Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : ஆலிவ் ஆயில் அரசன்! - மாண்புமிகு கிரீஸ் நாட்டு விவசாயி நிக்!

மாண்புமிகு கிரீஸ் நாட்டு விவசாயி நிக்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாண்புமிகு கிரீஸ் நாட்டு விவசாயி நிக்!

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 17

லிவ் மரங்கள் - சொர்க்கத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட பரிசு. இயற்கையான ஒவ்வொரு ஆலிவ் பழமும் மனிதனைப் பரிசுத்தமாக்குகின்றன. ஒருவன் தனது ஆரோக்கியத்துக்காக ஆலிவ் எண்ணெயை நேசிக்கத் தொடங்க வேண்டும். பின் அவன் நரம்பில்கூட ஆலிவ் எண்ணெய் ஓட ஆரம்பித்துவிடும்.

ஆலிவ் எண்ணெய்க்கு கிரீஸ் நாட்டு மக்கள் வைத்திருக்கும் இன்னொரு மதிப்புமிக்கப் பெயர், ‘திரவத் தங்கம்’. ஆலிவ் மரத்துக்கும் கிரேக்க மக்களுக்குமான தொடர்பு புராண காலத்திலேயே ஆரம்பமாகிறது. அடிகா என்ற புதிய நகரத்தைக் கிரேக்கக் கடவுள்கள் நிர்மாணித்தார்கள். அந்த நகரத்துக்குப் பயன் தரும்படி அரிய பரிசு ஒன்றை யார் படைக்கிறார்கள் என்ற போட்டி எழுந்தது. கடல் பரப்பை ஆளும் ஆண் கடவுளான பொஸைடன், பாறை ஒன்றை அடித்துப் பிளந்து உப்பு நீரூற்று ஒன்றை உருவாக்கினார். ஞானத்தின் பெண் கடவுளான ஏதெனா, பாறை ஒன்றை ஈட்டியால் பிளந்தாள். அங்கே தாவரம் ஒன்று முளைவிட்டு, வேர் பரப்பி, கிளை பரப்பி, கனிகளுடன் செழித்து வளர்ந்து நின்றது. அது ஆலிவ் மரம். அமைதி, வசந்தம், நன்மை போன்றவற்றின் சின்னமாக ஆலிவ் மரத்தை உருவாக்கிய ஏதெனாவே போட்டியில் வென்றாள். ஆலிவ் மரம் கிரேக்கர்களின் புனித மரம் ஆன புராணக் கதை இதுதான்.

மாண்புமிகு விவசாயிகள் : ஆலிவ் ஆயில் அரசன்! - மாண்புமிகு கிரீஸ் நாட்டு விவசாயி நிக்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரிஸ்டாட்டில் முதற்கொண்டு கிரேக்க மாவீரன் அலெக்ஸாண்டர் வரை ஆலிவ் எண்ணெய் விரும்பிகளாகத்தான் இருந்திருக் கிறார்கள். அலெக்ஸாண்டர் தான் படை யெடுத்துச் செல்லும் இடங்களுக்கெல்லாம் பேரல் பேரலாக ஆலிவ் எண்ணெய்யையும் சுமந்து சென்றார். கிரேக்கப் போர் வீரர்களின் உணவில் ஆரோக்கியத்துக்காகத் தினசரி ஆலிவ் ஆயில் சேர்க்கப்பட்டது என்றெல்லாம் வரலாறு சொல்கிறது. அந்த வரலாற்றின் நீட்சியாக இந்த நூற்றாண்டிலும் கிரீஸில் ஒருவர் ஆலிவ் எண்ணெய் சாம்ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். அதுவும் பரிசுத்தமான இயற்கை வழியில்!

ஆலிவ் புனித மரம்

கிரீஸ் நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் லக்கோனியா மாகாணத்தின் தலைநகரம் ஸ்பார்டாவைச் சேர்ந்தவர் நிக் சாகெல்லாரோ பௌலாஸ் (Nick Sakellaropoulos). அங்கே டேகெட்டஸ் மலைப்பகுதிக்கும், பர்னோ னாஸ் மலைப்பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகள் ஆலிவ் மரங்கள் செழிப்பாக வளரும் பிரதேசமாகக் கருதப்படுகிறது. ஆதி காலத்திலிருந்தே ஆலிவ் மரங்கள் நிறைந்த புனிதப் பகுதியாகவே வரலாற்றில் அது பதிவாகியிருக்கிறது. அந்த இடத்தின் தட்பவெப்ப நிலை ஆலிவ் மரங்கள் வளர்வதற்கு ஏற்ற விதத்தில் இருப்பது மிகவும் முக்கியமானது. அந்தப் பிரதேசத்தில்தான் நிக், ஆர்கானிக் ஆலிவ் பண்ணை வைத்து அரசாட்சி நடத்தி வருகிறார்.

நிக், தன் சிறுவயதிலிருந்தே ஆலிவ் மரங்களின் நிழலில் வளர்ந்தவர். அவரது தாத்தா ஆலிவ் இலைகளைக் கிரீடம்போலச் செய்து பேரன் தலையில் சூட்டி மகிழ்வார். தாத்தாவும், நிக்கின் தந்தையான ஜார்ஜும் ஏணி போட்டு ஆலிவ் மரங்களில் ஏறி அதன் காய்களையும் பழங்களையும் உதிர்ப்பார்கள். கீழே விழும் ஆலிவ் பழங்களை எடுத்து ஓரிடத்தில் சேகரிக்கும் வேலையை நிக் விருப்பமுடன் செய்வார். ஆலிவ் மரம் குறித்த ஒவ்வொரு விஷயமும் நிக்கின் மனதில் பாலபாடமாகவே பதிந்தது. கூடவே, தாத்தா மேற்கொண்டு வந்த இயற்கை விவசாயமும்.

‘‘உணவுப் பொருள்களுக்குத் தரப்படும் ஆஸ்கருக்குச் சமமான விருது 2012-ம் ஆண்டில் நிக் தயாரித்த ‘விர்ஜின் ஆலிவ் ஆயிலு’க்குக் கிடைத்தது.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பரிசுத்தமான எண்ணெய்

நன்றாகப் படித்த நிக், கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பை முடித்தார். அதிலும் குறிப்பாக, உணவைப் பதப்படுத்தும் மேம்படுத்தும் தொழில் நுட்பத்தைத் திறம்படக் கற்றுக்கொண்டார். அடுத்தது என்ன என்று யோசித்தபோது, மனம் ஆலிவ் மரங்களின் அடியில்தான் சென்று அமர்ந்தது.

மாண்புமிகு கிரீஸ் நாட்டு விவசாயி நிக்!
மாண்புமிகு கிரீஸ் நாட்டு விவசாயி நிக்!

கிரேக்க மக்களைப் பொறுத்தவரை ஆலிவ் எண்ணெய் என்பது அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள். நமக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய்போல. ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய தரைக்கடல் நாடுகளிலும் ஆலிவ் எண்ணெயின் பயன்பாடு அதிகம். எனவே, உற்பத்தித் தேவையும் அதிகம். தேவை அதிகமாகும்போது கலப்படமும் தலைதூக்குவது இயல்புதானே. காலப்போக்கில் பரிசுத்தமான ஆலிவ் எண்ணெய் (Virgin Olive Oil) என்ற பெயரில் கலப்படங்கள் சந்தையை ஆளத் தொடங்கின.

ஆலிவ் பழங்கள் கொத்துக்கொத்தாகக் காய்த்துத் தொங்குவதற்கு, விவசாயிகளும் என்ன வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருந்தார்கள். ஆலிவ் தோட்டங்களில் ரசாயனங்களின் ராஜ்ஜியம் உருவாகியிருந்தது. ஆலிவ் எண்ணெய் தயாரிப்பிலும் எந்திரங்களின் எதேச்சதிகாரம் புகுந்திருந்தது. சந்தையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆலிவ் ஆயில் பாட்டில்கள் பரிசுத்தமற்ற பாவிகளாகவே காட்சியளித்தன.

ஆர்கானிக் ஆலிவ்

1992-ம் ஆண்டில் நிக், புதிதாக, முற்றிலும் இயற்கையான ஆலிவ் தோட்டங்களை உருவாக்கும் முயற்சிகளில் முழு மனத்துடன் இறங்கினார். அதென்ன, இயற்கையான ஆலிவ் தோட்டம்? உண்மையிலேயே யாருக்கும் புரியவில்லை. நிக் பொறுமையாக வேலைகளைத் தொடங்கினார். நல்ல வளமான மண். ஆலிவ் மரங்களுக்கு இதமான தட்பவெப்பநிலை; காற்று மாசுபாடும் இல்லாத சூழல்; இவையெல்லாம் நிறைந்த டேகெட்டஸ் மலைப்பகுதிக்கும், பர்னோனாஸ் மலைப்பகுதிக்கும் இடைப் பட்ட பகுதியில் நிலத்தைத் தேர்ந்தெடுத்து வாங்கினார். இத்தனை மாதங்களில் இவ்வளவு ஆலிவ் மரங்களிலிருந்து, இவ்வளவு டன் ஆலிவ் ஆயில் தயாரித்து, இவ்வளவு லாபம் சம்பாதிக்க வேண்டும் போன்ற வணிக லட்சியங்கள் எதையும் வைத்துக்கொள்ளவே இல்லை. ஒரே குறிக்கோள்தான். என் தாத்தா வளர்த்ததுபோல, கிறிஸ்துக்கு முந்தைய காலத்தில், அலெக்ஸாண்டர் காலத்தில் வளர்ந்ததுபோல முற்றிலும் இயற்கையான முறையில் ஆலிவ் மரங்களை வளர்க்க வேண்டும் என்பது மட்டும்தான்.

ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லியோ பண்ணைக்குள் வரவே இல்லை. புதிது புதிதாக உருவான பிரச்னைகளுக்கு முற்றிலும் இயற்கையான முறையில் மட்டுமே தீர்வுகளை யோசித்தார் நிக். ஆலிவ் மரங்கள் செழிப் பாகவே வளர்ந்தன. ஆலிவ் காய்களையும் கனிகளையும் தேர்ந்தெடுத்து, அதன் சத்து, தரம், மணம் சற்றும் சிதையாமல் எண்ணெய் எடுக்கும் பரிசோதனை முயற்சிகளில் இறங்கினார் நிக். வார, மாத, வருடக்கணக்கில் பரிசோதனைகள் நீண்டன. தான் தயாரித்த ஆலிவ் ஆயிலை குடும்பத்தினர், நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளக் கொடுத்தார். ‘அற்புதச் சுவையுடன் இருக்கிறது. இதுவரை நாங்கள் ருசித்ததிலேயே இதுதான் பெஸ்ட்’ என்று அவர்கள் சொன்னாலும், ‘இல்லை, இன்னும் மேம்படுத்த வேண்டும்’ என்று முயற்சிகளைத் தொடர்ந்தார். ஆர்கானிக் முறையில் ஆலிவ் எண்ணெயைத் தயாரிக்கும் எந்திரங்களைப் பல வருட உழைப்பில் உருவாக்கினார். வருடக்கணக்கில் மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகளுக்குப் பிறகே, இயற்கையான ஆலிவ் எண்ணெயை ‘லிமிடெட் எடிசனாக’ சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்தார். வாடிக்கை யாளர்களின் கருத்தைக் கவனமாகக் கேட்டு, மேலும், தன் தயாரிப்பை ‘உயர்தர’மாக மெருகூட்டினார். அவரது தோட்டத்தின் ஆலிவ் மரங்கள் சந்தோஷமாகக் காய்த்துத் தொங்கின.

‘‘ஆர்கானிக் ஆலிவ் எண்ணெய்யைத் தவிர, இயற்கையான எலுமிச்சைச் சாறு கலந்து, அந்த மணத்துடன் சுவையுடன் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கிறார்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

203 சர்வதேச விருதுகள்

நிக்கின் 20 வருட உழைப்புக்கு 2012-ம் ஆண்டில் முதன்முறையாக அங்கீகாரம் கிடைத்தது. சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆலிவ் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபடுகின்றன. அதில் சிறந்த ஆலிவ் எண்ணெய் என்று அங்கீகாரம் கொடுக்கும் சர்வதேச விருதுகளுக்கான போட்டிகளும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. லண்டன் கிரேட் டேஸ்ட் அவார்ட்ஸ் (London Great Taste Awards) என்பது வருடம்தோறும் நடத்தப்படும் நிகழ்வு. உலகின் உயர்தர உணவுப் பொருள்களுக்குத் தரப்படும் ஆஸ்கருக்குச் சமமான விருது அது. 2012-ம் ஆண்டில் நிக் தயாரித்த ‘விர்ஜின் ஆலிவ் ஆயில்’ அதில் இரண்டு தங்க நட்சத்திரங்களைப் பெற்றது.

பண்ணையில் நிக்
பண்ணையில் நிக்

முதல் அங்கீகாரம். சந்தை வாய்ப்பு திறந்து கிடந்தது. இதன் மூலமாக உற்பத்தியைப் பெருக்கி லாபத்தை அள்ளலாம்தான். நிக், பேராசைப்படவில்லை. என்னிடம் இருக்கும் சிறிய பண்ணையில் விளைவதைக் கொண்டு எந்த அளவுக்கு இயற்கையான முறையில் உயர்தரமான ஆலிவ் எண்ணெய் தயாரிக்க முடியுமோ, அதை மட்டுமே செய்வேன் என்று உறுதியாக நின்றார். 2019 வரை நிக்கின் ஆலிவ் எண்ணெய் தயாரிப்புகள் பெற்றுள்ள சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 203. மாபெரும் உலக சாதனை. எந்த ஒரு நிறுவனமும் எட்டவே முடியாத சாதனை.

கொரோனெய்கி (Koroneiki) என்ற ரக ஆலிவ் மரங்கள்தான் நிக்கின் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. உலகமெங்கும் ஆலிவ் எண்ணெய் உற்பத்திக்கு அதிக அளவில் வளர்க்கப்படுவது கொரொனெய்கிதான். நிக், இந்த மரங்களின் காய்களை, பழங்களைத் தரம் பிரிப்பது, எண்ணெய் எடுக்கும் நுட்பம் தொடங்கி பேக்கிங் வரை ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்கிறார். எண்ணெய் நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கப் பதனச்சரக்குகள் (Preservatives) எதுவும் சேர்க்கப்படுவதில்லை. நிறம், சுவை, தரத்தில் எந்தச் சமரசமும் செய்து கொள்வதில்லை. ஆர்கானிக் ஆலிவ் எண்ணெயைத் தவிர, இயற்கையான எலுமிச்சைச் சாறு கலந்து, அந்த மணத்துடன் சுவையுடன் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கிறார். ஆப்பிள், ஆரஞ்சு, வால்நட், தேன், லவங்கம் உள்ளிட்டவற்றின் சுவை நிறைந்த ஆலிவ் எண்ணெய் வகைகளைத் தயாரிக்கிறார். எல்லாமே பரிசுத்தமானவை. பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றவை.

மாண்புமிகு விவசாயிகள் : ஆலிவ் ஆயில் அரசன்! - மாண்புமிகு கிரீஸ் நாட்டு விவசாயி நிக்!

இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக் குறைவு

நிக்கின் தயாரிப்புகளால், இயற்கையான ஆலிவ் எண்ணெய்க்கான சந்தை மதிப்பு விரிவடைந்திருக்கிறது. கிரீஸிலும் மத்திய தரைக்கடல் நாடுகளிலும் ஆர்கானிக் ஆலிவ் மரத் தோட்டங்களை உருவாக்குபவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. தவிர, நிக் தயாரிக்கும் ஆர்கானிக் ஆலிவ் எண்ணெய்யின் மருத்துவப் பயன்கள் குறித்த ஆராய்ச்சிகள் நடக்கின்றன. பாஸ்டனில் அமைந்துள்ள Harvard University School of Public Health மூலமாக அமெரிக்காவில் பணிபுரியும் தீயணைப்புப் படை வீரர்களுக்கு நிக் தயாரிப்பு ஆலிவ் எண்ணெய்யை உணவில் தொடர்ந்து சேர்த்து மூன்று வருடங்களாகப் பரிசோதனைகள் செய்திருக்கிறார்கள். அதன் மூலம் வீரர்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதுடன், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன என்பதும் நிரூபணமாகி இருக்கிறது.

Esthique Natural Cosmetics என்ற பெயரில் தனது ஆலிவ் ஆயில் கொண்டு அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார் நிக். சர்வதேச அளவில் தனது நிறுவனத்தின் பரிசுத்தமான தயாரிப்புகளை மேலும் பலருக்குக் கிடைக்கச் செய்ய உழைத்துக்கொண்டிருக்கிறார் மாண்புமிகு கிரீஸ் விவசாயி நிக். தனக்குக் கிடைத்திருக்கும் வெளிச்சம் குறித்து அவர் உதிர்க்கும் சொற்களும் பரிசுத்தமானவை.

‘நான் நேசிக்கும் விவசாயத்தைச் செய்கிறேன். நான் செய்யும் விவசாயத்தை நேசிக்கிறேன். உளப்பூர்வமாக. உணர்வுபூர்வமாக. வேறொன்றும் இல்லை.’

- சரித்திரம் தொடரும்