Published:Updated:

இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்... எப்படி சாத்தியமானது?

விவசாயம்
விவசாயம்

பொதுவாக, வடகிழக்கு மாநிலங்கள் பாரம்பர்ய வேளாண் முறையைப் பின்பற்றி வருவதால், மற்ற மாநிலங்கள் பயன்படுத்தும் ரசாயன உரங்களின் அளவைவிட அங்கு பயன்படுத்தப்படும் உரங்களின் சராசரி அளவு குறைவாகும்.

``உலக அளவில் அதிகளவு இயற்கை விவசாயிகளைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அதேபோன்று இயற்கை விவசாயம் செய்யப்படும் நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியா 9-வது இடத்தில் இருக்கிறது." என்ற செய்தியை மத்திய வேளாண்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணம் பெருகி வரும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு என்றாலும், இயற்கை விவசாயம் சம்பந்தமாக இருக்கும் முக்கியமான திட்டங்களும் இன்னொரு காரணம். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை விவசாய விளைபொருள்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏற்கெனவே, சிக்கிம் மாநிலம் முழு இயற்கை விவசாய மாநிலமாக அறிவிக்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இதோடு திரிபுரா, உத்தரகாண்ட் மாநிலங்களும் இயற்கை விவசாயக் கொள்கையை அறிவித்து தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

பொதுவாக, வடகிழக்கு மாநிலங்கள் பாரம்பர்ய வேளாண் முறையைப் பின்பற்றி வருவதால், மற்ற மாநிலங்கள் பயன்படுத்தும் ரசாயன உரங்களின் அளவைவிட அங்கு பயன்படுத்தப்படும் உரங்களின் சராசரி அளவு குறைவாகும். அதேபோன்று மலைவாழ் மக்கள் அதிகம் வாழ்வதால் இயற்கை விவசாயம் அங்கே உயிர்ப்போடு இருக்கிறது.

இத்துடன் மத்திய அரசின், இயற்கை விவசாய மதிப்பு தொடர் வளர்ச்சிக் கொள்கை (Organic Value Chain Development Policy) வடகிழக்கு மாநிலங்களில் செயல்படுத்தப்படுவதால் இயற்கை விவசாயம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோன்று நாடு முழுவதும் `பரம்பரா கிரிஷி விகாஸ் யோஜனா’ என்ற இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுக்கும் திட்டம் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்பவர்கள் கணிசமாக அதிகரித்தே வருகின்றனர். பரம்பரா கிரிஸி விகாஷ் யோஜனா திட்டம் 2015-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வேளாண் ஏற்றுமதி கொள்கையின் மூலமும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் இயற்கை விவசாயப் பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்திக்கிறது. 2018-19-ம் ஆண்டுக் காலத்தில் 5,151 கோடி ரூபாய்க்கு இயற்கை விவசாயப் பொருள்களின் ஏற்றுமதி நடைபெற்று இருப்பதாக வேளாண் மற்றும் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபீடா) வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

விவசாயம்
விவசாயம்

ஜெய்விக் கேத்தி என்ற பெயரில் இணைய வர்த்தகம் மூலம் உள்நாட்டில், வெளிநாட்டில் இயற்கை விவசாயப் பொருள்களை விற்பதற்கென்றே வழிகாட்டுகிறது https://www.jaivikkheti.in/ என்ற இணையதளம். இயற்கை விவசாய விளைபொருள்களை விற்க வழிகாட்டும் முக்கிய இணையதளம் இது. இந்தியாவிலிருந்து 2019-ம் ஆண்டில் 26 லட்சம் மெட்ரிக் டன் இயற்கை விவசாய விளைபொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன. ஆளி விதைகள், சூரியகாந்தி, சோயாபீன்ஸ், மூலிகைச் செடிகள், நறுமணப் பொருள்கள், பழங்கள், அரிசி, பயறு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் 35 லட்சம் ஹெக்டேரிலிருந்து இயற்கை உணவுப்பொருள் உற்பத்தி நடைபெற்று வருவதாக அபீடா தெரிவித்துள்ளது. இந்த மொத்த நிலமும் சான்றிதழ் பெற்ற நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இயற்கை விவசாயத்துக்குச் சான்றிதழ்கள் வழங்குவதும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. பி.ஜி.எஸ் எனப்படும் சான்றிதழ் வழங்கும் அமைப்பின் மூலமாக எளிதாக வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழை வைத்து இந்தியாவெங்கும் பொருள்களை விற்பனை செய்யலாம். தேசிய இயற்கை விவசாயப் பொருள்கள் உற்பத்தித் திட்டம் மூலமாகத் தேவையான உதவிகள் கிடைக்கின்றன. இதன்மூலம் இயற்கை விவசாயப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பரம்பரா கிரிஷி விகாஸ் யோஜனா என்றழைக்கப்படும் பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டம் பற்றி வேளாண் அதிகாரியிடம் பேசியபோது, ``இயற்கை விவசாயத்துக்கென்று செயல்படும் மத்திய அரசின் திட்டம் இது. தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளாகச் செயல்படுகிறது. இதன்மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் இயற்கை விவசாயத்தின் கீழ் வந்துள்ளன. அதேபோன்று குழுவாக இணையும் விவசாயிகளுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இயற்கை விவசாயத் தொழில்நுட்பம், அங்ககச் சான்றிதழ், விற்பனை என அனைத்துக்கும் மத்திய, மாநில அரசு அமைப்புகள் வழிகாட்டுகின்றன. இதைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் நிலங்களில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும். இப்படி வந்தால் இந்தியா விரைவில் இயற்கை விவசாய நாடாக மாறிவிடும்” என்றனர்.

Ananthu
Ananthu

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து பேசும்போது, ``மற்ற நாடுகளைப் போல் இந்தியாவில் பெரிய அளவில் நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் இல்லை. ஆனால், இருக்கும் சிறிய நிலங்களை வைத்து இயற்கை விவசாயம் செய்கிறார்கள். இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, சாகுபடி செய்யப்படும் நிலத்திற்கு அரசினுடைய தகவல் சான்றிதழ் வாங்காமலேயே நிறைய இயற்கை விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை பல மடங்கு கூடும். அதேசமயம் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்குப் பல தன்னார்வ அமைப்புகளும் உதவி வருகின்றன. இன்றைய தேதியில் இயற்கை செய்ய முன்வருபவர்களுக்கு பல உதவிகள் கிடைக்கின்றன. இதை வைத்து அனைவரும் இயற்கை விவசாயத்தைத் தேர்ந்தெடுக்க முன் வர வேண்டும்” என்றார் அக்கறையுடன்.

அடுத்த கட்டுரைக்கு