Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : விதைகளின் வித்தகர்கள் ராதாமோகன் - சபர்மதி

மாண்புமிகு விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாண்புமிகு விவசாயிகள்

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 14

ண் என்பது ரசாயனங்களால் செயற்கையாக வளமூட்டப்பட்ட பொருள் அல்ல. மண் என்பது உயிர். எந்த நிலத்தில் ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகள் செழித்துப் பெருகி வாழ்கின்றனவோ, அதுவே வளமான மண். அந்த மண்ணிலிருந்துதான் ஆரோக்கியமான உணவு விளையும்!

ஒரு காலத்தில் அந்தப் பகுதியிலும் மரங்கள் இருந்தன. ஏராளமான உயிர்கள் கூடி வாழ்ந்தன. பறவைகள் குஞ்சு பொறித்தன. மண்புழுக்கள் சோம்பல் முறித்தன. பசுமை எங்கும் பரவியிருந்தது. விளைநிலங்களில் விதைக்கப்பட்டவை எல்லாமே விளைந்தன. ஆனால், எல்லாம் இறந்தகாலம் ஆகிவிட்டது. மண் இறந்து போனதால் எல்லாம் இறந்த காலம்தானே?

ஏன்?

மாண்புமிகு விவசாயிகள் : விதைகளின் வித்தகர்கள் ராதாமோகன் - சபர்மதி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மரங்கள் அழிக்கப்பட்டன. மண்வாழ் உயிரினங்கள் சிதைக்கப்பட்டன. விளைநிலங்களில் அதிக மகசூல் வேண்டும் என்ற பேராசையில் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் வியாபித்தன. பசுமையைப் பெயருக்குப் போர்த்திக்கொண்டு விளைந்த பயிர்கள், நாளடைவில் பட்டுப் போயின. எதையும் விதைப்பதற்குத் தகுதியற்ற தரிசு நிலமாக அந்தப் பகுதி மாறிப்போனது. அந்த மண் இறந்துபோகவில்லை. மனிதர்கள் அதன் வளத்தை வலுக்கட்டாயமாகச் சாகடித்திருந்தார்கள்.

ஒடிசாவின் தென்கனால் (Dhenkanal) மாவட்டத்தில் தொலைதூர கிராமம் ஒன்றில் அந்த நிலப்பகுதி அமைந்திருந்தது. 1979-ம் ஆண்டில் ராதாமோகன் என்பவர் அந்த தரிசு நிலத்தை விலை பேசினார். ‘ஒரு புல்லுகூட முளைக்காது. பாழாப்போச்சு. இதை வாங்கி நீங்க ஒன்னும் பண்ண முடியாது’ என்று கிராமத்து மனிதர்கள் அக்கறையுடன் அறிவுரை சொன்னார்கள். ‘பரவாயில்லை. நான் வாங்கிக் கொள்கிறேன்’ என்று ராதாமோகன் நிலத்தைச் சொந்தமாக்கிக் கொண்டபோது, எல்லோரும் அவரைப் பைத்தியக்காரனாகப் பார்த்தார்கள்.

ஒடிஸாவைச் சேர்ந்த ராதாமோகன் பொருளாதாரப் பேராசிரியர். 1970-களின் இறுதியில் ஒடிஸாவின் முதல் தகவல் ஆணையராக (Information Commissioner) நியமிக்கப்பட்டவர். ‘பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றால் பாரம்பர்ய இயற்கை விவசாய முறையெல்லாம் சரிப்படாது. நவீன வேளாண்மைதான் இனி உற்பத்தியைப் பெருக்க ஒரே வழி!’ என்பதே அதிகார வர்க்கத்தினரின் எண்ணமாக இருந்தது. ரசாயன உர நிறுவனங்களின் ஆதரவாளர்களாக மாறியிருந்த வேளாண் நிபுணர்களும் அதையே வலியுறுத்தினர். ‘இல்லை, இயற்கை விவசாயம் கைகொடுக்கும். நான் நிரூபித்துக் காட்டுகிறேன்’ என்று ராதாமோகன் அழுத்தந்திருத்தமாகச் சொன்னார். அதிகாரத்தில் இருப்பவர் என்பதால் அவரது குரலுக்கு அரசு செவி சாய்த்தது. தென்கனால் மாவட்டத்தில் பிராம்மணி நதிக்கரை ஓரமாக நிலம் ஒன்றை அரசு சார்பில் ஒதுக்கினார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘இது பசுமையான பகுதி. இங்கே இயற்கை விவசாயம் செய்து பயிர் விளைச்சலைப் பெருக்குவது பெரிய காரியமல்ல. ஆனால், இது விவசாயிகளுக்கு நம்பிக்கையைக் கொடுக்காது’ என்று ராதா மோகன் ‘அந்த நிலம் வேண்டாம்’ என்றார். தொலைதூரக் கிராமத்தில், மக்களால் முற்றிலும் கைவிடப்பட்ட தரிசு நிலத்தை வாங்கினார். ‘நீங்கள் சொல்வதுபோல இந்த மண் இறக்கவில்லை. மனிதர்களால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இயற்கையோடு இணைந்து உழைத்தால் மீண்டும் இந்த நிலத்துக்கு உயிரூட்ட முடியும்’ என்று களமிறங்கினார். ராதாமோகனின் மகளாகிய சபர்மதியும் கைகோர்த்துக்கொண்டார்.

மாண்புமிகு விவசாயிகள் : விதைகளின் வித்தகர்கள் ராதாமோகன் - சபர்மதி

அந்த நிலத்தில் மேலடுக்கு மண் முற்றிலும் வளம் இழந்து போயிருந்தது. காட்டுப்புற்களை வெட்டி நிலத்தில் போட்டார்கள். முதலில் நிலத்தில் எறும்புகள் குடிபுகட்டும் என்று காத்திருந்தார்கள். கொஞ்சக் காலத்தில் எறும்புகள் ஊற ஆரம்பித்தன. நிலத்துக்குள் துளையிட்டுக் காற்றோட்டத்தை உண்டாக்கின. நுண்ணுயிரிகள் பெருகத் தொடங்கின. மீண்டும் உயிர்பெற்ற பாக்டீரியாக்களால் மண்ணின் மட்க வைக்கும் தன்மை அதிகரித்தது. கரிம வளமும் கூடியது. அந்த நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அசைந்து கொடுக்க ஆரம்பித்தது. ஆனாலும் ஊர் மக்களின் அவநம்பிக்கைப் பேச்சுகள் தொடர, தந்தையும் மகளும் மென்மையான புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தனர்.

பாலை நிலம்போலக் கிடந்த பகுதி, மூன்றாவது வருடத்தில் பசுமையான புல்வெளியாகவும், செடி கொடிகளாகவும் உயிர்த்துக் கிடந்தது. ராதாமோகன் நிலத்தின் எல்லையில் நட்டிருந்த மூங்கில் கன்றுகள், வேலியாக வான் நோக்கி வளர்ந்திருந்தன. காட்டுப்புற்கள் மண் அரிப்பைத் தடுத்தன. அணில்களும், வேறு சிறு உயிரினங்களும் துள்ளி விளையாட, அங்கே பறவைகள் வந்து போக ஆரம்பித்திருந்தன. அவற்றின் எச்சங்கள் மண்ணில் புதிய தாவரங்களைத் துளிர்க்கச் செய்தன. அப்போது ஊர் மக்கள் ராதாமோகனையும் சபர்மதியையும் ஆச்சர்யத்துடன் கவனிக்கத் தொடங்கியிருந்தனர்.

மாண்புமிகு விவசாயிகள் : விதைகளின் வித்தகர்கள் ராதாமோகன் - சபர்மதி

‘இயற்கை எப்போதும் ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் அள்ளிக் கொடுக்கும். ஆனால், பேராசைக்கு அல்ல!’ என்ற மகாத்மா காந்தியின் வார்த்தைகளில் அளவற்ற நம்பிக்கை கொண்ட ராதாமோகன், சிறிய அளவு நிலத்தில் விவசாயத்தைத் தொடங்கினார், முற்றிலும் இயற்கையான முறையில். அடுத்து கொஞ்சம் கொஞ்சமாகக் காய்கறிகள் பயிரிட ஆரம்பித்தார். சில மரக் கன்றுகளை நட்டார். மண்ணில் நைட்ரஜன் வளத்தைப் பெருக்கப் பயறு வகைகளைப் பயிரிட்டார். வைக்கோல்களைப் பரப்பி மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைத்தார். சபர்மதி, தன் தந்தையிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். வனமும் வயலும் நிறைந்த வளமான பிரதேசமாக ஒருநாள் இது மாறும் என்று நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் கடுமையாக உழைத்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயற்கை அவர்களை ஆசிர்வதித்தது. இப்போது 90 ஏக்கர் பரப்பளவில் ராதாமோகன், சபர்மதியின் ‘உணவு வனம்’ விரிந்து கிடக்கிறது. அதில் 2 ஏக்கர் மட்டும் நெல் விளையும் வயல். ஒரு ஏக்கருக்கும் குறைவான இடத்தில் காய்கறித் தோட்டம். மற்ற இடங்களில் எல்லாம் தென்னை, லிச்சி, பலா, சப்போட்டா, எலுமிச்சை, மா என்று பழம் தரும் மரங்களும், பலன் தரும் பல மரங்களும் வியாபித்திருக்கின்றன. மற்ற இடங்களெல்லாம் தானாக முளைத்த மரங்களாலும் செடி கொடிகளாலும் அடர்வனமாக விரிந்து கிடக்கிறது.

ராதாமோகன்  சபர்மதி
ராதாமோகன் சபர்மதி

வருடம் முழுக்க நீர்த்தேவையைப் பூர்த்திச் செய்வதற்கென மழைநீர்ச் சேகரிப்புக் குளங்கள் மூன்றை வெட்டி வைத்துள்ளார்கள். மூன்றும் வெவ்வேறு ஆழமும் அகலமும் கொண்டவை. வெவ்வேறு உயரத்தில் அமைந்தவை. முதல் குளத்தில் நிரம்பும் நீரானது, வழிந்தோடி இரண்டாவதையும் நிறைத்து, மூன்றாவது பெரிய குளத்தில் சேகரமாகும். எனவே மூன்றாவது எப்போதுமே நீர் வற்றுவதே இல்லை. நெல் வயல்களுக்குச் சிற்றோடைகள் மூலம் தானாகவே நீர்ப்பாசனம் நடைபெறுவதற்கான வசதிகளைச் செய்துள்ளார் ராதாமோகன்.

ஒரு அரசு சாரா அமைப்பின் திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்த சபர்பதி, 1993-இல் தனது வேலையை விட்டார். பிறகு ‘சம்பவ்’ என்ற அரசு சாரா, லாப நோக்கமற்ற அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். சம்பவ் என்றால் ‘முடியும்’ என்று அர்த்தம். அமைப்பின் பிரதான நோக்கம் நாட்டு விதைகளைச் சேகரிப்பது, பாதுகாப்பது, அவற்றைத் தொடர்ந்து பயிரிடுவதன் மூலம் பெருக்குவது, விவசாயிகளுக்கு வழங்குவது, இயற்கை விவசாய முறைக்குப் பலரையும் மாற்றுவதாகும். தற்சமயம் 700-க்கும் மேற்பட்ட நாட்டு விதைகளைச் சபர்மதி சேகரித்துள்ளார். அதில் நெல் ரகங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், தானியங்களும் அடக்கம். ஆர்வத்துடன் நாடி வரும் விவசாயிகளுக்கு நாட்டு விதைகள் கொடுத்து உதவுகிறார்.

‘விதைகளைத் தத்தெடுப்போம்’ என்பதே சம்பவ் அமைப்பு விவசாயிகளிடம் விதைக்கும் எண்ணம். ‘நாட்டு விதைகள் குழந்தைகள் போன்றவை. அவற்றை இயற்கையான முறையில் மட்டுமே பயிரிடுவோம். இந்த நாட்டு விதைகளைப் பெருக்குவோம். அவற்றைப் பாதுகாப்போம். மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்போம்’ என்ற உறுதிமொழி எடுத்த பிறகே விதைகளை வாங்கிச் செல்கிறார்கள் விவசாயிகள். சம்பவ் அமைப்பு மூலமாக ஒடிஸாவின் நயாகர் மாவட்டத்தில் பலரும் இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும் இயற்கை வழிக்கு மாறியிருக்கிறார்கள்.

‘சம்பவ் எனக்கு 500 கிராம் பாரம்பர்ய நெல் விதையைக் கொடுத்தது. அதை விதைத்து 150 கிலோ நெல்லை நான் அறுவடை செய்தேன். அதுவும் குறைந்த நீர்ப்பாசன வசதியில் எனக்கு இவ்வளவு லாபம் கிடைத்ததைக் கண்டு, என் ஊரில் மற்றவர்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கிறார்கள்’ என்று ஆவணப்படம் ஒன்றில் மகிழ்ச்சியைப் பகிர்கிறார் ஒடிஸாவைச் சேர்ந்த பெண் விவசாயியான சாட்டியானி பத்ரா. இப்படிப் பல நூறு அனுபவங்கள்.

மழை, புயல், வெள்ளம் ஆகியவை விளைநிலங்களைச் சீரழிப்பது ஒடிஸாவில் வழக்கமாக நடக்கும். கோடையில் கடும் வெப்பத்தினாலும் பாதிப்புகள் இருக்கும். இதையெல்லாம் மனத்தில் வைத்து எந்தச் சூழ்நிலையையும் தாங்கி வளரும் நாட்டு நெல் ரகங்களை மீட்டுக் கொண்டு வந்து வெற்றிகரமாகப் பயிரிட்டிருக்கிறார் ராதாமோகன். 2013-ம் ஆண்டு பைலின் புயல் ஒடிஸாவைக் கடுமையாகத் தாக்கியது. அப்போது இவர்கள் 300-க்கும் மேற்பட்ட நெல் வகைகளைப் பயிரிட்டிருந்தார்கள். அதில் 34 நாட்டு நெல் ரகங்கள் புயலையும் தாங்கி நின்றன. அப்படிப்பட்ட நெல் ரகங்களைக் கண்டறிந்து விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் புயலோ, கடும் மழையோ, வெள்ளமோ வந்தாலும் நஷ்டம் வராமல் பிழைக்கலாம் அல்லவா? அதைச் சம்பவ் மூலம் செய்து வருகிறார்கள்.

விதை வழங்கும் நிகழ்வில்
விதை வழங்கும் நிகழ்வில்

முகாஜய் என்ற நெல் ரகம். ஒரு முறை நடவு செய்தால் இரண்டு முறை அறுவடை செய்யலாம். குஜிபட்லி, சுனாபானி, ஜலந்திரி, சமுத்ரலஹரி, ஜல்கமினி போன்ற நெல் ரகங்கள் எவ்வளவு நாள்கள் வெள்ளம் சூழ்ந்து நின்றாலும் அழுகிப்போகாமல் இருக்கும். மலைப்பகுதிகளில் மட்டும் விளையும் நெல் ரகங்களும், மருத்துவக் குணங்கள் நிறைந்த கலாவதி, பர்மா பிளாக், சக்காவோ போன்ற கறுப்பு அரிசி ரகங்களும் இங்கே வெற்றிகரமாக இயற்கையான முறையில் பயிரிடப்படுகின்றன. தவிர கால்நடைகள் விரும்பி உண்ணும் புல் ரகங்களையும் பயிரிடுகிறார்கள்.

‘தேசம் முழுக்க இயற்கை வேளாண்மையைப் பரப்புவதும், நாட்டு ரக விதைகளை மீட்டெடுப்பதுவுமே கார்ப்பரேட் மயமாகி வரும் விவசாயத்திலிருந்து நம் மண்ணைக் காக்க ஒரே வழி’ என்பது ராதாமோகனின் அசைக்க முடியாத நம்பிக்கை. எதிர்காலச் சந்ததியினருக்கு ஆரோக்கியமான உணவை வழங்க ‘சம்பவ்’ அமைப்பின் ஊடாகத் தொடர்ந்து உழைத்து வருகிறார் சபர்மதி.

இயற்கை விவசாயத்தின் மேன்மைக்காக நாற்பது ஆண்டுகளாக இடையறாது உழைத்து வரும் தந்தைக்கும் மகளுக்கும் 2020-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.

‘பல ஆண்டுகள் உழைப்பின் பலனாக இயற்கை விவசாயத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த விருது மட்டுமல்ல. இயற்கை விவசாயத்தின் வழியில் இந்த மண்ணின் வளத்தை மீட்டெடுக்கப் போராடும் ஒவ்வொரு இந்திய விவசாயிக்கும் வழங்கப்பட்ட விருது!’ என்பன ராதாமோகனின் நெகிழ்ச்சி வார்த்தைகள்.

சரித்திரம் தொடரும்