நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கொரோனாவுக்கு பின் ‘பசுமை’ பாதையில் விவசாயம்!

விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயம்

ஆய்வு

கொரோனா என்ற கொடிய அரக்கன் நமது வேளாண் பொருளாதாரத்தைச் சிதைத்துவிட்ட போதிலும், இதை நாம் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கொரோனாவுக்குப் பிந்தைய பொருளாதாரத்தை எழுச்சியுடன் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதற்கு வேளாண் சார்ந்த சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளன. அவை என்னென்ன என்பது பற்றிச் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் லி.வெங்கடாசலம் சிலவற்றை முன் வைக்கிறார். வேளாண் தொழிலை மீட்டெடுக்க என்ன வகையான குறுகிய மற்றும் நீண்டகாலச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பதைப் பற்றி அவரிடம் பேசினோம்.

கொரோனாவுக்கு பின் ‘பசுமை’ பாதையில் விவசாயம்!

கொரோனா விவசாயத்தை எப்படிப் பாதித்துள்ளது?

கொரோனா விவசாயத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால், வேளாண்பொருள்களின் உற்பத்தியில் உள்ள தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்துதலில் உள்ள பல்வேறு இடையூறுகளினால், விவசாயிகள் தங்களுடைய பொருள்களை அறுவடை செய்யாமல் வயலிலேயே அழிய விடுகின்றனர் அல்லது அறுவடை செய்த பொருள்களைச் சாலை மற்றும் திறந்தவெளிகளில் கொட்டி அழிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

உற்பத்தி மட்டுமின்றி, விவசாயப் பொருள்களுக்கான தேவையிலும் தற்போது பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கின்போது ஏற்பட்ட வேலை மற்றும் வருவாய் இழப்பு மக்களின் வாங்கும் சக்தியை வெகுவாகப் பாதித்ததே இதற்கு முக்கியக் காரணம். மேலும், ஊரடங்கைப் பயன்படுத்தி மிக அத்தியாவசியப் பொருள்களுக்குச் செயற்கைப் பற்றாக்குறை மற்றும் தேவையற்ற விலையேற்றத்தைத் தோற்றுவித்ததும் மக்களின் வாங்கும் திறனைக் குறைத்திருக்கின்றன. விவசாய இடுபொருள்களை உற்பத்தி செய்யும் மற்றும் விவசாயத்திலிருந்து உள்ளீட்டுப் பொருள்களைப் பயன்படுத்தும் பெருவாரியான தொழிற்சாலைகள் தங்கள் இயக்கங்களை நிறுத்திக்கொண்டதால், இவற்றை நம்பியுள்ள தொழிலாளர் குடும்பங்கள் மறைமுகமாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நாம் அனைவரும் வருங்காலங்களில் கொரோனா வைரஸூடன் வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே, குறுகிய காலப் பிரச்னைகளை நிவர்த்திச் செய்து நீண்ட காலத்தில் விவசாயத்தை ஒரு புதிய பரிமாணத்தில் மிளிரச்செய்ய வேண்டும்

விவசாய விளைபொருள்களை அரசுகள் முறையாகக் கொள்முதல் செய்யவில்லையே?

விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களை அரசாங்கம் சரியான முறையில் கொள்முதல் செய்யவில்லை என்பது உண்மைதான். ஊரடங்கினால் வெளிச்சந்தையில் விளைபொருள்களை வாங்க ஆளில்லை. அறுவடை செய்த பொருள்களை விற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் பெருவாரியான விவசாயிகளுக்கு அரசாங்க மண்டிகளே விடிவுகாலமாகிறது. ஆனால், அதிகப்படியான வரத்தின் பேரில், அரசாங்கம் கொள்முதல் செய்வதில் கால தாமதமாகிறது. இதனால் பரிமாற்றச் செலவும் அதிகமாகிறது.

விவசாயம்
விவசாயம்

அரசு கொள்முதலைத் தவிர்த்து விளைபொருள்களை விற்க வழி இருக்கிறதா?

சென்னை போன்ற பெரு நகரங்களில் விவசாயச் சந்தைகளைப் பரவலாக்குவதன் மூலம் விவசாய உற்பத்தியாளர்கள் மட்டுமன்றி நுகர்வோருக்கும் ஏனைய பயன்களைக் கிடைக்கச் செய்யலாம். உதாரணமாக, கோயம்பேடு சந்தைக்கே அனைத்துப் பொருள்களையும் கொண்டுவருவதை விட, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ஒவ்வொரு மண்டலத்திலும் சந்தைகளை ஏற்படுத்திச் சரக்குகளை நேரடியாக இந்தச் சந்தைகளுக்கு அனுப்புவதன்மூலம் நுகர்வோருக்குத் தங்கள் அருகிலேயே பொருள்கள் கிடைப்பதோடு மட்டுமன்றி, சில்லறை வியாபாரிகளின் போக்குவரத்துச் செலவும் குறைந்து அவற்றின் சில்லறை விலையும் குறையும். மேலும், சந்தையை விரிவுபடுத்தும் உற்பத்தியாளர்கள் தங்களுடைய பொருள்களை நேரடியாகக் கொண்டு வந்து விற்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன்மூலம், உற்பத்தியாளரும் நுகர்வோரும் நேரடியாக இணைக்கப்படுவதனால் இடைச்சேவகர்களின் ஆதிக்கம் குறைந்து விலை குறைந்து அனைவரும் பயன்பெறுவர்.

இதற்கு, விவசாய உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்துக் குழுக்களை ஏற்படுத்தி இக்குழுக்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யலாம். தமிழ்நாட்டில் அரசாங்கத்தால் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இனி வரும் காலங்களில் இந்தச் சங்கங்களை அதிகப்படுத்துவதன்மூலம் மற்ற இடைச்சேவகர்களின் ஆதிக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும்.

வேறென்ன விவசாயிகளுக்குத் தற்போதைய தேவையாக உள்ளது?

இந்த இக்கட்டான காலகட்டத்தில், விவசாயிகளுக்குத் தேவைப்படும் அனைத்து இடுபொருள்களும் குறைந்த விலையில் தங்குதடையின்றிக் கிடைக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். மேலும், தற்போதையச் சூழலில் விவசாய வேலை ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், விவசாயக் கருவிகளைப் போதுமான அளவுக்குக் கிடைக்கச்செய்வதும் அரசாங்கத்தின் கடமை ஆகும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்.

கொரோனாவுக்கு பின் ‘பசுமை’ பாதையில் விவசாயம்!

சமீப காலங்களில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் ஒடிசா போன்ற மாநிலங்களிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்களை விவசாயிகள் வேலைக்கு அமர்த்தி வந்தனர். பெரும்பாலான இத்தொழிலாளர்கள் ஊரடங்கு தளர்வின்போது சொந்த ஊருக்கே சென்றுவிட்டதால், விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதில் மேலும் சிக்கல் உண்டாகலாம். இதைச் சரி செய்வதற்கு, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் வேலையாட்களை விவசாயிகளுக்கு ஒதுக்கி அவர்களுடைய பிரச்னையைத் தீர்க்கலாம்.

விவசாயத்துக்குக் கடன் வசதி அளிப்பது அவசியமா?

கண்டிப்பாக... தற்போது பயிர் கடன்களை மிகக் குறைந்த வட்டியில், குறைந்த அளவு நிபந்தனைகளுடன் விவசாயிகளுக்கு வழங்குவது அவசியம். விவசாயிகள் கூறும்போது, பயிர்செய்வதற்காக வழங்கப்படும் நகைக்கடன் கடந்த காலங்களில் 4 சதவிகித அளவிற்கு வழங்கப்பட்டதாகவும், அது தற்போது 8 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்து விட்டதாகவும் அதை இப்போது 3 சதவிகிதம் அளவுக்கு வழங்கினால் மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர். இது சம்பந்தமாக அரசு மற்றும் வங்கிகள் உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

கொரோனாவுக்கு பின் ‘பசுமை’ பாதையில் விவசாயம்!

மத்திய அரசு அறிவித்த விவசாயத்திற்கான ஊக்க நடவடிக்கைகளில், ஒப்பந்த விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதே?

ஆம்... தமிழக அரசும் ஒப்பந்த விவசாயத்தை மேலும் விரிவுபடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாகச் செயல்படுத்தவேண்டும். முறையான ஒப்பந்த விவசாயம் உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் ஒருங்கிணைத்து இருவருக்குமே நன்மை பயக்கக்கூடியது. ஆனால், இதில் சில பிரச்னைகள் இருக்கின்றன. அதைச் சரியான சட்டங்கள் மூலம் பிரச்னைகளுக்கு நேரடி மற்றும் உடனடி தீர்வு காணும் அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும்.

நீண்டகாலச் சீர்திருத்தங்கள் என்னென்ன?

விவசாயத்தைப் பொறுத்தவரை, நிலையற்ற விலையே தலையாயப் பிரச்னையாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், விளைபொருள்களுக்கான தேவை மற்றும் உற்பத்தியில் உள்ள சமநிலையின்மையே. இதற்கும் ஓர் அடிப்படை காரணம் உண்டு. அது தேவை மற்றும் உற்பத்தி பற்றிய சரியான தகவல் இல்லாமையே! உதாரணமாக, சந்தையில் வரத்துக் குறையும்போது வெங்காயத்தின் சில்லறை விலை அபரிமிதமாக அதிகரிக்கிறது. வருங்காலங்களிலும் இதே விலை நிலவும் என்ற கணிப்பில் விவசாயிகள் வெங்காயத்தை அதிகமாகச் சாகுபடி செய்கின்றனர். ஆனால், அறுவடை காலத்தில் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சியடைகின்றது! பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் விவசாயிகள் இப்போது வெங்காயம் பயிர் செய்வதைக் கைவிடுகின்றனர். அடுத்த அறுவடை சமயத்தில் வரத்து குறைவதால் இப்போது மீண்டும் விலையேற்றம்! மீண்டும் அதிக வெங்காயச் சாகுபடி! மீண்டும் விலை வீழ்ச்சி! விலை உள்ளபோது விற்பனைக்குப் பொருள் இல்லை; பொருள் உள்ளபோது சரியான விலை இல்லை! இதுதான் விவசாயிகளை நீண்ட துன்பத்தில் ஆழ்த்துவது. விலை ஏற்ற இயக்கத்தினால் நுகர்வோரும் பெரிதாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இதைச் சரி செய்ய, தேவைக்கேற்ற விவசாயத்தைப் பின்பற்ற வேண்டும்! அதாவது, ஒவ்வொரு முக்கிய விளைபொருளுக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (வருங்காலத்) தேவையை அவ்வப்போது கணக்கிடவேண்டும். இதை, சமீப காலத்தில் நிலவிய தேவை சார்ந்த புள்ளி விவரங்களைக் கொண்டு கணக்கிடலாம்.

வேளாண் பொருள்களின் தேவை மற்றும் உற்பத்தியில் ஏற்படும் சமநிலையற்ற தன்மைக்கு மற்றொரு முக்கியக் காரணம் மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்யாததும் மற்றும் ஒரு குறிப்பிட்ட பயிர்களையே தொடர்ந்து பயிர் செய்வதுமே ஆகும். இதற்கு விவசாயிகளின் தொன்று தொட்டு பயிர்செய்தலைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் மனப்போக்கு ஒரு காரணம்.

அரசின் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்ட பயிர்களையே பயிரிட விழைவது மற்றொரு முக்கியக் காரணமாகும். குறைந்தபட்ச ஆதார விலை 22 பயிர்களுக்குப் பொருந்தும் என்றபோதிலும், பெருவாரியான விவசாயிகள் நெல், கரும்பு போன்ற ஒரு சில பயிர்களையே அதிகப்படியாகத் தொடர்ந்து பயிர் செய்வதனால் சந்தையில் பாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும், இத்தகைய பயிர்கள் நீர் செறிந்த பயிர்கள் என்பதால் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி நாளடைவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் மட்டுமல்லாமல் மொத்த சமுதாயமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ‘சூழல் சார்ந்த விவசாயமே’ இதற்கான தீர்வாக அமையும்.