நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.7 லட்சம்!தென்னை, காடை, கோழி வளர்ப்பு...

கோழிகளுடன் பிலிப்ஸ்-ஜெனிட்டா தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
கோழிகளுடன் பிலிப்ஸ்-ஜெனிட்டா தம்பதி ( ம.அரவிந்த் )

கால்நடை

ஞ்சாவூர் மாவட்டம், திருவையாறிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ராயம்பேட்டை கிராமம். சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்த பகுதி. பச்சை பசேல் எனப் பசுமையாகக் கண்களுக்கு விருந்தளிக்கிறது. வயல்வெளிகளுக்கு நடுவில் அமைந் துள்ள தென்னந்தோப்பில் மரங்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. கருமேகங்கள் சூழ மழை வரக் காத்திருந்த ஒரு காலைவேளையில் பிலிப்ஸ் என்ற விவசாயியைச் சந்தித்தோம். கோழி மற்றும் காடைகள் குடிப்பதற்காக, பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந் தவர் மகிழ்ச்சியோடு பேசினார்.

‘‘சுத்துப்பட்டுல நாங்க வளர்க்குற கோழி, காடைக்குக் கிராக்கி அதிகம். ரசாயன உரம் எதுவும் போடாம இயற்கை முறையில தீவனங்கள் கொடுத்து வளர்க்குறோம். இது எல்லோருக்குமே தெரியும். அதோட மெயின்ரோட்டுல நானே கறிக்கடையும் நடத்திக்கிட்டு வர்றேன். அதனால நிறைய பேர் நம்பிக்கையோட என் கறிக்கடைக்கு வர்றாங்க’’ உற்சாகமாகச் சொன்னவர், தண்ணீர் வைக்கும் பணியை முடித்துவிட்டு வந்து பேசத் தொடங்கினார்.

‘‘எங்க 2 ஏக்கர் நிலத்துல விவசாயம் பார்த்துக்கிட்டு வந்தோம். இது, தாழ்வான பகுதி. சுத்தியும் வயல்வெளியா இருக்குறதால மழைக்காலத்துல தண்ணி தேங்கிடும். தண்ணி வடிய வழி இருக்காது. அதனால நெல் மகசூல்ல ரொம்பப் பாதிப்பு இருக்கும். இதுக்கு மாற்றா என்ன செய்யலாம்னு யோசிக்கும்போதுதான், நெல் விவசாயத் துக்குப் பதிலா தென்னை வளர்ப்பில ஈடுப டலாம்னு முடிவெடுத்தாங்க. 25 வருஷத்துக்கு முன்னாடி நெல் விவசாயத்தைக் கைவிட்டுட்டு, தென்னங்கன்னுகளை ஊன்றிட்டாங்க.

காடைகளுடன் பிலிப்ஸ்-ஜெனிட்டா தம்பதி
காடைகளுடன் பிலிப்ஸ்-ஜெனிட்டா தம்பதி

ஆண்டுக்கு 18,000 தேங்காய்கள்

செழிப்பா வளர்ந்த தென்னைங்க பிள்ளையா மாறி, வருமானம் கொடுத்து கைகொடுக்க ஆரம்பிச்சது. இப்ப 250 தென்னை மரங்கள் வளர்ந்து மகசூல் கொடுக்குது. இதோடு 150 தென்னங்கன்றுகள் நட்டு வளர்த்துக்கிட்டு வர்றோம். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை தேங்காய் வெட்டுவோம். வருஷத்துக்கு 6 வெட்டு. ஒரு வெட்டுக்கு 3,000 தேங்காய் கிடைக்கும். ஆக மொத்தம் 18,000 காய்கள் கிடைக்கும். ஒரு காய் 10 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். அந்த வகையில 1,80,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. செலவு 80,000 ரூபாய் போனாலும் 1,00,000 ரூபாய் லாபம். 6 மாசத்துக்கு ஒரு தடவை தென்னை மரங்கள்ல கூலிக்கு ஆளுங்களை வெச்சு அசடு எடுப்போம்’’ என்றவர், காடை வளர்ப்பு பற்றித் தகவல் களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘பி.காம் பட்டதாரியான நான், வேலைக்குப் போகாம விவசாயத்துல இறங்கிட்டேன். தென்னையில போதுமான வருமானம் வந்தாலும் கூடுதலா வேற எதாவது செய்யலாம்னு நெனச்சு ஜப்பானிய காடை, சிறுவிடை நாட்டுக்கோழி வளர்ப்புல இறங்கினேன்.

தென்னை மரங்களுக்கு இடையில ரெண்டு கீற்றுக் கொட்டகை அமைச்சேன். அதுல காடை, சிறுவிடை நாட்டுக்கோழிகள், கருங்கோழி, வான்கோழி, நந்தனம் கோழி, கின்னிக்கோழிகள்னு வளர்க்க ஆரம்பிச்சேன். இதுல காடை வளர்ப்பை முதன்மையா பார்க்க ஆரம்பிச்சேன்.

தென்னந்தோப்புக்குள் கொட்டகை
தென்னந்தோப்புக்குள் கொட்டகை

குறைந்த நாள்கள்... நிச்சய வருமானம்

காடைகள் நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்குது. எளிதில் நோயும் தாக்குறதில்ல. காடைகள் வளர்ற இடத்தைச் சுத்தமா பராமரிச்சிட்டு வர்றதோடு குடிக்கச் சுத்தமான தண்ணியைக் கொடுத்துட்டு வந்தாலே போதும். காடைகள் நல்ல முறையில வளரும். நல்ல லாபமும் கிடைக்கும். அதனால காடை வளர்ப்புல ரொம்பக் கவனம் செலுத்துறோம்.

ஆரம்பத்துல காடைகளை வியாபாரிக கிட்டதான் விற்பனை பண்ணினோம். தோப்புக்கே வந்து வாங்கிட்டுப் போவாங்க. நம்மகிட்ட வாங்கிட்டுப் போய் அவங்க கூடுதல் விலை வெச்சு விற்பாங்க. காடை, கோழி அதிகமா இருந்தா, ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் குறைஞ்ச விலைக்குக் கேட்பாங்க. அதனால வெறுத்துப்போய் ஒருகட்டத்துல நாமே கறிக்கடை போடலாம்னு இறங்கிட்டோம்.

ராயம்பேட்டை மெயின் ரோட்டுல சின்ன அளவுல சொந்த இடம் வாங்கி, 3 வருஷத்துக்கு முன்ன கறிக்கடையை ஆரம்பிச்சோம். ஞாயிற்றுகிழமை மட்டும் கூட்டம் அதிகமாக வரும். அதனால அன்னிக்கு மட்டும் உதவிக்கு ஒருத்தரை வேலைக்கு வச்சிருக்கேன். மத்த நாள்ல நான் தனியாளா நின்னு கவனிச்சுக் குவேன்.

காடைகள்
காடைகள்

நேரடி விற்பனையில் அதிகரிக்கும் லாபம்

ஒரு காடை 50 ரூபாய், ஒரு நாள் குஞ்சு 8 ரூபாய், தாய்க்காடை 50 ரூபாய், காடை முட்டை 4 ரூபாய்க்கும் விற்பனை செய்றேன். வியாபாரிகள் விற்பனை செய்றதைவிட நானே நேரடியாகக் கடை நடத்துனதுல லாபம் அதிகமா கிடைச்சது. கறிக்கடையில காடை மட்டும் இருந்தா எல்லா வாடிக்கை யாளர்களையும் கவர முடியாது. அதனால நாட்டுக்கோழி கறியையும் விற்பனை செய்றோம். சில வாடிக்கையாளர்கள் பிராய்லர் கோழிக்கறியும் கேட்கிறாங்க. நாட்டுக்கோழி உடம்புக்கு தரும் பலன் களையும் எடுத்துச் சொல்லி நாட்டுக் கோழிகளை விற்போம். அதையும் மீறிப் பிராய்லர் கோழி கேட்குறவங்களும் இருக்காங்க. அவங்களுக்காகக் குறைஞ்ச அளவுல பிராய்லர் கோழியும் கடையில மட்டும் வச்சு விற்கிறேன். முட்டை, குஞ்சுகள்னு எல்லாத்தையும் பண்ணைக்கு வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க. வியாபாரத்துக்காக வெளியே போறதே இல்ல. நானும் என் மனைவி ஜெனிட்டாவும் சேர்ந்து பண்ணையைக் கவனிச்சுக்கிட்டு வர்றோம். நான் கடையில இருக்கிற நேரத்தில் தீவனம் வைக்குறது உள்ளிட்ட எல்லா வேலையையும் ஜெனிட்டா பார்த்துக்குவாங்க’’ என்றவர், கோழி வளர்ப்பு அனுபவங்களைப் பற்றிப் பேசினார்.

நாட்டுக்கோழிகள்
நாட்டுக்கோழிகள்

‘‘முட்டைக்கோழி, கறிக்கோழினு தனித் தனியா வளர்க்குறேன். முட்டை, குஞ்சு, கறினு எல்லாத்தையும் விற்பனை செய்றேன். ஆரம்பத்திலிருந்தே கோதுமை, கம்பு தவிடு, சோளம், கடலைப் புண்ணாக்கு, உப்பில்லாத கருவாட்டுத் தூள் எல்லாத்தையும் தீவனமாக் கொடுக்குறேன்.

கோழி, வான்கோழியை மட்டும் தினமும் தென்னந்தோப்புக்குள்ள திறந்தவெளியில மேய்ச்சலுக்கு விடுவேன். காலையில 7 மணி யிலிருந்து 5 மணி வரைக்கும் இயற்கையா கிடைக்கக்கூடிய தீவனங்களைத் தின்னுட்டு தானாகவே கொட்டகைக்குள்ள போய் அடைஞ்சிடும்.

இன்குபேட்டரில் முட்டைகள்
இன்குபேட்டரில் முட்டைகள்


பெருச்சாளியைச் சமாளிக்கக் கம்பி

ஆரம்பத்துல பெருச்சாளி, பாம்பு, கீரிப்பிள்ளை அட்டகாசம் தாங்க முடியல. கூடாரத்துக்குள்ள புகுந்து கோழிகளைத் தின்னுடும். அதனால நிறைய பாதிப்பு ஆகிடுச்சு. அவை வராம இருக்கக் கீற்று கொட்டகையைச் சுற்றியும் கம்பி வலை அடிச்சேன். பெருச்சாளியைத் தடுக்கக் கொட்டகையோட அடிப்பகுதியைச் சுத்தி நீளமான 5 கம்பிகளைச் சின்ன இடைவெளி விட்டுக் கட்டி வச்சிருக்கேன். சிக்கிக்கு வோம்ங்கிற பயத்துல பெருச்சாளிகள் உள்ளுக்குள்ள வராதுனு நினைச்சு, இதைச் செஞ்சேன். அதுக்கு நல்ல பலனும் கிடைச்சது’’ என்றவர் விற்பனை பற்றிப் பேசினார்.

‘‘கோழி முட்டையைத் தனியாகவும், அடை வெச்சு, குஞ்சு பொரிச்ச பிறகு, ஒரு நாள் குஞ்சாகவும், 30 நாள் குஞ்சாகவும் விற்பனை செய்றேன். சிறுவிடை நாட்டுக் கோழியோட உயிர் எடை 1 கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். ஒரு முட்டை 15 ரூபாய், ஒரு நாள் குஞ்சு 50 ரூபாய், ஒரு மாசக் குஞ்சு 130 ரூபாய்க்கு கொடுக்குறேன். அதேபோல, வான்கோழியைப் பண்டிகை நாள்கள்ல மட்டும் மொத்தமாக விற்பனை செய்வேன். உயிர் எடை 1 கிலோ 350 ரூபாய், ஒரு நாள் குஞ்சு 80 ரூபாய், ஒரு மாசக் குஞ்சு 250 ரூபாய்க்கும் விற்பனை செய்றேன்.

காடை குஞ்சுகள்
காடை குஞ்சுகள்


அதே போல நந்தனம் ரகக் கோழி முட்டை 15 ரூபாய், உயிர் எடை 1 கிலோ 400 ரூபாய், ஒரு நாள் குஞ்சு 50 ரூபாய், ஒரு மாசக் குஞ்சு 130 ரூபாய்னு விற்பனை செய்றேன். கின்னிக்கோழி உயிர் எடை 1 கிலோ 380 ரூபாய், ஒரு நாள் குஞ்சு 80 ரூபாய், ஒரு மாசக் குஞ்சு 250 ரூபாய்க்குக் கொடுக்கிறேன்.

கருங்கோழி உயிர் எடை 1 கிலோ 500 ரூபாய், ஒரு நாள் கோழிக் குஞ்சு 80 ரூபாய், ஒரு மாசக் கோழிக் குஞ்சு 180 ரூபாய், ஒரு முட்டை 25 ரூபாய்க்கு கொடுத்துட்டு வர்றேன்.

கோழிகளுடன் பிலிப்ஸ்-ஜெனிட்டா தம்பதி
கோழிகளுடன் பிலிப்ஸ்-ஜெனிட்டா தம்பதி


ஆண்டுக்கு ரூ.6 லட்சம்

தீவனம், பரமாரிப்புனு எல்லாச் செலவும் போக முட்டை, குஞ்சு, கோழிக் கறி விற்பனை மூலம் மாசம் 50,000 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது. வருஷத்துக்கு 6 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது’’ என்றார் நிறைவாக,

“தென்னை மட்டும் இல்லாம அதுக்கு இடையில காடை, கோழிகள் வளர்க்குறதால இப்ப எனக்கு ரெட்டிப்பு வருமானம். 2 ஏக்கர் நிலத்துல இருந்து தேங்காய் மூலமா 1 லட்சம் ரூபாய், காடை, கோழி வளர்ப்பு மூலமா 6 லட்சம் ரூபாய். மொத்தம் 7 லட்சம் ரூபாய் லாபமாக் கிடைக்குது’’ என்றார் மகிழ்வுடன்.


தொடர்புக்கு, பிலிப்ஸ்,

செல்போன்: 99522 61035

பண்ணைக்கழிவு மேலாண்மை

பண்ணைக் கழிவுகளை மேலாண்மை செய்யும் முறை குறித்துப் பேசிய பிலிப்ஸ், ‘‘கோழி எச்சம், வீணாகும் முட்டை எல்லாத்தையும் தோப்பு ஓரத்தில பெரிய குழி எடுத்து, அதுக்குள்ள போட்டுத் தண்ணிவிட்டு மூடிடுவேன். ஒரு மாசத்துல நல்லா மட்கி உரமாகிடும். அதைத் தென்னை மரத்தோட அடிப்பகுதியில ஓர் அடி வட்டத்தில, அரை அடி ஆழத்துல குழியெடுத்து உரத்தைப் போட்டு மூடிடுவேன். பிறகு, தண்ணி பாய்ச்சுவேன். நல்லா காய்ஞ்ச பிறகு தோப்புல உழவு ஓட்டுவேன். 6 மாசத்துக்கு ஒரு தடவை தென்னைக்கு இது மாதிரி உரம் வெப்பேன். கோழி எச்சங்கள் தென்னைக்கு உரமாகுறதால ரெட்டிப்புப் பலன்கள் கிடைக்குது. காய்ப்பும் அதிகமாகுது’’ என்றார்.

நோய் மேலாண்மை
நோய் மேலாண்மை

நோய் மேலாண்மை

கோழிகளுக்கான நோய் மேலாண்மை குறித்துப் பேசிய பிலிப்ஸ், ‘‘கோழிகள் மழைக்காலங்கள்ல நோய் தாக்குதலுக்கு ஆளாகும். அதைத் தடுக்கக் கொஞ்சம் தூதுவளை, வேப்பிலை, குப்பைமேனி, 2 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, 2 வெற்றிலை, கொஞ்சம் சீரகம் எடுத்து, எல்லாத்தையும் மிக்ஸியிலப் போட்டு அரைச்சு தண்ணியிலப் போட்டுக் கொதிக்க வைப்போம். நல்லா கொதிச்ச பிறகு, இறக்கி லேசான சூட்டுல அந்தத் தண்ணியைக் குடிக்க வைப்போம். இதுமூலமா எதிர்ப்பு சக்தி கிடைக்குறதுனால கோழிகளை நோய்கள் தாக்காது.

வெயில் காலங்கள்ல கோழியை அம்மை நோய் தாக்கும். வான்கோழி மூலமாகவும் அம்மை நோய் கோழிகளுக்குப் பரவும். இதைத் தடுக்க, கீழாநெல்லி இலை, குப்பை மேனி இலை, மஞ்சள் தூள், கொஞ்சம் சீரகம், 2 சின்ன வெங்காயம் எடுத்துத் துவையல் மாதிரி அரைச்சு சின்ன உருண்டையா உருட்டிக் கோழிகளுக்குக் கொடுத்துடுவோம். அதோட சோற்றுக்கற்றாழை சதையைச் சாறாக்கி, அதுல 100 மி.லி எடுத்து, 5 லிட்டர் தண்ணியில கலந்து குடிக்க வெச்சுடுவோம். வருமுன் காப்பதுபோல அம்மை தாக்குவதற்கு முன்பே எதிர்ப்பு சக்தியை உருவாக்க இதைக் கொடுத்துடுவோம். அதனால பாதிப்பு ஏற்படாம காப்பாத்திடலாம்’’ என்றார்.

கோழிக் குஞ்சுகள்
கோழிக் குஞ்சுகள்

குஞ்சு பொரிக்கும் நாள்கள்

‘‘சிறுவிடை நாட்டுக்கோழிகள் குஞ்சு பொரிக்க 21 நாள்கள் ஆகும். வான்கோழி, கின்னிக்கோழி 28 நாள்கள், காடை 18 நாள்கள் ஆகும். இதுக்கேத்த மாதிரி தாய்க்கோழிகளைப் பராமரிச்சிட்டு வர்றேன். ஒரு தாய்க்கோழியை ஒன்றரை வருஷம் மட்டுமே பயன்படுத்துவேன். பிறகு, வேற தாய்க்கோழிகளை வளர்த்துத் தயார் பண்ணிடுவேன்’’ என்கிறார் பிலிப்ஸ்.