Published:Updated:

மாதம் ₹62,500 ரூபாய்... நல்ல வருமானம் தரும் கொத்தமல்லி & கீரை சாகுபடி... செய்வது எப்படி?

கீரை அறுவடை
கீரை அறுவடை

விவசாயத்தில் ஆன்னா, ஆவன்னா தெரியாவதர்கள்கூட இதுபோன்ற பயிர்களை எளிதில் சாகுபடி செய்ய முடியும். அதற்கு சில எளிமையான நுட்பங்களைத் தெரிந்து கொண்டால் போதுமானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விதையைப் போட்டால் பயிர் வளர்ந்துவிட வேண்டும். அதுவும் குறைவான நாள்களில் நிறைவான வருமானத்தையும் கொடுத்துவிட வேண்டும். அப்படிப்பட்ட பயிர்கள்தான் விவசாயிகளின் முதன்மை தேர்வாக இருக்கிறது. அந்த வரிசையில் கொத்தமல்லி, கீரைகள், புதினா போன்றவை முன்னணியில் இருக்கின்றன். விவசாயத்தில் ஆன்னா, ஆவன்னா தெரியாவதர்கள்கூட இதுபோன்ற பயிர்களை எளிதில் சாகுபடி செய்ய முடியும். அதற்கு சில எளிமையான நுட்பங்களைத் தெரிந்து கொண்டால் போதுமானது.

அதுகுறித்து இங்கே பேசுகிறார் காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி பரத். ``கீரை, கொத்தமல்லியை சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகிறோம். கொத்தமல்லியோட சாகுபடி காலம் 35-45 நாள்கள். கீரைகளோட சாகுபடி காலம் 18-30 நாள்கள். கொத்தமல்லி, கீரை போன்ற பயிர்களோட முக்கிய பிரச்னை வேரழுகல்தான். இத கட்டுப்படுத்துறதுக்கு மூணு வழிகள் இருக்கின்றன.

கொத்தமல்லி
கொத்தமல்லி
இதோ... இவ்வளவுதான் மாடித்தோட்டம்... முதல்ல கொத்தமல்லி சாகுபடி செய்வோமா? - வீட்டுக்குள் விவசாயம் - 4

அதைச் செய்தாலே போதும். கொத்தமல்லி, கீரை சாகுபடியில் பாதி பிரச்னை தீர்ந்துவிடும்.

- கொத்தமல்லி, கீரைக்கு உழவு ஓட்டிவிட்டு அடியுரமாக எரு (தொழுவுரம்) கொடுப்பது விவசாயிகளோட வழக்கம். அதிலுள்ள சின்ன சின்ன புழுக்களால்தான் (Nematodes) இந்தப் பிரச்னை ஏற்படுது. இத பெரும்பான்மையான விவசாயிகள் கண்டுக்கிறதே இல்லை.

இதற்குத் தீர்வு எருவோடு நுண்ணுயிர் உரங்களை கலந்து கொடுக்கணும். இப்படிக் கொடுக்கும்போது பிரச்னை தீரும். அதாவது அரை ஏக்கர் கொத்தமல்லிச் சாகுபடிக்கு 1,000 கிலோ (ஒரு டன்) எருவுடன் தலா 5 கிலோ சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம் கலந்து லேசாகத் தண்ணீர் தெளித்து ஒருநாள் நிழலில் வைத்து கொடுத்தால் வேரழுகல் நோய் வராது. இது கொத்தமல்லிக்கு மட்டுமில்லை. கீரைகளுக்கும் பொருந்தும்.

- இரண்டாவது, தொடர்ந்து ஒரே நிலத்தில் கொத்தமல்லியே சாகுபடி செய்யக்கூடாது. சுழற்சி முறையில் வேறு வேறு பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும்.

- மூன்றாவது, ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் சாகுபடி செய்வதற்கான இடைவெளி குறைந்தபட்சம் ஒரு மாசமாவது இருக்க வேண்டும். கொத்தமல்லி விதைக்க அரை ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதைத்தால் 800 - 1,000 கட்டுகள் கிடைக்கும். ஒரு கிலோ விதைக்க 5-8 சென்ட் சென்ட் இடம் போதுமானது. 35-ம் நாளுக்குள் மேல் அறுவடைக்குத் தயாராகும். 7-10 நாள்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.

ஒவ்வொரு பாத்தியிலும் வெவ்வேறு நாள்கள் இடைவெளியில் சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம். அரை ஏக்கருக்கு 4,000-7,000 கட்டுகள் கிடைக்கும். இந்தக் கட்டுகள் கீரை கட்டு போன்ற பெரிய கட்டு. ஒரு கட்டு சந்தையில 3 ரூபாய்ல இருந்து 6 ரூபாய் வரை போகுது. சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களைச் சுற்றியுள்ள விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்தால் ஒரு கட்டு 10 ரூபாய்க்குக்கூட விற்க முடியும்.

பரத்
பரத்

கொத்தமல்லி மற்றும் கீரை சாகுபடி செய்வது எப்படி?

கொத்தமல்லி சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கும் நிலம் வடிகால் வசதி கொண்டதாக இருக்க வேண்டும். ஆடிப்பட்டம் சிறந்தது. இரண்டு முறை உழவு ஓட்ட வேண்டும். பிறகு ஏக்கருக்கு 2,000 கிலோ நுண்ணுயிர் உரங்களால் ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரத்தைக் கொட்டி களைத்துவிட வேண்டும். மூன்றாவது உழவின்போது ரோட்டோவேட்டரால் ஓட்டி மண்ணைப் பொலபொலப்பாக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தண்ணீர்ப் பாசனத்திற்கு ஏற்றவாறு சதுரப் பாத்திகள் அல்லது மேட்டுப்பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். விதைகளை மணலில் கலந்து தூவி விடலாம் அல்லது 5 அங்குல இடைவெளியில் விதைகளை நடவு செய்யலாம். 7-10 நாள்களில் முளைத்து வெளியே வரும். வாய்க்கால் பாசன முறை அல்லது தெளிப்புநீர்ப் பாசன முறை என்று தேவைக்கேற்றவாறு பாசன முறையை அமைத்துக்கொள்ளலாம். அதிக தண்ணீர் பாய்ச்சக் கூடாது. நிலத்தை ஈரப்படுத்திக் கொண்டே வந்தால் போதும்.

10-வது நாள் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். தொடர்ந்து 20, 30-ம் நாள்களிலும் ஜீவாமிர்தத்தைக் கொடுத்து வர வேண்டும். 15-ம் நாளில் ஒரு லிட்டருக்கு 300 மி.லி என்ற அளவில் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தால் ஐந்திலைக் கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மி.லி என்ற கணக்கில் கலந்து தெளிக்கலாம்.

கீரை அறுவடை
கீரை அறுவடை

கொத்தமல்லியின் இலைகள் மென்மையானவை. அதனால், பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டியை அதிக டோஸ் கொடுத்தால் இலைகள் கருகிவிட வாய்ப்புள்ளது. 45-ம் நாள்களுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். அதற்கு மேல் அறுவடை செய்யாமல் விட்டாலும் பிரச்னையில்லை. 70-90 நாள்களில் விதைகளுக்காக அறுவடை செய்யலாம்.

மேற்சொல்லிய முறைகளே கீரைகளுக்கும் பொருந்தும். சிறுகீரை, தண்டுக்கீரை, வெந்தயக் கீரை, பருப்புக் கீரை, பொன்னாங்கண்ணி என பட்டியல் நீண்டது. ரகத்தைப் பொறுத்து 18 நாளிலிருந்து 30 நாள்களுக்குள் அறுவடை செய்யலாம். கீரைக்குச் சதுரப் பாத்திகள் அல்லது மேட்டுப்பாத்திகளையும் அமைக்கலாம். குறைந்த நாள்களில் சாகுபடி செய்து விவசாயத்தில் வருமானம் பார்க்க நினைப்பவர்களுக்கு கீரை, கொத்தமல்லி மிகவும் ஏற்றது. இதற்கு என் அனுபவமே சாட்சி" என்றார்.

கொத்தமல்லியில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

அரை ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5,000 கட்டுகளை எதிர்பார்க்கலாம். ஒரு கட்டு கொத்தமல்லி சராசரியாக 5 ரூபாய் என்று விற்பனையானாலே 25,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் உழவு, விதை, களை, அறுவடை என்று 7,500 செலவு போக 17,500 ரூபாய் அரை ஏக்கருக்கு நிக்கும். 45 நாள்களில் ஏக்கருக்கு 35,000 ரூபாய் லாபம் பார்க்க முடியும்.

இதையே நேரடியாக விற்பனை செய்தால் ஒரு கட்டு கொத்தமல்லி 10 ரூபாய்க்குக்கூட விற்க முடியும். அப்படி விற்பனை செய்தால் 50,000 ரூபாய் கிடைக்கும். செலவு போக 42,500 ரூபாய் லாபம் கிடைக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் கொத்தமல்லிக்கான விலை நன்றாக இருக்கும். கீரைக்கும் ஏறத்தாழ இதே வருமானம் கிடைக்கும். சற்றே கூடுதலாகவும் வருமானம் கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.

கொத்தமல்லி
கொத்தமல்லி

கீரையில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

அரை ஏக்கருக்கு 7,000 கட்டுகள் கிடைக்கும். 5 ரூபாயிலிருந்து 8 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்சம் 5 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட 35,000 ரூபாய் கிடைக்கும். செலவு போக 30 நாள்களில் 28,500 ரூபாய் லாபம் பார்க்கலாம். கீரையை நேரடி விற்பனையில் 10 ரூபாய்க்கு விற்றால் 70,000 ரூபாய் கிடைக்கும். செலவு போக ஒரு மாதத்தில் 62,500 ரூபாய் லாபம் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு