Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : வோ வான் தியெங் வியக்க வைக்கும் வியட்நாம் விவசாயி!

வோ வான் தியெங்
பிரீமியம் ஸ்டோரி
News
வோ வான் தியெங்

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 9

“பயிர்களை வளர்ப்பவன் விவசாயி.

பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற அற்புதமான, இயற்கையான சூழலை உருவாக்கித் தருபவன் இயற்கை விவசாயி.”

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் முதுகெலும்பு விவசாயம்தான். வேளாண் பொருள்கள் ஏற்றுமதியால்தான் அந்த நாட்டின் பொருளாதாரமே சற்று பொலிவுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. திபெத்தில் உற்பத்தியாகி, சீனாவின் சில மாகாணங்கள் வழியாகப் பாய்ந்து, வேறுசில தேசங்களையும் கடந்து, வியட்நாமில் கடலில் கலக்கும் மேக்கொங் ஆறு (Mekong River), அந்த நாட்டு விவசாயத்தின் உயிர் நீர். அந்த ஆற்றின் மீன்வளமும் வியட்நாமின் முக்கியமான வணிகப்பொருள். நமக்கு எப்படிக் காவேரி டெல்டாவோ, அதேபோல வியட்நாம் விவசாயிகளுக்கு மேக்கோங் டெல்டா.

மாண்புமிகு விவசாயிகள் : வோ வான் தியெங் வியக்க வைக்கும் வியட்நாம் விவசாயி!

மேக்கோங் நதி பாயும் ஓர் ஊரில் பிறந்து வளர்ந்தவர்தான் வோ வான் தியெங் (Vo Van Tieng). டோங் தோப் என்ற மாகாணத்தின் ஹாங் நு (Hong Ngu) என்ற சிறிய ஊர். விவசாயக் குடும்பம். நினைவு தெரிந்த நாள் முதல் நெல்லும் நெல் விவசாயமும் சார்ந்த வாழ்க்கைக்குப் பழகியவர் தியெங். வயல் சேற்றில் விழுந்து எழுந்து விளையாடி, பிஞ்சுக் கரங்களால் நாற்று நடப் பழகி, களை பறித்து, அறுவடை தின ஆனந்தங்களை அனுபவித்த பால்ய வாழ்க்கை. விவசாயம் என்பது அவரது ரத்தத்தில் கலந்திருந்தது.

இளைஞரான பிறகு தியெங் தேர்ந்தெடுத்தது ராணுவப்பணியை. ‘கொஞ்சம் சம்பாதிக்கலாம்; வாழ்க்கை அனுபவங்களைச் சேகரித்துக் கொள்ளலாம்’ என்ற எண்ணம். வெவ்வேறு இடங்களில் சில ஆண்டுகள் பணி. ஒரு கட்டத்துக்கு மேல் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு, கட்டளைகளுக்கு அடிபணிந்து ஓடுவதற்கு அவர் மனம் ஒப்பவில்லை. ‘வயல் வாழ்வுதான் உனக்குச் சரிப்படும்’ என்று உள்ளிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. தேச சேவையை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்பினார். ‘வயற்காட்டிலிருந்தே தேசத்துக்கான சேவையைத் தொடர்கிறேன்’ என்று அறிவித்தார் தியெங்.

அதன் உண்மையான அர்த்தம் அவரது குடும்பத்தினருக்குப் புரியவில்லை. சில காலம் கழித்து, ‘விவசாயத்தைக் கற்றுக்கொண்டு வருகிறேன்’ என்று தியெங் வீட்டை விட்டுக் கிளம்பினார். ‘நமக்குத் தெரியாத விவசாயமா?’ என்று தியெங்கின் பெற்றோர் குழப்பத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

தியெங், வியட்நாம் எங்கும் சுற்றினார். குறிப்பாக, எங்கெல்லாம் நெல் விவசாயம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் சென்றார். வியட்நாமில் ஏறக்குறைய 33 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. அதுவும் மூன்று விதமான சூழல் அமைப்பில் வேளாண்மை நடைபெறுகிறது. மேக்கோங் நதி பாயும் தெற்கு டெல்டா. அங்குதான் அதிக அளவில் நெல் பயிரிடப்படுகிறது. இரண்டாவது, பருவமழையை நம்பியிருக்கும் வடக்கு டெல்டா பகுதி. மூன்றாவது, வடக்கு வியட்நாமின் மலைப்பகுதி. இங்கே குறைந்த அளவில் நெல் பயிரிடப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மேக்கோங் நதி பாயும் சுமார் 12 மாகாணங்கள் அடங்கிய பகுதி, ‘வியட்நாமின் அரிசிக் கிண்ணம்’ என்றழைக்கப்படுகிறது. அங்கே வாழும் மக்களில் 80% பேர், நெல் பயிரிடும் விவசாயிகள். தெற்கு டெல்டாவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றார் தியெங். பெரும்பாலும் வயல்களைச் செயற்கை உரங்களும் பூச்சிக்கொல்லிகளுமே ஆக்கிரமித்திருந்தன. விளைந்த அரிசி, இயற்கையின் குழந்தைபோல் அல்லாமல் வேதியியல் உயிரியாகத் தெரிந்தது. தியெங், வடக்கு டெல்டா பகுதிகளுக்குச் சென்றார். அங்கும் நிலைமையில் மாற்றமில்லை. யாரும் அரிசியின் தரம்பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அதிக விளைச்சல் என்பது மட்டுமே அவர்களது ஒரே நோக்கமாக இருந்தது. காரணம், உலகில் அதிகம் அரிசி ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளில் இரண்டாவது இடம் வியட்நாம்தான்.

வோ வான் தியெங்
வோ வான் தியெங்

அந்தத் தேசத்தின் பிரதான உணவு அரிசிதான். 75% மக்கள், மூன்று வேளையும் அரிசி உணவைத்தான் உண்கிறார்கள். அதில் பெரும்பாலோனோர் ஏழைகளே. வேதிப்பொருள்களால் விளைவிக்கப்படும் அரிசியைத் தொடர்ந்து உண்பதால், கடந்த சில வருடங்களாகப் பெருகியிருக்கும் நோய்களின் தீவிரமும் தியெங்குக்குக் கவலை தந்தது.

வாத்து வளர்ப்பு
வாத்து வளர்ப்பு

வடக்கு வியட்நாமின் மலைப்பிரதேசங்களுக்குச் சென்றபோது தியெங்குக்கு ஆசுவாசமாக இருந்தது. அங்கே நெல் விளையும் நிலங்கள் குறைவு. ஆனால், அந்த மக்கள் பாரம்பர்ய முறையை மாற்றாமல் விவசாயம் செய்துகொண்டிருப்பதைக் கண்டார். ஆம், அங்கே வேதியியல் மாற்றங்கள் இல்லாத இயற்கை விவசாயம் உயிர்ப்புடன் இருந்தது. சில காலம் அந்தப் பகுதியில் தங்கி, விவசாயத்தில் எது தேவை, எது தேவையில்லை என்று உணர்ந்துகொண்டு ஊருக்குத் திரும்பினார் தியெங்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘இனி உரங்களையோ பூச்சிக்கொல்லிகளையோ நான் தொடரப்போவதில்லை. இயற்கையான முறையில் நெல் பயிரிடப்போகிறேன்’ என்று தியெங், தன் பெற்றோரிடமும் சுற்றத்தாரிடமும் பெருமிதத்துடன் சொன்னார். அவர்கள் தியெங்கை விநோதமாகப் பார்த்தனர். ‘நான் சொல்வதைக் கேளுங்கள். நாம் மொத்தமாக இயற்கை விவசாயத்துக்கு மாறிவிடுவோம்’ என்று தியெங் அழுத்தமாகச் சொன்னபோது, ‘பைத்தியக்காரத்தனமாகப் பேசாதே!’ என்று பெற்றோர், அவரது யோசனையைப் புறக்கணித்தனர்.

நெல் அறுவடை
நெல் அறுவடை

‘நீ பூச்சிக்கொல்லிகளை உபயோகப்படுத்தாவிட்டால் மொத்த பயிரையுமே பூச்சிகள் நாசமாக்கிவிடும். போட்ட பணம் அவ்வளவுமே நஷ்டமாகிவிடும். உனக்காக நான் பணம் தர மாட்டேன்’ என்று தியெங்கின் தந்தை கோபமாகச் சொன்னார். ‘இவர்களிடம் பேசுவதால் பலனில்லை. நிரூபித்தால் மட்டுமே இவர்களை மாற்ற முடியும்’ என்று உணர்ந்தார் தியெங். ‘இரண்டு ஹெக்டேர் நிலத்தை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்’ என்று வீட்டைவிட்டுக் கிளம்பினார்.

அந்த நிலத்திலேயே சிறு குடிசை ஒன்றைப் போட்டுத் தங்கிக்கொண்டார். அத்தனை ஆண்டுகள் பயன்படுத்திய வேதிப்பொருள்களால் சிதைந்திருந்த அந்த இரண்டு ஹெக்டேர் மண், வளமிழந்துக் கிடந்தது. மண்ணுக்கு உயிரூட்ட, தினமும் 16 மணி நேரம் உழைத்தார் தியெங். இலைகளும் தழைகளும் மட்கி மண்ணுக்கு வளம் கொடுத்தன. மண்புழுக்கள் அங்கே தோன்றி, நெளிய ஆரம்பித்தபோது நெகிழ்ந்து நின்றார் தியெங். குடிசை வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு பைத்தியக்காரன் ஏதோ செய்துகொண்டிருக்கிறான் என்பதாகத்தான் ஊரார் தியெங்கைக் கவனித்துக்கொண்டிருந்தனர். காலம் கடப்பதை நினைத்து அவர் வருந்தவில்லை. வரும் காலம் வசந்த காலம் என்று நம்பினார்.

பண்ணையில் நண்பர்களுடன் தியெங்
பண்ணையில் நண்பர்களுடன் தியெங்

‘தனது நிலம், வளமாகிவிட்டது, பயிரை விளைவிக்கத் தயாராகிவிட்டது’ என்று தன் மனத்துக்குத் தோன்றியபோது, தியெங் நெல் பயிரிடத் தொடங்கினார். இயற்கை விளைவிக்கும் எந்தப் பொருளிலும் உலகில் வாழும் எல்லாம் உயிர்களுக்கும் பங்கு இருக்கிறது என்று நினைத்தார். எனவே, தனது வயலில் வாத்துகளை வளர்த்தார்; தவளைகளைப் பெருக்கினார்; மீன்களை வளர்த்தார். இயற்கையான அந்த நிலத்தில் பூச்சிகளும் புழுக்களும் நிறையவே வளர்ந்தன. கொக்குகளும் நாரைகளும் வந்து போயின. எலிகளும் திரிந்தன; பாம்புகளும் தென்பட்டன. அங்கே உணவுச்சங்கிலி முழுமையடைந்தது. பூச்சிகள், இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்தப்பட்டன. நெற்கதிர்கள் தலைகுனிந்தன. தியெங் தலைநிமிர்ந்து நின்றார். தனது பண்ணைக்குப் பெயர் ஒன்றை வைத்தார். ‘வியட்நாமின் ஆன்மா’ (TamViet Farm) என்று அதற்குப் பொருள்.

அப்போதுகூடத் தியெங்கின் தந்தை, தன் மகனது செயலை அங்கீகரிக்கவில்லை. ‘என்ன விளைச்சலே இல்ல? ரெண்டு ஹெக்டேருக்கு இவ்வளவுதான் கிடைக்கும்னா சரிப்பட்டு வராது’ என்றார். துக்கம் விசாரிப்பது போலச் சுற்றத்தார் விளைச்சல் குறித்து விசாரித்தனர். தியெங் அவர்களது கேள்விகள் அனைத்துக்கும் மென்மையான புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தார்.

மேக்கோங் நதி
மேக்கோங் நதி

தியெங், தனது பண்ணையில் விளைந்த 100% ஆர்கானிக் அரிசியைச் சந்தைக்குக் கொண்டு சென்றார். அதற்குக் கிடைத்த விலையைக் கண்டு மற்றவர்கள் வியந்து நின்றனர்.

வியட்நாமின் ஆன்மா பண்ணை, இரண்டு ஹெக்டேரிலிருந்து 20 ஹெக்டேராக விரிந்தது. கூடுதலாக நிலத்தைக் கொடுத்துவிட்டு தியெங்கின் தந்தை அமைதியாக ஒதுங்கிக் கொண்டார். தியெங், கடுமையாக உழைத்தார்; பொறுமையாகச் செயல்பட்டார். மொத்த நிலப்பரப்பையும் மீண்டும் இயற்கையின் வளத்தோடு மீட்பதற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டார். அதுவரை பயிரிடவில்லை. உரிய வளத்துடன் நிலம் மீண்ட பிறகே பயிரிட்டார். அவருக்கு அள்ளிக் கொடுத்தது இயற்கை.

மீன் வளம்
மீன் வளம்

தியெங்கின் இயற்கைப் பண்ணையில் விளையும் அரிசிக்கென்று சந்தையில் தனி மதிப்பு உருவானது. குறிப்பாக, வியட்நாமின் மாபெரும் அரிசிச் சந்தையான ஹோசிமின் நகரச் சந்தையில், அதன் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. தியெங் அதற்காக மூன்று போகம் நெல் பயிரிடவில்லை. ‘மனித உடம்புக்கு ஓய்வு தேவைப்படுவதுபோல, வயல்களுக்கும் ஓய்வு தேவை. எனவே, நான் இரண்டு போகம் மட்டுமே பயிரிடுகிறேன்’ என்றார். தனது இயற்கை விவசாயம் சார்ந்த பணிகள், செய்திகள் ஒவ்வொன்றையுமே சமூக வலைதளங்களில் பரப்பத் தொடங்கினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தியெங்கைப் பைத்தியக்காரன்போலப் பார்த்தவர்கள், இப்போது அவரை இயற்கை விவசாய ஆசானாகக் கருதித் தேடி வருகிறார்கள். குறிப்பாக, விவசாயத்தை விட்டு வேறு வேலைக்குச் சென்ற இளைஞர்கள், புதிய நம்பிக்கையுடன் தியெங்கைத் தேடிவந்து, வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அங்கே தங்கி கற்றுக்கொள்கிறார்கள். மேக்கோங் டெல்டா பகுதியில் இயற்கை விவசாயம் நோக்கி மீண்டும் திரும்புவதற்கான முதல் மாற்றத்தைத் தியெங் உண்டாக்கியிருக்கிறார். அதன் அருமையைப் பலரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு வழியாக, தியெங்கின் குடும்பத்தினரும் இயற்கையின் பாதைக்குத் திரும்பிவிட்டனர். வியட்நாம் அரசும், தியெங்கின் இயற்கை விவசாயம் சார்ந்த முயற்சிகளைப் பாராட்டி அங்கீகரித்திருக்கிறது.

நெல் பயிரிடும் விவசாயிகள்
நெல் பயிரிடும் விவசாயிகள்

2017-ல் தன் பண்ணையில் கிளப் ஹவுஸ் ஒன்றைத் தொடங்கினார். ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என்று பலதரப்பட்டோரும் அங்கே வந்து தங்கி, இயற்கை விவசாயத்தின் அருமை, பெருமைகளை உணர்ந்துகொள்வதற்கான ஏற்பாடு அது. தியெங்கின் விடாமுயற்சியால் நல்ல மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன. வியட்நாமின் இயற்கை விவசாய விடிவெள்ளியாகத் தியெங் ஒளிர்ந்துகொண்டிருக்கிறார்.

‘என் தேசத்தில் அனைவரும் இயற்கை விவசாயம் நோக்கித் திரும்புவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். எனக்கு ஓர் ஆசை உண்டு. ஏழையோ, வசதி படைத்தவரோ, ஒவ்வொரு வியட்நாமியரும் இயற்கையாக விளைந்த, ஆரோக்கியமான அரிசியை உண்ணும் அந்த அருமையான காலம் வர வேண்டும்.’

- சரித்திரம் தொடரும்