Published:Updated:

கொத்தமல்லி, கீரைச் சாகுபடியில் மகசூலைக் குறைக்கும் வேரழுகல் நோய்! தீர்வு என்ன?

கொத்தமல்லி வயலைக் காட்டும் திம்மராஜு
பிரீமியம் ஸ்டோரி
கொத்தமல்லி வயலைக் காட்டும் திம்மராஜு

தீர்வு

கொத்தமல்லி, கீரைச் சாகுபடியில் மகசூலைக் குறைக்கும் வேரழுகல் நோய்! தீர்வு என்ன?

தீர்வு

Published:Updated:
கொத்தமல்லி வயலைக் காட்டும் திம்மராஜு
பிரீமியம் ஸ்டோரி
கொத்தமல்லி வயலைக் காட்டும் திம்மராஜு

விதைச்சோமா, அறுவடை செய்தோமா, விற்பனை செய்தோமா?னு இருக்கணும். மாசக்கணக்குல காத்துகிட்டு இருக்க முடியாது’ என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் மனநிலையாக இருக்கிறது.

குறைந்த நாள்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் வரிசையில் கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை வகைகள் முன்னணியில் இருக்கின்றன. விதைத்துவிட்டுத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும். எளிதில் வளர்ந்து வந்துவிடும் என்பதால் இதைப் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டிவருகிறார்கள் விவசாயிகள். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியைச் சுற்றியுள்ள பகுதிகள் கொத்த மல்லி, கீரைகள், புதினா சாகுபடிக்குப் பெயர் பெற்றவை. இதற்காகச் சூளகிரியில் பிரத்தியேக சந்தையே செயல்படுகிறது.

சூளகிரிக்கு அருகே உள்ளது எம்.தொட்டி என்ற கிராமம். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி திம்மராஜு கொத்தமல்லிச் சாகுபடி செய்து வருகிறார். அவருடைய சாகுபடி அனுபவத்தைப் பசுமை விகடனில் பதிவு செய்வதற்காக அவருடைய நிலத்துக்குச் சென்றோம். அங்கே செடிகள் போதிய வளர்ச்சியின்றி ஆங்காங்கே சொட்டை சொட்டையாகத் தெரிந்தது.

எதனால் இப்படி ஆனது? என்று கேட்டோம். “இந்தப் பகுதியில கொத்தமல்லி, புதினா, கீரைகளை அதிகம் விளைவிப்பாங்க. குறைஞ்ச நாள்கள்ல வருமானம் பார்த்திடுவோம். அப்படித்தான் இந்த முறை முதல்ல அரை ஏக்கர், பிறகு அரை ஏக்கர்னு ரெண்டு தவணையா தனியா (கொத்தமல்லி விதை) விதைச்சேன். முதல்ல விதைச்ச அரை ஏக்கர்ல விளைஞ்சு வந்த கொத்தமல்லியை வேரழுகல் நோய் தாக்கிடுச்சு. அதனால நிறையச் செடிகள் அழிஞ்சு போச்சு. அதனாலதான் சொட்டை சொட்டையாக இருக்குது. மீதி அரை ஏக்கர்ல இப்ப விளைஞ்சுட்டு வருது. அது என்ன ஆகும்னு தெரியல” என்று ஆதங்கப்பட்டவர், வயல் முழுக்கச் சுற்றிக் காட்டினார்.

கொத்தமல்லி வயலைக் காட்டும் திம்மராஜு
கொத்தமல்லி வயலைக் காட்டும் திம்மராஜு

“எனக்கு மொத்தம் ரெண்டரை ஏக்கர் நிலம் இருக்கு. என்கிட்ட ரெண்டு நாட்டு மாடுகள் இருக்கு. அடியுரமா எருவை கணக்கு வழக்கு இல்லாம நிறைய கொடுப்பேன். அதுவும் கொத்தமல்லிங்கறதால அரை ஏக்கர்ல ரெண்டு டிராக்டருக்கு மேல எருவைக் கொட்டினேன். ஏக்கருக்கு 16 கிலோ விதைகள். ஒரு கிலோ 400 ரூபாய்னு வாங்கிட்டு வந்து விதைச்சு, பாசனம் செய்திட்டு வந்தேன். செடி வளர்ந்த பிறகுதான் நோய் இருக்குதுனு தெரிஞ்சது. ஆனா, இது வேரழுகல் நோய்னு ஆரம்பத்திலயே தெரியல. சரி... பூச்சிக்கொல்லி தெளிச்சு பார்ப்போம்னு ஒருமுறை தெளிச்சுவிட்டேன். அதுக்கும் ஒண்ணும் சரியாகல. பிறகு அக்கம் பக்கத்து விவசாயிகள்கிட்ட சொன்னப்பதான் தெரிஞ்சது, வேரழுகல் நோய்க்குப் பூச்சிக்கொல்லி தீர்வல்ல. அது மண்ணுக்குக்குள்ள நடந்திருக்கிற விஷயம். மண்ணுக்கு ஏதோ கொடுக்க வேண்டிய ஊட்டத்தை சரியா கொடுக்காம போய்ட்டேன்னு உணர்ந்தேன்.

நோய் தாக்குதலால ஏக்கருக்கு 14,000 கட்டுகள் கிடைக்க வேண்டிய இடத்துல 5,000 கட்டுகள்தான் கிடைக்கும்போல இருக்கு. முதல்ல விதைச்ச அரை ஏக்கர்ல 2,000 கட்டுகள்தான் கிடைச்சிருக்கு. இன்னும் அரை ஏக்கர்ல 3,000 கட்டுகள் கிடைக்கும். ஒரு ஏக்கர் கொத்தமல்லிச் சாகுபடிக்கு 15,000 ரூபாய் செலவு செஞ்சிருக்கேன். கொத்தமல்லி ஒரு கட்டு 3 ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரைதான் விலை போகுது. சராசரியா 4 ரூபாய்னு வெச்சுகிட்டா 5,000 கட்டுக்கு 20,000 ரூபாய்தான் வருமானம். செலவு போக 5,000 ரூபாய்தான் நிக்கும். வேரழுகல் நோயைக் கண்டுக்காமல் விட்டதால இந்தப் போகம் வருமானம் போச்சு” என்று நொந்துகொண்டார் திம்மராஜு.

கொத்தமல்லி
கொத்தமல்லி

வேரழுகல் நோயை இயற்கை விவசாயத்தில் கட்டுப்படுத்துவது குறித்துக் காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரைச் சேர்ந்த விவசாயி பரத்திடம் கேட்டோம். “நாங்க கீரை, கொத்தமல்லியைச் சுழற்சி முறையில சாகுபடி செய்துட்டு வர்றோம். கொத்தமல்லியோட சாகுபடி காலம் 35 - 45 நாள்கள். கொத்தமல்லி, கீரை போன்ற பயிர்களோட முக்கியப் பிரச்னை வேரழுகல் தான். இதைக் கட்டுப்படுத்துறதுக்கு மூணு வழிகள் இருக்கு. அதைச் செய்தாலே போதும், கொத்தமல்லி, கீரை சாகுபடியில் பாதிப் பிரச்னை தீர்ந்துடும். கொத்தமல்லி, கீரைக்கு உழவு ஓட்டிவிட்டு அடியுரமா எரு (தொழுவுரம்) கொடுக்குறது விவசாயிகளோட வழக்கம். அதிலுள்ள சின்னச் சின்ன புழுக்களாலதான் (Nematodes) இந்தப் பிரச்னை ஏற்படுது. இதைப் பெரும்பான்மையான விவசாயிகள் கண்டுக்கிறதே இல்லை. இதற்குத் தீர்வு எருவோடு நுண்ணுயிர் உரங்களைக் கலந்து கொடுக்கணும். இப்படிக் கொடுக்கும்போது தான் பிரச்னை தீரும். அதாவது அரை ஏக்கர் கொத்தமல்லிச் சாகுபடிக்கு 1,000 கிலோ (ஒரு டன்) எருவுடன், தலா 5 கிலோ சூடோமோனஸ், பாஸ்போ- பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம் கலந்துகொள்ள வேண்டும். அதில் லேசாகத் தண்ணீர் தெளித்து ஒருநாள் நிழலில் வைக்க வேண்டும். பிறகு, அதை விதைப்புக்கு முன்போ விதைத்த பிறகோ கொடுத்தால் வேரழுகல் நோய் வராது. இது கொத்தமல்லிக்கு மட்டுமில்ல. கீரைகளுக்கும் பொருந்தும்.

கீரைச் சாகுபடி
கீரைச் சாகுபடி

தொடர்ந்து ஒரே நிலத்தில கொத்தமல்லியே சாகுபடி செய்யக் கூடாது. சுழற்சி முறையில் வேற வேற பயிர்களைச் சாகுபடி செய்யணும். ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் சாகுபடி செய்வதற்கான இடைவெளி குறைந்தபட்சம் ஒரு மாசமாவது இருக்கணும்’’ என்று தீர்வுகளை அடுக்கியவர், சாகுபடி குறித்த தகவலுக்குள் புகுந்தார்.

பரத்
பரத்

“கொத்தமல்லி ஒரு கிலோ விதைத்தால் 800-1,000 கட்டுகள் கிடைக்கும். ஒரு கிலோ விதைக்க 5-8 சென்ட் இடம் போதுமானது. 35-ம் நாளுக்குள் மேல் அறுவடைக்குத் தயாராகும். 7-10 நாள்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். ஒவ்வொரு பாத்தியிலும் வெவ்வேறு நாள்கள் எனச் சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம். அரை ஏக்கருக்கு 4,000-7,000 கட்டுகள் கிடைக்கும். இந்தக் கட்டுகள் கீரை கட்டு போன்ற பெரிய கட்டு. ஒரு கட்டு சந்தையில 3 ரூபாய்ல இருந்து 6 ரூபாய் வரை போகுது. சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களைச் சுற்றியுள்ள விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்தால் ஒரு கட்டு 10 ரூபாய்க்குக்கூட விற்க முடியும்” என்றார்.

வேரழுகல் நோய்க்குப் பரத் சொல்லிய ஆலோசனைகளைத் திம்மராஜுவிடம் தெரிவித்தோம். அனைத்தையும் பொறுமை யாகக் கேட்டுக்கொண்டவர், “இதுதான் சமாச்சாரமா... இந்த யோசனைகளைச் செயல்படுத்திப் பார்க்கிறேன்” என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு,
பரத், செல்போன்: 99766 92219

கொத்தமல்லி
கொத்தமல்லி

இப்படித்தான் கொத்தமல்லிச் சாகுபடி!

கொத்தமல்லிச் சாகுபடிக்குத் தேர்ந்தெடுக்கும் நிலம் வடிகால் வசதி கொண்டதாக இருக்க வேண்டும். ஆடிப்பட்டம் சிறந்தது. இரண்டு முறை உழவு ஓட்ட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 2,000 கிலோ நுண்ணுயிர் உரங்களால் ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரத்தைக் கொட்டி களைத்து விட வேண்டும். மூன்றாவது உழவின்போது ரோட்டோவேட்டர் கருவியால் ஓட்டி மண்ணைப் பொலபொலப்பாக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

தண்ணீர்ப் பாசனத்துக்கு ஏற்றவாறு சதுரப் பாத்திகள் அல்லது மேட்டுப் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். விதைகளை மணல்ல கலந்து தூவி விடலாம் அல்லது 5 அங்குல இடைவெளியில் விதைகளை நடவும் செய்யலாம். 7-10 நாள்களில் முளைத்து வெளியே வரும். வாய்க்கால் பாசன முறை அல்லது தெளிப்புநீர்ப் பாசன முறை எனத் தேவைக்கேற்றவாறு பாசன முறையை அமைத்துக்கொள்ளலாம். அதிக தண்ணீர் பாய்ச்சக் கூடாது. நிலத்தை ஈரப்படுத்திக்கொண்டே வந்தால் போதும். 10-ம் நாள் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். தொடர்ந்து 20, 30-ம் நாள்களிலும் ஜீவாமிர்தத்தைக் கொடுத்து வர வேண்டும். 15-ம் நாளில் ஒரு லிட்டருக்கு 300 மி.லி என்ற அளவில் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தால் ஐந்திலைக் கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மி.லி என்ற கணக்கில் கலந்து தெளிக்கலாம். கொத்தமல்லியின் இலைகள் மென்மையானவை. அதனால், பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டியை அதிகமாகக் கொடுத்தால் இலைகள் கருகிவிட வாய்ப்புள்ளது. 45-ம் நாள்களுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். அதற்கு மேல் அறுவடை செய்யாமல் விட்டாலும் பிரச்னையில்லை. 70-90 நாள்களில் விதைகளுக்காக அறுவடை செய்யலாம்.

கீரைச் சாகுபடி
கீரைச் சாகுபடி


மேற்சொல்லிய முறைகளே கீரைகளுக்கும் பொருந்தும். சிறுகீரை, தண்டுக்கீரை, வெந்தயக் கீரை, பருப்புக் கீரை, பொன்னாங்கண்ணி எனப் பட்டியல் நீளமானது. ரகத்தைப் பொறுத்து 18 முதல் 30 நாள்களுக்குள் அறுவடை செய்யலாம். கீரைக்குச் சதுரப் பாத்திகள் அல்லது மேட்டுப் பாத்திகளையும் அமைக்கலாம்.

எவ்வளவு வருமானம் கிடைக்கும்

‘‘அரை ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 5,000 கட்டுகளை எதிர்பார்க்கலாம். ஒரு கட்டு கொத்தமல்லி சராசரியாக 5 ரூபாய் என்று விற்பனையானாலே 25,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் உழவு, விதை, களை, அறுவடை என்று 7,500 செலவு போக 17,500 ரூபாய் லாபமாக் கிடைக்கும். 45 நாள்களில் ஏக்கருக்கு 35,000 ரூபாய் லாபம் பார்க்க முடியும். இதையே நேரடியாக விற்பனை செய்தால் ஒரு கட்டு கொத்தமல்லியை 10 ரூபாய்க்குக்கூட விற்க முடியும். குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் கொத்தமல்லிக்கான விலை நன்றாக இருக்கும்’’ என்கிறார்கள் விவசாயிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism