Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : அப்தெல்லா பெளதிரா மொரோக்கோவின் வேளாண் போராளி!

அப்தெல்லா பௌதிரா
பிரீமியம் ஸ்டோரி
அப்தெல்லா பௌதிரா

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 15

மாண்புமிகு விவசாயிகள் : அப்தெல்லா பெளதிரா மொரோக்கோவின் வேளாண் போராளி!

சாதனை விவசாயிகளின் சரித்திரம்! - 15

Published:Updated:
அப்தெல்லா பௌதிரா
பிரீமியம் ஸ்டோரி
அப்தெல்லா பௌதிரா
ரு கனியோ, காயோ தாவரத்தில் தானாகக் காய்த்தது என்றால் அதை உண்ணலாம். காய்க்க வைக்கப்பட்டது என்றால் அதை, ஒருபோதும் உண்ணக் கூடாது!

வட ஆப்பிரிக்கத் தேசமான மொரோக்கோவின் பொருளாதாரத்தில் சுரங்கத்தொழில், சுற்றுலாத்துறை, பாஸ்பேட் வளம் ஆகியவை முக்கியப் பங்கு வகித்தாலும் முதுகெலும்பு என்னவோ விவசாயம்தான். ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் குறைந்துபோன மழையளவும், அதிகரித்துவிட்ட வெப்பநிலையும், அவ்வப்போது வந்துபோகும் வறட்சியும் விவசாயத்தைத் தள்ளாடச் செய்கின்றன. முக்கியமாக அதிக உற்பத்தி வேண்டி, அதீதமாகப் பயன்படுத்தப்பட்ட செயற்கை உரங்களாலும், நவீன விதைகளாலும், நச்சுப் பூச்சிக்கொல்லி களாலும் மண்ணானது ரத்தக்கண்ணீர் வடிக்கிறது. விவசாயிகள் தாங்க முடியாத கடன்சுமையால் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த அசாதாரணமான சூழலில்தான் ‘இயற்கை விவசாயி’யாக மாறி, தேறி, மேலேறி வந்து நம்பிக்கையுடன் நிற்கிறார் அப்தெல்லா பௌதிரா என்ற மொரோக்கோ குடிமகன். அவரது நம்பிக்கை தரும் வெற்றி மொரோக்கோ தேசத்துக்கே மீண்டும் இயற்கை விவசாயத்தை நோக்கிச் செல்வதற்கு வழிகாட்டும் வெளிச்சமாக மாறியிருக்கிறது.

மாண்புமிகு விவசாயிகள் : அப்தெல்லா பெளதிரா மொரோக்கோவின் வேளாண் போராளி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொரோக்கோவின் தென்மேற்கில் அமைந்திருக்கும் அகாதிர் என்ற ஊரைச் சேர்ந்தவர் அப்தெல்லா. மூன்றாவது தலைமுறை விவசாயி. அப்தெல்லாவின் தாத்தா விவசாயியாக இருந்தவர். மொத்தம் 16 ஏக்கர் நிலம் அவரிடம் இருந்தது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் இயற்கை விவசாயம் மட்டுமே. கீரைகள், காய்கறிகள் பயிரிட்டார்கள். அத்தி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளை ஆகிய பழங்களைப் பயிரிட்டார்கள். மலர்த்தோட்டங்களைப் பராமரித்தார்கள். அப்தெல்லாவின் பால்ய நாள்கள் பசுமையாக இருந்தன. பட்டாம் பூச்சிகளைப் பிடித்துக்கொண்டும், பறவைகளை விரட்டிக்கொண்டும் வளரும் பருவத்திலேயே பயிர்த்தொழிலும் பழகிக் கொண்டான் அப்தெல்லா. தாத்தா பாட்டி, அப்பா அம்மா, உறவினர்கள், குழந்தைகள் என்று எல்லோருமே வயலில் கிடந்தார்கள். வாழ்க்கை நிம்மதியாகவே இருந்தது. அந்த வில்லன் வரும்வரை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1980-களுக்கு முன்பு வரை அந்த விவசாயிகள் பாரம்பர்ய விதைகளைச் சேகரித்து வைத்திருந்தார்கள். அப்தெல்லாவின் தாத்தாவும் அப்பாவும், தக்காளியை அதிகம் விளைவித்தார்கள். அந்தப் பகுதியில் யாருக்குத் தக்காளி விதை தேவை என்றாலும் அவர்களிடமே வருவார்கள். அவர்கள் அந்த விதைகளை இலவசமாகவே கொடுத்தார்கள். பதிலுக்கு மற்ற விவசாயிகளிடமிருந்து பீன்ஸ், வெங்காயம், கேரட், பூசணி விதைகளைப் பெற்றுக்கொண்டார்கள். இப்படியாகப் பாரம்பர்ய விதைகளைத் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு நிம்மதியாக, ஆரோக்கியமாக இருந்தார்கள். அப்போ தெல்லாம் அவர்கள் யாரும் விதைகளைக் காசு கொடுத்து வாங்கவில்லை.

அப்தெல்லா பௌதிரா
அப்தெல்லா பௌதிரா

1980-களில் கலப்பின விதைகள் அங்கே காலை எடுத்து வைத்தன. சில விவசாயிகளிடம் அவை புகுத்தப்பட்டன. ‘விதை விலை குறைவுதான். தக்காளி வழக்கத்தைவிட அதிகமா காய்க்கும். எல்லாம் ஒரே மாதிரி அளவில் பார்க்கப் பளபளன்னு இருக்கும்’ என்று ஆசைகாட்டி விளைநிலங்களுக்குள் அந்த விஷத்தைப் புகுத்தினார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் நடந்தது. பளபள தக்காளிகளுக்குச் சந்தையில் மவுசு அதிகரிக்க, மற்றவர்களும் கலப்பின விதைகளைக் காசு கொடுத்து வாங்கத் தொடங்கினார்கள். அந்தச் சுழலில் அப்தெல்லாவின் தந்தையும் விழுந்தார். அவர்களது வயலிலும் கலப்பின விதைகள் வேரூன்றின. காலப்போக்கில் பாரம்பர்ய விதைகளைச் சேகரித்து வைக்கும் பழக்கம் மறந்தே போனது. மொரோக்கோ மண்ணின் பாரம்பர்ய விதைகள் மறையத் தொடங்கின.

தக்காளிகளும் மற்ற காய்கறிகளும் பளபளவென்றுதான் இருந்தன. அதேசமயம் புதிது புதிதாக நோய்களும் தோன்றின. அந்த நோய்களைப் போக்குவதற்கென்று நவீன பூச்சிக்கொல்லிகள் எட்டிப் பார்த்தன. புதிய ரசாயன உரங்கள் உள்ளே வந்தன. கனிகள், காய்கறிகள், கீரைகள் என்று எல்லாமே கலப்பின விதைகளாகிப்போயின. சர்வதேச நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு. ஒரு காலத்தில் பாரம்பர்ய விதைகளை இலவசமாகவே பரிமாறிக்கொண்ட மொரோக்கோ விவசாயி, ஒரு கிலோ கலப்பின விதையை வாங்குவதற்குக் கூடக் கடன் வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டான். அதிக மகசூல் என்ற வார்த்தையில் அடி முட்டாளாக்கப்பட்டதை அவன் உணர்ந்தாலும், அந்தச் சுழலிலிருந்து அவனால் மீள முடியவில்லை. ஒன்று, விவசாயத்தைக் கைவிட்டான் அல்லது உயிரை.

2001-ம் ஆண்டில் படிப்பை முடித்தார் அப்தெல்லா. இனி முழுநேர விவசாயம்தான் என்று முடிவெடுத்தார். அதற்குச் சில வருடங்களுக்கு முன்புதான் அவரின் தாத்தா இறந்து போயிருந்தார். அப்தெல்லாவின் தந்தைக்கு 4 ஏக்கர் நிலம் பங்கு கிடைத்தது. மற்ற நிலத்தைப் பெற்றுக்கொண்ட சகோதரர்களில் ஒருவர்கூட விவசாயம் செய்ய விரும்பவில்லை. நிலத்தை விற்றுக் காசாக்கிக் கொண்டார்கள். அந்த விளை நிலங்களில் கட்டடங்கள் முளைத்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சூழலில்தான் அப்தெல்லாவும் முழுநேர விவசாயியாகக் களம் இறங்கினார். அவரின் அப்பா தன் பங்கு நிலத்தில் தக்காளி மட்டும் விளைவித்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் அவர்களது நிலம் கலப்பின விதைகளாலும், செயற்கை உரங்களாலும் சீர்கெட்டுப் போயிருந்தது. அப்போதைக்குத் தக்காளி மட்டுமே அங்கே விளைந்தது. தக்காளிச் செடிகளுக்கு வாரத்தில் மூன்று நாள்கள் தவறாமல் ரசாயன பூச்சிக்கொல்லி களைத் தெளித்ததால் தளதளவெனத் தக்காளிகள் விளைந்தன. ஆரோக்கியத்தின் எமனாகத் தோன்றிய அந்தத் தக்காளி விவசாயம், அப்தெல்லாவுக்குப் பிடிக்கவே இல்லை. தவிர, ஒரு கிலோ தக்காளி விதையின் விலை, மொரோக்கோவின் தங்கத்தின் விலையைவிட அதிகமாக இருந்தது. விளைவித்த தக்காளிக்கும் முறையான லாபம் இல்லை. இடைத்தரகர்கள் ஏப்பம்விட்டுக் கொண்டார்கள். எப்போதும் கடன் சுமை அப்தெல்லா குடும்பத்தைத் துரத்திக்கொண்டே இருந்தது.

அப்தெல்லா பௌதிரா
அப்தெல்லா பௌதிரா

அந்தப் பிரதேசத்தில் பலரும் அவரது தந்தையைப்போல, ஒரே பயிரை மட்டுமே பயிரிட்டுக்கொண்டிருந்தார்கள். விளைநிலங்கள் அனைத்துமே பாழ்பட்டுக் கிடந்தன. தாத்தா காலத்தில் 10 மீட்டர் ஆழத்தில் கிடைத்த நீர், அப்போது 120 மீட்டர் தாண்டியும் கிடைக்காமல் போயிருந்தது. வெப்பநிலை உயர்வு, பொய்த்த மழை, வறட்சி, புதிய புதிய நோய்கள். பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து கொண்டிருந்த பலர், நிலங்களை விற்றுவிட்டு வேறு வேலைக்குப் போக ஆரம்பித் திருந்தார்கள்.

இதிலிருந்து விடுபட வேண்டும், மீண்டு வர வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்தார் அப்தெல்லா. தாத்தா காலத்தில் பரிமாறிக் கொண்ட பரம்பரை விதைகள் யாரிடமாவது கிடைக்குமா என்று தேடினார், தேடினார், தேடிக்கொண்டே இருந்தார். விதை அரசியலில் மொரோக்கோ தேசத்தின் விவசாயிகளும் வீழ்த்தப்பட்ட அவலம் நெஞ்சை அழுத்தியது. வேறு வழியின்றி வயிற்றுப் பிழைப்புக்காக, தந்தையுடன் சேர்ந்து தக்காளி விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

அந்தச் சூழலில்தான் அப்தெல்லாவுக்கு முகநூல் (ஃபேஸ்புக்) அறிமுகமானது. அங்கே கணக்கு தொடங்கிய அப்தெல்லா, விவசாயம் சார்ந்த அயல் தேச நண்பர்களின் நட்பைப் பெற்றார். குறிப்பாக, தனது பாரம்பர்ய விதைகளின் தேவையை அமெரிக்க நண்பர்களுக்குத் தெரியப்படுத்தினார். அவர்கள் அமெரிக்காவின் பேக்கர் கிரீக் (Baker Creek) என்ற பாரம்பர்ய விதைகளை விற்கும் நிறுவனத்திடமிருந்து விதைகளை வாங்கி மொரோக்கோவுக்கு அனுப்பினர். ஆனால், விதைகள் அப்தெல்லாவின் கைகளுக்குக் கிடைக்கவில்லை. மொரோக்கோ அதிகாரிகள், ‘இதையெல்லாம் அனுமதிக்க முடியாது’ என்று அந்த விதைகளை அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பி வைத்தனர். கார்ப்பரேட்களின் நண்பனாக விளங்கும் மொரோக்கோ அரசு, பாரம்பர்ய விதைகள் எக்காரணத்தைக் கொண்டும் விவசாயிகளின் கையில் கிடைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. தீமைகளுக்கு 1,000 வழிகள் இருக்கின்றன என்றால், நல்லது நடக்கவும் ஏதாவது வழி இருக்கும்தானே. எப்படியோ அமெரிக்கா விலிருந்து பாரம்பர்ய விதைகளை வரவழைத்துப் பெற்றுக்கொண்டார் அப்தெல்லா.

2012-ம் ஆண்டில் பாழ்பட்ட தன் நிலத்தைப் பக்குவமாக்கும் முயற்சிகளில் இறங்கினார். இங்கே எல்லோருக்கும் தெரிந்த வழிதான். இயற்கை வழி! மண்ணைச் சரணடைந்தார். சில காலம் பொறுமையாக இருந்தார். கவனமாக உழைத்தார். செத்த நிலம் சத்துள்ளதாக மீண்டது. பிறகே விதைத்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பர்ய விதைகளைப் பெற்றுக்கொண்ட அந்த மண், மகிழ்ச்சியாக முளைத்தது; பூத்தது; காய்த்தது. காய்கறிகளையும் கனிகளையும், கீரைகளையும் கனிவுடன் தந்தது.

மொரோக்கோவில் பாரம்பர்ய விதைகளை மீட்டெடுக்கும் பணியில் முதல் ஆளாக நிற்கிறார் அப்தெல்லா.

இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார் அப்தெல்லா. ஆரம்பத்தில் லாபமே இல்லையென்றாலும் அப்தெல்லாவுக்கு நிம்மதியாகத் தூக்கம் வந்தது. வயலில் இறங்கும்போதெல்லாம் மனம் நிறைவை உணர்ந்தது. மொரோக்கோ மக்கள், இயற்கையான, ஆரோக்கியமான, சத்துமிக்கக் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும், கீரை களுக்கும் எவ்வளவு ஏங்கிக் கிடக்கிறார்கள் என்ற பேருண்மை அப்தெல்லாவுக்குப் புரிந்தது. பாரம்பர்ய விதைகளைச் சேகரிக்கவும் தொடங்கினார். மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார். தான் மீண்டும் கொண்டு வந்த இயற்கை விவசாயத்தை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். நோய்கள் தாக்கினாலும் வேதிப்பொருள்களிடம் தஞ்சமடையக் கூடாது. பூச்சிகள் மிரட்டினாலும் மிளகாய்க்கரைசல், மிளகுக்கரைசல் என்று இயற்கையைவிட்டு நழுவவே கூடாது என்று உணர்ந்தார். மற்றவர் களுக்கும் உணர்த்தினார்.

இப்போது மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கும் அப்தெல்லாவின் இயற்கை விளைபொருள்கள் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன. அப்தெல்லாவிடம் ஏக்கர் கணக்கில் விளைநிலம் இல்லை. அவர் கொழுத்த லாபம் சம்பாதிக்கவில்லை. ஆனாலும் மொரோக்கோவில் பாரம்பர்ய விதைகளை மீட்டெடுக்கும் பணியில் முதல் ஆளாக நிற்கிறார். கார்ப்பரேட் கம்பெனிகளின் கயமைத்தனங்களை உடைத்து, இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் பணிகளில் அர்ப்பணிப்புடன் இயங்கிவருகிறார். விலையில்லா பாரம்பர்ய விதைகள், கடன் இல்லா விவசாயம், ஆரோக்கியமான விளைபொருள்கள் என்று 1980-களுக்கு முன்பு இருந்த நிலையை மீண்டும் மலரச் செய்யும் மகத்தான போராட்டத்தில் மனமுவந்து ஈடுபட்டு வருகிறார்.

‘எப்போதும் இயற்கை நமக்கு எல்லாமே கற்றுக்கொடுக்கும். ஆனால், நாம்தான் கற்றுக்கொள்ளத் தவறிவிடுகிறோம். தன் மண்ணை நேசிக்கும் ஓர் உண்மையான விவசாயி, விவசாயத்தை மகிழ்வுடனேயே செய்வான். தன் மண்ணின் நலம் கெட்டுவிடக் கூடாது என்பதில் பெரிதும் கவனமாக இருப்பான். எந்தப் பிரச்னை என்றாலும் இயற்கையான ஒரு வழியைக் கண்டுபிடித்து மீளுவான். வங்கிகளிடம் கையேந்தாத விவசாயி, தன் நிலத்தில் சுழற்சி முறையில் பயிரிடும் விவசாயி, தன் விளைபொருளைச் சந்தைப்படுத்தும் உத்தி தெரிந்த விவசாயி என்றுமே தோற்றுப்போவதில்லை!’ இது அப்தெல்லாவின் அனுபவ வார்த்தைகள்.

சரித்திரம் தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism