Published:Updated:

ஆட்சியாளர்களின் கவனத்துக்கு... வடியாத வெள்ளம்... விடியாத வாழ்க்கை வழி சொல்லும் வண்டுவாஞ்சேரி!

 மணிமாறன்
பிரீமியம் ஸ்டோரி
மணிமாறன்

நீர் மேலாண்மை

ஆட்சியாளர்களின் கவனத்துக்கு... வடியாத வெள்ளம்... விடியாத வாழ்க்கை வழி சொல்லும் வண்டுவாஞ்சேரி!

நீர் மேலாண்மை

Published:Updated:
 மணிமாறன்
பிரீமியம் ஸ்டோரி
மணிமாறன்

சில மணிநேரம் தொடர்ச்சியாக மழை பெய்தாலே, குடியிருப்பு பகுதிகளிலும் விளைநிலங்களிலும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. வெள்ளநீரை வடிய வைப்பது பெரும் சவாலாக உள்ளது. அதேசமயம் என்னதான் கனமழை கொட்டித் தீர்த்தாலும், அடுத்த சில மாதங்களிலேயே வறட்சித் தாண்டவமாடுவதையும் பார்க்கிறோம். நவீன பொறியியல் துறையில் மெத்தப் படித்தவர்கள், அதிநவீன கனரக இயந்திரங்கள் எல்லாம் இருந்தும்கூட தற்போது, நீர் மேலாண்மை தட்டுத் தடுமாறி, பல் இளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இத்தனை தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலும், நீர் மேலாண்மையில் நுட்பமான அறிவுப் பெற்று, அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, உலகுக்கே வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

கச்சமங்கலம் தடுப்பு அணை
கச்சமங்கலம் தடுப்பு அணை

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இதில் தமிழர்கள் சாதனை படைத்து வந்திருக்கிறார்கள். பழங்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆறுகள், தொடர் ஏரிகள், பேரேரிகள், நீர் ஒழுங்கிகள், கண்மாய்கள், குளங்கள், ஏந்தல்கள், தாங்கல்கள், ஓடைகள், கன்னிகள், வாய்க்கால்கள் இதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் கையாண்ட இன்னும் பல ஆச்சர்யமான தொழில்நுட்பங்களை, தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், செப்பேடுகள் பறைசாற்றுவதாக வியக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சோழகங்கம் ஏரி

‘தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களுடைய ஆளுமையை நிலைநிறுத்துவதாக நினைத்துக் கொண்டு, ஆடம்பரத்தையும், அதிகாரத்தையும், ஆணவத்தையும் அல்லவா வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாமன்னன் ராஜேந்திர சோழனோ, தன்னுடைய புதிய தலைநகரை உருவாக்கியபோது, ஒரு பெரிய ஏரியை வெட்டினார். அந்த ஏரிக்கு மழைநீரும், காவிரி பேராற்று நீரும் வருவதற்காக, கொல்லிமலை பகுதியிலிருந்து, கங்கை கொண்ட சோழப் பேராறு என்ற புதிய ஆற்றை உருவாக்கினார். அந்த ஆற்று நீர் கொள்ளிடம் ஆற்றை வந்தடைந்து, கொள்ளிடம் நீரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு, சுமார் 60 மைல் தூரம் ஓடி, சோழகங்கம் ஏரியின் தென்மேற்கு மூலையில் சென்று சேருமாறு மகத்தான சாதனையைச் செய்திருக்கிறார். இது போதாதென்று, வட வெள்ளாற்றிலிருந்து, ஒரு கால்வாய் வெட்டி, அந்த நீரும் சோழகங்கம் ஏரியில் கலக்குமாறு செய்திருக்கிறார். அதோடு, அந்த ஏரியின் வெள்ளநீரை, தனது முப்பாட்டன் தோற்றுவித்த வீராணம் ஏரியில் கலக்கச் செய்தார். அந்த ஏரியின் வடிகாலை, வெள்ளாற்றில் இணைத்துள்ளார்’ என ராஜேந்திர சோழனின் நீர் மேலாண்மையை வியப்புடன் பதிவு செய்திருக்கிறார், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

குடவாயில் பாலசுப்ரமணியன்
குடவாயில் பாலசுப்ரமணியன்

உலகுக்கே வழிகாட்டிய மேலாண்மை

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ் பண்டிதரான முனைவர் மணிமாறன், நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை குறித்து, இலக்கியத் தரவுகளோடு கள ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். அவரைச் சந்தித்தோம். ‘‘பழங்காலத் தமிழர்கள் பின்பற்றிய நீர் மேலாண்மை உலகுக்கே வழிகாட்டியாக அமைந்தது. அந்தத் தொழில்நுட்பங்களைத் தற்போது நாம் மீண்டும் பயன்படுத்தினால், நீர்த்தட்டுப்பாடும், வெள்ளமும் ஏற்படாத சூழலை நிச்சயம் உருவாக்க முடியும். மனித வாழ்வுக்கு விவசாயம்தான் உயிர்நாடி. அதற்கு மிகவும் அடிப்படைத் தேவை தண்ணீர். இதனை நன்கு உணர்ந்ததால்தான், தண்ணீரை எவ்வாறெல்லாம் கையாள்வது என்பது குறித்துப் பழந்தமிழர் மிக நுட்பமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியிருக்கிறார்கள். இவை எதிர்காலத் தலைமுறைகளுக்கும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இலக்கியம், கல்வெட்டுகள், காசுகள், செப்பேடுகள், சிற்பம், ஓவியம் உள்ளிட்டவற்றில் இதைப் பதிவு செய்துள்ளனர்.

மணிமாறன்
மணிமாறன்

பிள்ளைவாய்க்கால்

தஞ்சாவூர் அருகே கச்சமங்கலம் என்ற ஒரு ஊர் உள்ளது. அதற்குத் திருப்பியூர் என்ற பெயரும் உண்டு. கல்லணையிலிருந்து பிரிந்து வரும் வெண்ணாற்றின் குறுக்கே, அந்த ஊரில் ஒரு தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அதனை ஒட்டி, ஆற்றின் இரு கரைகளிலும் இரண்டு மதகுகள் உள்ளன. அங்கு பிள்ளைவாய்க்கால் என்ற ஒரு நீண்ட கால்வாய் பிரிந்து விளைநிலங்களுக்குப் பாசனம் அளிக்கிறது. இந்த அமைப்பானது, வாய்த்தலை எனவும் தலைவாய் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் ஏற்கக்கூடிய அளவு தண்ணீர் மட்டும் இதில் செல்லும். மிகுதி நீர், மதகு வழியாக மீண்டும் ஆற்றுக்குள் வந்துவிடுவது போல் இது அமைக்கப்பட்டுள்ளது.

மன்னர் கால சிவகங்கை குளம்
மன்னர் கால சிவகங்கை குளம்


ஐந்து வாய்க்கால்

புதுக்கோட்டை மாவட்டம் திருவேட்பூர் என்னும் ஊரில் கவிர்குளம் என்ற பேரேரி உள்ளது. இது கண்மாய் எனவும் அழைக்கப்படுகிறது. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வெட்டப்பட்ட அந்த ஏரியைப் பாண்டிய மன்னர்கள் பேணி காத்திருக்கிறார்கள். பிற்காலச் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் அந்த ஏரி மேலும் ஆழப்படுத்தப்பட்டதோடு தொடர்ந்து பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாகச் சாசன தகவல்கள்மூலம் அறிய முடிகிறது. கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் வழியில் வண்டுவாஞ்சேரி என்ற ஊர் உள்ளது. இது சோழர் காலத்தில் புகழ்பெற்ற ஊர். இங்கு ஊடறுத்து ஐந்து வாய்க்கால் என்ற ஒரு கால்வாய் அமைப்பு உள்ளது. இது நீண்ட தூரம் வளைந்து வளைந்து சென்றபோதிலும் கூட, இடையில் இணைந்தோ தடைப்பட்டோ நிற்காமல் சென்றுள்ளது. இந்த ஐந்து வாய்க்காலில், முதல் வாய்க்கால் மற்றும் கடைசி வாய்க்காலில் மட்டுமே பக்க கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, விளைநிலங்களுக்குப் பாசனம் அளிக்கப்பட்டிருக்கிறது.

தஞ்சையில் உள்ள அகழி
தஞ்சையில் உள்ள அகழி

என்னதான் கனமழை பெய்தாலும் வேகமாகத் தண்ணீர் வடிய வேண்டும் என்பதற்காகவே பழங்காலத்தில் இப்படி அமைத்திருக்கிறார்கள். இதில் அறிவியல்பூர்வமான இன்னும் சில நுட்பங்கள் இழையோடியிருக்கிறது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட இப்பகுதி மக்கள் பயன் அடைந்திருக்கிறார்கள். இந்த அமைப்பின் நுட்பத்தை அறியாத நீர்ப்பாசனத்துறையினர், இந்த ஐந்து வாய்க்கால் அடுத்தடுத்து இருப்பது தேவையற்றது எனக் கூறி, இடையில் வாய்க்கால்களை அகற்றி, அகலமான இரண்டு வாய்க்கால்களாக மாற்றி அமைத்துவிட்டனர். இதனால் ஆற்றின் தலைப்பிலிருந்து அந்த ஊருக்கு வரும் தண்ணீர் பாசனத்திற்குப் போதுமானதாக இல்லை. பெருமழை காலங்களில் இவ்வூரில் தேங்கக்கூடிய தண்ணீர் வடியப் பல நாள்கள் ஆகின்றன என இப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். நீர் மேலாண்மையைப் பொறுத்தவரை நம் முன்னோர்களைப் பின்பற்றுவதே சிறந்த வழியாகும்’’ என்கிறார்.

நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை சாதனைகுறித்து ஓர் சிறு துளிதான் இங்கு பதிவு செய்துள்ளோம். இது அளவிட முடியாத பெருவெள்ளம் என்கிறது வரலாற்றுச் சான்றுகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism