Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : ஃப்ளோரிஸ் நியு சமோவா தீவின் சூரிய ஒளி! - சாக்லேட் விவசாயியின் சரித்திரம்!

மாண்புமிகு விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
மாண்புமிகு விவசாயிகள்

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 16

மாண்புமிகு விவசாயிகள் : ஃப்ளோரிஸ் நியு சமோவா தீவின் சூரிய ஒளி! - சாக்லேட் விவசாயியின் சரித்திரம்!

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 16

Published:Updated:
மாண்புமிகு விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
மாண்புமிகு விவசாயிகள்
‘மரபுக்குத் திரும்புதல்’ என்பது இயற்கையாக விளைந்த பொருள்களை வாங்கி உண்பதும், மரபு மருத்துவத்தைக் கடைப்பிடித்தலுமன்று. மனிதர்கள் ஒரு கூட்டுச் சமூகமாக, பல்லுயிர்களுடனும் இயைந்து இயற்கையான முறையில் கூட்டு வாழ்க்கை வாழ்தலே மரபுக்குத் திரும்புதலின் உண்மையான பொருள்.

சமோவா. தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு. இதன் அருகில் உள்ள பெரிய நாடு நியூசிலாந்து. 1962-ம் ஆண்டுவரை நியூசிலாந்தின் ஆதிக்கத்தில்தான் சமோவா இருந்தது. ஆக, நியூசிலாந்து தேசத்தினரும் ஆஸ்திரேலியர்களும் சமோவாவில் அதிகம் தென்படுவார்கள். அதேபோல நியூசிலாந்து வாழ் சமோவர்கள் என்று தனியே ஓர் குழுவும் உண்டு.

மாண்புமிகு விவசாயிகள் : ஃப்ளோரிஸ் நியு சமோவா தீவின் சூரிய ஒளி! - சாக்லேட் விவசாயியின் சரித்திரம்!

சமோவா தீவின் பொருளாதாரம் விவசாயத்தையும் சுற்றுலாவையும் நம்பித்தான் இருக்கிறது. தேங்காய் முக்கிய விளைபொருள். அடுத்த விஷயமாகச் சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவைச் சொல்லலாம். சமோவா தீவில் விளைந்த கோகோவுக்கு நியூசிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் நல்ல மதிப்பு இருக்கிறது.

ஃப்ளோரிஸ் நியு (Floris Niu) என்ற பெண்ணின் பாட்டனும் கோகோ பயிரிட்டவர்தான். புலேகா என்பது அவர் பெயர். ஒல்லியாக, நெட்டையாக, துறுதுறுவெனத் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டே இருப்பார். சமோவாவின் டுவானை என்ற கிராமம் அவர்களது சொந்த ஊர். குழந்தையாக ஃப்ளோரிஸ் இருக்கும்போதே புலேகாவின் வயது நூறுக்கும் மேல். அந்தப் பாட்டன் அன்புடன் பேசுவார். பழங்கதைகள் சொல்லுவார். வாஞ்சையுடன் உணவு ஊட்டுவார். வெகுதூரத்தில் இருந்தெல்லாம் புலேகாவைத் தேடி வந்து அவரிடம் விவசாயம் குறித்துச் சந்தேகம் கேட்டுப் போவார்கள். பயிர்த்தொழிலில் அவருக்கு இருந்த அனுபவம், தீவில் வேறு யாருக்குமே இல்லை என்றே சொல்லலாம். ஃப்ளோரிஸுக்கு இயற்கை மீதான நேசத்தை விதைத்தது பாட்டன் புலேகாதான். 120 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து ‘இயற்கை’ எய்தியவர் அவர்.

ஃப்ளோரிஸின் தந்தை, தன் தாத்தாவைப் போல் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர் அல்லர். கடுமையான உழைப்பாளி. ஆனால், உணவிலோ மதுவிலோ கட்டுப்பாடு கிடையாது. 52 வயதில் இறந்துபோனார். அதாவது, அவரது தாத்தா புலேகாவுக்கு முன்பாகவே. அப்போது ஃப்ளோரிஸின் வயது 8. வாழ்க்கை தலைகீழாகிப்போனது. வறுமையும் இயலாமையும் நிறைந்த அந்தச் சூழல், ஃப்ளோரிஸின் குடும்பத்தை நியூசிலாந்து நோக்கி நகர்த்தியது. அங்கே சென்று ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று ஃப்ளோரிஸின் தாயார் முடிவெடுத்திருந்தார்.

‘‘அவரது பண்ணையில் இயற்கை விவசாயியாக மாறுகின்றனர். ஆர்கானிக் சாக்லேட் தயாரிக்கக் கற்றுக் கொள்கின்றனர்.’’
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பரபரப்பான வாழ்க்கை

நியூசிலாந்து வாழ்க்கை, ‘பணம்தான் எல்லாம். நிறைய சம்பாதிக்க வேண்டும். கஷ்டம் இல்லாமல் சந்தோஷமாக உலகின் சுகங்களையெல்லாம் அனுபவித்து வாழ வேண்டும்’ என்ற மேற்கத்திய மோகத்தைச் சிறுமி ஃப்ளோரிஸின் மனதில் ஆழமாக விதைத்தது. படித்தார், முடித்தார். கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வேலை. கைநிறையச் சம்பளம். வார இறுதிக் கொண்டாட்டங்கள். மது, நவீன உணவுகள். இளமைக் கனவில் ஒரு காதல்... திருமணம். ஒரு பெண் குழந்தை. நின்று நிதானமாக யோசித்துப் பார்க்க நேரமற்ற சுழற்சி வாழ்க்கை.

மாண்புமிகு விவசாயிகள் : ஃப்ளோரிஸ் நியு சமோவா தீவின் சூரிய ஒளி! - சாக்லேட் விவசாயியின் சரித்திரம்!

புரட்டிப்போட்ட புற்றுநோய்

வாரம் 70 மணி நேரம் வேலை பார்த்தால் இன்னும் கை நிறையச் சம்பாதிக்கலாம். மகளின் வருங்காலத்துக்காகச் சேமித்து வைக்கலாம். இது மட்டுமே ஃப்ளோரிஸின் ஒரே எண்ணமாக இருந்தது. அந்நிலையில் உடலுக்குள் புகுந்த புற்றுநோய் அனைத்தையும் ஒரே நொடியில் புரட்டிப்போட்டது. கூடவே கணவருடனான பிரச்னை, விவாகரத்து. மகளைத் தன்னுடனேயே வைத்துக் கொள் வதற்காக நீதிமன்றத்தில் நீண்ட நெடியப் போராட்டம். உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் துவண்டு போனார் ஃப்ளோரிஸ். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்காக உடல் எதிர்கொண்ட அறுவைசிகிச்சைகள் அவரைப் பிழிந்துபோட்டன. இனி உயிருக்கு ஆபத்தில்லை என்றார்கள். உயிர் வாழ்ந்துதான் ஆக வேண்டுமா? என்ற மனச்சோர்வு ஃப்ளோரிஸை வாட்டியது. அவர் மிகவும் நேசித்த நியூசிலாந்து, பேரிரைச்சலுடன் பெரும் வலியைத் தந்தது.

நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டார். தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்த நியூ கலிடோனியா என்ற தீவுக்கு மகளுடன் சென்றார். வாரக்கணக்கில் தங்கினார். அந்த அமைதியான கடற்கரை, ஃப்ளோரிஸுக்கு சமோவா நாள்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. இதற்கு மேலும் நியூசிலாந்து வாழ்க்கை தேவையா என்ற கேள்வி அழுத்தியது.

‘என் தாயகம் நோக்கித் திரும்புதலும், அன்று என் பாட்டன் வாழ்ந்த மரபை நோக்கித் திரும்புதலுமே, நான் பிழைத்திருப் பதற்கான ஒரே வழி’ என ஃப்ளோரிஸ் தீர்க்கமாக முடிவெடுத்தார். அந்த முடிவுக்கு அவரது மகளும் சம்மதித்தாள்.

2014-ம் ஆண்டில் நியூசிலாந்து நரக வாழ்க்கையை விட்டு விடுதலையாகி, சமோவா வின் டுவானை கிராம வாழ்க்கைக்குள் மீண்டும் வந்தார் ஃப்ளோரிஸ். தன் தாயின் வழியில் வந்த முன்னோர்களின் நிலத்தில் கோகோ மரங்கள் பயிரிட்டு வாழ்வின் மீதியையாவது பசுமையான உணர்வுகளுடன் வாழலாம் என்று நினைத்தார். நினைத்த தெல்லாம் நடந்துவிட்டால்?

மகளுடன்
மகளுடன்

உதாசீனப்படுத்திய உள்ளூர் மக்கள்

டுவானை மக்கள், ஃப்ளோரிஸை ஏற்றுக்கொள்ளவே இல்லை. ‘நீதான் நியூசிலாந்துக்காரி ஆயிற்றே. இங்கே என்ன செய்யப்போகிறாய்?’ என்பதாக எதிர்த்தார்கள். ‘இது உன் நிலம் அல்ல’ என்று பிரச்னை செய்தார்கள். பெண்ணுக்கெல்லாம் நிலம் சொந்தமாக இருக்கக் கூடாது என்னும் பிற்போக்குத்தனம். ‘ஒரு பெண் விவசாயியாக இருக்க வேண்டும் என்றால் அவளுடைய கணவன் விவசாயியாக இருக்க வேண்டும்’ என்று அவர்களே சட்டம் வைத்துக்கொண்டார் கள்.

கோகோ தோட்டங்களில் நாளெல்லாம் உழைப்பது பெண்களே. ஆனால், அவர்கள் உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பெண் என்பவள் தந்தையையோ, கணவனையோ சார்ந்து கிடக்க வேண்டும். உழைத்துக் கொட்ட வேண்டும் என்ற அடிமை வாழ்க்கைக்குச் சமோவா பெண்களும் பழகியிருந்தார்கள். எனவே, ஊரில் எந்த ஒரு பெண்ணும் ஃப்ளோரிஸுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை. மாறாக, ஃப்ளோரிஸைத் தகாத வார்த்தைகளால் வசை பாடினார்கள்.

மாண்புமிகு விவசாயிகள் : ஃப்ளோரிஸ் நியு சமோவா தீவின் சூரிய ஒளி! - சாக்லேட் விவசாயியின் சரித்திரம்!

எதிர்ப்புகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, முற்றிலும் இயற்கை முறையில் கோகோ பயிரிட ஆரம்பித்தார் ஃப்ளோரிஸ். ஆனால், 2015-ம் ஆண்டில் பஞ்சம் அந்தத் தீவில் தஞ்சம் புகுந்து ஃப்ளோரிஸின் நெஞ்சத்தை மேலும் புண்ணாக்கியது. தனக்குத் தோள் கொடுக்கத் தயாராக வந்த சகோதரனைக்கூட ஃப்ளோரிஸ் பண்ணைக்குள் விடவில்லை. ‘ஒரு பெண்ணால் தனியாக நின்று சாதிக்க முடியும் என்பதைச் சமோவா பெண்களுக்கு நிரூபிக்க விரும்புகிறேன்’ என்று நம்பிக்கை யுடன் நின்றார் ஃப்ளோரிஸ்.

எந்தச் சூழலிலும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், செயற்கை விஷங்கள் எதையுமே பயன்படுத்தக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்த ஃப்ளோரிஸ், தன் பாட்டன் புலேகா உருவாக்கிய இயற்கையான தோட்டங்களை மறு உருவாக்கம் செய்ய உழைத்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் அதற்கான பலன் கிடைக்க ஆரம்பித்தது. கோகோ பழங்கள் வனப்புடன் காய்த்துத் தொங்கின.

‘ஒரு பெண் நம்மை மீறி இயற்கை விவசாயம் செய்யலாமா?’ என்று பொறாமையில் பொங்கிய அக்கம் பக்கத்தினர், அந்தக் கோகோ பழங்களை இரவோடு இரவாகத் திருடினர். ஃப்ளோரிஸின் பண்ணை மரங்களை வெட்டினர். பாதையை, வேலிகளைச் சேதப்படுத்தினர். ஓரிரு முறை ஃப்ளோரிஸ் நேரடியாகவே தாக்கப்பட்டார். பொறுக்க முடியாத ஃப்ளோரிஸ், போலீஸிடம் சென்று நின்றார்.

‘இதெல்லாம் நாங்க தீர்க்க முடியாது. ஊர் கவுன்சில் தலைவர்கிட்ட போய்ச் சொல்லு’ என்று காவல்துறையும் ஆண் திமிர் காட்டியது. கவுன்சில் தலைவரை ஃப்ளோரிஸ் பார்க்கச் சென்றபோது, ‘பொம்பளையெல்லாம் இங்க வரக் கூடாது. போய் வீட்ல யாராவது ஆம்பள இருந்தா வரச்சொல்லு’ - ஆணாதிக்க வாதிகள் மிரட்டினார்கள்; விரட்டினார்கள். வேறு வழியின்றி ஃப்ளோரிஸ் தன் சகோதரனை அனுப்பி வைத்தார். அவர் பணிவுடன் புகார் செய்து, தன் சகோதரியின் தோட்டத்துக்குப் பாதுகாப்பு கேட்டார். சச்சரவுகள் சற்றே குறைந்தன.

‘‘சமோவாவில் விளைந்த இயற்கையான கோகோ கொண்டு பாரம்பர்ய முறையில் சாக்லேட் தயாரித்துத் தரச் சொன்னது. ஃப்ளோரிஸுக்கான வணிகக் கதவு திறந்தது.’’

ஆசீர்வதித்த இயற்கை

வெளியில் எத்தனையோ பிரச்னைகள் இருந்தாலும், தன் பண்ணைக்குள் நுழைந்ததும் எல்லாவற்றையும் மறந்தார் ஃப்ளோரிஸ். இயற்கையிடம் தன்னை ஒப்புக்கொடுத்தார். அந்த மண்ணும் மரங்களும் வலிகளை மறக்கச் செய்தன. புது ரத்தம் பாய்ச்சின. ஃப்ளோரிஸை உற்சாகமாக்கி உயிர்ப்பித்தன. தன் மகளுக்கு வளமான, ஆரோக்கியமான வருங்காலத்தைத் தர வேண்டும் என்பதை நோக்கிச் செயல் பட்டார் ஃப்ளோரிஸ்.

கோகோவுடன் ஃப்ளோரிஸ் நியு
கோகோவுடன் ஃப்ளோரிஸ் நியு

சன் ஸைன் ஃபார்ம்ஸ் (SunShine Farms) என்று தன் பண்ணைக்குப் பெயரிட்டார். நியூசிலாந்தின் ஸீ யூனிவர்ஸ் (SHE Universe) என்ற நிறுவனம், ஃப்ளோரிஸுக்கு நல் வாய்ப்பு ஒன்றை வழங்கியது. சமோவாவில் விளைந்த இயற்கையான கோகோ கொண்டு பாரம்பர்ய முறையில் சாக்லேட் தயாரித்துத் தரச் சொன்னது. ஃப்ளோரி ஸுக்கான வணிகக் கதவு திறந்தது. ஆர்கானிக் சாக்லேட்டுகள் மண மணத்தன. இன்னும் சில வணிக வாய்ப்பு களும் விரிந்தன.

நாளடைவில் தனி ஒருத்தியாகப் போராடும் ஃப்ளோரிஸ் மீது ஊர்ப்பெண்கள் சிலருக்குப் பரிதாபம் வந்தது. பரிதாபம் பாசமாக மாறியது. அந்தப் பாசம் அவருடன் கைகோக்கச் செய்தது. கைகோத்த பிறகு, பொழுதெல்லாம் உழைக்கும் தாங்கள் எவ்வளவு முட்டாளாக, அடிமையாக இருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டார்கள்.

மாண்புமிகு விவசாயிகள் : ஃப்ளோரிஸ் நியு சமோவா தீவின் சூரிய ஒளி! - சாக்லேட் விவசாயியின் சரித்திரம்!

சமோவாவில் கோகோ விவசாயிகளுக்காக அமைப்பு ஒன்று செயல்படுகிறது. அங்கே உறுப்பினராகப் பெண்களுக்கு அனுமதி கிடையாது. தேவையே இல்லை என்று உணர்ந்த ஃப்ளோரிஸ், தன்னைப் போன்ற பெண் விவசாயிகளுக்காக அமைப்பு ஒன்றைத் தானே தொடங்கினார். சமோவா உமன்ஸ் அசோசியேஷன் ஆஃப் குரோவோயர்ஸ் (Samoa Women’s Association of Growers) சுருக்கமாக SWAG. சமோவா தீவில் ஆணாதிக்கக் களையைப் பிடுங்கிய அந்தப் பெண்களால், இயற்கை விவசாயம் மீண்டும் களைகட்டத் தொடங்கியது.

அடுத்தகட்டமாக, ‘எல்லோரும் என் பண்ணைக்கு வாருங்கள். இயற்கை விவசாயம் கற்றுக்கொள்ளலாம்’ என்று ‘வேளாண் சுற்றுலா’ நடத்தத் தொடங்கியிருக்கிறார் ஃப்ளோரிஸ்.

இயற்கை விவசாயப் பாடசாலை

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளிலிருந்து மக்கள் சமோவா வந்து இறங்குகின்றனர். சன்ஷைன் பண்ணையில் இயற்கை விவசாயியாக மாறுகின்றனர். ஆர்கானிக் சாக்லேட் தயாரிக்கக் கற்றுக்கொள்கின்றனர். ஃப்ளோரிஸ், தன் பண்ணையில் விளைந்த பப்பாளி, தேங்காய், தர்பூசணி, கொய்யா, அவகோடா, மரவள்ளிக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழை மற்றும் பிற மூலிகைகள் கொண்டு விதவிதமாகச் சமைத்துத் தருகிறார்.

பண்ணையில் அமைந்திருக்கும் ஃப்ளோரிஸின் வீடு சிறியதுதான். அங்கே சமையலறை மட்டும் பெரியது. ‘ஆரோக்கிய மானவற்றை உண்டு நலமுடன் வாழ்வதைத் தவிர வேறென்ன வேண்டும்’ என்று சுற்றுலாப் பயணிகளிடம் ஃப்ளோரிஸ் கேட்கும்போது, அவர்களது அகக்கண்களும் இயற்கையை நோக்கித் திரும்புகின்றன.

சில வருடங்களுக்கு முன்பு சமோவா மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஃப்ளோரிஸ், இன்று இயற்கை விவசாயத்தால் தலைநிமிர்ந்து நிற்கிறார். அந்தத் தீவின் பல நூறு பெண்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறார். அவரது சன்ஷைன் பண்ணை, சமோவா தீவுக்குப் புதிய வெளிச்சம் கொடுத்திருக்கிறது. அங்கே பாட்டன் புலேகா அமைதியாகப் புன்னகை செய்துகொண்டிருக்கிறார்.

சரித்திரம் தொடரும்