொண்டு சேர்க்கும் விவசாயிகளை முன்னோடியாக எடுத்துக் கொண்டார்கள். அதேபோலத் தங்கள் பண்ணையில் இயற்கையாக வளர்க்கப்பட்ட கால்நடைகளின் இறைச்சியை நேரடியாக நுகர்வோரின் உணவு மேசைக்குக் கொண்டு செல்லும் திட்டத்தை (Organic Meat Box) உருவாக்கினார்கள்.

மாண்புமிகு விவசாயிகள் : டிம் & ஜோ பட்டென் - இங்கிலாந்தில் இயற்கை இறைச்சிப் பண்ணை!

ஹையர் ஹேக்னெல் பண்ணையில் கால்நடைகள் இயற்கையான சூழலில் வளர்க்கப்படுபவை. அவற்றுக்கு எந்தக் காரணத்தைக்கொண்டும் ஊசிகள் போடப்படுவதில்லை. அவை இயற்கையாகவே கொழுகொழுவென வளர்க்கப்படுகின்றன. `எங்கள் பண்ணையிலேயே இறைச்சி வெட்டுமிடம் அமைக்கப்பட்டுள்ளது. மிகத்தரமான முறையில் இறைச்சி இங்கே வெட்டப்பட்டு, நேரடியாக உங்களிடம் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.’

டிம்முக்கும் ஜோவுக்கும் இப்படி நுகர்வோர்களிடம் எடுத்துச் சொல்வது மிகச் சவாலான காரியமாகத்தான் இருந்தது. காரணம், இங்கிலாந்து மக்கள் பெரும்பாலானோரின் மனநிலை மேட்டிமைத்தனம் நிறைந்ததே. அவர்களுக்கு அங்கே வாழும் விவசாயிகளின் பிரச்னைகள் புரிவதில்லை அல்லது அவர்கள் புரிந்துகொள்ளவும் முயல்வதில்லை. அரசின் மனநிலையும் அப்படிப்பட்டதுதான். இதையெல்லாம் மீறித் தங்கள் இயற்கை விவசாயப் பண்ணையின் நோக்கத்தை, முக்கியத்துவத்தை நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல டிம்மும் ஜோவும் அதிகம் போராட வேண்டியிருந்தது.

‘நான் ஆன்லைனில் பொருள் வாங்க மாட்டேன். உள்ளூர் வியாபாரியை ஆதரிக்கிறேன்’ என்ற மனநிலை பல பேரிடம் இருந்தது. ஆனால், உள்ளூர் வியாபாரி விற்பனை செய்வது அயல்நாட்டுப் பொருளாகக்கூட இருக்கலாம் அல்லவா... ஆக, மக்கள் மனதில் மாற்றத்தைக் கொண்டுவர டிம்மும் ஜோவும் போராடினார்கள். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றார்கள்.

ஹையர் ஹேக்னெல்லில் விளைந்த பொருள்களையும் இறைச்சியையும் வாங்குவதற்கான ‘வாடிக்கையாளர் வட்டம்’ ஒன்று நாளடைவில் உருவானது.

2001-ம் ஆண்டு மிகப்பெரிய நெருக்கடி ஒன்றில் சிக்கினார்கள். பக்கத்துப் பண்ணை ஒன்றில் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டன. ஆடு, மாடுகள் மொத்தமாக இறந்து விழுந்தன. டிம்மும் ஜோவும் அந்த நோயின் பாதிப்பு தங்கள் கால்நடைகளுக்குப் பரவாமல் பத்திரமாகப் பார்த்துக்கொண்டனர். ஆனால், வதந்தி பரவுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ‘ஹையர் ஹேக்னெல் பண்ணை கால்நடைகளுக்கு மர்மநோய். அதனால் இறந்துபோன கால்நடைகளின் இறைச்சியைத்தான் வெட்டி அனுப்புகிறார்கள்’ என வதந்திகள் பரவின. இதனால் அவர்களது வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தவிர, அதைப் பொய் என்று நிரூபிக்க மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. டிம்மும் ஜோவும் உணவுத் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் என்று கலந்துகொண்டு தங்கள் இறைச்சியின் இயற்கையான தரத்தை நிரூபித்தார்கள். மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடித்தார்கள்.

பண்ணையில் டிம் & ஜோ
பண்ணையில் டிம் & ஜோ

இங்கிலாந்தில் `ஆர்கானிக் மீட் பாக்ஸ்’ (Organic Meat Box) என்பதை முதன்முதலில் செயல்படுத்தியவர்கள் டிம்மும் ஜோவும்தான். இன்றைக்கு அந்தத் தேசமெங்கும் அதிகம் விரும்பப்படும் ஆர்கானிக் இறைச்சி ஹையர் ஹேக்னெல் பண்ணையைச் சேர்ந்ததுதான். காரணம், வாடிக்கையாளர் ஒருவர் தான் முள்கரண்டியால் எடுத்து உண்ணும் இறைச்சித் துண்டு எந்தக் கால்நடையிலிருந்து வந்தது என்று தெரிந்து கொள்ளும் அளவுக்குப் பண்ணையிலிருந்து தெளிவாக முழுத் தகவல்களைக் கொடுக்கிறார்கள்.

மாட்டுக்கறி பாக்ஸ், ஆட்டுக்கறி பாக்ஸ், கோழிக்கறி பாக்ஸ், வெண்பன்றிக்கறி பாக்ஸ் என்று பல்வேறு விதங்களில் வாரந்தோறுமோ, மாதந்தோறுமோ பெட்டிகள் நுகர்வோரைச் சென்றடைகின்றன. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழிக்கறி, வெண்பன்றிக்கறி எல்லாம் நிரம்பிய கலவையான இறைச்சிப் பெட்டிகளை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகம்.

100% ஆர்கானிக் இறைச்சி என்பதன் சுவையை உணர்ந்தவர்கள் ஹையர் ஹேக்னெலை விட்டு நீங்குவதே இல்லை.

டிம், ஜோ தம்பதியின் மகனான ஜிம் இயற்கை விவசாய முறையில் காய்கறிகள், பழங்கள் பயிரிடுவதில் முழு கவனத்தைச் செலுத்தி வருகிறார். அதற்கான தனிச் சந்தையை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பண்ணையின் ஆப்பிள் சிடர் தோட்டத்திலிருந்து தயாரிக்கப்படும் இயற்கையான பழச்சாறு பாட்டில்களுக்கு எப்போதும் தேவை இருக்கிறது.

350 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்த ஹையர் ஹேக்னெல் பண்ணையில் ஏராளமான பறவைகளும், சிறு உயிரினங்களும் மகிழ்ச்சியாக வசித்துவருகின்றன. இங்கிலாந்து தேசமெங்கும் அருகிப்போன ஸ்னைப், ஸ்கைலர்க் போன்ற பறவைகள் இங்கே வாழ்கின்றன. குறிப்பிட்ட பருவங்களில் வெளிநாட்டுப் பறவைகளும் வந்து போகும் சரணாலயமாகவும் ஹையர் ஹேக்னெல் விளங்குகிறது.

இங்கிலாந்து மக்களை இயற்கையை நோக்கித் திரும்பச் செய்வதில், இயற்கையாக விளைந்த பொருள்களை நுகரச் செய்வதில் டிம்-ஜோ தம்பதி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

சரித்திரம் தொடரும்

பண்ணையில் திருமணம்!

மாண்புமிகு விவசாயிகள் : டிம் & ஜோ பட்டென் - இங்கிலாந்தில் இயற்கை இறைச்சிப் பண்ணை!

ஹையர் ஹேக்னெல் பண்ணையில் ‘திருமண நிகழ்வுகள்’ அரங்கேறுவதற்கு டிம்–ஜோ தம்பதி வழிசெய்து கொடுக்கிறார்கள். இயற்கையான சூழலில் ஆடு, மாடுகள் சூழ மணமகன், மணமகளுக்கு மோதிரம் அணிவிக்க, வானம்பாடியின் இசைக்கு விருந்தினர்கள் வாழ்த்தொலி முழங்கத் திருமணம் ஆர்கானிக்காக அரங்கேறுகிறது. முழுக்க முழுக்கத் தங்கள் பண்ணையில் விளைந்த பொருள்களைக்கொண்டும், இறைச்சியைக்கொண்டும் ருசியான விருந்து சமைத்து அழகாகப் பரிமாறுகிறார்கள். இந்தத் திருமண வைபவங்கள் விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அற்புத அனுபவத்தைத் தருவதுடன், இயற்கையின் மகத்துவத்தையும் உணரச் செய்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு