தமிழகத்தின் முக்கிய வணிக நகரான விருதுநகரில் இயங்கி வந்த சந்தைகளைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும், சந்தை வாய்ப்புகளைப் பற்றியும் இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். பருத்தி, மிளகாய் வத்தல், தனியா, பருப்பு ஆகியவற்றின் வரிசையில் ஏலக்காயும் விருதுநகர் சந்தையில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
நறுமணப் பொருள்களில் அதிக வாசனை பரப்பும் ஏலக்காய் சந்தை குறித்து இந்த இதழில் பார்ப்போம்.
விருதுநகரில் நான்காவது தலை முறையாக ஏலக்காய் வியாபாரம் செய்து வருபவரும், எஸ்.பி.ஜி.ராமசாமி நாடார் ஏலக்காய் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளருமான நித்தியானந்தனைச் சந்தித்துப் பேசினோம். ‘‘சங்க காலத்திலேயே மருந்து சேர்ப்புக்காகவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்புக்காகவும் ஏலக்காய் பயன்படுத்தப்பட்டுச்சு. சைவ, அசைவ உணவுல நறுமணத் துக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருது. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவல்பூ, மிளகு, திப்பிலி, சுக்குன்னு இந்த 6 வகைப் பொருள்களைக் கொண்டுதான் ‘ஏலாதி’ சூரணம் செய்வாங்க. இது வயிற்றுப் புண்ணைச் சரி செய்யும்னு சித்த வைத்தியர்கள் சொல்றாங்க.

பாக்குறதுக்கு வெளிர்பச்சை நிறத்துல முப்பட்டமான மெல்லிய தோலையும், அதுக்குள்ள கடுகு அளவுல மணமுள்ள விதைகளும் இருக்கிற காய்தான் ஏலக்காய். இந்த விதையை ‘ஏலவரிசி’ (ஏல அரிசி)னு சொல்வாங்க. மன்னர்கள் காலத்தில ஏலக்காய், இலவங்கத்தைப் பொன்முடிப்பு போல பட்டுத்துணியில முடிப்பாக் கட்டிதான் பரிசுப் பொருளாகக் கொடுத்திருக்காங்க. அந்த ஏல முடிப்பைப் பொற்காசுகளைப் போலவே மதிப்பாங்களாம் பரிசு வாங்குறவங்க.
விருதுநகர்ல ஆரம்பத்துல பருத்தி விற்பனைக்காகச் சந்தை ஆரம்பிச்சாலும், அதுக்கு அடுத்தபடியா வத்தல், மல்லி, பருப்பு, எண்ணெய், நவதானியங்களையும் வாங்க விற்க வியாபாரம் நடந்துச்சு. அதோட மலைப்பகுதி மூலிகைகள் விற்பனைக்கு வர ஆரம்பிச்சப்போ, அதே மலைச் சரக்குகளான ஏலக்காய், மிளகு, கிராம்பு, பட்டை, ஜாதிக்காய்களும் மாட்டு வண்டிகள்ல விருதுநகருக்கு வந்து இறங்குச்சு. இங்கவுள்ள பேட்டையில தரம் பிரிச்சு விற்பனைக்காக அனுப்புனாங்க. இதுல வெளி மாநிலங்கள், வெளிநாடுகள்ல அதிக தேவையும், வரவேற்பும் ஏலக்காய்க்குதான் இருந்துச்சு. அதன் நறுமணம்தான் இதுக்குக் காரணம்.
தமிழ்நாட்டுல தேனி மாவட்டம் குமுளி, வண்டிப்பெரியார் சுற்று வட்டாரப் பகுதிகள்ல ஏலக்காய் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுச்சு. அங்க இருந்துதான் ஏலக்காய், விருதுநகருக்கு வந்து சேரும். தொடர்ந்து போடி, தேவாரம், கம்பம் பகுதிகள்லயும் ஏலக்காய் சாகுபடி பரவுச்சு. வடகிழக்குப் பருவமழையும், தென் மேற்குப் பருவமழையும் தென் மாவட்டங்கள்ல சரியாப் பெய்யுறதும் ஏலக்காய்ச் சாகுபடிக்கு உகந்ததா அமைஞ்சது.

மலைச்சரிவுகளில் விளைந்த ஏலக்காய்
ஆங்கிலேயர்களுக்கு அடிக்கடி காபி குடிக்கிற பழக்கம் உண்டு. அதுமட்டுமல்லாம மலைப்பாங் கானப் பகுதிகள்ல தேயிலை எஸ்டேட்டுகளை இஷ்டத்துக்கும் ஆரம்பிச் சாங்க. மலையில 3,500 அடியில இருந்து 4,000 அடி உசரத்துல தேயிலை விளையும். ஆனா, 2,500 அடியில இருந்து 3,000 அடி உசரத்துலயே ஏலக்காய் விளைஞ்சுடும். அதனால தேயிலை விளையுற மலைப்பகுதியோட சரிவுகள்ல யெல்லாம் ஏலக்காயைப் பயிரிட்டாங்க. இப்படித்தான் ஏலக்காய் சாகுபடி பரப்பளவு கூடுச்சு. ஆரம்ப காலங்கள்ல விருதுநகர்ல இருந்து சரக்கு ரயில்ல டெல்லி, பாம்பே, கல்கத்தாவுக்கு அதிக அளவுல ஏலக்காய் ஏற்றுமதியாச்சு.

பிரிட்டிஷ்காரங்க ஏலக்காயை ‘ஆலப்பிக் கிரீன்’னுதான் சொல்வாங்க. மலைப்பாதைகள் வழியா ஏலக்காய்ச் சரக்கைத் தூக்கிட்டு, கேரளா மாநிலத்துல உள்ள ஆலப்புலாவுக்குக் கொண்டு போவாங்க. அங்க இருந்து படகுலதான் ஏற்றுமதிக்காக அனுப்புவாங்க. ‘ஆலப்புழா’வுல இருந்து ஏற்றுமதி ஆனதுனால தான் அந்தப் பேரு. அதுக்கப்புறம்தான் கொச்சி, தூத்துக்குடி துறைமுகம் தொடங் கப்பட்டுச்சு. ஏலக்காயைக் கொள்முதல் செய்யுறதுக்காக ‘டாடா’, ‘வல்கார்ட் பிரதர்ஸ்’னு சில முன்னணி கம்பெனிகள் விருதுநகர் மாரியம்மன் கோயில் பொட்டல் பக்கத்துல சுத்தி கடை வச்சிருந்தாங்க.
ஒட்டகத்தில் ஏற்றுமதியான ஏலக்காய் மூட்டைகள்
விருதுநகர்ல இருந்து, அந்த காலத்திலேயே அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருக்கோம். முதல்ல பாம்பேவுக்குக் கோணிச் சாக்குல 50 கிலோ ஏலக்காயை எடைபோட்டு மூட்டையாக் கட்டி அனுப்புவோம். இங்க இருந்து, அரபு நாடுகளுக்கு அனுப்புற மூட்டையை இன்னொரு சணல் சாக்குக்குள்ள போட்டு, அந்தச் சாக்கோட வெளிப்புறமா ‘பெயின்ட்’ அடிக்கிறது மாதிரித் ‘தார்’ அடிப்பாங்க. அது காய்ஞ்சதும்தான் மூட்டையைப் பொதியா ஏத்தி விடுவாங்க. தார் அடிச்சுக் காயுறதுக்கே ஒரு நாள் ஆயிடும். இதை, ‘மூடா பேக்கிங்’னு சொல்லுவாங்க. இந்த முறையில அனுப்ப காரணம் இருக்கு. மழை பெய்ஞ்சாலும் நம்ம மூட்டையில தண்ணி இறங்காது. வாசனையும் வெளியப் போகாது.

தரம் பிரித்த விருதுநகர் வியாபாரிகள்
விருதுநகர் தொழில்துறைச் சங்கத்துல 15 வருஷங்கள் தொடர்ந்து தலைவரா இருந்தேன். அந்த நேரத்துலதான் ஏலக்காயைத் தரம் பிரிச்சு வித்தா என்னன்னு கூட்டத்துலப் பேசி முடிவெடுத்தோம். காமராசர் முதலமைச்சரா இருந்தப்போ அவரைச் சந்திச்சு, நம்மூர்ல இருந்து ஏற்றுமதி செய்யுறப் பொருள்களுக்கு ‘தரம்’ பிரிச்சு விற்பனை செய்யலாம்கிறதைச் சொன்னேன்.
‘நீங்க சொல்லுற மாதிரி தரம் பிரிச்சு ஏத்துமதி செஞ்சா என்ன பயன்?’ன்னு கேட்டார். விளை பொருளை அப்படியே விற்கிறதுக்குப் பதிலா, ‘சைஸ்’ வாரியா தரம் பிரிச்சோம்னா, ஒவ்வொரு தரத்துக்கும் ஒவ்வொரு விலை கிடைக்கும்யா. இதனால, விவசாயிங்க, வியாபாரிங்களுக்கும் லாபம், எந்த அளவுல பொருள் வேணுமோ அதுக்கான விலையைக் கொடுத்து வாடிக்கை யாளர்களும் வாங்கிக்குவாங்கய்யா” எனச் சொன்னோம். ‘அடடே... இதுவும் நல்ல யோசனை யாதான் இருக்கு’ன்னு சொன்னார்.
உடனே விருதுநகர் தொழில்துறைச் சங்க கமிட்டியாளர்கள் கூடி, AGEB-1 (Alapee Green Export Bold), AGB- (Alapee Green Bold), AGS- (Alapee Green Superior), AGL - (Alapee Green Lights)ன்னு ஏலக்காயை நாலு ரகமாப் பிரிச்சோம். இதைப் பார்த்துதான் மல்லி, வத்தல் வியாபாரிங்க தரம் பிரிச்சாங்க. கப்பல் சேவை, விமானச் சேவையும் ஆரம்பிச்ச பிறகு, சணல் சாக்குல ‘பேக்கிங்’ செய்யுறதைக் குறைச்சுட்டு, மரப் பெட்டிகள்ல பத்து பத்து கிலோ போட்டு ஏற்றுமதி செஞ்சோம். அதுக்கு ஜெர்மனி, ரஷ்யா, போலந்து நாடுகள்ல நல்ல வரவேற்பு இருந்துச்சு.

ரசாயன உரத்தால் சரிந்த ஏலக்காய் வணிகம்
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்துல மட்டும் 12 லட்சம் ஏக்கர், தமிழ்நாட்டுல தேனி மாவட்டம், குமுளி சுற்று வட்டாரப் பகுதியில சுமார் 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவுல ஏலக்காய் பயிரிடப்படுது. ஏலக்காய்க்கு அதிக தேவை இருக்கிறதுனால அதன் சாகுபடிப் பரப்பளவும் அதிகரிச்சது. இன்னும் அதிகரிச்சுட்டே இருக்கு. ஆனா, அதிகமான மகசூல் எடுக்கணும்கிற நினைப்புல விவசாயிங்க அதிகப்படியான ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க ஆரம்பிச்சாங்க.
இங்க இருந்து ஏற்றுமதியாகுற ஏலக்காய்ல ரசாயனப் பூச்சிகொல்லி தெளிச்சிருக்கிறது அரேபிய நாடுகள்ல, ஆய்வகச் சோதனையிலக் கண்டுபிடிச்சுட்டாங்க. அதனால சரக்கைத் திருப்பி அனுப்பினாங்க. ‘ரசாயன பயன்பாடே இருக்கக் கூடாது. ரசாயனம் தெளிச்ச சரக்கு தேவையில்ல’ங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தாங்க. ஜப்பான், ஐரோப்பா, சவுதி நாடுகளும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதோடு ஏலக்காய் ஏற்றுமதியில பெரிய சரிவு ஏற்பட்டுச்சு. இதனால, வருஷத்துக்கு 200-ல இருந்து 300 டன் ‘ஆர்டர்’ கையவிட்டுப் போச்சு. இதை விவசாயிங்க மத்தியில எடுத்துச் சொல்லியும் ரசாயன உரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியல.
கேரள மாநில வியாபாரிங்க செயற்கை பற்றாக்குறையை உருவாக்கி விலையையும் ஏத்திட்டாங்க. நாலு வருஷத்துக்கு முன்னால யெல்லாம் ஒரு கிலோ ஏலக்காய் 2,500 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரைக்கும் விலை ஏறுச்சு. இந்த விலையேற்றத்துனால தமிழ்நாட்டை விட்டுக் கேரள வியாபாரிகள் விலையை நிர்ணயம் செய்யுற அளவுக்குச் சந்தையின் போக்கு மாறுச்சு.

ஒவ்வொரு வருஷமும் செப்டம்பர் மாசத்துல இருந்து பிப்ரவரி மாசம் வரைக்கும் தான் ஏலக்காய் ‘சீஸன்’. இதுல நவம்பர், டிசம்பர் மாசம்தான் மகசூல் உச்சத்துல இருக்கும். தமிழ்நாட்டுல ஆரம்பத்துல 10 ஏலக்காய் வியாபாரிங்க இருந்தாங்க. இப்போ 4 பேர்தான் இருக்கோம். ஆனா, கேரளாவுல மட்டும் வியாபாரிகளின் எண்ணிக்கை வருஷா வருஷம் அதிகரிச் சுட்டு இருக்கு. 5 வருஷத்துக்கு முன்ன வரைக்கும் ஒரு கிலோ ஏலக்காய் 600 ரூபாய் முதல் 800 ரூபாய்தான் விலை இருந்துச்சு. விலை வித்தியாசமும் பெருசா இல்ல. கேரளா வியாபாரிகளாலதான் ஒரே வருஷத்துல 2,000 ரூபாய் வரை விலை வித்தியாசம் ஏற்பட்டுச்சு. ரசாயன உரத்தால ஏற்பட்ட சரிவு, கேரள வியாபாரிகளின் ஆதிக்கத்துனால மூணு வருஷமா தமிழ்நாட்டுல இருந்து 600 டன் வரைதான் ஏற்றுமதியாகுது.
இறைச்சிக்கு வாசனை கூட்டிய ஏலக்காய்த்தூள்
ரஷ்யாவுக்கு வியாபாரிங்கயெல்லாம் சேர்ந்து சுற்றுலாப் போயிருந்தப்போ ஆடு, கோழி இறைச்சிக் கடைகள்ல இறைச்சி மேல மஞ்சள் தூளைப் பூசியிருந்தாங்க. ‘எதுக்காக மஞ்சத்தூளைப் பூசியிருக்கீங்க’ன்னு கேட்டோம். ‘வாசனைக்குத்தான்’னு சொன்னாங்க. ‘மஞ்சத்தூளோட ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தடவிப் பாருங்க’ன்னு சொன்னேன். இறைச்சி ஏலக்காய் மணத்தோடு இருந்துச்சு. உடனே எனக்கு ரஷ்யா ‘ஆர்டர்’ கிடைச்சது. அதுல ஒரு கடைக்காரர், ‘ஏலக்காய் விற்குற விலையில இதுக்குன்னு நாங்க வாங்கிப் பொடியாக்கித் தடவ முடியுமா?’ன்னு கேட்டார்.

“நீங்க சொல்றது சரிதான். முழு ஏலக்காயை வாங்கினா உங்களுக்கு விலை கட்டுப்படி யாகாது. அதனால, 100 கிலோ முழு ஏலக்காய்க்குப் பதிலா 70 கிலோ ஏலந்தொலி யும், 30 கிலோ ஏலவரிசியும் வாங்கிப் பொடியாக்கிடுங்க’ன்னு ஒரு யோசனை யைச் சொன்னேன். உடனே என் கையைப் பிடிச்சுப் பாராட்டினார். முழு ஏலக்காய் மட்டுமில்லாம, ஏலக்காய் தரம் பிரிக்கும் போது உடையுற ஏலந்தொலி, ஏலவரிசி யையும் நல்ல விலைக்கு வித்தது விருதுநகர் வியாபாரிங்கதான். ஐரோப்பாவுக் குப் போயிருந்தப்போ வீட்டுல பெண்கள் தயார் செய்யுற ரொட்டியில, ரொட்டி மாவுகூட ஏலக்காய்த்தூளைச் சேர்த்துப் பிசையச் சொன்னோம் அதுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சது” என்று சொல்லி முடித்தார்.
- பெருகும்
மாட்டுவண்டிகளில் வந்த ஏலக்காய்
‘‘இங்கவுள்ள வியாபாரிங்க, நேரடியா தேனிக்குப் போயி கொள்முதல் செய்வாங்க. கொள்முதல் செஞ்சுட்டு சரக்கு ஏத்துன மாட்டு வண்டியில ஏறி வராம, தனி மாட்டு வண்டியில தான் ஊருக்கு வருவாங்க.
காரணம், பணத்தை யாரும் கொள்ளையடிச்சிடக் கூடாதேங்கிற பயம். இதுல உண்மை என்னன்னா, பணத்தைக் கொள்ளையடிக்கிறதைவிட ஏலக்காய் மூட்டைதான் கொள்ளை போகும். கொள்முதல் செய்யுற மொத்த ஏலக்காய்ச் சரக்கும் போடிக்குக் கொண்டு வந்து, அங்க இருந்து மாட்டுவண்டிகள் கிளம்பும். போடியில இருந்து ஆண்டிபட்டி கணவாய் வழியா சரக்கு வரும். மண்டல மாணிக்கம்ங்கிறவர் சரக்குகளை விருதுநகருக்குப் பத்திரமா கொண்டு வந்து இறக்குறதுல கைதேர்ந்த ஆளு. பெரும்பாலும், எல்லா வியாபாரிகளும் சரக்கை ஏத்தி, இறக்க அவரைத்தான் கூப்பிடுவாங்க.
அப்பவே சொந்தமா 12 மாட்டு வண்டி வச்சிருந்தார். வண்டி மாடுகளைப் பார்த்தா ஜல்லிக்கட்டுக் காளைகளைப் போல திமிறிக்கிட்டு நிக்கும். சரக்கை ஏத்தின பிறகு, மாட்டு வண்டி மேல நின்னுக்கிட்டு கையில வேல் கம்பைப் பிடிச்சுக்கிட்டு மீசையைத் திருகிகிட்டே வலது பக்கமும், இடது பக்கமும் கண்ணை உருட்டிப் பார்த்துக்கிட்டே வருவாரு. குறிப்பிட்ட ஊர்கள் தாண்டினதும், ஒவ்வொரு வண்டியா மாறி மாறி ஏறி வருவாராம். எல்லா வண்டிக்காரங்களுக்குமே கம்பு சுத்தவும், சண்டை போடவும் தெரியும். திருடனுங்க திருட வந்தாலும் கம்பு சுத்தி தூரத் துரத்தி விடுவாங்களே தவிர, கம்பால அடிச்சு யாரையும் ரத்தக் காயப்படுத்த மாட்டாங்க. ராத்திரியிலக்கூடக் கையில தீப்பந்தத்தை வச்சுக்கிட்டு வருவாங்க, வண்டியும் அது பாட்டுக்கு வந்து சேரும்’’ என்கிறார் நித்தியானந்தன்.