Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : காடுகளின் கட்டற்ற கலைக்களஞ்சியம் துளசி கவுடா!

துளசி கவுடா
பிரீமியம் ஸ்டோரி
News
துளசி கவுடா

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 3

தான் வளர்த்த மரமொன்று சமூக விரோதிகளால் வெட்டப்பட்டிருந்தால், அங்கேயே உட்கார்ந்து அழத் தொடங்கிவிடுவார். சூழல்மீது ஆர்வம் கொண்ட மக்களும் துளசியைத் தேடி வருகின்றனர். அவர்களில் வெளிநாட்டினரும் உண்டு.

‘இந்த பூமியானது மனிதனின் தேவைக்குரிய அனைத்தையும் கொடுக்கிறது. மனிதனின் பேராசைக்குரியதை அல்ல’ – மகாத்மா காந்தி

துளசி கவுடா... எப்போதும் செருப்பு அணிந்ததே இல்லை. பூமியில் வெறுங்கால்களுடன் நடக்கவே அவருக்குப் பிடிக்கும். செருப்பு இந்த மண்ணையும் தன்னையும் பிரித்துவிடுகிறது என்பது அவரது எண்ணம். அவருக்குள் எப்போதும் மண் வாசம் நிரம்பியிருக்கிறது. மரக்கன்று ஒன்று துளிர்த்து வளரும்போது அவரே புதிதாகப் பிறந்ததுபோல உணர்கிறார். வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் வாடுகிறார். வெட்டப்பட்ட மரங்களைக் காணும்போதெல்லாம் துடித்து அழுகிறார். தான் நட்ட மரக்கன்று வேர்விட்டு, கிளைபரப்பி, நெடுநெடுவென வளர்ந்து, பூத்து, காய்த்து, பழங்களைத் தந்து, பறவைகளும், ஏனைய உயிரினங்களும் வாழும் உயிர்க்கூடாக முழுமையடைந்திருப்பதைக் காணும்போதெல்லாம் துளசியின் முகத்தில் தாய்மையின் பூரிப்பு.

யார் இந்த துளசி கவுடா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பூமி – நமக்கெல்லாம் தாய். இந்த பூமியில் வாழும் பல்லாயிரக்கணக்கான மரங்களின் தாய், துளசி. கர்நாடக மாநிலம், அங்கோலா வட்டம், ஹொன்னாலி என்ற பழங்குடி கிராமத்தில் பிறந்த துளசி, தனது இரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். அதனால் பள்ளி செல்லும் வாய்ப்பு அமையவில்லை. எழுதப் படிக்கக்கூட யாரும் கற்றுத்தரவில்லை. ஆனால், தனது பழங்குடி மக்கள் கற்றுக்கொடுத்த காடும் காடு சார்ந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். எவையெல்லாம் உணவுக்கானவை, எவையெல்லாம் மூலிகைகள், எந்தத் தாவரத்தைத் தீண்டவே கூடாது, எந்தெந்த மரங்கள் எப்படியெப்படி வளரும்... என ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டார். தன் தேவைக்கான உணவைத் தானே பயிரிட்டுக்கொள்ளும் விவசாயியாகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டார்.

துளசி கவுடா
துளசி கவுடா

துளசி, சிறுமியாக இருக்கும்போதே கோவிந்த கவுடா என்பவருக்கு மனைவியானார். சில வருடங்களே திருமண வாழ்க்கை. அதற்குள் குழந்தைகள் பிறந்தன. துளசியின் பதினேழாவது வயதில் கோவிந்த கவுடா இறந்துபோனார். வாழ்க்கையே இருண்டு போனதாகத் தோன்றிய கணத்தில், இயற்கைதான் துளசிக்கு ஆறுதல் கொடுத்தது. மரங்கள்தான் அவரை அரவணைத்து ஆற்றுப்படுத்தின. காட்டுக்குச் சென்று சுள்ளியும் விறகும் சேகரித்து விற்றால் கொஞ்சம் பணம் கிடைக்கும். எப்போதாவது கிடைக்கும் கூலி வேலை. வருமானத்துக்கு வேறு வழியற்ற நிலை. சில வருடங்கள் அப்படித்தான் கழிந்தன. அப்போது வனத்துறை அலுவலகத்திலிருந்து ஹொன்னாலி கிராமத்துக்கு வந்தார்கள். ‘காட்டுக்குள்ள வேலை இருக்கு. கூலி தருவோம். யாரெல்லாம் வர்றீங்க?’ என்று கேட்டார்கள். துளசியும் தன் மக்களுடன் இணைந்துகொண்டார்.

புதிய மரக்கன்றுகளை நடுவது, தேவையில்லாத புதர்களை அகற்றுவது, மூலிகைச் செடிகளை வளர்ப்பது, தாவரங்களுக்கு நீர் ஊற்றுவது எனப் பல வேலைகள். ஒரு நாளுக்கான கூலி என்பது வெறும் ஒன்றே கால் ரூபாய்தான். ஆனால், இடுப்பொடிந்து போகுமளவுக்கு நாள் முழுக்கக் கடும் வேலை. `இவ்வளவு குறைவான கூலிக்கெல்லாம் வேலை பார்க்க முடியாது’ என்று சிலர் விலகிப்போனார்கள். துளசியையும் வேலைக்குப் போக வேண்டாம் என்று தடுத்தார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், துளசிக்கு அந்த வேலை பிடித்திருந்தது. எந்நேரமும் காட்டுக்குள் கிடப்பது அவருக்கு விருப்பமானதாக இருந்தது. தவிர, அந்த ஒன்றே கால் ரூபாய் குழந்தைகளின் பசியைப்போக்கத் தேவையாக இருந்தது. ஆகவே, துளசி வனத்துறை தினக்கூலி வேலைக்குத் தொடர்ந்து சென்றார்.

மரங்கள், மூலிகைகள், பூக்கள், தாவரங்களின் வளரியல்புகள், பயன்பாடுகள்குறித்து துளசிக்கு இருந்த அறிவு வனத்துறை அதிகாரிகளை ஆச்சர்யப்படுத்தியது. ஆம், எழுதப் படிக்கக்கூடத் தெரியாத துளசி, மெத்தப் படித்த தாவரவியலாளர்களுக்கு நிகரான அறிவைக்கொண்டிருந்தார். அத்தனையும் சிறுகச் சிறுகச் சேகரித்த அனுபவ அறிவு.

துளசி கவுடா
துளசி கவுடா

அதற்கான பலனும் கிடைத்தது. வனத்துறையிலேயே பணியில் சேரும் வாய்ப்பைப் பெற்றார் துளசி. ஓரளவு கௌரவமான சம்பளம். ‘மரம்தான்... மரம்தான் எல்லாம்’ என்று மனநிறைவுடன் பணியைத் தொடர்ந்தார். காடெல்லாம் அலைந்து திரிந்து விதைகளைச் சேகரிப்பது, மரக்கன்றுகளை உருவாக்குவது, அவற்றை நடுவது, தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பது, பழத்தோட்டங்களைப் பராமரிப்பது, எங்கே எந்தெந்த மரங்களை வளர்க்கலாம் என்று வனத்துறையினருக்கு ஆலோசனைகள் சொல்வது என்று ஒருநாள்கூட ஓய்வில்லாத பணி. சுமார் பதினான்கு வருடங்கள் வனத்துறையில் பணியாற்றிவிட்டு ஓய்வும் பெற்றார் துளசி. ஓய்வூதியம் வர ஆரம்பித்தது.

சரி, அக்கடாவென ஓய்வெடுப்போம் என்று துளசி நினைக்கவில்லை. வனத்துறைப் பணியாளராக அல்லாமல் தனி ஒரு மனுஷியாக அதே பணிகளைத் தொடர ஆரம்பித்தார். ஹொன்னாலி, மஸ்டிகட்டா, ஹொலிகே, ஹெக்குரு, வஜ்ரஹல்லி, டோங்ரி, காளீஸ்வரா, அடகுர், சிரகுஞ்சி, எலோகடே ஆகிய கிராமங்களில் வனப்பகுதியை உருவாக்குவது, பராமரிப்பது என்று துளசியின் வேலைகள் தொடர்ந்தன. அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, ஒரு குடத்துடன் கிளம்பிவிடுவார். வீட்டுக்குத் தேவையான நீர் எடுக்க அல்ல; புதிதாக நட்ட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்ற. அவை வேர் பிடித்து ஓரளவுக்கு வளரும் வரை துளசி அவற்றை தினமும் பராமரிக்கத் தவறுவதே இல்லை.

இப்போது துளசியின் வயது 72. ‘துளாசாஜி’ என்றுதான் அங்கே உள்ள மக்கள் துளசியை அழைக்கின்றனர். தாவரவியல் மாணவர்களும், பிற இளைஞர்களும், சுற்றுச்சூழல்மீது ஆர்வம் கொண்ட மக்களும் துளசியைத் தேடி வருகின்றனர். அவர்களில் வெளிநாட்டினரும் உண்டு. ஹப்பள்ளி(ஹூப்ளி) - அங்கோலா சாலையில் அமைந்திருக்கும் மரங்கள் சூழ்ந்த துளசியின் சிறிய வீடு எப்போதும் திறந்தேகிடக்கிறது. யார் தன்னைத் தேடி வந்தாலும் இரு கரங்களை விரித்து அணைத்து வரவேற்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் நினைவில் நிறைந்துகிடக்கும் தாவரங்கள் குறித்த தகவல் ஒவ்வொன்றும் மதிப்பு வாய்ந்தது. ஆகவே, ‘காடுகளின் கட்டற்ற கலைக்களஞ்சியம்’ என்று துளசியை அன்புடன் அழைக்கிறார்கள்.

தாவரங்கள்குறித்து யார் என்ன சந்தேகம் கேட்டாலும் சொல்லிக் கொடுக்கிறார். ஆம், தான் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவங்களின் வாயிலாகச் சேகரித்த அறிவை அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் கடத்த வேண்டும் என்பதில் துளசி உறுதியாக இருக்கிறார்.

தன்னுடைய பழங்குடி மக்கள் பலருக்கும் மூலிகைகள் குறித்தும், பிற தாவரங்களின் இயல்புகள் குறித்தும் கவனமாகக் கற்றுக் கொடுக்கிறார். அவர் நினைவில் நிறைந்துகிடக்கும் தாவரங்கள் குறித்த தகவல் ஒவ்வொன்றும் மதிப்பு வாய்ந்தது. ஆகவே, ‘காடுகளின் கட்டற்ற கலைக்களஞ்சியம்’ என்று துளசியை அன்புடன் அழைக்கிறார்கள்.

தான் வளர்த்த மரமொன்று சமூக விரோதிகளால் வெட்டப்பட்டிருந்தால் துளசியால் துக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியாது. அங்கேயே உட்கார்ந்து அழத் தொடங்கிவிடுவார். அவர் வளர்த்த காடுகளில் மூங்கில், தேக்கு உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டுக் கடத்தப்படுவதைக் கண்டு, மனம் வெம்பி, அரசியல்வாதிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுத்துமிருக்கிறார்.

உலகின் சுற்றுச்சூழல் அபாயகரமான நிலைக்குச் சென்றுகொண்டிருப்பது குறித்த தீராத கவலைகள் துளசிக்கு உண்டு. அதற்குத் தன்னால் இயன்ற பணி, இன்னும் பல்லாயிரம் மரங்களை உருவாக்குவது மட்டுமே என்று மௌனமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இந்த இயற்கையின் மகள்!

துளசியின் கழுத்தில் எப்போதும் சிறு சிறு கருகமணிகளால் ஆன மாலைகள் நிறைந்திருக்கின்றன. அந்தக் கருகமணிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் இருக்கலாம். `ஆனால், அவற்றைவிட அதிகமான மரக்கன்றுகளை துளசி, தன் வாழ்நாளில் நடவு செய்திருக்கிறார்’ என்று அப்பகுதி மக்கள் பெருமையுடன் சொல்கிறார்கள். துளசி, அந்தக் கணக்கெல்லாம் பார்த்து நேரத்தை வீணடிப்பதில்லை. புதிய மரக்கன்றுகளை உருவாக்குவதற்காக விதைகளைச் சேகரிக்கக் கிளம்பிவிடுகிறார். இந்தத் தன்னலமற்ற இயற்கைச் சேவைக்காகத் துளசிக்கு 2020-ல் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டுள்ளது.

தன்னைத் தேடி வருபவர்களுக்கும் இந்த உலகத்தினருக்கும் துளசி என்ற இந்த மரங்களின் தாய் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான்.

‘காடுகள் மட்டுமே இந்த பூமியைப் பாதுகாக்கும் ஒரே கவசம். தயவுசெய்து மரங்களை வெட்டாதீர்கள்.’

- சரித்திரம் தொடரும்