Published:Updated:

`செடிகளை மட்டுமல்ல; விதைகளையும் பாதுகாக்கணும்!' - மாடித்தோட்டம் ஆலோசனைகள் - வீட்டுக்குள் விவசாயம் 21

Terrace Garden
News
Terrace Garden ( Photo: Vikatan / Ramkumar.R )

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் பசுமையை உருவாக்க வழிகாட்டும் தொடர்..! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் - 21

Published:Updated:

`செடிகளை மட்டுமல்ல; விதைகளையும் பாதுகாக்கணும்!' - மாடித்தோட்டம் ஆலோசனைகள் - வீட்டுக்குள் விவசாயம் 21

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் பசுமையை உருவாக்க வழிகாட்டும் தொடர்..! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் - 21

Terrace Garden
News
Terrace Garden ( Photo: Vikatan / Ramkumar.R )

வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பாக பல்வேறு தகவல்களை இந்தப் பகுதியில் பார்த்துட்டு வர்றோம். வீட்டுத்தோட்டம் தொடர்பா கடந்த பாகத்துல பம்மல் இந்திரகுமார் சொன்ன ஆலோசனைகளின் தொடர்ச்சிதான் இந்த அத்தியாயம். விதைகளைச் சேமிக்கிறது பற்றியும், சில டிப்ஸ்களையும் பார்க்கலாம். வீட்டுத்தோட்டம் தொடர்பா உங்களுக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டால் கமென்ட் பாக்ஸ்ல பதிவு பண்ணுங்க. உங்களுக்கான விளக்கம் கொடுக்கப்படும். மாடித்தோட்ட விவசாயத்துல பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் பம்மல் இந்திரகுமார்.

பம்மல் இந்திரகுமார்
பம்மல் இந்திரகுமார்

``இன்றைக்கு மாடித்தோட்டத்துக்கு அவசியமானவை பாரம்பர்ய விதைகள். அவற்றுக்கே உரித்தான வீரியம் எப்போதும் குறையாது. மாடித்தோட்டத்திலிருந்து நாம் ஒருமுறை விதைகளைப் பெற்று அதை அடுத்த முறை விதைப்புக்குப் பயன்படுத்துவதுதான் இப்போது பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம், வெளியிலிருந்து வாங்கும் விதைகளில் முளைப்புத் திறன்கள் சந்தேகமாக இருப்பதுதான். ஏனெனில், எல்லா விதைகளுக்கும் ஒரு ஆயுள் உண்டு. விதைகளின் ஆயுளை சரியாகப் பாதுகாக்க சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் முளைப்புத்திறன், மகசூல் கொடுக்கும் திறன் ஆகியவை சரியாக இருக்கும்.

விதைகளின் மேற்பரப்பில் பாதுகாப்பாகக் கவசம் போல ஒரு உறை இருக்கும். அதை நீக்காமல் இருக்கும்வரை அந்த விதைகள் பாதுகாப்பாகத்தான் இருக்கும். அதற்குச் சரியான உதாரணம், நமது உடலின் மேல் தோலைச் சொல்லலாம். இந்தத் தோல் எனும் உறை எப்படி மனித உடலைக் காக்கிறதோ அதேபோல விதைகளின் மேல் இருக்கும் உறைகள் விதைகளைப் பாதுகாக்கும். அதற்காக விதைகளின் மேல் தோலை நீக்காமல் அப்படியே சேமிக்க வேண்டும் என்பதும் தவறு.

விதைகள்
விதைகள்

விதைகளை ஒருமுறை வாங்கி பயன்படுத்திவிட்டால் அடுத்தமுறை விதைகளை வெளியிலிருந்து வாங்கத் தேவை இல்லை. சில பாரம்பர்ய முறைகளைப் பின்பற்றினால் விதைகளைப் பாதுகாப்பது எளிமையான ஒன்றுதான். பிரித்தெடுக்கப்பட்ட விதைகளை அரை மணிநேரம் கோமியத்தில் ஊற வைத்து 6 மணிநேரம் நிழலில் காய வைக்க வேண்டும். இந்த விதைகளைப் பாதுகாக்கும் பாத்திரம் மிக முக்கியம். விதைகளைச் சேமிக்க பிளாஸ்டிக் டப்பாக்களை எப்போதுமே பயன்படுத்தக் கூடாது. பாரம்பர்ய முறைப்படி மண்பாத்திரங்களைப் பயன்படுத்திச் சேமிக்கலாம். மண் பாத்திரம் ஒரு நல்ல வழிமுறை. முந்தைய காலங்களில் மண் பாத்திரங்களில்தான் சேமிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. மண் பாத்திரம் கிடைக்காத நேரத்தில் மரத்தால் ஆன குடுவைகளிலோ, பீங்கான் குடுவைகளிலோ விதைகளைச் சேமித்து வைக்கலாம். அதேபோல பசு கோமியம் கிடைக்காதவர்கள் டம்ளரில் நீரை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு உப்பைச் சேர்த்துக் கலக்கி அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். கோமியத்தில் மஞ்சள் தூளைச் சிறிதளவு சேர்க்க வேண்டும். மஞ்சளைத் தூளாக வாங்காமல் கிழங்காக வாங்கி அதைப் பொடியாக்கி இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கலக்கிக் கொள்ளலாம். இந்தக் கரைசலில் அரை மணிநேரம் விதைகளை ஊற வைத்து நிழலில் உலர்த்த வேண்டும். அதேபோல வேப்ப இலை, நொச்சி இலை இரண்டில் ஏதாவது ஒன்றைக் காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது நாம் தயாராக வைத்திருக்கும் பாத்திரத்தில் கீழ்ப் பகுதியில் சிறிதளவு சாம்பலைப் பரப்பிக்கொள்ள வேண்டும். அதன் மேல் நொச்சி இலையைப் பரப்ப வேண்டும். அதன்மீது விதைகளைப் பரப்ப வேண்டும். விதைகளைப் பரப்பிய பின்னர் அதன் மீது மீண்டும் சிறிதளவு சாம்பலைப் பரப்ப வேண்டும். இந்த முறையைப் பயன்படுத்தி பூச்சிகள் தாக்காமல் நீண்டகாலம் விதைகளைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். அதற்காக அதிக வருடங்கள் அந்த விதை இருக்கும் எனச் சொல்ல முடியாது. முன்பே சொன்னதுபோல விதைகளின் ஆயுள்காலம் குறைவு. முடிந்தவரை ஓராண்டு காலம் வரைக்கும் அந்த விதைகளைச் சேமித்து வைக்க முடியும்.

விதைகள்
விதைகள்

அதேபோல மாடித்தோட்டத்தில் சில வழிமுறைகளும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். நானும் மாடித் தோட்டம் அமைக்கிறேன் என வீட்டைச் சேதப்படுத்தும் வேலையைச் செய்யக் கூடாது. மாடித்தோட்டம் அமைக்கும்போது, வீட்டுக்கு அது எந்தவிதமான சேதத்தையும் தராதவாறு கவனமாகப் பார்த்துச் செய்ய வேண்டும்.

ஒரு பங்கு தோட்ட மண்,

ஒரு பங்கு கரும்புச் சக்கை,

ஒரு பங்கு காய்ந்த சாணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் நீர் ஊற்றி வர வேண்டும். இதில் இரண்டு மண்புழுக்களையும் விட வேண்டும். புழுக்கள் மண்ணை நன்கு உழுதுவிடும். தகுந்த இடைவெளியில் விதைகளை நட வேண்டும். அப்போதுதான் செடி நன்கு வளரும். 15 நாள்களுக்கு ஒருமுறை இயற்கை உரம் இட வேண்டும். ரோஜா செடிக்கு காய்ந்த முட்டை ஓடு, இறால் தோல், மீன் முள் போன்றவை சிறந்தது. பூச்சி தாக்காமல் இருப்பதற்குச் சம அளவு இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு எடுத்து விழுதாக அரைத்துக்கொண்டு, ஒரு டம்ளர் நீரில் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த நாள் அந்தக் கரைசலோடு ஐந்து மடங்கு தண்ணீர் சேர்த்து வடிகட்டி, செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். இது இப்போது பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது. மிகச் சிறந்த, எளிமையான பாதுகாப்பு முறையும்கூட. செடிகளைப் பூச்சிகள் தாக்கவே தாக்காது.

அலங்காரச் செடிகளைத் தவிர்த்து அத்தியாவசியமான காய்கறி, கீரை, மூலிகை, மலர்ச் செடிகளை வளர்க்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கத்திரி, வெண்டை, தக்காளி, பீர்க்கங்காய், புதினா, மணத்தக்காளி, ஓமவல்லி, ரோஜா, சம்பங்கி, மல்லிகை போன்ற செடிகளை மாடித் தோட்டத்தில் விளைவிக்கலாம். துளசி, சோற்றுக் கற்றாழை போன்றவற்றை மாடித் தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டும். கீரைகளை பெரும்பாலும் மாடித் தோட்டத்தில் வளர்த்துச் சாப்பிடுவது நல்லது. வெளியில் விற்கப்படும் கீரைகளில் அதிக பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இப்போதுதான் ஆங்காங்கே இயற்கை கீரைகள் விளைய ஆரம்பித்துள்ளன.

சத்து நிறைந்த கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி போன்றவற்றையும்கூட வீட்டிலேயே வளர்க்கலாம். வெந்தயக் கீரையை விதைத்த 7-வது நாளில் எடுத்துச் சமைத்துச் சாப்பிட்டால், பல்வேறு விதமான நோய்களை அது தீர்க்கும். மாடித் தோட்டத்தில் (முருங்கையைத் தவிர) வேறு மரங்களை வளர்க்க வேண்டாம். காற்றின் வேகத்தில் மரங்கள் சாயும் ஆபத்து உண்டு, கட்டடத்துக்கும் அது நல்லதல்ல. காய்கறிக் கழிவைக் குப்பையாக நினைக்க வேண்டாம். அவற்றைச் சேமித்து, அதன்மூலம் கிடைக்கும் உரத்தைச் செடிகளின் வளர்ச்சிக்கு அடியுரமாகப் பயன்படுத்தலாம். தோட்டத்தின் இலைதழைகளையும் வீட்டில் சேரும் மக்கக்கூடிய குப்பைகளையும் சேகரித்து, அவற்றின் மூலம் இயற்கை உரத்தை நாமே தயாரிக்கலாம்.

Terrace Garden
Terrace Garden
Photo: Vikatan / Ramkumar.R

வீட்டுத்தோட்டம் அமைப்பது என்பது, ஒவ்வொருவரின் அனுபவம், ஆர்வத்துக்குத் தக்கபடி மாறுபடும். விதைகளை மண்ணில் விதைத்த நாள் முதல் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து வந்தால், நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இப்படிக் கற்றுக்கொள்வதன் மூலம், மாடித்தோட்ட விவசாயத்தில் நீங்களே நிபுணராகலாம். முயற்சியும், அதைச் சார்ந்த கற்றுக்கொள்ளும் பயிற்சியுமே நம்முடைய தேவை" என்றார், இந்திரகுமார்.

- வளரும்