Published:Updated:

கொரோனா தொற்று..! சித்த மருந்துகளால் கட்டுப்படுத்தலாம்! குணமாக்கலாம்!

மூலிகைகள்
பிரீமியம் ஸ்டோரி
மூலிகைகள்

மருத்துவம்

கொரோனா தொற்று..! சித்த மருந்துகளால் கட்டுப்படுத்தலாம்! குணமாக்கலாம்!

மருத்துவம்

Published:Updated:
மூலிகைகள்
பிரீமியம் ஸ்டோரி
மூலிகைகள்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்துக்கொண்டது. தற்போது அதன் வீரியம் குறைந்து வந்தாலும், இன்னும் பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது. இந்நிலையில், மூன்றாம் அலை உருவாகும் எனச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கொடும் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கும், இதுபோன்ற தொற்றுகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளத் தேவையான மருந்துகள் பற்றியும் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் பேசினோம்.

“சளி, இருமல், காய்ச்சல் ஆகிய மூன்றும் கொரோனா மட்டுமல்ல... எல்லாக் கிருமித் தொற்றுகளுக்கும் முதல் அறிகுறி. இதில், எந்த அறிகுறி காணப்பட்டாலும் உடனே சித்த மருந்துகளை 3 முதல் 5 நாள்கள் வரை எடுத்துக்கொண்டாலே முழுமையாகக் குணம் கிடைக்கிறது. ஆங்கில மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும் கூட, சித்த மருந்துகளை உடனே தொடங்கி விடுவது நல்லது.

மைக்கேல் செயராசு
மைக்கேல் செயராசு

13 வகை ஜன்னிக்கும் ‘பைரவர்’ என்னும் காவல் தெய்வத்தின் பெயரிலேயே மாத்திரைகள் கூறப்பட்டுள்ளன. ‘சிக்குன்குனியா’, ‘ப்ளூக்காய்ச்சல்’, ‘டெங்கு’ முதலான அனைத்து வைரஸ் நோய்களையும் நிலவேம்புக் குடிநீர் குணமாக்கியது போலவே, நிலவேம்பு சேரக்கூடிய கபசுரத்தைக் குணமாக்கும் ‘கபசுரக்குடிநீர்’ சித்த மருத்துவர்களால் இந்த கொரோனா தொற்றுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

கபசுரக்குடிநீர் தயாரிக்க… சுக்கு, திப்பிலி, அக்கரகாரம், கிராம்பு, கடுக்காய்த்தோல், சீந்தில், கோட்டம், சிறுதேக்கு, கோரைக்கிழங்கு, நிலவேம்பு, சிறுகாஞ்சொறி வேர், முள்ளி வேர், ஆடாதோடை, கற்பூரவள்ளி, வட்டத்திருப்பி ஆகிய 15-ம் சம எடை (ஒவ்வொன்றிலும் 35 கிராம்) எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதில், சுக்கு முதல் நிலவேம்பு வரையுள்ள 10 பொருள்கள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். சிறுகாஞ்சொறி வேர், முள்ளி வேர், ஆடாதோடை, கற்பூரவள்ளி, வட்டத்திருப்பி ஆகியவற்றை நாமே சேகரித்து நிழலில் உலர்த்திச் சேர்க்கலாம்.

சீந்தில் கொடி
சீந்தில் கொடி


‘சிறுகாஞ்சொறி’ என்பது வயல்வெளிகளில் படர்ந்து கிடக்கும் ஒரு தாவரம். இது உடலில் பட்டால் கடுமையான அரிப்பு ஏற்படும். கிராமப் புறங்களில் இதை ‘செந்தட்டி’ என்பார்கள். ‘ஆடா தோடை’ நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ‘கற்பூரவள்ளி’ நம் வீடுகளில் வளர்க்கும் ஓமவள்ளிச் செடிதான். முள்ளி வேருக்கு ‘செம்முள்ளி’யையோ, ‘முள்ளுக் கத்திரி’யையோ எடுத்துக்கொள்ளலாம். ‘வட்டத்திருப்பி’ என்பது ‘பொன் முசுட்டை’ என வேலிகளில் படர்ந்து கிடக்கும் ஒரு கொடி. இதைச் சில மருத்துவர்கள், ‘மலை தாங்கி’ எனவும் சொல்வார்கள்.

இந்தக் குடிநீரைப் பொறுத்தவரையில் காய்ச்சும் முறையும், குடிக்கின்ற முறையும் மிக முக்கியமானது. 15 வகைப் பொருள்களை வகைக்கு 35 கிராம் ஒன்றிரண்டாக இடித்துப் பொடியாக்கியதிலிருந்து 35 கிராம் எடுத்து, இரண்டரை லிட்டர் தண்ணீரில் கலந்து, அடுப்பிலேற்றி 650 மி.லி-யாக, அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைக்க வேண்டும். அதை வடிகட்டி, சூடாக ப்ளாஸ்க்கில் வைத்துக்கொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர் எனில் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை 100 மி.லி குடித்து வரலாம்.

கிராம்பு
கிராம்பு
கடுக்காய்த் தோல்
கடுக்காய்த் தோல்
கோரைக் கிழங்கு
கோரைக் கிழங்கு
நிலவேம்பு
நிலவேம்பு
திப்பிலி கொடி
திப்பிலி கொடி
சிறுதேக்கு
சிறுதேக்கு


மற்றவர்கள், முன்னெச்சரிக்கை தடுப்பு முறையாக இக்குடிநீரைக் குடிக்க விரும்பினால், முன்னர் சொன்ன அளவுப்படி தயாரித்து வாரத்துக்கு ஒருமுறையோ, இரு முறையோ 50 முதல் 100 மி.லி இரவு படுக்கப்போகும் முன்பு குடும்பத்தினர் அனைவரும் குடித்து வரலாம். ஒருவேளை சளி அதிகமாக இருந்தாலோ, மூச்சடைப்பு ஏற்படத் தொடங்கினாலோ கபசுரக்குடிநீர் தயாரிக்கும்போது ஒரு கைப்பிடி அளவு ஆடாதோடை இலைகளைப் போட்டுக் காய்ச்சிக் குடிக்கலாம். குடிநீரைத் தயாரிக்க விறகு அடுப்பு அல்லது மின்சார அடுப்பைப் பயன்படுத்துவது நல்லது. எரிவாயு (கேஸ்) அடுப்புத் தவிர்க்கலாம்.

இவ்வளவு சில நடைமுறை சிக்கல்களும், செய்முறை நுட்பங்களும் இருப்பதால்தான், அரசு நியாவிலைக் கடைகளில் 35 கிராம் கபசுரக் குடிநீர் பொட்டலங்களைக் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக அரசுக்கு ஆரம்பம் காலம் முதலே தெரிவித்து வருகிறேன். தற்போது மூன்றாவது அலை பற்றிய பேச்சு உள்ளதே அதற்கும் கபசுரக் குடிநீர்தானா? என்ற கேள்வி எழலாம். ‘வேர்பாரு தழை பாரு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் மெல்ல மெல்லப்பாரு’ என்பது சித்த மருத்துவ அரிச்சுவடிப் பாடம். மூலிகை, தழைகளால் குணமாகவில்லை எனில், தாதுப் பொருள் களால் ஆன மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த வரிகளின் விளக்கம்.

எந்த அறிகுறி காணப்பட்டாலும் உடனே சித்த மருந்துகளை 3 முதல் 5 நாள்கள் வரை எடுத்துக்கொண்டாலே முழுமையாகக் குணம் கிடைக்கிறது.இந்தக் கபசுரக்குடிநீரும் சித்த வைத்திய திரட்டு நூலில் முதன்மை மருந்தாகக் கூறப்பட வில்லை. மாறாக, கோரோசனை மாத்திரை அல்லது சஞ்சீவி மாத்திரைக்குத் துணை மருந்தாகத்தான் கூறப் பட்டுள்ளது. ‘கோரோசனை’ என்பது பசுமாட்டின் பித்தப் பையிலிருந்து எடுக்கும் ஒரு மருந்துப் பொருள். 50 ஆண்டு களுக்கு முன்னர், குழந்தை மருத்துவத்திலும் சளி நோய்க்கும் மிகச் சிறந்த மருந்தாகப் பயன் படுத்தப்பட்டதாகும்.

தாளிசாதிச் சூரணம் 2 – 3 கிராம், சிவனார் அமிர்தம் 500 மி.கி, ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி, காளமேக நாராயணச் செந்தூரம் 200 மி.கி, முத்துச்சிப்பிப் பற்பம் 200 மி.கி ஆகிய இந்த மருந்துக் கலவையை உணவுக்குப் பின் 50 மி.லி பாலில் கலந்து மூன்று வேளை, 3 முதல் 5 நாள்கள் வரை சாப்பிடச் சொல்லி வழங்கி வருகிறேன். ‘தாளிசாதிச் சூரணம்’ என்பது 40 மூலிகைப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் பொடி. இது சளிநோய்க்கு முதன்மை மருந்தாகும். ‘சிவனார் அமிர்தம்’ என்பது தலைவலி, மூக்கடைப்பு, தும்மல், லேசான சுரம் முதலான அனைத்து நோய்களுக்கும் பயன்படுத்தப்படும் மருந்து.

‘ஆறுமுகச் செந்தூரம்’ என்பது எல்லா உடல்வலிகளுக்குமான மருந்து. ‘காளமேகம்’ என்பது மழை மேகத்தைக் குறிக்கும் சொல். மழைமேகம் போலச் சளி கொட்டினாலும், அதைக் குணப்படுத்தும் ‘காளமேக நாராயணச் செந்தூர’த்தில் தாளகம் மற்றும் இலிங்கம் முதலான பாடாணங்கள் அதிகம் சேர்கின்றன. ‘முத்துச்சிப்பிப் பற்பம்’ என்பது நுரையீரலில் தங்கியிருக்கும் சளியை அகற்றும் மாமருந்தாகும். இவற்றுடன், காய்ச்சல் அதிகமாக இருந்தால், ‘இலிங்கம்’ அதிகமாகச் சேரக்கூடிய ‘வஜ்ஜிரகண்டி மாத்திரை’யை ஒரு நாளுக்கு இரண்டு வேளை என 3 நாள் களுக்கு எடுத்துக்கொண்டால் முழுமையான குணம் கிடைக்கிறது.

கற்பூரவள்ளி
கற்பூரவள்ளி
முள்ளி
முள்ளி
சிறுகாஞ்சொறி
சிறுகாஞ்சொறி
சுக்கு
சுக்கு
திப்பிலி
திப்பிலி
வட்டத் திப்பிலி
வட்டத் திப்பிலி

தீவிர நிலையில் மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு மூச்சுவிடச் சிரமம் ஏற்படும். இதுபோன்ற சிறு சிறு மூச்சுத் திணறலுக்கு ஆடாதோடை, தூதுவேளை, கண்டங்கத்திரி, இண்டு, இசங்கிலைச்சாறு சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘வாசாதி லேகியம்’ எடுத்துக்கொண்டால் அற்புதமான பலன் அளிக்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மேற்குறிப்பிட்ட மருந்துகளை 3 முதல் 4 நாள்களோ, மற்றவர்கள் வாரம் ஒருமுறையோ மருந்து சாப்பிட்டால் போதும். இதில், உணவு முறையும் மிக முக்கியம். கொரோனா தொற்று அறிகுறி தோன்ற ஆரம்பித்தவுடன் அன்னப்பால் கஞ்சியும், இரண்டாம் நாள் மிளகு ரசம் சாதமும், மூன்றாம் நாள் சிறுபருப்பு சாம்பார் சாதம் சாப்பிடலாம். இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவைச் சாப்பிடலாம். எலுமிச்சம்பழச்சாறு, நெல்லிக்காய்ச்சாறு முதலான புளிப்பான பழச்சாறுகளை அருந்தக் கூடாது.

இந்த அனைத்து மருந்துப் பொருள்களும் அரசினர் சித்த மருத்துவப் பாடத்திட்டத்திலும், சித்தமருந்து செய் நிறுவனங்களின் சான்றாதார நூற்களிலும் இருந்து தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளே” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism