Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : இயற்கைப் பாடம் சொல்லும் கிருஷ்ணா மெக்கன்சி!

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 7

பிரீமியம் ஸ்டோரி
“மனித இனம், இயற்கையிடமிருந்து தனது வாழ்க்கையைப் பிரித்து வைத்திருக்கிறது. இங்கே பள்ளிக்கல்வி என்பது அவசியமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இயற்கை விவசாயத்தை எந்தப் பள்ளியிலும் கற்றுக்கொள்ள முடியாது.”

- மசனோபு ஃபுகோகா

ங்கிலாந்தில் பிறந்தவர் மெக்கன்சி. அங்குதான் பள்ளிப் படிப்பையும் முடித்தார். பள்ளியில் படிக்கும்போது, புதுச்சேரியிலுள்ள ‘உலகின் கிராமம்’ என்று அழைக்கப்படும் ஆரோவில்லுக்குச் சுற்றுலா வந்தார். அந்த இடம் அவரை அதிகம் கவர்ந்தது. அங்கே இயற்கை விவசாயப் பண்ணை நடத்திவந்த ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு மாணவரான மெக்கன்சிக்குக் கிடைத்தது. அந்த விவசாயி, அவர் வாழும் வாழ்க்கை, இயற்கைச் சூழல் நிறைந்த அந்தப் பண்ணை அனைத்தும் மெக்கன்சிக்கு மிகவும் பிடித்துப்போயின.

கிருஷ்ணா மெக்கன்சி
கிருஷ்ணா மெக்கன்சி

இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்ற மெக்கன்சி, பள்ளிப் படிப்பை முடித்தார். ‘அடுத்தது என்ன?’ என்ற கேள்வி அவர் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. நண்பர்கள் பலரும் கல்லூரியில் விரும்பிய படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள், சிலர் படிப்பதற்காக பிற நாடுகளுக்குச் சென்றார்கள். ஆனால், மெக்கன்சியின் மனத்தில் தத்துவார்த்தமாகப் பல கேள்விகள் எழுந்தன. `இந்த வாழ்க்கை எதற்கு, வருங்காலத்தில் நான் என்னவாகப் போகிறேன், மேற்கொண்டு படிக்கும் படிப்பு என்பது எந்த விதத்தில் என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கப்போகிறது, எதற்குப் படிக்க வேண்டும்?’ இப்படிப் பல கேள்விகள்.

குழம்பினார்; பின் தெளிந்தார். `இயற்கையோடு வாழ்வதைத்தான் என் மனம் விரும்புகிறது. நான் விவசாயி ஆகப்போகிறேன். இங்கு அல்ல; இந்தியா என்னை அழைக்கிறது. நான் ஆரோவில் செல்லப்போகிறேன்.’ தெளிவாக, தீர்க்கமாக முடிவெடுத்தார் மெக்கன்சி. தனது பத்தொன்பதாவது வயதில் ஆரோவில்லுக்கு வந்த அவர், ‘கிருஷ்ணா மெக்கன்சி’யாக மாறினார்.

ஆரோவில்லில் வாழ விரும்பும் யாராக இருந்தாலும் இரண்டு வருடங்கள் அங்கே பணியாற்ற வேண்டும். இயற்கை விவசாயப் பண்ணை ஒன்றில் பணி செய்ய ஆரம்பித்தார் கிருஷ்ணா. `இயற்கையோடு இணைந்து விவசாயத்தைக் கற்றுக்கொண்டார்.’ அப்படிச் சொல்லக் கூடாது; `உணர்ந்துகொண்டார்’ என்பதுதான் சரியாக இருக்கும். பிறகு தனக்கான இயற்கை விவசாயப் பண்ணை ஒன்றை அமைத்து, ஆத்மார்த்தமாக உழைக்க ஆரம்பித்தார்.

மாண்புமிகு விவசாயிகள் : இயற்கைப் பாடம் சொல்லும் கிருஷ்ணா மெக்கன்சி!

‘இயற்கையின் அமைப்பை அதன் தன்மையிலேயே விட்டுவிட்டு, அதைக்கொண்டு உணவை உற்பத்தி செய்வதே இயற்கை விவசாயத்தின் அடிப்படை. அதற்கென்று வரையறுக்கப்பட்ட முறைகள் எதுவும் கிடையாது. அதுவே போதி தர்மரின் வழி. பலவீனமாகத் தோன்றினாலும் இது நுட்பம் வாய்ந்தது. போரிடாமலேயே வெற்றியைப் பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தது. `மண், பூச்சி, தாவரங்கள், களைகள் அனைத்தையும் அப்படியே விட்டுவிடுவதுதான் இயற்கை வேளாண்மை’ என்ற அவரின் ஜப்பானிய குரு மசனோபு ஃபுகோகாவின் வழிகாட்டுதலே கிருஷ்ணா மெக்கன்சியை ஓர் இயற்கை விவசாயியாக மாற்றியது.

சங்க காலத்திலேயே தமிழர்களின் வேளாண் முறை, இயற்கையான முறையில் உலகுக்கே முன்னோடியாக இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. ‘கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினை…’ என்கிறது நற்றிணையின் வரிகள். `அதிக உழைப்பின்றி விதைகளை மட்டும் விதைத்த பிறகு, பெய்த மாமழையே பயிர்களை வளர்த்துவிட்டது’ என்ற பொருள் அமைந்த பாடல். குறிஞ்சி, முல்லை மக்களின் வேளாண் முறைகள் இப்படி இயற்கையோடு இயைந்த ஒன்றாகத்தான் அமைந்திருந்தன.

`உழவர் உழாமலேயே விளைந்து பலன் தரக்கூடியவை’ என்று நான்கு வகை உணவுப் பொருள்களைப் புறநானூற்றில் கபிலர் கூறியிருக்கிறார். ஒன்று, மூங்கில் நெல். இரண்டாவது பலாப்பழம். மூன்றாவது வள்ளிக்கிழங்கு. நான்கு, ஒரிக்குரங்கு பாயும்போது உடைந்து ஒழுகும் தேன்கூடுகள். இவ்விதமாக வேள்பாரி ஆண்ட பறம்பு மலையின் வளத்தை கபிலர் பாடியிருக்கிறார். இது, பண்டைத் தமிழர்களின் உணவு நுகர்வு இயற்கையை நோக்கியே இருந்திருக்கிறது என்பதை உறுதிசெய்கிறது.

இயற்கைக்குத் திரும்புவதைத்தான் ஃபுகோகாவும் வலியுறுத்தியிருக்கிறார். அவரது சொற்களால் ஈர்க்கப்பட்டு தமிழகத்துக்கு வந்த மெக்கன்சி, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்களின் மரபு விவசாயம் என்பது இயற்கையோடு இணைந்ததாகத்தான் இருந்திருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டார். தமிழக விவசாயிகளே மறந்துபோன மரபு விவசாயத்தின் மகிமையை உணர்ந்துகொண்ட அந்த வெள்ளைக்காரர், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மண்புழுவோடும், மண்வெட்டியோடும், இயற்கை உரங்களோடும் மனமகிழ்வுடன் வாழ ஆரம்பித்தார்.

மாண்புமிகு விவசாயிகள் : ‘விதைகளின் தாய்’ ரஹிபாய் சோமா போபரே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பண்டைத் தமிழர்களின் பெருமைகள், தமிழ் மொழியின் அருமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட கிருஷ்ணா, தமிழ்ப்பெண் ஒருவர்மீது காதல் கொண்டார். ஆரோவில்லுக்கு அடிக்கடி வந்து சென்ற திருவண்ணாமலையைச் சேர்ந்த தீபாவுக்கு கிருஷ்ணாவைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. தமிழர்களுக்கே தெரியாத மரபு விவசாயத்தின் மகத்துவத்தை இங்கிலீஷ்காரர் ஒருவர் கிள்ளைத்தமிழில் எடுத்துச் சொல்கிறாரே என்ற விஷயம் தீபாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கிருஷ்ணாவின் இயற்கைப் பண்ணையின் பெயர், ‘Solitude Farms.’ அங்கே ‘இயற்கை உணவகம்’ ஒன்று அமைக்க வேண்டும் என்பது அவரது கனவுத்திட்டம். அதற்கு தீபாவின் உதவியைக் கேட்டார். தீபா சம்மதித்தார். 2006-ம் ஆண்டில் அங்கே இயற்கை உணவகத் தொழிலையும், (Solitude Cafe) இல்வாழ்க்கையும் இருவரும் சேர்ந்து தொடங்கினர்.

குடும்பத்தினருடன்
கிருஷ்ணா மெக்கன்சி
குடும்பத்தினருடன் கிருஷ்ணா மெக்கன்சி

‘`இன்றைக்கு இயற்கை விவசாயம் என்ற பெயரில் நடத்தப்படும் பண்ணைகள் பலவும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் நடத்தப்படுபவை. எனக்குப் புரோக்கோலி பிடிக்கும். கேரட், உருளை, காலிஃப்ளவர் எல்லாம் பிடிக்கும். ஆனால், அவையெல்லாம் இந்த மண்ணில் விளைந்தவை அல்ல விளைவிக்கப்பட்டவை. ஒரு மண்ணில் இயற்கையாக என்ன விளைகிறதோ, அதுதான் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் உண்பதற்கான உணவு. அது மணத்தக்காளியோ, வாழையோ, பப்பாளியோ, திப்பிலியோ, பூசணியோ, கோவைக்காயோ, கருணைக்கிழங்கோ எதுவாகவும் இருக்கலாம். அப்படித்தான் இந்த மண்ணில் முன்னோர்கள் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். அதுதான் மரபு. இயற்கையோடு இணைந்த அந்த மரபை நோக்கித் திரும்புவதுதான் இந்த பூமிக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.’’ இதுதான் கிருஷ்ணாவின் அழுத்தமான கருத்து.

பண்ணையில் கிருஷ்ணா மெக்கன்சி
பண்ணையில் கிருஷ்ணா மெக்கன்சி

கூட்டுப்பண்ணை முறை விவசாயத்தைத்தான் ஆறு ஏக்கர் அளவிலான தன் பண்ணையில் கிருஷ்ணா மேற்கொண்டுவருகிறார். அங்கே வாழை, பப்பாளி, மா, பனை, முருங்கை, கொய்யா, சீதாப்பழம், சப்போட்டா எனப் பல்வேறு மரங்கள் உள்ளன. திப்பிலி, முடக்கத்தான், நன்னாரி என விதவிதமான மூலிகைகள் உண்டு. கத்திரி, கோவை, சுண்டைக்காய், மணத்தக்காளி, பூசணி என்று சுமார் 140-க்கும் மேற்பட்ட பயிர்கள் அங்கே வளர்ந்துவருகின்றன. ஊடுபயிர்களாக மஞ்சள், அன்னாசி போன்றவற்றையும் பயிரிடுகிறார் கிருஷ்ணா.

நீர் மேலாண்மையிலும் மரபுசார்ந்த உத்திகளையே கையாண்டுவருகிறார் கிருஷ்ணா. கோடைக்காலத்தில் மரங்களையும் செடிகளையும் சுற்றி புற்களையும் ஓலைகளையும் போட்டு நிரப்புகிறார். அதனால் நிலம் வறண்டு போவது தவிர்க்கப்படுகிறது. பயிர்களுக்குப் பாய்ச்சப்படும் நீர் ஆவியாவதும் கட்டுப்படுத்தப்படுகிறது. வாரத்தில் சில நாள் மட்டும் நீர் ஊற்றினால் போதும் என்பதால் அதிக அளவில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

‘காய்கறி மற்றும் பழங்கள் நிறைந்த கூடை’களை வாரந்தோறும் வாடிக்கை யாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறார். அவை அனைத்துமே அவரது பண்ணையில் நூறு சதவிகிதம் இயற்கையான முறையில் விளைந்தவை. நம் மண்ணின் காய்கறிகள், பழங்கள், கீரைகள், மூலிகைகள் மட்டுமே அதில் இருக்கும். அதுதானே ஆரோக்கியம்.

உணவகத்தில் உணவுடன்...
உணவகத்தில் உணவுடன்...

தவிர, தினமும் இவர் நடத்தும் உணவகத்தில் காலை மற்றும் மதிய உணவு உண்டு. வாடிக்கையாளர்களின் கண் முன்னே பண்ணையிலிருந்து பறிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் சமைக்கப்படுகின்றன. சிறுதானியங்கள் நிரம்பிய எளிமையான உணவு. ஆனால், அதிக ருசியானது. பாரம்பர்யப் பதார்த்தங்களும், பழச்சாறுகளும் அங்கே கிடைக்கின்றன. இரவு உணவு கிடையாது. தினமும் மாலைக்குப் பிறகான நேரம் தன் குடும்பத்துக்கானது என்று தெளிவாக, மகிழ்ச்சியாக வாழ்கிறார் கிருஷ்ணா.

‘`இந்த உணவகம் மூலம் எனக்கு நல்ல காசு வருது. அது எனக்கு முக்கியமில்லை. ஆனா, என் காலுக்குச் செருப்புகூடத் தேவையில்லை.

ஆரோக்கியமான உணவைத் தர்றோம்கிற திருப்தி கிடைக்குது’’ என்று மனப்பூர்வமாகச் சொல்கிறார் கிருஷ்ணா.

வார இறுதியில் இயற்கை விவசாயம் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்காகத் தனது பண்ணையில் வகுப்புகள் எடுக்கிறார்.

பண்ணையைச் சுற்றிக் காண்பித்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். இயற்கை விவசாயத்தின் தேவையை உணரச் செய்கிறார். அந்தப் பகுதிவாழ் விவசாயிகளின் முன்னோடியாகவும் திகழ்கிறார்.

கிருஷ்ணா மெக்கன்சியைப் பார்த்ததும் ஒவ்வொருவரும் கேட்கும் அல்லது கேட்க விரும்பும் கேள்வி இதுதான். ‘`இங்கிலாந்துல பிறந்த நீங்க ஏன் இங்கே வந்து விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

அதற்கு கிருஷ்ணா சொல்லும் வேடிக்கையான பதில், ``நான் போன ஜென்மத்துல இதே மண்ணுல கட்டை வண்டி ஓட்டிக்கிட்டு விவசாயம் பார்த்துக்கிட்டுதான் இருந்திருப்பேன்.

அதனாலதான் இந்த ஜென்மத்துலயும் இங்கேயே மறுபடியும் வந்துட்டேன். அதுதான் கடவுள் எழுதின விதி!’’

- சரித்திரம் தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு