Published:Updated:

2.5 ஏக்கர்...ரூ.1,11,000 லாபம்! நம்மாழ்வார் வழியில் நிலக்கடலைச் சாகுபடி!

அருண் பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
அருண் பாண்டியன்

பாரம்பர்யம்

ற்போது இளைஞர்கள் பலரும் இயற்கை முறை விவசாயத்தைக் கையில் எடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான செஞ்சி அருண்பாண்டியன், கடந்த 8 ஆண்டுகளாக இயற்கை முறை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள மேல்பாப்பாம்பாடி கிராமத்திலிருந்த அருண்பாண்டியனை ஒரு காலை வேளையில் சந்தித்தோம். தன்னுடைய வயலையொட்டி இருந்த வீட்டில் இருந்தவர், நம்மை இன்முகத்தோடு வரவேற்றார்.

இதமான காற்று வீசிக்கொண்டிருக்க மரத்தடியில் அமர்ந்து பேசத் தொடங்கினோம். “சின்ன வயசுல இருந்தே அப்பா கூட விளையாட்டுப்போக்கா விவசாய வேலை களைச் செய்வேன். அப்பெல்லாம், அப்பா செயற்கை உரத்தைப் பயன்படுத்திதான் விவசாயம் செய்வாங்க. ஆரம்பத்துல நல்ல மகசூல் கிடைச்சாலும், காலப்போக்கில மகசூல் குறைய ஆரம்பிச்சது. கடன் வாங்கி விவசாயம் செய்ய வேண்டிய சூழல் உருவாகிடுச்சு. எங்களையும் கடன் வாங்கித் தான் படிக்க வச்சாரு. ஒவ்வொரு முறையும் விளைபொருள் விற்பனை மூலமா கிடைக்குற பணம், வாங்குன கடனுக்கு வட்டி கட்டவும், படிப்பு செலவுக்கும் சரியா போய்டும்.

அருண் பாண்டியன்
அருண் பாண்டியன்

ஒரு கட்டத்துல, ‘விவசாயம் கைகொடுக்கல. நல்லா படிச்சு வேலைக்குப் போய்ப் பொழச்சுக்கோ’னு சொல்லிட்டாரு அப்பா. நானும் இயந்திரவியல் படிச்சு முடிச்சேன். கல்லூரியில படிக்கும்போது, ஒருநாள் அங்க வந்தார் நம்மாழ்வார். அப்போதான் முதல் முறையாக நம்மாழ்வார் பேச்சைக் கேட்டேன்.

2009-ம் வருஷம் படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா சென்னையில பிரபல தனியார் கார் உற்பத்தி நிறுவனத்தில 2 வருஷம் வேலை செஞ்சேன். அந்தக் காலகட்டத்துலதான் நம்மாழ்வாரோட நேரடியா பேசுற வாய்ப்பு கிடைச்சது.

‘நீங்க வேலை செய்யுற கம்பெனி உரிமை யாளருக்கு அவருடைய நாட்டிலேயே அந்த காரை உற்பத்தி செய்துகொள்ள முடியாதா’னு கேட்டார். அப்போதான் எனக்குள்ள பல கேள்விகள் உருவாச்சு.

‘நாம வாழணும்னு ஏதோ ஓடிகிட்டு இருக்கோம். ஆனா, சரியா வாழல. மத்தவங் களுக்காகவே உழைச்சு கொட்டிக்கிட்டு இருந்தா... நம்ம சந்ததி நலமா வாழாது’னு புரிஞ்சது. தொடர்ந்து பேசிக்கிட்டு இருக்கும்போது, ஜே.சி.குமரப்பா எழுதுன ‘தாய்மைப் பொருளாதாரம்’ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவரைச் சந்திச்சு பேசுன பிறகு, அவருடைய வார்த்தைகள் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு வர ஆரம்பிச்சது. நான் விவசாயம் செய்றதுக்கு இதெல்லாம் தான் ஆதாரமா அமைஞ்சது.

நிலக்கடலையுடன்
நிலக்கடலையுடன்

எனக்கு ராணுவத்துல சேரணும்னு ஆர்வம் இருந்துச்சு. ஆனா, அந்த வாய்ப்பு கிடைக்கல. எனவே, நாட்டுக்கான பணியை விவசாயம் மூலம் செய்வோம்னு முடிவெடுத்தேன். இயந்திர வாழ்க்கையா இருந்த கம்பெனி வேலையை விட்டுட்டு, விவசாயம் செய்யலாம்னு ஊருக்கே வந்துட்டேன். அதன் பிறகு ஈரோடு, மதுரை, சென்னைனு நம்மாழ்வார் கூட்டம் எங்க நடந்தாலும் நேர்லபோய் கலந்துக்க ஆரம்பிச்சேன்’’ என்றவர், தான் விவசாயத்துக்கு வந்த கதையைச் சொன்னார்.

‘‘2013-ம் வருஷம் நம்மாழ்வார் இறந்த பிறகு, இனி என்ன பண்ணுறதுனு தெரியாம தவிச்சேன். கடைசியில, எங்களுக்கு இருந்த 5 ஏக்கர் நிலத்துல விவசாயம் செய்யப் போறதா அப்பாகிட்ட சொன்னேன். விவசாயத்துல கஷ்டப்பட்ட அனுபவத்தால ‘விவசாயம் வேண்டாம்’னு சொன்னாரு. ஆனா, நான் என் முடிவை மாத்திக்கிற மாதிரி இல்ல. வீட்டுல பிரச்னை ஆரம்பிச்சது. இயற்கை முறையில விவசாயம் செய்யப் போறதா சொன்னதும் ஊர்ல பலரும் பலவிதமா பேசினாங்க. ‘சரியான பைத்தியக் காரன். இவன் இருக்கிற விவசாயத்தையும் கெடுக்க வந்திருக்கான்’னு சொன்னாங்க.

பாரம்பர்ய நெல் வயலில்
பாரம்பர்ய நெல் வயலில்

எதையும் கண்டுக்காம நான் விவசாயத்துல முழுமையா இறங்கிட்டேன். முதல் தடவை, ‘வெள்ளைப் பொன்னி’ பயிர் செஞ்சேன். ஏக்கருக்கு 9 மூட்டை (75 கிலோ)தான் கிடைச்சது. அதன்பிறகு மாப்பிள்ளைச் சம்பா, தூயமல்லி, சீரகச்சம்பா, மடுமுழுங்கி ரகங்களை தலா 10 சென்ட் அளவுல சாகுபடி செஞ்சேன். ஒவ்வொரு நெல் ரகத்திலும் தலா 2 மூட்டை மகசூல் கிடைச்சது. பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், அமுதக் கரைசல், தேமோர் கரைசல்னு ஆரம்பத்துல பயன் படுத்தினேன். பிறகு, ரெண்டு வருஷம் கழிச்சு ஏக்கருக்கு 12 மூட்டை, 3-வது வருஷம் 18 மூட்டைனு மகசூல் கூடிச்சு. இயற்கை விவசாயம் கைகொடுக்க ஆரம்பிச்சது’’ என்றவர் தானே வியாபாரியாகவும் மாறிய கதையைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘விளைபொருளைக் கொள்முதல் நிலையங்கள்ல விற்பனை செய்யக் கூடாதுனு உறுதியா இருந்தேன். அதனால சென்னையில நிகழ்ச்சிகள் நடக்கும்போது ‘ஸ்டால்’ போடுவேன். ஊர் ஊராக எடுத்துட்டுப் போய் வித்தேன். ஒரு கட்டத்துல, உற்பத்தியை விட வாடிக்கையாளர்கள் அதிகமாகிட்டாங்க. அதனால, விற்பனைக்கு பிரச்னை இல்ல. எங்கள் பகுதியில முன்னோர்கள் பயிரிட்ட கறுப்புக்கவுனி, செங்கல்பட்டு சிறுமணி, பூங்கார், அறுபதாம் குறுவை, ஒட்டடையான், சம்பா மோசனம், வயகுண்டான் நெல் ரகங்களைப் பயிர் பண்ண ஆரம்பிச்சேன்.

எண்ணெய் அளக்கும் பணியில்
எண்ணெய் அளக்கும் பணியில்


போன தை பட்டத்தில, 2.5 ஏக்கர் பரப்பளவுல நிலக்கடலை பயிர் பண்ணி யிருந்தேன். எங்க பகுதியில அதிகம் புழக்கத்துல இருக்க சிறுமணி ரக விதையைப் பயன்படுத்தினேன். தேவைக்கேற்றவாறு தண்ணி பாய்ச்சினேன். ரெண்டு தடவை களை எடுத்தேன் அவ்வளவுதான். வேற எதுவும் செய்யல. நேரா அறுவடை மட்டும்தான். நல்ல மகசூல் கிடைச்சது’’ என்றவர், நிலக்கடலை வருமானம் பற்றிப் பேசினார்.

‘‘நிலக்கடலை அறுவடையில 1 ஏக்கருக்கு 20 மூட்டை (1 மூட்டை 40 கிலோ) வீதம் 2.5 ஏக்கர்ல, மொத்தமா 50 மூட்டை கிடைச்சது. விதைக்காக 5 மூட்டைகளை எடுத்து வெச்சுட்டேன். மீதியை உடைச்சு பருப்பாக் கிட்டேன். மில்லுல நிலக்கடலையை உடைக்க காசு கிடையாது. கூலியா தொளும்பை (நிலக்கடலை தோல்) மட்டும் எடுத்துப்பாங்க.

ஒரு மூட்டையை உடைச்சதுல 30 கிலோ பருப்பு கிடைச்சது. என்கிட்ட எண்ணெய் ஆட்டுற செக்கு இருக்கு. அதனால நான் பருப்பை எண்ணெயாக மாத்தி விற்பனை செய்றேன். ஒரு கிலோ கடலை எண்ணெயை 230 ரூபாய்க்கு கொடுக்கிறேன். 45 மூட்டை நிலக்கடலையை உடைச்சதுல 1,350 கிலோ பருப்பு கிடைச்சது. அதை எண்ணெயா மதிப்புக்கூட்டும்போது, 486 கிலோ எண்ணெய் கிடைச்சது. ஒரு கிலோ 230 ரூபாய் விலையில 1,11,780 ரூபாய் கிடைச்சது. 864 கிலோ புண்ணாக்கு கிடைச்சது. அது கிலோ 50 ரூபாய். அது மூலமா 43,200 ரூபாய். மொத்தம் 1,54,980 ரூபாய் வருமானம் கிடைச்சது. நிலக்கடலை விதையை ஏற்கெனவே வச்சிருந்தேன். அததவிர 43,250 ரூபாய் செலவாச்சு. செலவு போக 1,11,730 லாபமாகக் கிடைச்சது. நிலக் கடலையை அப்படியே விற்பனை செய்யாம, மதிப்புக்கூட்டி விற்பனை செய்றதால எனக்கு ரெட்டிப்பு வருமானம் கிடைச்சது’’ என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு,
அருண் பாண்டியன்,
செல்போன்: 96267 88655

மீன் குளம்
மீன் குளம்

2 ஏக்கர் நெல்... ரூ.1,05,500 வருமானம்

‘‘ஆனிக்கார் பட்டத்தில 3 ஏக்கர்ல நிலக்கடலையையும்; நேரடி விதைப்பு முறையில தலா ஒரு ஏக்கர்ல கறுங்குறுவை, பூங்கார் நெல் ரகங்களையும் போட்டேன். பருவ மழையால வேர்க்கடலை ரொம்ப பாதிப்பாகிடுச்சு. கறுங்குறுவை 17 மூட்டை (75 கிலோ), பூங்கார் 24 மூட்டை மகசூல் கிடைச்சது. அதை அரிசியா மாத்தி விற்பனை பண்ணிகிட்டு வர்றேன். கறுங்குறுவை அரிசி கிலோ 70 ரூபாய், பூங்கார் கிலோ 60 ரூபாய் விலையில கொடுக்குறேன். இதுவரைக்கும் 1,05,500 ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கு. இன்னும் கொஞ்சம் கையிருப்பு இருக்கு. மொத்த செலவு 17,400 ரூபாய். அதுபோக மீதியிருப்பது லாபம்தான்.

இப்போ சம்பா பட்டத்துல 5 ஏக்கர்ல 60 வகை நெல்லை பயிர் பண்ணியிருக்கேன். அதுல, தூயமல்லி, தங்கச் சம்பா, சீரகச் சம்பா, கறுப்புக் கவுனி, செங்கல்பட்டு சிறுமணி, வெள்ளைப் பொன்னி ரகங்களை அதிகமாகவும் மீதமுள்ள ரகங்களைத் தலா 2 சென்ட்லயும் பயிர் பண்ணியிருக்கேன். தை மாசம் அறுவடை பண்ணிடுவேன்” என்றார்.

மீன்கள்
மீன்கள்

மீன் மூலம் 90,000 ரூபாய் லாபம்

‘‘இயற்கை முறையில விவசாயம் பண்ணி நெல்லுல அதிக மகசூல் எடுத்ததால, ஒரு செய்தி தொலைக்காட்சி நிறுவனம் எனக்கு ‘2020-ம் வருஷத்துக்கான ‘உழவன் விருது’ கொடுத்தாங்க. அதைப் பார்த்துட்டுப் பாராட்டுன, அப்போதைய விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை, அரசு மானியத்தில பண்ணைக்குட்டை ஒண்ணு அமைச்சு கொடுத்தார். அந்தக் குட்டையில இப்ப மீன்களை வளர்த்துகிட்டு வர்றேன். அது மூலமாகவும் வருஷம் மூணு தடவை வருமானம் வருது. ஒரு தடவை மீன்களைப் பிடிச்சு விற்பனை செய்யும்போதும், செலவுகள் போக 90,000 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது.

வீட்ல மாடு, ஆடு, கோழிக இருக்குது. அதுகளோட கழிவுகளை மீன்களுக்குக் கொடுத்துடுவேன். கிணத்துல இருந்து தண்ணியை வயலுக்குப் பாய்ச்சுறதுக்குப் பதிலா... பண்ணைக் குட்டைக்கு விட்டு, அதிலிருந்து வயலுக்குப் பாய்ச்சுறேன். இதனால கணிசமான சத்து பயிருக்குக் கிடைக்குது’’ என்கிறார் அருண் பாண்டியன்.

நிலக்கடலையுடன்
நிலக்கடலையுடன்

விதைப்பு அடுத்து அறுவடை மட்டும்தான்

‘‘பாரம்பர்ய நெல் சாகுபடி செய்தபோது, இயற்கையாகவே தானாக உருமாற்றம் அடைஞ்ச சுமார் 100 ரகங்களைக் கண்டறிஞ்சு சேமிச்சு வச்சிருக்கேன். ஒவ்வொரு ரகத்தையும் 2 சென்ட் இடத்துல விதை உற்பத்தியும் செஞ்சு பார்த்திருக்கேன். பாரம்பர்ய நெல் விதைகளை உற்பத்தி பண்ணி, இயற்கை விவசாயம் செய்யுற நண்பர்களுக்குக் கொடுக்கிறேன். தொடர் இயற்கை விவசாயத்தால மண்ணோட தன்மை வளமா மாறிடுச்சு. விதைச்சா போதும், தானாகவே வளர்ந்து அறுவடைக்கு தயாராகுற வகையில் நிலம் மாறிடுச்சு. அதனால, இடுபொருள் கொடுக்கிறதை நிறுத்திட்டேன். ஆனா, இப்பவும் வருஷத்துக்கு ஒரு தடவை, மாட்டுச் சாண எரு பயன்படுத்துறேன். அதோட பல தானிய விதைப்பும் செய்றேன்’’ என்கிறார் அருண் பாண்டியன்.