Published:Updated:

இதோ... இவ்வளவுதான் மாடித்தோட்டம்... முதல்ல கொத்தமல்லி சாகுபடி செய்வோமா? - வீட்டுக்குள் விவசாயம் - 4

coriander leaves
coriander leaves ( Photo: Vikatan / Preethi Karthik )

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவசாயி உருவாக வழிகாட்டும் தொடர்...! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் 4

கடந்த ரெண்டு பகுதிகள்ல சேலம் அருள் பரமசிவம் சொன்ன தகவல்கள் பயனுள்ளதா இருந்துச்சுன்னு பலரும் சொல்லியிருக்கீங்க. மகிழ்ச்சி. இந்தத் தடவை வீட்டுத்தோட்ட விவசாயி ஒருவரது அனுபவத்தைப் பார்க்கலாம். அதோட கொத்தமல்லி வளர்க்குறது தொடர்பா ஒரு டிப்ஸும் தெரிஞ்சுக்கலாம்.

இந்த முறை நாம பார்க்கப் போறது சேலத்தைச் சேர்ந்த பொறியாளர் மனோகரன். சேலம் - பெங்களூரு ரோட்டுல 5 ரோடு பக்கத்துல இருக்க கே.எஸ்.பி நகர்ல இருக்குது இவரோட வீட்டுத்தோட்டம். தான் ஒரு விவசாயியான கதையை உங்களோட பகிர்ந்துக்கப் போறாரு மனோகரன்.

``நான் இந்த வருஷம் லாக்டௌன்லதான் வீட்டுத்தோட்டத்தை ஆரம்பிச்சேன். நான் ஆரம்பத்துல கீரை, முள்ளங்கினு ஆரம்பிச்சு கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, முருங்கைக்காய்னு எல்லா காய்களையும் விளைய வெச்சுட்டேன். இப்ப எங்க வீட்டுத்தோட்டத்துல எல்லா காய்கறியும் விளையுது'' முன்னுரை சொன்ன மனோகரன் தன்னோட தோட்டத்தை நமக்கு அறிமுகப்படுத்தி வெச்சார். ``எங்க நண்பர்கள் குழுவுல 12 பேர் இருக்கோம். எல்லாரும் இன்ஜினீயர். பரபரப்பா ஓடிகிட்டு இருந்த நிலையில, லாக்டௌன் வந்துச்சு. வீட்டிலேயே முடங்கி இருக்குற மாதிரி ஆகிடுச்சு. இந்த நேரத்தை ஆக்கபூர்வமா பயன்படுத்தலாம்னு யோசிச்சோம். அப்ப உருவானதுதான் வீட்டுத்தோட்டம் அமைக்குற ஐடியா. பேசுனோம். உடனே செயல்படுத்த ஆரம்பிச்சுட்டோம். இன்னிக்கு என் வீட்டு மாடியில 2,000 சதுரடியில தோட்டம் இருக்கு. தோட்டம் அமைச்ச பிறகு, ஊரடங்கு பற்றிய கவலையே இல்லாம, வேலை செய்ய ஆரம்பிச்சுட்டோம்.

எனக்கு மூணு பெண்ணுங்க. பெரிய பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. ரெண்டாவது பொண்ணு ஆடிட்டர் படிச்சுட்டு இருக்காங்க. மூணாவது குழந்தை 8-ம் வகுப்பு படிச்சுட்டு இருக்காங்க. இப்ப தினமும் காலையில 6 மணிக்கு வீட்ல எல்லாரும் மாடிக்குப் போயிடுவோம். அங்க, செடிக்குத் தண்ணி விடுறது, பராமரிப்பு, அறுவடைனு ஆளுக்கு ஒரு வேலை பார்ப்போம். நேரம் போறதே தெரியாது. மனசுக்கும் உடம்புக்கும் ரொம்ப உற்சாகமாக இருக்கும். களை எடுக்கிறது, பூச்சிக இருந்தால் அதுக்கு இயற்கை பூச்சி விரட்டி அடிக்கிறது, உரம் வைக்கிறதுனு செய்யும்போது வயல்ல வேலை செய்யுற விவசாயி மனநிலை வந்திடுது. நானும் விவசாயிதான்ங்கிற நினைப்பு கொடுக்குற சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்லைங்க.

மனோகரன்
மனோகரன்

வீட்டுத்தோட்டம் அமைக்குறது கஷ்டமான வேலை இல்லீங்க. அதே நேரத்துல லேசான வேலையும் இல்லை. நீச்சல் கத்துக்கும்போது பயமா இருக்கும். கத்துகிட்ட பிறகு, அது ரொம்ப லேசாகிடும். அப்படித்தான் வீட்டுத்தோட்டமும். வேலையை ஆரம்பிச்சிட்டாப் போதும். பூச்சி, நோய்னு பிரச்னை வரும்போது தான் ஒவ்வொன்னா கத்துக்க முடியும். வெளிய இருந்து என்னதான் சொல்லிக்கொடுத்தாலும், நாம களத்துல இறங்கும்போது, பயிர்கள் தேவையான பயிற்சியைக் கொடுக்கும். அதுதான் சரியான பயிற்சினு நான் சொல்வேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாங்க காய்கறிகளை விளைய வைக்கிறதே வீட்டுத் தேவைக்குத்தான். அதுனால இதுல ரசாயனம் துளிக்கூட இருக்கக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கோம். முழுக்க இயற்கை முறையிலதான் விளைய வைக்கிறோம். பயிர்கள்ல ஒவ்வொரு பிரச்னை வரும்போதும், வெளிய ஆலோசனைக் கேட்குறோம். அடுத்த முறை அந்தப் பிரச்னை வரும்போது நாங்களே அதைச் சரிசெய்ய முடியுது. இப்படித்தான் இந்த 6 மாசத்துல பல விஷயங்களைக் கத்துகிட்டோம். இப்ப, பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சி விரட்டி, இஞ்சி, பூண்டுக் கரைசல், மீன் அமிலம்னு ஒரு இயற்கை விவசாயி செய்யுற பல விஷயங்களை என்னாலயும் செய்ய முடியும். வயல்ல விவசாயம் செஞ்சா என்னென்ன செய்யணுமோ அவற்றையெல்லாம் இங்க செய்றோம். இன்னமும் தினமும் கத்துகிட்டுதான் இருக்கோம்.

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்
இதெல்லாம் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் மாடித்தோட்டம் அமைப்பீங்க... வாங்க! - வீட்டுக்குள் விவசாயம் - 2

இப்போ கத்திரிக்காய், தக்காளி, வெண்டை, மிளகாய்னு எல்லா காய்களும் இருக்கு. கொடி வகைகள்ல சுரைக்காய், பூசணி, சாம்பல் பூசணி, பீர்க்கன், பாகல், புடல் எல்லாம் இருக்குது. மூலிகை வகைகள்ல கீழாநெல்லி, கற்பூரவள்ளி, கல்லுருக்கி, நித்திய கல்யாணி, இன்சுலின், ஆடாதொடானு பல்வேறு மூலிகைச் செடிகளும் இருக்குது. வாழையில செவ்வாழை, எளக்கி, ரஸ்தாளி ரகங்களை நடவு செஞ்சிருக்கோம். பழவகைகள்ல கொய்யா, மா, பப்பாளி இருக்குது. இது எல்லாமே மாடியிலதான் இருக்கு. வீட்டோட தரைப்பகுதியில காலியிடங்கள்ல அரளி, ரோஸ் மாதிரியான பூச்செடிகளை வெச்சிருக்கோம்.

இப்போ கத்திரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய் எல்லாமே அறுவடையில இருக்குது. வாழை இப்பதான் வந்துட்டு இருக்கு. இன்னும் ஆறு மாசத்துல அதுல மகசூல் கிடைச்சிடும்.

அடுத்த மாசம் எல்லாத்தையும் மகசூல் முடிஞ்ச செடிகளை அழிச்சிட்டு புதுசா நடப்போறோம். பெரும்பாலான பயிர்கள்ல 90 % மகசூல் எடுத்திட்டோம். கத்திரிக்காய் எல்லாம் தினமும் ஒரு கிலோவுக்கு மேல கிடைச்சது.

ஒரு கட்டத்துல எல்லா காயும் சேர்த்து வாரம் 10 கிலோவுக்கும் அதிகமாகக் கிடைச்சது. அதுல வீட்டுத்தேவைப் போக மத்ததை விற்பனை செஞ்சோம். போன மாசத்தில விற்பனை மூலமா 1,500 ரூபாய் வருமானமாகக் கிடைச்சது. வழக்கமா காய்கறிகளுக்கு வீட்டுல இருந்துதான் பணத்தைக் கொடுப்போம். ஆனால், இப்ப அந்தச் செலவே இல்லை. அதே நேரம் வருமானமும் வருது. அது இன்னொரு பக்கம் சந்தோஷமா இருக்கு.

வாழை, கொய்யா
வாழை, கொய்யா

இன்னைக்கி நகரத்துல இருக்க குழந்தைங்க மண்ணத்தொட்டு விளையாடுறது இல்லை. மண்ணைத் தொடுறதுக்கான வாய்ப்புகளும் இல்ல. அப்படியே இருந்தாலும் நம்ம குழந்தைங்க மண்ணுல விளையாட நாம அனுமதிக்கறதில்லை. இப்போ என் குழந்தைங்க, மண்ணைத் தொடுறதுக்கான வாய்ப்பை வீட்டுத்தோட்டம் கொடுத்திருக்குது. மண்ணைத் தொட்டு, விதையை நட்டு, பயிர வளர்க்கிற எல்லா நுட்பங்களையும் அவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறோம். அவங்களே விதை நடவு பன்ணி, உரம் வெச்சு பயிர் வளர்த்து மகசூல் எடுக்கும்போது செடி மட்டும் வளரல. அவங்களுக்கு தன்னம்பிக்கையும் வளருது.

எந்தெந்த பருவத்துல, எந்தப் பயிரை நடணும். எந்தப் பருவத்தில பூச்சித் தாக்குதல் இருக்கும்னு எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கிறோம்''னு சொல்லிகிட்டே, கீரைகளை அறுவடை செய்ய ஆரம்பிச்சாங்க அவரும் அவரது மனைவியும். கீரைகளை அறுவடை செஞ்சு முடிச்சதும் மறுபடியும் பேச ஆரம்பிச்சாரு.

``குழந்தைகளைக் கவனிக்கிற மாதிரியே செடிகளையும் கவனமா பக்குவமா பார்த்துப் பார்த்து வளக்கணும். மாவுப்பூச்சி, அசுவினினு பூச்சித் தாக்குதல் இருக்கும். சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்குனு சொல்ற மாதிரிப் பூச்சி, நோய் தாக்காத பயிர் எங்க இருக்குது. அப்படி பூச்சிக வரணும். வந்தாதான் நம்ம தோட்டத்தை நல்லா பராமரிக்கிறோம்னு அர்த்தம். அப்படி பூச்சி வந்தா, இஞ்சி பூண்டுக் கரைசல் தெளிப்போம். பிரச்னை முடிஞ்சிடும். என்னோட அனுபவத்துல சொல்றேன்.

கீரை அறுவடை
கீரை அறுவடை

செடிகளைத் தினமும் பாக்கணும். ஒவ்வொரு செடியையும் பக்கத்துலப் போய்ப் பார்த்து, பூச்சி, நோய் தாக்குதல் இருக்கா, இலைகள் எப்படி இருக்குனு கவனமா பார்க்கணும். காய்கறி செடிகளை நடவு செஞ்சதுல இருந்த் 45 - 50 நாள்ல மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும். அதுக்குப் பிறகு, 90 நாள்வரைக்கும் மகசூல் கொடுக்கும். நீங்க ஆர்வத்தோட, அர்ப்பணிப்போட தோட்டம் ஆரம்பிச்சாப்போதும். மத்ததெல்லாம் அங்கயே கத்துக்கலாம்''னு சொல்லிட்டு செடிகளுக்குத் தண்ணி ஊற்ற ஆரம்பிச்சாங்க.

கொத்தமல்லி சாகுபடி டிப்ஸ்

கொத்தமல்லி சாகுபடி செய்றதுதான் வீட்டுத்தோட்டத்துல ரொம்ப ஈசியால வேலை. இதுக்கு வீட்டுல சமையலுக்கு வெச்சிருக்க கொத்தமல்லியைப் பயன்படுத்தலாம். அதுல ஒரு சிக்கல் இருக்கு. இப்பல்லாம் அவிச்ச கொத்தமல்லியும் மார்க்கெட்டுல கிடைக்குது. அவிச்ச கொத்தமல்லியை விதைச்சா, முளைக்காது. நானும் விதைச்சேன்... முளைக்கலனு புலம்பிப் பயனில்ல. விதைக்குறதுக்கு முன்ன, நம்ம வீட்டுல இருக்க கொத்தமல்லி முளைக்குமா, முளைக்காதானு நாமளே சோதனை செஞ்சிப் பார்த்திடலாம். அதுக்கு ஒரு தொழில்நுட்பம் இருக்குது. தொழில்நுட்பம்னு சொன்னதும் பயந்திடாதீங்க. முளைப்பாரிதான் அந்தத் தொழில்நுட்பம்.

கொத்தமல்லி
கொத்தமல்லி
Photo: Vikatan / Manikandan.N.G

சமையலறையிலிருந்து கொஞ்சம் கொத்தமல்லியை (விதை) எடுத்து, அதை ரெண்டா உடைச்சுக்கணும். இப்ப ஒரு பழைய காட்டன் துணியை எடுத்துக்கணும். கொஞ்சம் மண்புழு உரத்தையும் எடுத்துக்கலாம். இப்ப துணியில மண்புழு உரத்தைப் பரப்பி, அதுல கொத்தமல்லியை தூவி பரப்பணும். மண்புழு உரத்தையும் கொத்தமல்லியையும் நல்லா கலந்து விடணும். பிறகு, துணியைக் கட்டணும். ரொம்ப இருக்கமா கட்டாம கொஞ்சம் லூசா கட்டணும். பொட்டலம் மாதிரி கட்டுனு துணியைத் தண்ணியில முக்கி எடுக்கணும். துணிப்பொட்டலம் முழுசா நனையுற மாதிரி நனைச்சுக்கணும். பிறகு, அதை நிழலான இடத்துல வெச்சுடணும். துணியில ஈரம் காயாமல் பார்த்துக்கணும். மூணாவது நாள் பொட்டலத்தை அவுத்து பார்க்கணும். நாம போட்ட கொத்தமல்லியில முளைப்புத்திறன் இருந்தா, முளைச்சிருக்கும். முளைப்புத்திறன் இல்லைன்னா முளைக்காது. நாம எப்படி போட்டமோ அப்படியே இருக்கும். இதை வெச்சு, முடிவு பண்ணிக்கலாம். நம்மகிட்ட இருக்க கொத்தமல்லியில முளைப்புத்திறன் இருந்தா அதையே பயன்படுத்தலாம். இல்லைன்னா, கடையில விதை வாங்கி பயன்படுத்தலாம். இப்ப விதை தயாரா இருக்கு. எப்படி விதைக்கணும்னு பார்க்கலாம்.

கொத்தமல்லி வளர்க்க குரோபேக்தான் வேணும்னு இல்ல. பழைய டப்பா, டிரே இப்படி எதையாவது எடுத்துக்கலாம். அதுல நம்ம செடி வளர்க்கத் தேவையான மண் கலவையை (30 % தேங்காய் நார் கழிவு, 30 % எரு (சாண எரு அல்லது மண்புழு உரம்) 40 % செம்மண் போட்டுப் பரப்பி விடணும். அதுக்கு மேல விதை கொத்தமல்லியைத் தூவணும். அதுக்கு மேல மறுபடியும் கொஞ்சம் மண் கலவையைத் தூவி, விதைகள் வெளியே தெரியாத அளவுக்கு மூடணும். ரொம்ப அதிகமா மண்ணைப் போட்டுடக் கூடாது. அப்படிப் போட்டா முளைக்க நாளாகிடும். மேலாக மண்ணைத்தூவி விட்டா போதும். இப்ப, தண்ணி ஊத்தணும். தண்ணியை அப்படியே ஊத்தக் கூடாது. கையால தெளிக்கலாம். இல்லைன்னா பழைய வாட்டர் கேன் மூடியில ஓட்டைகள் போட்டுக்கணும். அது மூலமா தண்ணி ஊத்துனா ஷவர்ல தண்ணி விழுகுற மாதிரி விழுகும். இதை நேரடியா சூரிய ஒளி படுற இடத்துல வைக்கக் கூடாது. நிழலான இடத்துலதான் வைக்கணும். ஈரம் காயாமல் தண்ணி தெளிச்சுகிட்டே இருக்கணும். ஒரு வாரத்துல முளைவிடும். பிறகு சூரிய ஒளியில வைக்கலாம். 15-20 நாள்ல நல்லா வளர்ந்து நிக்கும் கொத்தமல்லி தழை. அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்திக்கலாம்.

அரிசி கழுவுற தண்ணியில இருக்கு அத்தனை சத்து..! - வீட்டுக்குள் விவசாயம் - 3

புதினா, பாலக்கீரை, வெந்தயக்கீரை மாதிரி இன்னும் பல கீரைகள் வளர்க்கிற டிப்ஸ், அதோட பயன்பாடுகள்பற்றித் திங்கள் அன்று வெளியாகும் அடுத்த பகுதியில பார்க்கலாம். தொடர்ந்து இணைந்திருங்க... `வீட்டுக்குள் விவசாயம்' தொடர்பான உங்க கேள்விகள் / சந்தேகங்களைக் கமென்ட்ல கேளுங்க!

அடுத்த கட்டுரைக்கு