ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ஊரெங்கும் ஃப்ளூ காய்ச்சல்… பைசா செலவில்லாமல் பக்காவா விரட்டலாம்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

ஊரே நனைந்துகொண்டிருந்த ஒரு பெருமழைக்காலத்தில், சென்னை பெருநகரின் சாலைகளில் ஊர்ந்தும் தவழ்ந்தும்தான் செல்ல பாக்கியம் கிடைத்தது. சிங்காரச் சென்னையில் சிறு மழைக்கே, தும்மல், இருமல் எனப் பல ஓசைகள் கேட்கும். பெருமழையின்போது கேட்கவா வேண்டும். வீடுகள், அலுவலகங்களில் தும்மல், இருமல் ஓசைகளின் இன்னிசை கச்சேரியே நடக்கும்.

இப்படியான (அ)சுப நேரத்தில் பிரபல மருந்துக்கடைக்குச் சென்றிருந்தேன். மருந்து வாங்க அல்ல; அங்கு பீநட் பட்டர் (Peanut Butter) என அழைக்கப்படும், நிலக்கடலை வெண்ணெய் என்ற வஸ்து சிறப்பாக இருக்கும். விலையும்கூட சகாயம்தான். அந்த நிலக்கடலை வெண்ணெயின் அருமை, பெருமைகளை விரித்தால் நீளும். நிற்க.

கடையில் கூட்டம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருந்தது. மருந்துக்கடை ஊழியர், ‘‘கொஞ்சம் நேரம் இருங்க. கிடங்குல இருந்து புதுப்பெட்டியை எடுத்துட்டு வரச் சொல்லியிருக் கோம்’’ என்றவர் வியாபாரத்தில் மூழ்கினார்.

அடுத்த 15 நிமிடங்களில் கண்ட காட்சிகள், விநோதமாக இருந்தன. பெரும்பாலானவர்கள், சளி, இருமல்... என அறிகுறிகளைச் சொல்லி மருந்து, மத்திரைகளை அள்ளிச் சென்றார்கள். இன்னும் சில பேர், ‘‘நல்ல பவர் மாத்திரையா கொடுங்க. போன தடவை கொடுத்த மஞ்ச கலர் மாத்திரையைக் கொடுங்க’’ என நேயர் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டு சென்றார்கள்.

கூட்டம் குறைந்தவுடன் கடைக்காரரிடம் சாதாரண சளிக்காக இப்படி, மாத்திரை வாங்கிச் செல்கிறார்கள். அதுவும் மருத்து வரின் மருந்து சீட்டு இல்லாமலே வாங்கிச் செல்கிறார்கள். நீங்களும் மாத்திரைகளை வாரி, வழங்குகிறீர்களே, இது நியாயமா? என்று கேட்டேன்.

‘‘தப்புதான், சார்... நம்ம ஊர்ல மருந்து சீட்டைக் கேட்டா, மருந்து விற்கவே முடியா துங்களே’’ என்றார் கடைக்காரர்.

சளிப்பிடித்தால், என்ன மாத்திரைகள் கொடுப்பீர்கள் என்று கேட்டேன்.

‘‘சளிக்கு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் தான் கொடுப்போம்’’ என்றார்.

சரி, இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், எத்தனை நாளில் சளி குணமாகும் என்றேன்.

‘‘7 நாளில் குணமாகும்’’ என்றார்.

மாத்திரையே எடுத்துக்கொள்ள வில்லை என்றால், எத்தனை நாளில் சளி குணமாகும் என்றேன்.

‘‘அதே 7 நாள்கள்தான். சில சமயம் 5, 6 நாள்கள்லகூட குணமாகிடும்’’ என்றவர், இன்னும் சில செய்திகளையும் அடுக்கினார்.

‘‘உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன். பெரும்பாலும் டாக்டர்களுக்குச் சளிப் பிடிச்சா, மருந்து, மாத்திரை எடுத்துக்க மாட்டாங்க. அது ஒரு வாரத்துல தானாகவே சரியாகும்னு அவங்களுக்குத் தெரியும். ஆனா, பொதுமக்களுக்கு இந்த உண்மை தெரியாது. சளி, தானா சரியாகும்னு டாக்டர் சொன்னா, அவர்கிட்டா, அடுத்த முறை யாரும் போக மாட்டாங்க. அதனால, அவங்களும் மருந்து எழுதிக் கொடுக்கிறாங்க. எங்ககிட்ட வந்து கேட்டாலும், வேற வழியில்லாம மாத்திரைக் கொடுக்கிறோம். கூகுள் வந்த பிறகு, மக்களே டாக்டரா மாறிட்டாங்க. மருந்து, மாத்திரை களை, இந்த வீரியத்துல (Mg) வேணும்னு கேட்கிறாங்க. அவங்களுக்கு மருந்தைக் கொடுத்துட்டு, ஏதாவது நடந்துடுமோனு நாங்கத்தான் உள்ளுக்குள்ள பயத்துல இருக்கோம்’’ என்றார் குரல் நடுக்கத்துடன்.

ஜலதோஷம்
ஜலதோஷம்

இந்த மருத்துக்கடையில் நான் கண்ட காட்சிகளை, அண்மையில் ஆதாரங்களுடன் படம் பிடித்துக் காட்டியிருந்தது, புகழ்பெற்ற லேன்செட் (The Lancet Regional Health - Southeast Asia in September 2022) மருத்துவ இதழ்.

‘‘இந்திய அரசின் கட்டுப்பாடுகளை மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சரியாகப் பின்பற்றுவதில்லை. அசித்ரோமைசின் மற்றும் செஃபிக்ஸிம்-ஆஃப்லோக்சசின் ஆகியவை இந்தியாவில் அதிகம் பயன் படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், தனிநபர்களே வாங்கிப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், உடல் நலப் பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன’’ என்று விரிவான கட்டுரையை எழுதி எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

‘‘வழக்கறிஞர் ஒருவர் அடிக்கடி செரிமானக் கோளாறு ஏற்படுவதாகச் சிகிச்சைக்கு வந்தார். நடுத்தர வயதுதான் இருக்கும். பரிசோதித்துப் பார்த்ததில், வயிற்றுக்குள் வெளிப்படையாக எந்தப் பிரச்னையும் இல்லை. அவருடைய உணவு உள்ளிட்ட பழக்கவழக்கங்களை விரிவாகக் கேட்டேன். அப்போது தான் அவர் பிரச்னையின் அடிநாதம் தெரிந்தது.

அவருக்கு ஆஸ்துமா இருக்கிறது. இதனால் அடிக்கடி சளி பிடிக்கிறது. சளி பிடிக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு ‘ஆன்டிபயாட்டிக்’ மாத்திரையை, மருத்துவரிடம் கேட்காமல், தன் விருப்பத்துக்குப் போட்டுக்கொள்கிறார். அன்றைக்கும் அவர் கைப்பையிலிருந்த ஒரு மாத்திரையைக் காண்பித்து, மாதத்தில் இரண்டு முறையாவது அதைப் போட்டுக் கொள்வதாகச் சொன்னார்.

எனக்கோ பேரதிர்ச்சி ஏற்பட்டது. மருத்துவர்களாகிய நாங்கள் சளிக்குப் பரிந்துரைக்கும் மாத்திரைகளிலேயே வீரியம் மிகுந்த மாத்திரை அது! கட்டியைக் கீற கத்தி போதும்; கோடரி எதற்கு? வழக்கறிஞரோ சாதாரண சளி பிடிக்கும்போதெல்லாம் அந்த வீரியமுள்ள மாத்திரையைப் பயன்படுத்தியிருக்கிறார். அதனால் வந்த வினைதான் செரிமானப் பிரச்னை. ‘முதலில் அந்த மாத்திரையைத் தலையைச் சுற்றி வீசுங்கள்’ என்று கூறிவிட்டு, அவருடைய குடல் வலுவடையச் சில மருந்துகள் கொடுத்தேன். இரண்டு வாரங்கள் கழித்து அவரின் குடல் பிரச்னை சரியாகிவிட்டது’’ என்று ஆன்டிபயாட்டிக் ஆபத்து பற்றி டாக்டர் கு.கணேசன் ஒரு கட்டுரையில் பகிர்ந்திருந்தார்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

கடந்த சில இதழ்களாக ‘மக்கள் மருத்துவர்’ பி.எம்.ஹெக்டேவின் மருத்துவ அனுபவங்களைப் பார்த்து வருகிறோம்.

இதைப் பற்றியும்கூட அவர் நிறைய பேசியுள்ளார். அதையும் கேட்போம்.

‘‘ஃப்ளு வகை வைரஸ் காய்ச்சல் மூலம் ஐரோப்பாவில் மட்டும், ஆண்டுதோறும் 50 மில்லியன் மக்கள் பாதிக்கப் படுகிறார்கள். குளிர்காலங்களில் வெளியில் செல்லாமல் முடங்கிக் கிடக்கிறார்கள். இதற்கு நம் நாட்டில் எளிய தீர்வு உள்ளது.

ஃப்ளு அறிகுறி தெரிந்தவுடன் 5 நிமிடங்கள் ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து ஆவிப் பிடித்தால் போதும். இதன் மூலம் மூக்குப் பகுதியில் ஒரு டிகிரி வெப்பநிலை கூடும். வைரஸ் கிருமிகள் இறந்து விடும். அடுத்து, அரை மணி நேரம் வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிக்கலாம். தண்ணீர் குடிக்க சிரமப்பட்டால், டீகூட குடிக் கலாம். இதனால், தொண்டை பகுதியில் ஒரு டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும். உங்களைத் தொல்லை செய்து வந்த கிருமிகள் ஓடிவிடும். கூடவே, ஒரு நாள் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வு எடுங்கள். அடுத்த நாள் ஃப்ளு பறந்து ஓடியிருக்கும்.

நம் உடலுக்குள் கிருமிகள் நுழைந்தால், அதை அழிக்கவே உடல் வெப்பநிலையைக் கூட்டுகிறது. நாம் என்ன செய்கிறோம் என்றால், அந்த வெப்பநிலையைக் குறைக்க காய்ச்சல் மாத்திரைகளை அள்ளி முழுங்குகிறோம்.

இப்போது நான் சொல்லியவை எதற்கும் பணம் செலவு செய்யத் தேவையில்லை. இதனால், இவை பிரபலமாகவில்லை. இங்கு சொல்லியவற்றை செய்த பிறகும் தொந்தரவுகள் தொடர்ந் தால் நல்ல டாக்டரைப் பார்ப்பது அவசியம். ஆனால், நம் மக்கள் லேசாக இருமல் இருந்தால் போதும், நேராக மருந்துக்கடைக்குச் சென்று இருமல் மருந்து வாங்கிக் குடித்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள்.

நண்பர்களே, இந்தியாவைத் தவிர உலகின் பல நாடுகளில் இருமல் மருந்தைத் தடை செய் துள்ளார்கள். ஏன் தெரியுமா? சாதாரண இருமலை அப்படியே விட்டுவிட்டால் சரியாகிவிடும். வீரியமான மருந்துகளை உட்கொள்ளும்போது தொண்டை, சுவாசப் பாதைகள் பாதிக்கப்பட்டு, அது ஆஸ்துமா வரை கொண்டு சென்று சேர்க்கும்.

நம் உடலுக்குள் கிருமிகள் நுழைந்தால், அதை அழிக்கவே உடல் வெப்பநிலையைக் கூட்டு கிறது. நாம் என்ன செய்கிறோம் என்றால், அந்த வெப்பநிலையைக் குறைக்க ஓடிச்சென்று காய்ச்சல் மாத்திரைகளை அள்ளி முழுங்கி, நம் உடலில் பல பிரச்னைகள் விஸ்ரூபம் எடுக்க எல்லா வேலை களையும் செய்கிறோம்.

வெளிநாடுகளில் மருந்து, மாத்திரை இல்லாமல், நம் ஊர் மஞ்சள் மூலம் காய்ச்சல், சளியை விரட்டி அடிக்கிறார்கள். ஆனால், அந்த மஞ்சளை விளைவிக்கும் நம் கிராமப் புற மக்கள் ஆங்கில மருந்துகளை நாடிச் செல்கிறார்கள். அதுவும் அவர்களுக்கு எட்டும் நிலையில் இல்லை. உடல் நலம், நல்வாழ்வின் ஆதாரம்; இதைக் கவனத்தில் கொண்டால் மக்களின் பொருளாதார நிலை முன்னேறும்.

மருந்து, மாத்திரைகளை மட்டும் சாராமல், மக்களின் வாழ்க்கை தரம், சிந்தனை இவற்றை மாற்று வதன் மூலம் நல்வாழ்வை உருவாக்க முடியும். 140 கோடியை மிஞ்சிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் கிராமப்புறங் களுக்குச் செல்லத் தயங்கும் நவீன மருத்து வர்கள் மூலம் முழுமையான மருத்துவம் வழங்க முடியாது. ஆகையால், கிராமப்புறங்களுக்குச் சென்று சேவை புரிய முன்வரும் பெண்களுக்கும், இப்போது பணியில் உள்ள நர்ஸுகளுக்கும் மருத்துவப் பயிற்சி தந்து பயன் படுத்துவது பெரிதும் உதவும்.

கிராமத்து மக்களின் அடிப்படை நோய்களைக் கண்டுபிடிக்கவும், குறிப்பிட்ட மருந்துகள் தரவும், சிக்கலான நோயாளிகளை நகர்ப் புற மருத்துவமனைக்கு அனுப்பவும் இவர்களுக்குப் பயிற்சி அளிக் கலாம். கர்ப்பமுற்ற பெண்களின் சத்துணவு, சோகை தடுப்பு, தடுப்பூசி, பிரசவம் ஆகிய அடிப் படைத் தேவைகளை இவர்கள் கவனிப்பதால், பிரசவகால உயிரிழப்பு, குழந்தைகள் பிறப்பு இவற்றில் உள்ள ஆபத்துகள் பெரிதும் குறையும்.

பி.எம்.ஹெக்டே
பி.எம்.ஹெக்டே

மிகுந்த செலவு பிடிக்கும் உயர் மருத்துவத்தையும், பணச் செலவையும் குறைக்க வேண்டும். கிராமங்கள் சார்ந்த, முன் தடுப்பு உணர்வுடன் உடல்நல அக்கறை, விழிப்புணர்வு உருவாக்கும் மருத்துவ முறைகளே தேவை. இதுவே மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டுக்குப் பெரும் நன்மை பயக்கும். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும்.

இதைப் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். ‘ஒரு நர்ஸ் எப்படி மருத்துவம் பார்ப்பார்?’ என்று கேள்விகள் எழுகின்றன. நர்ஸ் என்பவர், மருத்துவர் அல்ல. ஆனால், மருத்துவம் படித்தவர் என்பதை நாம் மறந்து போய்விடுகிறோம். ஆரம்பச் சுகாதர நிலையங்களைச் செம்மைப்படுத்தினால் நல்வாழ்வு எல்லோருக்கும் எட்டும்’’ என்று சொல்லும் மக்கள் மருத்துவர் பி.எம்.ஹெக்டே, அதற்கான காரணத்தையும் தீர்வையும் முன் வைக்கிறார்.

‘‘கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்களுக்கு உதவுவதில் பெரிதும் பின்தங்கியுள்ளன. கர்நாடக மாநிலம், மங்களூரு அருகில் உள்ள என் சொந்த ஊரான ஹரிசக்தா இதற்கு ஓர் உதாரணம்...’’ என மேற்கொள்காட்டி பேசுகிறார் பி.எம்.ஹெக்டே. அதை அடுத்த இதழில் பார்ப்போம்.