Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : ‘விதைகளின் தாய்’ ரஹிபாய் சோமா போபரே!

ரஹிபாய்
பிரீமியம் ஸ்டோரி
ரஹிபாய்

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 6

மாண்புமிகு விவசாயிகள் : ‘விதைகளின் தாய்’ ரஹிபாய் சோமா போபரே!

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 6

Published:Updated:
ரஹிபாய்
பிரீமியம் ஸ்டோரி
ரஹிபாய்
‘‘பாரம்பர்ய விதைகளின் சிறப்பு என்னவென்றால் பூச்சி, நோய் தாக்குவதில்லை; ரசாயன உரம் வேண்டியதில்லை; வங்கியில் கடன் வாங்க வேண்டியதில்லை; கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்ய வேண்டியதில்லை... இப்படி நிறைய சாதகங்கள் இருக்கின்றன. எனவேதான் விதைகளை, `பேராயுதம்’ என்கிறேன்.”

- இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.

பல விவசாயிகள் காலங்காலமாகச் செய்துவரும் மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா... அறுவடை முடிந்து, விளைபொருள்களைச் சந்தைக்கு அனுப்புவதற்கு முன்பாக, விதைகளைச் சேகரிக்கத் தவறுவதுதான். விதைகள்தானே மூலதனம்... அவை இல்லாமல் போனால் அடுத்த போக நடவுக்கு என்ன செய்வது?

பெறும் ரஹிபாய்
பெறும் ரஹிபாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்தவன் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டும். இல்லையேல் விதைகளை யாரிடமாவது விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். இந்த இடைவெளியில்தான், ‘நாங்க இருக்கோம். கவலையேபடாதீங்க!’ என்று கம்பெனிகள் உள்ளே புகுந்தன. வெறும் கையுடன் நின்றவர்களுக்கு விதைகளைத் தந்தன. ‘இவை பாரம்பர்ய விதைகளா?’ என்ற கேள்வியை முடிக்கும் முன்னரே, பேராசையைத் தூண்டும் பதில் ஒன்றைத் தயாராக வைத்திருந்தன. ‘இவை வீரியமான விதைகள். குறைந்த காலத்தில் விளையக்கூடியவை. கூடுதல் மகசூல். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிக லாபம் கிடைக்கும்.’

விவசாயியும் மனிதன்தானே... பேராசையில் விழுவதும் இயற்கைதானே. ஆனால், அவன் இயற்கையை மறந்து விழுந்ததுதான் மிகப்பெரிய வீழ்ச்சியாக மாறியது. மரபணு மாற்ற விதைகளுடன் செயற்கை உரங்களும் கைகோத்து வந்தன. பூச்சிக்கொல்லிகளும் பொடிநடையாக வந்து சேர்ந்தன. எல்லாம் சேர்ந்து ஆரம்பத்தில், `அதிக மகசூல்’ என்ற தற்காலிக சந்தோஷத்தை விவசாயிக்கு அளித்தன. ஆனால், அவையெல்லாம் சேர்ந்து அவன் நிலத்தின் வளத்தை விரைவாகவே அழித்தன. ஆரோக்கியமான கிராமத்து மனிதனின் உடலும் நவீன நோய்களின் புகலிடமாகிப் போனது மரபணு மாற்ற விதைகளும், செயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் வயலுக்குள் புகுந்த பிறகுதான்.

இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் கையால் பத்மஸ்ரீ விருதையும் வாங்கியிருக்கிறார். கிராமம் கிராமமாகச் சென்று இயற்கை விவசாயிகளைத் தேடித்தேடி விதைகளைச் சேகரித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையெல்லாம் கண்டு அந்தப் பழங்குடிப் பெண்ணின் மனம் துடிதுடித்தது. ‘அய்யோ! எப்படி இருந்த விவசாய நிலங்கள் இப்படிப் பாழ்பட்டுப் போய்விட்டனவே’ என்று கண்ணீர் வடித்தார். ‘பாரம்பர்ய விதைகளைச் சேகரிப்பது ஒன்றே இழந்ததை மீட்கும் ஒரே வழி’ என்று முடிவெடுத்தார். அந்தப் பழங்குடிப் பெண்ணின் பெயர் ரஹிபாய் சோமா போபரே.

மகாராஷ்டிரா, அகமத் நகர் மாவட்டத்தின், கொம்பல்னே பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். 1964-ம் ஆண்டு, `மகாதியோ கோலி’ என்ற பழங்குடி இனத்தில் பிறந்தவர். பழங்குடி மக்களுக்கு என்ன வசதி இருந்துவிடப் போகிறது... `தினசரி பிழைப்பை ஓட்டினால் போதும்’ என்றுதான் ரஹிபாயின் பால்யம் கழிந்தது. பள்ளிக்கூடம் பற்றியெல்லாம் யாரும் சொல்லவில்லை. ஆகவே, ரஹிபாய்க்கு அடிப்படைக் கல்வியறிவுகூட கிட்டவில்லை. அவர் கற்றுக்கொண்டவை யெல்லாம் இயற்கையிடமிருந்துதான். வயல்கள் தாவரவியலைச் சொல்லிக்கொடுத்தன. மரங்களும் செடிகளும் சூழலியலைக் கற்றுக்கொடுத்தன.

ரஹிபாயின் குடும்பத்துக்குச் சொந்தமாகச் சில ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால், அவர்களால் ஒரு பகுதி நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடிந்தது. அதுவும் அந்தந்த ஆண்டுகளில் பெய்யும் மழையைப் பொறுத்தது. வானம் பொய்த்துவிட்டால், ஏரையும் மண்வெட்டியையும் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, தூக்குச்சட்டியில் உணவை எடுத்துக்கொண்டு கூலி வேலைக்குக் கிளம்பி விடுவார்கள். அருகில் ‘அக்கோலே’ என்ற ஊரில் அமைந்திருந்த சர்க்கரை ஆலை ஏதாவது படியளந்தால்தான் உண்டு.

மாண்புமிகு விவசாயிகள் : ‘விதைகளின் தாய்’ ரஹிபாய் சோமா போபரே!

இப்படியே அடுத்தவர் கைகளை எதிர்பார்த்தே காலத்தை ஓட்டிவிட முடியுமா... சுயசார்பு வாழ்க்கை என்பது பழங்குடி மரபணுவில் பின்னிப் பிணைந்த விஷயமல்லவா! ரஹிபாய் யோசித்தார். ‘உணவுப் பொருள்களை வாங்குவதற்குப் பணம் வேண்டும் என்றுதானே கூலி வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதை நானே விளைவிக்கப்போகிறேன்’ என்று களமிறங்கினார். கிணறு ஒன்று இருந்தால் மழை இல்லாவிட்டாலும் சமாளிக்கலாம் அல்லவா... கிணறு ஒன்றை வெட்டினார்.

‘‘இப்போது நாம் செய்ய வேண்டியது மரபணு மாற்று விதைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். நாட்டு விதைகளைச் சேகரிக்க வேண்டும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு ஏக்கர் நிலத்தில் காய்கறிகளையும், சில தானியங்களையும் பயிரிட முடிவெடுத்தார் ரஹிபாய். விதைகளை வெளியில் வாங்கவில்லை. சேகரித்தார். பாரம்பர்ய விதைகளைத் தேடித்தேடிச் சேகரித்தார். பயிரிட்டார். அவர் வீட்டின் உணவுக்கான தேவையை அவரே பூர்த்தி செய்துகொண்டார். விளைந்த காய்கறிகளிலிருந்தும் தானியங்களிலிருந்தும் விதைகளை பத்திரப்படுத்தினார், அடுத்தவர்களுக்குக் கொடுத்து உதவுவதற்காக.

மாண்புமிகு விவசாயிகள் : ‘விதைகளின் தாய்’ ரஹிபாய் சோமா போபரே!

மகாராஷ்டிரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கிராமப்புற விவசாயிகளுக்குப் பல்வேறுவிதமான பயிற்சிகளைக் கொடுத்துவந்தது. ரஹிபாய், அங்கே வீட்டில் கோழி வளர்க்கும் தொழிலைக் கற்றுக்கொண்டார். அதோடு நான்கடுக்குப் பயிர் சாகுபடி முறையையும் தெரிந்து கொண்டது அவருக்கு உதவியாக இருந்தது. பாரம்பர்ய விதைகளையும், இயற்கை வேளாண்மை முறைகளையும் மட்டுமே பயன்படுத்திய ரஹிபாய் நிலத்தில் விளைச்சல் 30 சதவிகிதம் கூடுதலாக இருந்தது. ரஹிபாயும் அவரின் குடும்பத்தினரும் யாரையும் எதற்கும் எதிர்பாராமல் தன்னிறைவுடன் வாழ ஆரம்பித்தனர்.

‘தயவுசெஞ்சு விதைகளையெல்லாம் வெளியே வாங்காதீங்க. பாரம்பர்ய விதைகளைச் சேகரிங்க’ என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவந்த ரஹிபாயின் குரலை முதலில் ஊர்க்காரர்கள் அலட்சியப்படுத்தினர். கேலி செய்தவர்களை ரஹிபாய் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவர் இயற்கை விவசாயத்தால் நிமிர்ந்து நின்றபோது, ஊர்ப் பெண்கள் ரஹிபாயின் குரலுக்குச் செவிகொடுக்க ஆரம்பித்தனர்.

‘கம்பெனிகள் விற்கும் விதைகள், அதிக விளைச்சலைத் தருவதுபோலத் தரும். ஆனால், உடல்நலத்தை பாதிக்கும். புதிய புதிய நோய்களை உருவாக்கும். நம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உருவாவது அதனால்தான். ஆனால், நம் பாரம்பர்ய விதைகள் நமக்கு ஆரோக்கியத்தை மட்டுமே தரும். நல்ல விளைச்சலையும் தரும். நம் முன்னோர்களெல்லாம் பல ஆண்டுகளுக்கு நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தது இயற்கையாக விளைந்ததை உண்டதால்தான். இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன... மரபணு மாற்று விதைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். நாட்டு விதைகளைச் சேகரிக்க வேண்டும். நம் கையைவிட்டுப் போன பாரம்பர்ய விதைகளையெல்லாம் தேடித்தேடிச் சேகரிக்க வேண்டும்.’

ரஹிபாய், தன் ஊர்ப்பெண்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைத்தார். அவர்கள் மூலம் ஆண்களும் தெளிவுபெற்றனர். ரஹிபாய், பெண்கள் சுய உதவிக்குழு ஒன்றை உருவாக்கினார். பிரதான நோக்கம், உள்ளூர் விதைகளைத் தேடித்தேடிச் சேகரிப்பது. அந்த விதைகளைப் பாதுகாத்துத் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகவே கொடுப்பது. பல்வேறு பயிர்களின் பாரம்பர்ய விதைகளைத் தேடி ரஹிபாய், மகாராஷ்டிர மாநிலம் முழுக்கப் பயணம் செய்தார். கிராமம் கிராமமாகச் சென்று, இயற்கை விவசாயிகளைத் தேடித்தேடி அவர்களிடமிருந்து விதைகளைச் சேகரித்தார். தன்னிடம் இல்லாத ஒரு பாரம்பர்ய ரக விதை ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்த நொடியில் பிறந்த குழந்தையைக் கையில் ஏந்தும் பரவசத்தையும் அடைந்தார்.

ரஹிபாயின் குடிசை வீட்டில் எங்கெங்கும் சாணத்தால் வாய்ப்பகுதி அடைக்கப்பட்ட மண்பாண்டங்களே நிறைந்திருக்கின்றன. அத்தனையிலும் விதவிதமான நாட்டு விதைகள். அறுபதுக்கும் மேற்பட்ட காய்கறி விதைகள், 15 வகையான பாரம்பர்ய நெல் விதைகள், ஒன்பது வகையான துவரை விதைகள், பல்வேறு வகையான எண்ணெய் வித்துகள் மற்றும் தானியங்களுக்கான விதைகள். இப்படி நாட்டு விதைகளைச் சேகரிப்பதற்காகவே ரஹிபாய் நிறுவியிருக்கும் அமைப்பின் பெயர், ‘கல்சுபாய் பரிசார் பியானி சம்வர்தன் சமிதி.’ ரஹிபாய் தன் விதை வங்கி மூலமாக 32 பயிர்களுக்கான 122 ரக பாரம்பர்ய விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்.

குடியரசுத் தலைவரிடம் பத்மஸ்ரீ விருது பெறும் ரஹிபாய்
குடியரசுத் தலைவரிடம் பத்மஸ்ரீ விருது பெறும் ரஹிபாய்

இயற்கை விவசாயத்தின் அவசியத்தை, மகத்துவத்தை உணரவைப்பது, பாரம்பர்ய விதைகளின் பலன்களைப் புரியவைப்பது என விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் பாடம் எடுத்துவருகிறார், பள்ளிக்கூடமே செல்லாத ரஹிபாய். ‘முதல் விஷயம் பாரம்பர்ய விதைகளை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டாம். முந்தைய அறுவடையிலிருந்து சேகரித்து வைத்தால் போதும். நாட்டு விதைகள் வறட்சியைத் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டவை. அவை வளரக் காற்றும் நீரும் போதுமானவை. ரசாயன உரங்கள் தேவையே இல்லை. நாட்டு ரக விதைகளின் பயிர்கள் நோய்த் தாக்குதல்களால் பாதிக்கப்படாதவை. பூச்சிகளால் பாதிக்கப்பட்டால், இயற்கையான கரைசல்கள் போதும். அவை செழித்து வளரும். பாரம்பர்ய விதைத் தாவரங்களே மண் வளத்தை மேம்படுத்துகின்றன. அவை ஊட்டச்சத்து மிக்க தானியங்களையும் காய்கறிகளையும் தருகின்றன.’

ரஹிபாய் தன் வீட்டைச் சுற்றி மட்டும் சுமார் 400 மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். விதை வங்கி மட்டுமல்லாமல், பாரம்பர்ய விதைகள் மூலம் நாற்றுகளை உருவாக்கி, அவற்றையும் விவசாயிகளுக்கு வழங்கிவருகிறார். தன் அனுபவங்களின் மூலம் பல்வேறு விவசாயிகளின் நிலங்களுக்குச் சென்று மண் வளத்தை மேம்படுத்தவும், பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் இயற்கையான முறையில் வழிகாட்டுகிறார். மழைநீரைச் சேமித்து விவசாயத்துக்குப் பயன்படுத்தும்விதத்தில் புதிய நீர்க் கட்டமைப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுக் கொடுக்கிறார்.

ரஹிபாய் என்ற இந்தப் பழங்குடி இதயத்தின் சீரிய முயற்சியால் அகமத் நகர் மட்டுமன்றி, மகாராஷ்டிராவின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இயற்கை வேளாண் முறைக்குத் திரும்பியிருக்கின்றனர். அந்த நிலங்களில் எல்லாம் பாரம்பர்ய விதைத் தாவரங்கள் மகிழ்வுடன் பூத்தும் காய்த்தும் கொண்டிருக்கின்றன.

‘இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வளமான வாழ்வு’ என்ற பிரசாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் ரஹிபாய்க்குப் பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கியிருக்கின்றன. `சுமார் 120-க்கும் மேற்பட்ட நாட்டு விதைகளைச் சேகரித்த இந்தியப் பெண்’ என்று பாராட்டிய பி.பி.சி நிறுவனம், ‘உலகின் முக்கியமான 100 பெண்கள்’ என்று 2018-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில் ரஹிபாயின் பெயரையும் சேர்த்திருந்தது. 2019-ம் ஆண்டில் நாரி புரஸ்கார் விருதைப் பெற்ற ரஹிபாய், இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் கையால் பத்மஸ்ரீ விருதையும் வாங்கியிருக்கிறார்.

இவை அனைத்தையும்விட முக்கியமான பட்டம் ஒன்றை கவுன்சில் ஆஃப் சயின்ட்டிஃபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் (Council of Scientific and Industrial Research) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரகுநாத் மாசேல்கர், ரஹிபாய்க்குச் சூட்டியிருக்கிறார். அந்தப் பொருத்தமான பட்டம் ‘விதைகளின் தாய்!’

- சரித்திரம் தொடரும்.

கான் விழாவில் ஒலித்த ரஹிபாயின் குரல்!

மாண்புமிகு விவசாயிகள் : ‘விதைகளின் தாய்’ ரஹிபாய் சோமா போபரே!

உலகப் பிரசித்திபெற்ற கான் (Cannes) திரைப்பட விழாவில், 9/16 என்ற அளவிலான செங்குத்துப் பரிமாணத்தில் மூன்று நிமிடங்களில் ஆவணப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்றொரு பிரிவு இருக்கிறது. அந்தப் பிரிவில் 2019-ம் ஆண்டில் ‘வீ ஆர் வாட் வீ ஈட்’ (We Are What We Eat) என்ற கருப்பொருளில் எடுக்கப்பட்ட, 47 நாடுகளைச் சேர்ந்த 370 படங்கள் கலந்துகொண்டன. அதில் கவனம் ஈர்த்தவை சில படங்கள் மட்டுமே. அச்சுதானந்த் திவிவேதி இயக்கிய ‘சீட் மதர்’ (Seed Mother) என்ற ஆவணக் குறும்படம், மூன்றாவது பரிசை வென்றது. ரஹிபாய் குறித்த படம்தான் அது. பாரம்பர்ய விதைளைச் சேகரிப்பதன், பாதுகாப்பதன் அவசியத்தைத் தன் குரலில் ரஹிபாய் விவரிக்கும் அந்தப் படம், முதல் இரண்டு பரிசுகளை வென்ற படங்களைவிட அதிக பாராட்டுகளைப் பெற்றது.

படத்தைக் காண இந்த இணைய தள முகவரிக்கு செல்லவும் அல்லது கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.: <https://www.youtube.com/watch?v=aKneBzsxJUs>

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism