Published:Updated:

தோட்ட உரம் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம்... எப்படி? வாங்க கத்துக்கலாம் - வீட்டுக்குள் விவசாயம்- 9

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவசாயி உருவாக வழிகாட்டும் தொடர்..! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் - 9

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கீரை சாகுபடி பற்றிக் கடந்த பகுதியில பார்த்தோம். பொதுவா வீட்டுத்தோட்ட விவசாயத்துல பெரும்பாலும் செய்யுற தவறு, உர மேலாண்மையைச் சரியா செய்யாததுதான். விதையைப் போட்டு தண்ணி ஊத்துனா போதும்; செடி வளர்ந்து காய் காய்க்கும்னு பலபேர் நினைக்குறாங்க. ஆனா, அது மட்டும் பத்தாது. நம்ம ஆரோக்கியமா இருக்க தினமும் சாப்பிடுறோமில்ல? அதுபோலத்தான் செடிகளும். அதுங்க நல்லா ஆரோக்கியமா வளர்ந்து மகசூல் கொடுக்கணும்னா அதுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்கணும்.

Plastic Drum
Plastic Drum
Photo: Vikatan / Saravanakumar.P
மாடித்தோட்ட சாகுபடியில ரொம்ப சுலபமான பயிர் கீரைதான்... ஏன் தெரியுமா? - வீட்டுக்குள் விவசாயம் - 8

இப்ப வீட்டுத்தோட்டப் பயிர்களுக்குக் கொடுக்குறதுக்கான உரங்கள் கடைகள்ல கிடைக்குது. அதை வாங்கி பயன்படுத்தலாம். அதே நேரத்துல வீட்டுல கிடைக்குற சமையலறைக் கழிவுகள் மூலமாகவும் நாமே உரம் தயாரிக்கலாம். அதைப் பற்றித்தான் இந்தப் பகுதியில பார்க்கப்போறோம். கோயம்புத்தூரைச் சேர்ந்த மாடித்தோட்ட ஆலோசகர் கனகராஜ், சமையலறைக் கழிவுகளை உரமாக்குறது எப்படின்னு சொல்லப் போறாரு.

பொதுவா சமையலறைக் கழிவுகளை சமையல் செஞ்சது, சமையல் செய்யாததுனு பிரிச்சுக்கணும். சமைச்சதை சரியா கையாளணும். இல்லைன்னா புழு வெச்சிடும். வாடை அடிக்க ஆரம்பிச்சிடும். அப்பார்ட்மென்ட்ல இருக்கவங்க சமைச்ச கழிவுகளைப் பயன்படுத்தி உரம் தயாரிக்கிறது சிரமம். தனி வீடா இருந்தா தனியாக் குழியெடுத்து உரம் தயாரிக்கலாம். முதல்ல சமைச்ச கழிவுகளை உரமாகுறதைப் பார்க்கலாம்.

3 அடி ஆழத்துல இடத்துக்கு ஏத்த மாதிரி நீள, அகலத்துல ஒரு குழியை எடுத்துக்கணும். அதுல வீட்டுல கிடைக்குற எல்லாக் கழிவுகளையும் கொட்டலாம். சமைச்ச கழிவு, சமைக்காத கழிவு. சைவம், அசைவம்னு எல்லாக் கழிவுகளையும் அதுல கொட்டலாம். குழி 80% நிரம்பினதும். அதுல மண்ணைப் போட்டு மூடிடணும். மூணு மாசம் கழிச்சு அதைத் திறந்து பார்த்தா முழுக்க மட்கி உரமாகியிருக்கும். அதை எடுத்துச் சலிச்சு பயன்படுத்தலாம்.

வேஸ்ட் டீகம்போஸர்
வேஸ்ட் டீகம்போஸர்

சமையல் செய்யாத கழிவுகளை உரமாக்க, வாய் அகலமான மண்பானை இல்லைன்னா பிளாஸ்டிக் டிரம் பயன்படுத்தலாம். டிரம்மோட கீழ்ப்பகுதியில, பக்கவாட்டுல சின்ன சின்னத் துளைகள் போட்டுடணும். காற்றோட்டத்துக்காக இந்தத் துளைகள் போடுறோம். அந்த டிரம்ல வீட்டுல கிடைக்குற கழிவுகளையெல்லாம் போடலாம். தக்காளி ரொம்ப ஈரப்பதமா இருக்கும். அதைக் கொஞ்சம் வெயில்ல காய வெச்சு போடலாம். இதுல கவனிக்க வேண்டிய விஷயம், கழிவுகள் ரொம்ப ஈரமாகவும் இருக்கக் கூடாது. அதே நேரம் முழுக்க காய்ஞ்சுப் போனதாகவும் இருக்கக் கூடாது. டிரம் நிறைஞ்சதும் அதைத் தனியா எடுத்து வெச்சுக்கணும். இன்னொரு டிரம்ல கழிவுகளைப் போடலாம். இப்ப கழிவுகள் நிறைஞ்ச டிரம்ல கொஞ்சம் மண்புழு உரம் போடலாம். இல்லைன்னா `வேஸ்ட் டீ கம்போசர்'னு ஒரு திரவம் கிடைக்குது. அதை வாங்கி அதுல ஊற்றலாம். அதுவும் கிடைக்காதவங்க திறன்மிகு நுண்ணுயிரினு சொல்லக்கூடிய ஈ.எம் கொஞ்சம் ஊத்தலாம். இது எதுவுமே கிடைக்காதவங்க காய்ஞ்ச சாணம் கொஞ்சம் போடலாம். இதையெல்லாம் போட்டு வாரம் ஒரு தடவை கிளறிவிட்டுகிட்டே இருந்தா ஒரு மாசத்துல கழிவுகள் மட்கி உரமாகிடும். இதுல ஆரஞ்சு தோல்கள், வெங்காய கழிவுகளை மட்டும் தவிர்க்கலாம். ஏன்னா சிலர் மண்புழுக்களையும் உள்ளே போடுறாங்க. இது ரெண்டும் புழுக்களுக்கு ஆகாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கழிவுகள் நிறைஞ்ச டிரம்மை தனியா வெச்சிடணும். அதுல பல்லி, எறும்பு அதிகம் வரும். பல்லி வர்றதால ஒரு பிரச்னையும் இல்லை. எறும்புகளைத் தடுக்க டிரம் சுத்தி மஞ்சள் தூளைப் போடலாம். ஆனா, மஞ்சள் போட்டா ஒருநாளைக்கு வராது. ஆனா, அடுத்த நாள் எறும்பு வந்திடும். அதுனால, ஒரு தட்டுல தண்ணியை ஊத்தி வெச்சு, அதுல டிரம்மை வெச்சுட்டா, எறும்புகள் தொந்தரவு இருக்காது. இதுல காஞ்ச குச்சிகளைப் போட்டா மட்க அதிக நாள் ஆகலாம். அதனால காய்கறி கழிவுகள், பழத்தோல்கள், காய்ஞ்ச பூக்கள், காய்ஞ்ச இலைதழைகள், முட்டை ஓடுகளை டிரம்ல போட்டா ஒரு மாசத்துல கழிவுகள் உரமாகிடும்.

Earthworm
Earthworm
Photo: Vikatan / Rakesh.P
மாடித்தோட்டத்துல பூச்சித் தொல்லையா... நீங்க செய்ய வேண்டியது இதுதான்! - வீட்டுக்குள் விவசாயம் - 7

இந்தக் கழிவுகள் உரமாகுறதை எல்லோரும் செய்யலாம். ஆனா, இதுக்கு ரொம்ப பொறுமை வேணும். கழிவுகளைப் போட்டவுடனே மட்கிடாது. அதுக்கான காலம் வரைக்கும் காத்திருக்கணும். வீட்டுல கிடைக்குற கழிவுகளை உரமாக்குறது மூலமா, கழிவுகள் பிரச்னையும் தீருது. உரச்செலவும் குறையுது. வீட்டுல கிடைக்கிற கழிவுகளை மட்க வெச்சு உரமாக்கிட்டோம். இப்ப அதை எப்படிப் பயன்படுத்துறதுன்னு கேள்வி வரும்.

இந்த உரங்களை எடுத்து ஒரு பைக்கு 15 நாளைக்கு ஒருதடவை வைக்கணும். அதிகமில்லை ஜென்டில்மேன், ஒரு கைப்பிடி வெச்சா போதும். வீட்டுத்தோட்டத்துல கீழ்ப் பகுதியில மண்ணுல வளர்ற மரமா இருந்தா மூணு மாசத்துக்கு ஒரு தடவை 4 கிலோ உரம் வைக்கலாம். இந்தக் கழிவு உரத்தை அப்படியே பயன்படுத்தாம, சிலர் ஊட்டமேற்றி பயன்படுத்துறாங்க. அப்படி செஞ்சா செடிகள் ரொம்ப ஆரோக்கியமா வளரும். இதை நாங்க அனுபவத்துல பார்த்திருக்கோம். கழிவு உரத்துல அசோஸ்பைரில்லம் மாதிரியான உயிர் உரங்களை வாங்கி கலந்து செடிகளுக்குப் பயன்படுத்தலாம். உயிர் உரங்களைக் கலந்து ஊட்டமேற்றும்போது அந்த உரங்கள்ல ஈரப்பதம் கொஞ்சமாவது இருந்துகிட்டே இருக்கணும். இந்த உரங்களைத் தனியா ஒரு பையில சேமிச்சு வைக்கலாம்'' என்றார்.

Waste
Waste
Photo: Vikatan . Saravanakumar.P

இனிமே சமையலறையில கிடைக்குற கழிவுகளை மட்கவெச்சு உரமாக்கி பயன்படுத்துங்க. அதுல சந்தேகம் இருக்குறவங்க 98656 19420 இந்த நம்பர்ல கனராஜ்கிட்ட கேட்டா விளக்கம் சொல்லுவார்.

வரும் வெள்ளிக்கிழமை அடுத்த பகுதியில வேறொரு பயனுள்ள தகவலோடு சந்திக்கிறேன். உங்களுடைய கருத்துகள் / கேள்விகளை கமென்ட்ல கேளுங்க!

- வளரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு