Published:Updated:

மாடித்தோட்டத்துல பூச்சித் தொல்லையா... நீங்க செய்ய வேண்டியது இதுதான்! - வீட்டுக்குள் விவசாயம் - 7

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவசாயி உருவாக வழிகாட்டும் தொடர்..! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் 7

`மாடித்தோட்ட விவசாயத்துல செய்யக் கூடாத விஷயங்கள் என்னென்ன?'னு போன பகுதியில சொன்னதைப் பலரும் பாராட்டி இருந்தாங்க. அவங்களுக்கு நன்றியைச் சொல்லிட்டு இந்தப் பகுதிக்குள்ள போவோம்.

இன்னிக்கு யூடியூப்ல மாடித்தோட்டம் தொடர்பா நூற்றுக்கணக்கான வீடியோக்கள் கொட்டிக்கிடக்குது. அதுல சிலது அருமையா இருக்குது. ஆனா, பல வீடியோக்கள்ல தொழில்நுட்ப தவறுகள் ஏராளமா இருக்குது. பயிர்களைப் பொறுத்தவரைக்கும் நிலத்துல விதைச்சாலும், மண்ணுல விதைச்சாலும் அதோட குணம் ஒரே மாதிரிதான் இருக்கும். ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு பூச்சி, ஒவ்வொரு நோய்த் தாக்குதல் இருக்கும். அதனால பயிரைப் பற்றி முழுமையா தெரிஞ்சுக்கணும். புதுசா மாடித்தோட்டத்துக்கு வர்றவங்க கொஞ்சம் கொஞ்சமா இதை அவசியம் தெரிஞ்சுக்கணும். அடிப்படையைத் தெரிஞ்சுகிட்டாப் போதும். மற்றதையெல்லாம் உங்க அனுபவமே கத்துக்கொடுத்திடும். சரிங்க ப்ரோ... நாம விஷயத்துக்கு வருவோம்.

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்

இந்த முறையும் முன்னெச்சரிக்கை முத்தண்ணாவா உங்களை மாத்துற சில ஆலோசனைகளைத்தான் சொல்லப் போறேன். முதல்ல வீட்டுத்தோட்டத்துல எக்காரணம் கொண்டும் ரசாயனம் எட்டிக்கூட பார்க்கக்கூடாதுன்னு போன பகுதியிலயே பார்த்தோம். அதுல ரொம்ப கவனமா இருங்க. இயற்கை விவசாயம்னு முடிவு செஞ்சிட்டாலே போதும். பூச்சி நோய் பற்றி ரொம்ப அலட்டிக்க வேண்டியதில்லை. ஏன்னா, இயற்கை விவசாயத்தோட அடிப்படையே வருமுன் காப்போம்தான். பூச்சி வந்த பிறகோ, நோய் தாக்கிய பிறகோ அதுக்கு பண்டுதம் பார்க்குற வேலையே இருக்கக் கூடாது. அதுக வருதோ வரலையோ நம்ம வேலையை நாம சரியா பார்த்துடணும். பிறகு அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையேயில்லை.

`அப்படி என்ன செய்யணும்?'னு ரொம்ப யோசிக்காதீங்க. ரொம்ப சின்ன வேலைதான். நிலத்துல விவசாயம் செய்யும்போது வருமுன் காப்போம் கடைப்பிடிச்சாலும் அக்கம் பக்கத்து நிலத்துல இருக்க பூச்சி, நோய் தாக்க வாய்ப்பிருக்கும். ஆனா, மாடித்தோட்டத்துல அந்தப் பிரச்னை இல்லை. அதுவும் நிலத்துல வர்ற அளவுக்குப் பூச்சிகள் மாடித்தோட்டத்துக்கு வராது. அப்படி வந்தா நம்ம கவனிப்பு போதலைன்னுதான் அர்த்தம். நாம மாடித்தோட்டத்துல எந்தப் பயிர் சாகுபடி செஞ்சாலும் மறக்காம செய்ய வேண்டியது வேப்பெண்ணெய் கரைசல் தெளிப்பு. நீம் ஆயில்ங்கிற பேர்ல கடைகள்ல கிடைக்குற வேப்பெண்ணெய்யை வாங்கிட்டு வந்து ஒரு லிட்டர் தண்ணியில 5 மில்லி கலந்து 15 நாளைக்கு ஒரு தடவை தெளிச்சுகிட்டே இருக்கணும். இதைத் தெளிச்சவுடனே பயிர்கள் ஒரே வாரத்துல பச்சை பசேல்னு இருக்கும். அதைப் பார்த்துட்டு வாரம் ஒரு தடவை அடிச்சுடக் கூடாது. 15 நாளைக்கு ஒரு தடவைதான் அடிக்கணும். இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தா, பூச்சிகள் தொல்லையே இருக்காது. இதை எல்லா பயிருக்கும் தெளிக்கலாம். இதுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில முக்கியமான நடவடிக்கை.

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்
மாடித்தோட்டத்துல இந்த தப்பெல்லாம் நீங்களும் பண்றீங்களா?! - வீட்டுக்குள் விவசாயம் - 6

மாடித்தோட்டத்துல மண் பயன்படுத்தக் கூடாது. தென்னை நார் கழிவு உரத்தைத்தான் பயன்படுத்தணும்னு சொல்லியிருந்தேன். அதைப் படிச்சுட்டு ஒரு நண்பர், `வெண்டைக்காய் சாகுபடிக்கு நிச்சயம் கொஞ்சம் மண்ணாவது சேர்த்தாதான் நுண்ணூட்ட சத்துகள் கிடைக்கும்னு வீடியோவுல சொல்றாங்க. நீங்க வேணாம்னு சொல்றீங்க ஒரே குழுப்பமா இருக்கே'னு கேட்டாரு. நாம சொன்ன கருத்துல நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லைன்னாலும், வேற ஒருவர்கிட்ட கேட்போம்னு தோட்டக்கலைத்துறை விஞ்ஞானி ஒருவர்கிட்ட கேட்டேன். அவரும் என்னோட கருத்தை அப்படியே ஆமோதிச்சாரு. தென்னை நார் கழிவு உரம்னு சொன்னா அதுல நுண்ணூட்ட சத்துகள் எல்லாம் இருக்கும். தென்னை நார் கழிவுல அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் மாதிரியான உயிர் உரங்களைச் சேர்த்து ஊட்டமேற்றிதான் கடைகள்ல விற்பனை செய்றாங்க. அதுனால அந்தத் தென்னை நார் கழிவு உரத்தைப் பயன்படுத்துனா போதும். ஆனா, சிலபேரு நுண்ணூட்ட சத்துக்களைச் சேர்க்காம தென்னை நார் கழிவுகளை மட்டும் போட்டுச் செடிகளை வளர்த்தா நிச்சயம் வளராது. தென்னை நார் கழிவுக்கும், தெனை நார் கழிவு உரத்துக்கும் இருக்க வித்தியாசத்தை முதல்ல புரிஞ்சுக்கணும். தென்னை நார் கழிவு உரத்துல விதை நட்டுட்டு அப்படியே விட்டுடக் கூடாது. 15 நாளைக்கு ஒரு தடவை ஒரு கைப்பிடி மண்புழு உரத்தை வைக்கணும். இதையும் வழக்கமா வெச்சிக்கணும். அப்படி வைக்கும்போது கொஞ்சம் மண்ணை கிளறிவிட்டு வெச்சா ரொம்ப நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே மாதிரி செடிகள்ல எறும்புத் தொல்லை இருக்குது. குறிப்பா வெண்டி செடியில எறும்பு அதிகமா இருக்குதுனு மாடித்தோட்ட விவசாயிங்க பலரும் புலம்புறாங்க. அதுக்கு முக்கிய காரணமே மண்ணுதாங்க. மண்ணுதான் எறும்புகளோட வீடு. மண்ணு இருந்தா நிச்சயம் எறும்புகள் வரும். தென்னை நார் கழிவு உரங்களைப் பயன்படுத்துற விவசாயிகளுக்கு எறும்பு பிரச்னையே இருக்காது. `இப்ப நான் ஏற்கெனவே மண்ணுல நடவு செஞ்சுட்டேன். இப்ப எறும்புத் தொல்லை இருக்குது. அதுக்கு என்ன பண்ணணும்?'னு கேக்குறவங்க இந்த ஆலோசனையைக் கவனத்துல எடுத்துக்குங்க.

கொஞ்சம் வேப்பம் பிண்ணாக்கை எடுத்து அதுல 5 மில்லி வேப்பெண்ணெய்யைக் கலந்து செடியோட அடிப்பகுதியில வெச்சிடுங்க. 15 நாளைக்கு ஒரு தடவை ஏற்கெனவே சொன்ன மாதிரி வேப்பெண்ணைய்யைத் தண்ணியில கலந்து தெளிச்சு விடுங்க. எறும்புப் பிரச்னை இருக்காது. சரி, இந்தத் தடவை வெண்டை சாகுபடி பற்றி டிப்ஸ் சொல்றேன். பொதுவா வெண்டை செடி வளர்க்கிறது ரொம்ப சுலபம். அதே நேரம் கவனம் கொஞ்சம் குறைவா இருந்தாலும் பூச்சிகள் தாக்குதல் நடந்திடும். அதைக் கவனத்துல வெச்சுக்குங்க.

Ladies Finger
Ladies Finger
Photo: Vikatan / Manivannan.K

நடவுக்குத் தயார் செஞ்ச தொட்டியில விதையை நடணும். ஒரு தொட்டிக்கு ஒரு செடி இருந்தாதான் நல்ல மகசூல் கிடைக்கும்னு போன தடவை பார்த்தோம்ல அதை மனசுல வெச்சுக்குங்க. இப்ப ஒரு தொட்டியில `ஃ' மாதிரி முக்கோணமா விதைகளை நடவு செய்யணும். விதைகளை நடவு பண்ணி தண்ணி தெளிச்சுட்டு வந்தா, ஒரு வாரத்துக்குள்ள விதை முளைச்சுடும். அதுக்குப் பிறகு 15 நாள் கழிச்சு எந்தச் செடி நல்லா வளர்ந்திருக்குன்னு பார்க்கணும். தண்டு, இலை நல்ல வளர்ச்சியில இருக்க செடியை மட்டும் வெச்சிக்கணும். மத்த ரெண்டையும் `கட்' பண்ணி விட்டுடணும். பல பேர் ஒரு செடியை விட்டுட்டு மத்த ரெண்டு செடியையும் பிடுங்குவாங்க. அப்படி செய்யக் கூடாது. பிடுங்கும்போது மூணு செடிகளோட வேர்களும் கீழே பிணைஞ்சு இருந்தா, நாம வளர்க்கப் போற செடியோட வேரும் பாதிக்கப்படும். அதுனால நமக்குத் தேவையில்லாத செடிகளையும் வேரோட பிடுங்காம, பிளேடை வெச்சி, தரைக்கு மேல இருக்க தண்டை மட்டும் வெட்டி விட்டாப் போதும். கொஞ்ச நாள்லயே அந்தச் செடிக காய்ஞ்சிடும். அதே போல வெண்டியில அசுவினி, சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனால் இலைகள் சுருண்டு போய்விடும். ஆனால், 15 நாள்களுக்கு ஒருமுறை வேப்பெண்ணெய் தெளித்து வந்தால் இந்தப் பூச்சிகள் தாக்குதலே இருக்காது.

மாடித்தோட்ட விவசாயி அனுபவத்தை அடுத்த பகுதியில பார்க்கலாம். வழக்கம்போல உங்களோட சந்தேகங்கள் / கேள்விகளை கமென்ட்ல கேளுங்க... வரும் வெள்ளிக்கிழமை சந்திப்போம்.

- வளரும் .
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு