Published:Updated:

ரூ.1,83,000; இனிப்பான வருமானம் தரும் கருப்பட்டி!

கருப்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
கருப்பட்டி

பனை

ரூ.1,83,000; இனிப்பான வருமானம் தரும் கருப்பட்டி!

பனை

Published:Updated:
கருப்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
கருப்பட்டி

டி முதல் நுனி வரை பலன் தரும் ‘கற்பகத்தரு’ பனை. அதிலிருந்து கிடைக்கும் பதநீர் காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் கருப்பட்டிக்கு (பனைவெல்லம்) எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. பனை இன்றைக்கும் பலருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், சொந்தமாகப் பனைமரங்கள் இல்லை என்றாலும், பனந்தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்துத் தானாகவே பனைமரம் ஏறி, பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சி விற்பனை செய்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து.

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி அருகில் உள்ள செங்குழி கிராமத்தில் இருக்கிறது இசக்கிமுத்துவின் பனைத் ோட்டம். கருப்பட்டிக்காகப் பதநீரைக் காய்ச்சிக் கொண்டிருந்தவரை ஒரு காலை வேளையில் சந்தித்தோம். சுத்தமான பதநீரைப் பருகக் கொடுத்தபடியே பேச ஆரம்பித்தார்.

இசக்கிமுத்து
இசக்கிமுத்து

‘‘பூர்வீகமே பனையேறும் தொழில்தான். பள்ளிக் கூடத்துக்கே போனதில்ல. பனைமரத்துல இருந்து வெட்டிப் போடுற நொங்குக் குலைகள், ஓலைகளைச் சேகரிக்கிறது, இறக்குன பதநீரை வடிகட்டிக் காய்ச்சுறது, கருப்பட்டி ஊத்துறது, சிப்பம் (பனையோலைப்பெட்டியில் கருப்பட்டி வைத்துக் கட்டுதல்) கெட்டுறதுன்னு சின்னச் சின்ன வேலைகளைச் செஞ்சேன். அப்படியே நார்ப்பெட்டி முடையவும் கத்துக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா பனையேறவும் கத்துக்கிட்டேன். 14 வயசுல ஒத்தையில (தனி ஆளாக) பனையேறி கலசம்கட்டி பதநீர் இறக்க ஆரம்பிச்சுட்டேன். தொழில் இல்லாத மாசங்கள்ல மளிகைக்கடையில வேலைக்கும் போவேன். இப்போ 20 வருஷமா தனியா பனைகளைக் குத்தகைக்கு எடுத்து நானே பனையேறி பதநீரை இறக்கி கருப்பட்டி காய்ச்சிட்டு வர்றேன்.

தூத்துக்குடியில ‘உடன்குடி’ கருப்பட்டிதான் பிரசித்திபெற்றது. 20 வருஷத்துக்கு முன்னாலயெல்லாம் உடன்குடி சுத்து வட்டார கிராமங்கள்ல சுமார் 3 லட்சம் பனை மரங்கள் இருந்துச்சு. ஆனா, இப்போ ஒரு லட்சம் மரங்கள்கூட இருக்காது. பத்தாயிரம் பேருக்கு மேல செஞ்சுட்டு வந்த இந்தத் தொழிலை, இப்போ ஆயிரம் பேருக்கும் குறைவான எண்ணிக்கையிலதான் செய்றாங்க. தூத்துக்குடியில பனையேத்தத்துக்கு வெளியூருக்குப் பனையேற போயிட்டு வந்த நிலைமை மாறி, திருநெல்வேலியிலயும் நாகர்கோவில்ல இருந்தும் பனையேறிகளை (பனைத்தொழிலாளர்கள்) அழைச்சுட்டு வர்ற நிலைமைக்குப் போயிடுச்சு. சீஷன் மாசங்கள்ல மட்டும்தான் இந்தத் தொழில் நடக்கும். பாக்கியுள்ள 6 மாசம் வேறத் தொழிலைத் தேடி போக வேண்டியதா இருக்கு.

பனைமரம் ஏறுதல்
பனைமரம் ஏறுதல்

மார்ச் மாசம் சீசன் ஆரம்பிக்குதுன்னா, பிப்ரவரி மாசத்துல நல்ல நாள் பாத்து பனை மரங்கள்ல ஏறி மட்டைகளைக் கழிச்சுடுவோம். 20 நாள்கள் வரைக்கும் தினமும் மூணு மணி நேரம் ஏறி இடுக்கி (பாளையை இடுக்கியால் திருக்கி விடுதல்) விட்டுட்டு வரணும். இப்படி இடுக்கி விடுறதுனால பாளையில் பதநீர் உற்பத்தியாகும். பாளையின் நுனியைச் சீவிவிட்ட பிறகு, அதிலிருந்து பதநீ சொட்டு தடையில்லாம தொடர்ச்சியா பானைக்குள்ள விழும். தினமும் காலையில பாளையோட நுனியை சீவிட்டு, சுண்ணாம்பு தடவிய கலசத்தை (சிறிய பானையை) கட்டி, பாளையோட நுனியை கலசத்துக்குள்ள கவுத்து வச்சு கட்டித்தொங்க விடுவோம். பாளையில இருந்து பிசுபிசுப்பா சொட்டுச் சொட்டா பானைக்குள்ள வடியுறதான் ‘பதநீர்’. இதைப் ‘பனைப்பால்’, ‘பனை அமிர்தம்’ன்னும் சொல்வாங்க. மறுநாள் காலையில கலசத்துல கிடக்குற பதநீரை வேறொரு பானைக்கு மாத்திட்டுப் பானைக்குள்ள சுண்ணாம்பு தேய்ச்சு, பாளையைச் சீவி திரும்பவும் கட்டிடுவோம்” என்றவர் கருப்பட்டி தயாரிப்பு முறை குறித்துச் சொன்னார்.

பாளை சீவும் பணி
பாளை சீவும் பணி

கருப்பட்டி உற்பத்தியில் பதம்தான் முக்கியம்!

“மரத்துல இருந்து இறக்குன பதநீரைக் கொப்பரையில ஊத்தி காய்ச்சினா, அது கூழ் மாதிரி ஆகிடும். அதுதான் கூப்பனி. அடுத்த அரை மணி நேரத்துல கூப்பனி வத்தி, மூணுல ஒரு பங்காகக் குறையும். அந்த நேரத்துல திரும்பவும் ஆப்பைய முக்கி எடுத்து, ஒரு துளியை விரலால உருட்டிப் பார்த்தா, மெழுகுப் பதத்துல இருக்கும். இதுதான் கருப்பட்டிக்கான சரியான பதம். இதை வேறவொரு பாத்திரத்துல மாத்திடணும். பதநீர் கொதிச்சு வரும்போதே மணல் தரையில ஈரத்துணியை விரிச்சு, தண்ணியில ஊற வைச்ச சிரட்டைகளை அது மேல (தேங்காய் ஓடுகளில் உள்ள மூன்று கண்புள்ளியில் ஏதாவது ஒண்ணுல துளையிட வேண்டும்) அடுத்தடுத்து வரிசையா வைக்கணும். சிரட்டைக்குள் கருப்பட்டிப் பாகுவை ஊத்தணும்.

கருப்பட்டி தயாரிப்பு
கருப்பட்டி தயாரிப்பு

15 நிமிஷத்துக்குப் பிறகு சிரட்டைகளை அப்படி அப்படியே கவுத்து வெச்சா... கருப்பட்டி தனியா வந்துடும். ஒண்ணு, ரெண்டு கருப்பட்டிகள் சிரட்டையோட ஒட்டிக்கும். சிரட்டையில இருக்கிற ஒத்தக்கண்ணு வழியா சின்னக் குச்சியால குத்தினாலே கருப்பட்டி தனியாக வந்துடும். பிறகு, இதைப் பனைப் பெட்டிகளில் சேகரிக்கலாம். எந்தக் கலப்படமும் இல்லாத சுத்தமான கருப்பட்டிங்கிறதுனால மாசக்கணக்குல வாசம் வீசிக்கிட்டு அப்படியே இருக்கும்” என்றார்.

இறுதியாக வருமானம் பற்றிப் பேசிய இசக்கிமுத்து, “எனக்குச் சொந்தமா பனந்தோட்டம் கிடையாது. இந்தத் தோட்டத்தைக் கட்டுக்குத்தகைக்கு எடுத்திருக்கேன். நிலத்துக்காரருக்கு ஓலை வெட்டி கொடுக்கிறது, பனங்கிழங்கு மூலமா வர்ற வருமானம் குத்தகைத் தொகைக்குச் சரியா போயிடுது. இங்க மொத்தம் 80 மரங்கள் இருக்கு. இதுல 50 மரங்கள் பலன் தரக்கூடிய நிலையில இருக்கு. பனையேத்தத்துக்கு ஆள் கிடைக்காததுனால ரெண்டு வருஷமா நான் மட்டும்தான் ஒத்தையா பனை ஏறிக்கிட்டிருக்கேன். அதனால, நல்ல பலன் தர்ற வயசான 25 மரத்துல இருந்து பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சிட்டு வர்றேன். சீசன் ஆறு மாசம்னாலும் அஞ்சு மாசம்தான் பதநீர் வரத்து இருக்கும். ஒரு லிட்டர் பதநீரை ரூ.75-க்கும், ஒரு கிலோ கருப்பட்டியை ரூ.350-க்கும் விற்பனை செஞ்சேன். இந்த வருஷமும் அதே விலைதான். போன சீசன்ல மொத்தம் 250 லிட்டர் பதநீர் விற்பனை மூலமா ரூ.18,750-ம், 612 கிலோ கருப்பட்டி மூலம் ரூ.2,14,200-ம் வருமானம் கிடைச்சது. இதுல உற்பத்திச் செலவு 30,600, பனையேறிக்கு 6 மாச கூலி ரூ.90,000 (ஒரு நாள் கூலி குறைந்தபட்சம் ரூ.500 என்கிற வகையில்) மொத்தம் ரூ 1,20,600. இதக் கழிச்சிட்டா ரூ 96,600 லாபம்.

கருப்பட்டி
கருப்பட்டி

நானே மரம் ஏறுனதால அந்த 90 ஆயிரம் ரூபாயும் எனக்குதான். ஆனாலும் கணக்குனு ஒண்ணு இருக்குல்ல. இதெல்லாம் என்னைப்போலத் தனியாவே ஏறி இறங்குற பனையேறிக்கு மட்டும் பொருந்தும். ஆள் வச்சு பதநீ இறக்கி கருப்பட்டி காய்ச்சுனா வரவுக்குப் பாதிச் செலவு பிடிக்கும். இந்த வருஷ சீசன் ஆரம்பிச்சு ரெண்டு மாசம் முடிஞ்சிருக்கு. ஆனா, ஒன்றரை மாசமாத்தான்பதநீர் இறக்குறேன். அதுலயும் ஒரு மாசாமாத்தான் கருப்பட்டி காய்ச்சுறேன். ஒன்றரை மாசத்துல (ஏப்ரல் 30 வரை) 75 லிட்டர் பதநீர் விற்பனை மூலமா ரூ.5,625-ம், 134 கிலோ கருப்பட்டி விற்பனை மூலமா ரூ. 46,900-ம் வருமானமாக் கிடைச்சிருக்கு. சீனிக்கருப்பட்டி (சர்க்கரை சேர்த்தது) ஒரு கிலோ ரூ.250-க்கும் விற்பனையாகுது. எந்தக் கலப்படமும் இல்லாத சுத்தமான கருப்பட்டிங்கிறதுனால விலையில எந்தச் சமரசமும் செய்யுறதே இல்லை. அதுல உறுதியா இருக்கேன். என் தோட்டத்துக்கே நேரடியா வந்து சில்லறையா வாங்கிட்டுப் போயிடுறதுனால விற்பனைக்கு வில்லங்கமில்ல.

‘‘கருப்பட்டி மூலம் அல்வா, கடலைமிட்டாய் இனிப்புப் பண்டமாக மதிப்புக் கூட்டலாம்.’’

எங்க ஊர்ல வந்து ‘கருப்பட்டி வாங்கணும்’னு சொன்னா, நேரா என்னோட தோட்டம், இல்லன்னா வீட்டுக்குதான் அனுப்பி வைப்பாங்க. அந்தளவுக்குச் சுத்தத்துலயும் தரத்துலயும் பேரு வாங்கியிருக்கேன். வெறும் வருமானத்துக்காக மட்டுமல்ல எங்க தாத்தா, அப்பான்னு தலைமுறையா தொடர்ந்துட்டு வர்ற பாரம்பர்யமான இந்தப் பனைத்தொழிலை விட்டுடக் கூடாதுன்னு செஞ்சுட்டு வர்றேன்” என்றபடியே விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,
இசக்கிமுத்து,
செல்போன்: 94861 29012

பனைத்தொழில் புத்துயிர் பெறும்!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டார இயற்கை விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்திகுமார், “தமிழகத்துல தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதிகமான எண்ணிக்கையில் பனைமரங்கள் இருக்கு. வருஷத்துல மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான 6 மாசம் மட்டுமே இந்தத் தொழில் நடக்குது. மீதமுள்ள 6 மாசப் பிழைப்பை நடத்த கூலி வேலைகளுக்கும் வெளியூர்களுக்கும் போக வேண்டியதா இருக்கு. அதனால, பாரம்பர்யமான பனைத்தொழில் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவங்ககூட, ‘இந்தத் தொழில் என்னோட போகட்டும். நீயாவது படிச்சு நல்ல வேலைக்குப் போப்பா’ என வாரிசுகளைப் பனைமரம் பக்கமே வரவிடாமல் தடுப்பது நடந்துட்டு இருக்கு.

சக்திகுமார்
சக்திகுமார்

பனைமரமேறும் தொழிலாளர்களின் பற்றாக்குறையாலதான் இந்தத் தொழில் நலிவடைஞ்சுகிட்டே போகுது. பலன் தரும் நிலையில உள்ள பனைமரங்கள் ஆயிரக்கணக்கில் சும்மா நிற்குது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஒண்ணு சேர்ந்து பனைமரங்களைக் குத்தகைக்கு எடுக்கலாம். பனைத்தொழிலாளர்கள் மூலம் பதநீர் இறக்கி, கருப்பட்டி காய்ச்சும் அனுபவம் உடைய பனைத்தொழிலாளர்களின் வழிகாட்டுதலில் கருப்பட்டி, கல்கண்டு, சில்லுக்கருப்பட்டி தயார் செய்யலாம். கருப்பட்டி மூலம் அல்வா, கடலைமிட்டாய் இனிப்புப்பண்டமாக மதிப்புக்கூட்டலாம். பனை சீஸன் முடிஞ்சாலும் பனங்கிழங்கிலிருந்து மாவு, கூழ், லட்டு எனவும் மதிப்புக்கூட்டி வருஷம் முழுவதும் வருமானம் வரும் தொழிலாக மாற்றலாம். ‘பனை’மரத்தை, ‘பண’மரமாக மாற்றிட, இளைஞர்கள் ஒன்று கூடினால் பனைத்தொழில் புத்துயிர் பெறும்” என்றார்.