Published:Updated:

தேனி: ``காய்கறிகளை கீழே கொட்ட வேண்டாம்... எங்களிடம் கொடுங்கள்!" - தோட்டக்கலைத்துறை அழைப்பு

தோட்டக்கலைத்துறை அலுவலகம்.
தோட்டக்கலைத்துறை அலுவலகம்.

விலை இல்லையெனக் கூறி, காய்கறிகளை கீழே கொட்டி அழிக்க வேண்டாம் எனத் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தீபாவளி மற்றும் அதையடுத்து வந்த விடுமுறை தினத்தால், தமிழகம் முழுவதும் காய்கறி விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தில், பூதிப்புரம், கொடுவிலார்பட்டி, பள்ளப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் வெண்டைக் காய்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கிய வியாபாரிகள், அதை விற்பனை செய்ய முடியாததால், டிராக்டரில் வெண்டைக்காய்களை ஏற்றி, வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் கொட்டினர்.

ஆற்றில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்.
ஆற்றில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கிலோ 1 ரூபாய்க்கு விற்பனையாவதால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர் வியாபாரிகள்.

இந்நிலையில், இன்று காலை முதல், தேனி மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாயிகளைச் சந்தித்து காய்கறிகளின் விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்தனர்.

பட்டு வளர்ப்பில் தமிழக அளவில் இரண்டாவது இடம்... சாதித்த தேனி!

நம்மிடையே பேசிய தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர், ``விவசாயிகளிடம் இருந்து வெண்டைக்காயை வாங்கிய வியாபாரிகள், தீபாவளி விடுமுறை என்பதால், விற்பனை செய்ய முடியாமல் ஆற்றில் கொட்டியிருக்கிறார்கள். வியாபாரிகள்தாம் கொட்டினார்களே அன்றி, விவசாயிகள் வெண்டைக்காயை ஆற்றில் கொட்டவில்லை. இது ஒருபுறம் இருக்க, விவசாயிகள், சந்தைக்கு நேரடியாகக் காய்கறிகளைக் கொண்டுவரும்போது, அங்கே போதிய விலை கிடைக்கவில்லை என்றால், காய்கறிகளை கீழே கொட்ட வேண்டாம். அப்பகுதி தோட்டக்கலைத்துறை அதிகாரியைத் தொடர்புகொண்டு, சூழலைச் சொன்னால் போதும், தோட்டக்கலைத்துறை சார்பில் அந்தக் காய்கறிகள் நல்ல விலைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

வெண்டைக்காய்
வெண்டைக்காய்

அதை, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமை மூலமாக, எங்கள் துறைக்குச் சொந்தமான காய்கறிக் கடைகளில் விற்பனை செய்வோம். இரண்டு மூன்று நாள்கள் இருக்கக்கூடிய காய்கறியாக இருந்தால், வெளி மாவட்ட சந்தை அல்லது வெளி மாநில சந்தைக்கு அவற்றை அனுப்பி விற்பனை செய்துகொள்வோம். இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது. எனவே, விவசாயிகள் இனி காய்கறிகளைக் கீழே கொட்ட வேண்டாம்” என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு