நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

'பிக்ஸ்' பைகள் பயறுகளின் 'பலே' பாதுகாவலன்!

வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
News
வெளிநாட்டு விவசாயம்

வெளிநாட்டு விவசாயம்-17

ர் உயிரினம் உலகின் எந்தப் பகுதியில் தோன்றி, நெடுங்காலமாக வாழ்ந்து வருகிறதோ அந்தப் பகுதியில்தான் அதன் நண்பர்களும் எதிரிகளும் மிக அதிக அளவில் இருப்பார்கள். அந்த அடிப்படையில் பயறு வகைப் பயிர்களைத் தாக்கும் புள்ளிக்காய்ப்புழு உருவான இடமான தென்கிழக்கு ஆசியாவில், அதிலும் குறிப்பாக இந்தோ-மலேசிய பகுதிகளில் (இது வடகிழக்கு இந்தியாவிலிருந்து பர்மா, மலேசியா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது) அதன் இயற்கை எதிரிகளைத் தேடினோம். ஆனால், புள்ளிக் காய்ப்புழுவைத் தாக்கி அழிக்கக்கூடிய ஒட்டுண்ணிகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

காரணம், இந்த நாடுகளில் பயறுவகைப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் மிக அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினார்கள். அவ்வளவு பூச்சிக் கொல்லிகளைத் தாங்கிக்கொண்டு, எந்த உயிரினம்தான் வாழ முடியும்? எனவே, பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப் படாத இடங்களாகப் பார்த்து, தேடலைத் தொடர முடிவு செய்தோம். அந்த அடிப்படையில் தாய்லாந்து நாட்டில் அகத்தி வயல்களில் தேடலைத் தொடங்கினோம். தாய்லாந்து நாட்டில் அகத்திக் கீரைகளை விட, அதன் மொட்டுக்களையும் பூக்களையும் தனியாகச் சமைத்தும், சூப் போன்ற உணவு களில் கலந்தும் உண்பார்கள். ஆனால், புள்ளிக்காய்ப்புழு அகத்தி மரங்களில் இந்தப் பூக்களைக் குறிவைத்துதான் தாக்கும். இருந் தாலும் விவசாயிகள் அகத்தி மரங்களுக்கு எவ்வித பூச்சிக்கொல்லிகளையும் உபயோகிப் பதில்லை. அந்தத் தேடலின் விளைவாகக் கிடைத்ததுதான் ‘ஃபெனிரோடோமா’ (Phanerotoma) என்ற ஒட்டுண்ணி.

தாய்லாந்து அகத்தித் தோட்டம்
தாய்லாந்து அகத்தித் தோட்டம்

இந்த ஒட்டுண்ணி, புள்ளிக்காய்ப்புழுவின் முட்டைகளைத் தாக்கி அழிக்கக்கூடியது. அதுவும் புதிதாக வைக்கப்பட்ட முட்டை களைத்தான் முதலில் தேடித்தேடித் தாக்கும். எனவே, புள்ளிக்காய்ப்புழுவின் புழுக்கள் இளம் பருவத்திலேயே, அதுவும் பயறுவகைச் செடிகளின் காய்களைத் துளைத்து உள்ளே போவதற்கு முன்பே இறந்துவிடும். எனவே, ‘ஃபெனிரோடோமா’ புள்ளிக்காய்ப்புழுவை அழிக்கக்கூடிய மிகச்சிறந்த ஒட்டுண்ணியாகக் கருதப்பட்டது.

‘அப்படியானால், புள்ளிக்காய்ப்புழுவின் கதை இத்துடன் முடிந்துவிட்டதா?’ என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், எந்தவொரு ஒட்டுண்ணியும் வயல்வெளியில் 30 முதல் 40 சதவிகித பூச்சிகளைத் தாக்கி அழித்து விட்டாலே, அதை ஆகச்சிறந்த ஒட்டுண்ணி யாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். எனவே, மீதமிருக்கும் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான பூச்சிகளைக் கட்டுப்படுத்த மற்ற காரணிகளை நாட வேண்டியது அவசியமாகிறது. எனவேதான் வைரமுதுகு பூச்சியின் கட்டுப்பாட்டில் சொல்லியதைப் போல இரண்டு, மூன்று ஒட்டுண்ணிகளைக் கண்டுபிடிக்க வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது.

தாய்லாந்து அகத்தித் தோட்டம்
தாய்லாந்து அகத்தித் தோட்டம்

புள்ளிக்காய்ப்புழுவுக்கு எதிரான ஒட்டுண்ணிகளைத் தேடிய எங்களது பயணம் தொடர்ந்தது. அந்தத் தேடலின் முடிவில் கிடைத்த மற்றொரு ஒட்டுண்ணி ‘தீரோஃபைலஸ்’ (Therophilus). இது லாவோஸ், வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடு களில் பரவலாகக் காணப்பட்டது. ஃபெனிரோடோமாவைப் போல் இல்லாமல், தீரோஃபைலஸ் புள்ளிக்காய்ப்புழுவின் வளர்ந்த புழுக்களைத் தாக்கி அழிக்கக் கூடியது. ஆகவே, இதை மிகச்சிறந்த கண்டு பிடிப்பாகக் கருதினோம். ஏனென்றால், ‘ஃபெனிரோடோமா’ ஒட்டுண்ணியானது, புள்ளிக்காய்ப்புழுவின் முட்டைகளையும், இளம்பருவ புழுக்களையும் தாக்கி அழிக்கும். தப்பிப் பிழைக்கும் வளர்ந்த புழுக்களைத் ‘தீரோஃபைலஸ்’ தாக்கி அழிக்கும். எனவே, இவை இரண்டையும் ஒரே வயலில் பயன்படுத்தலாம்.

இந்த இரண்டு ஒட்டுண்ணிகளும் இணைந்து சுமார் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான புள்ளிக்காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்திவிடும். மீதமுள்ள 30 முதல் 40 சதவிகிதம் வரையிலான புள்ளிக்காய்ப் புழுக்களை, என்.பி.வி, ‘பேசில்லஸ் துரிஞ்சி யென்சிஸ்’ மற்றும் ‘மெட்டாரைசியம்’ போன்ற உயிரியல் பூச்சிக்கொல்லிகளைக் கொண்டு மிக எளிதாகக் கட்டுப்படுத்தி விடலாம். அந்த அடிப்படையில், ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஃபெனிரோ டோமா மற்றும் தீரோஃபைலஸ் என்ற இரண்டு ஒட்டுண்ணிகளும் ஆப்பிரிக்க கண்டத்தில், குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆசிய நாடுகளில், இந்த இரண்டு ஒட்டுண்ணி களையும் அறிமுகம் செய்யத் தேவையில்லை. பெரும்பாலான நாடுகளில் அவை காணப்படும். எனவே, பயறுவகைப் பயிர் களில் நாசகர வேதியியல் பூச்சிக்கொல்லி களைத் தெளிப்பதைத் தவிர்த்து, உயிரியல் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தால், இந்த ஒட்டுண்ணிகளும் மற்ற இயற்கை எதிரிகளும் பன்மடங்கு பெருகி, புள்ளிக்காய்ப்புழுவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

அகத்திப் பூக்களில் புள்ளிக்காய்ப்புழுவின் தாக்குதல், புள்ளிக்காய்ப்புழுவின் முட்டை மற்றும் இளம்புழுக்களைத் தாக்கும் ஃபெனிரோடோமா ஒட்டுண்ணியின் கூட்டுப்புழு, ஃபெனிரோடோமா ஒட்டுண்ணி, தீரோபைலஸ் ஒட்டுண்ணி, பாசிப்பயறு மணிகளின் மேற்புறத்தில் காணப்படும் பயறு வண்டுகளின் முட்டைகள், பயறு வண்டுகள்
அகத்திப் பூக்களில் புள்ளிக்காய்ப்புழுவின் தாக்குதல், புள்ளிக்காய்ப்புழுவின் முட்டை மற்றும் இளம்புழுக்களைத் தாக்கும் ஃபெனிரோடோமா ஒட்டுண்ணியின் கூட்டுப்புழு, ஃபெனிரோடோமா ஒட்டுண்ணி, தீரோபைலஸ் ஒட்டுண்ணி, பாசிப்பயறு மணிகளின் மேற்புறத்தில் காணப்படும் பயறு வண்டுகளின் முட்டைகள், பயறு வண்டுகள்

பயறுவகைப் பயிர்களை வெற்றிகரமாக விளைவித்து, அறுவடை செய்த பிறகும் விவசாயிகள் மிகப்பெரிய சவாலைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவரை, துவரை, பாசிப் பயறு மற்றும் தட்டைப்பயறு ஆகியவற்றின் தானியங்களை நீண்ட நாள்களுக்கு மூட்டைகளிலோ, மற்ற சேமிப்புக் கலன் களிலோ சேமித்து வைக்க முடியாது. மிக நன்றாகக் காட்சியளிக்கும் தானியங்களை மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்துத் திறந்து பார்த்தால், ஆங்காங்கே வண்டுகள் ஊர்ந்துகொண்டிருக்கும்; நிறைய தானியங் களில் ஓட்டை விழுந்திருக்கும். அப்படியே விட்டுவிட்டால், அடுத்த சில மாதங்களில் அவை மாவுகளாகச் சிதைக்கப்பட்டிருக்கும். இதற்கு பயந்துகொண்டே, நிறைய விவசாயிகள் அறுவடை முடிந்த உடனேயே கிடைக்கிற விலைக்குப் பயறு வகைகளை விற்றுவிடுகிறார்கள்.

சேமிக்க கொண்டு செல்லும்போது மிக அருமையாக, எவ்வித சேதமுமின்றிக் காணப்படும் இந்தத் தானியங்களுக்குள் பூச்சிகள் எப்படி வந்தன, எங்கிருந்து வந்தன? இது போன்ற கேள்விகளுக்கான பதில் – அவை வயல்களிலிருந்தே தானியங்களுடன் வந்து சேர்ந்தன என்பதுதான். ‘அது எப்படி நமது கண்களில் மண்ணைத் தூவிவிட்டு வர முடியும்?’

பயறுவகைத் தானியங்களைச் சேமித்து வைக்கும்போது, அவற்றைத் தாக்கிச் சேதத்தை உருவாக்கும் பூச்சிகள், வண்டு வகையைச் சேர்ந்தவை. இவற்றைப் பொது வாகப் பயறு வண்டுகள் (Bruchids) என்று அழைப்போம். வயல்களில் பயறுகளின் காய்கள் உலர ஆரம்பிக்கும் தறுவாயில் இந்த வண்டுகளின் பெண் அந்துப்பூச்சி, காய்களின் மேற்புறத்திலோ, காய்களுக்குள் இருக்கும் மணிகளிலோ முட்டைகளை வைக்கும். ஒவ்வொரு மணியிலும் ஒன்றிரண்டு முட்டைகள் இருக்கும். சொல்லப்போனால் இந்த முட்டைகள் மணிகளின் மேற்புறத்தில் மிக வலிமையான பசைகளைக் கொண்டு ஒட்டி வைக்கப்பட்டதைப்போல ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட காய்களை நாம் அறுவடை செய்து, உடைத்துத் தூற்றி மணிகளைப் பிரித்தெடுத்து உலர வைப்போம். அதுவரையிலும் தப்பிப் பிழைக்கும் முட்டைகள்தான் சேமிப்பில் ஏற்படும் சேதாரத்துக்கு அடிப்படை.

பிக்ஸ் பையின் அமைப்பு
பிக்ஸ் பையின் அமைப்பு

மணிகளின் மேற்பரப்பில் வெண்ணிறத்தில் காணப்படும் இந்த முட்டைகள் மிக மிகச் சிறியதாக இருப்பதால், பொதுவாகவே நாம் கவனிக்காமல் விட்டுவிடுவோம். அடுத்த தாகப் பயறுகளின் மணிகளைச் சரியாக உலர்த்தாமல் சேமிப்புக்கு அனுப்புவதுதான் சேதாரத்துக்கு அதிமுக்கியமான காரணம். சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பப்படும் மணிகளின் ஈரப்பதம் 9 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், அவை பயறு வண்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இப்படி அரைகுறையாக உலர்த்தப்பட்ட பயறுகளின் மணிகளை மூட்டைகளில் கட்டி, வீட்டின் ஒருபுறத்தில் அடுக்கி வைத்து விடுவோம். சாதாரணமாக அறைகளில் நிலவும் வெப்பநிலையான 27 - 28 டிகிரி செல்சியஸ் மற்றும் 70 சதவிகிதம் வரையிலான காற்றின் ஈரப்பதம் பயறு வண்டுகளின் வளர்ச்சிக்கு ஏதுவானதாக இருக்கிறது. இப்போது முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள், மணிகளின் மேற்புறத்தில் துளையிட்டு, உட்புறமாக உண்டுகொண்டே செல்லும். சுமார் மூன்று வாரங்களில் இந்தப் புழுக்கள் வளர்ந்து, அந்த மணிகளுக்குள்ளேயே கூட்டுப்புழுக்களாக மாறிவிடும்.

ஒரு வாரத்தில் கூட்டுப்புழுக்களிலிருந்து வளர்ந்த அந்துப் பூச்சிகள் வெளிவந்துவிடும். இந்த அந்துப் பூச்சிகள் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை உயிர்வாழும். அவை மூட்டைகளுக்கு உள்ளேயே கலவியை முடித்துக்கொண்டு, பெண் அந்துப் பூச்சிகள் உள்ளே மீதமிருக்கும், அதுவரையிலும் சேதமடையாத மணிகளைத் தேடி புதிய முட்டைகளை வைக்கும். மீண்டும் மீண்டும் இந்த வாழ்க்கை சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கையில், புதிதாகச் சேதாரம் நடந்துகொண்டே இருக்கிறது. நாம் கவனிக் காமல் விட்டால், அடுத்தடுத்த தலைமுறைகள் உருவாகிக்கொண்டே போகும்; சேதமும் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஏழெட்டு மாதங்களில், மூட்டைக்குள் இருக்கும் மணிகள் அனைத்தும் முற்றிலும் சேதப் படுத்தப்பட்டு மாவாக மாறி இருக்கும். பிறகு, அவை ஆடு மாடுகளுக்குக்கூட கரைத்துக் கொடுக்கத் தகுதியற்றதாக மாறிவிடும். எனவே, பயறு வண்டுகளின் தாக்குதலால், சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும் பயறுகளின் மணிகள் நூறு சதவிகிதம் சேதத்தைச் சந்திக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆப்பிரிக்கா கண்டத்தில் பயறு வண்டு களின் தாக்குதல் அம்மக்களின் உணவுப் பாதுகாப்பில் கைவைத்தது. நான் கடந்த இதழில் சொன்னதைப்போல, பயறு வகைகள்தான் ஆப்பிரிக்க மக்களின் முக்கியப் புரத ஆதாரமாக இருந்து வருகிறது. எனவே, அறுவடை செய்யப்பட்ட தட்டைப்பயறு மற்றும் மற்றவகைப் பயறுகளை மூட்டைக் கட்டி, ஆண்டு முழுவதுமான தேவைக்குச் சேமித்து வைத்துக்கொள்வார்கள். அதில் பயறு வண்டுகள் தாக்குதல் நடத்தினால், அவர்களால் என்னதான் செய்ய முடியும்?

தட்டைப்பயறு சேமித்து வைக்கப்பட்டுள்ள பிக்ஸ் பைகள்
தட்டைப்பயறு சேமித்து வைக்கப்பட்டுள்ள பிக்ஸ் பைகள்


அந்தக் காலத்தில், நம் தாத்தா, பாட்டி எல்லாம் வீட்டுத் தேவைக்கான துவரை, அவரை, தட்டைப்பயறு போன்ற தானியங்களைச் சேமித்து வைப்பதற்கு முன்னர், அவற்றைச் செம்மண் அல்லது அடுப்புச் சாம்பல் கரைசல்களில் தோய்த்து, நல்ல வெயிலில் உலர வைத்து மூட்டைகட்டி வைத்துக்கொள்வார்கள். குறைந்த அளவில் பயறுகள் இருந்தால் அவற்றை வறுத்து வைத்துக் கொள்வார்கள். அதனால், பயறுகளின் மேற்பரப்பில் இருக்கும் பயறு வண்டுகளின் முட்டைகள் அழிக்கப் பட்டுவிடும். இது சேமிப்பில் இருக்கும் தானியங்களின் பாதுகாப்பினை உறுதிப் படுத்தியது. வீட்டுத் தேவைக்கான, குறைந்த அளவிலான தானியங்கள் என்றால் அது போன்ற முயற்சிகள் பலன் தரலாம். ஆனால், அதிக அளவில் பயறு வகை தானியங்களைச் சேமிக்க என்ன செய்வது? அதற்கான வழிமுறைகள் இல்லாத இடங்களில், விவசாயிகள் வேறுவழியின்றித் தானியங்களை அறுவடை செய்து, சுத்தம் செய்த உடனேயே கிடைத்த விலைக்கு (அது லாபமோ நட்டமோ) விற்றுவிடுகின்ற சூழலுக்குத் தள்ளப் படுகிறார்கள்.

அந்தச் சூழலை மாற்ற நினைத்தனர் அமெரிக்காவில் உள்ள பர்டியு பல்கலைக்கழக (Purdue University) விஞ்ஞானிகள். அதற்காக அவர்கள் கண்டுபிடித்த மிக எளிதான தொழில்நுட்பம்தான் காற்றுப்புகாத ‘பிக்ஸ்’ (PICS) பைகள். இந்த ‘பிக்ஸ்’ பைகள் நமது உரப்பைகளைப் போன்றவைதான். ஆனால், மூன்று அடுக்குகளைக் கொண்டது. உட்புறமாக இருக்கக்கூடிய உறையும், நடுவில் இருக்கும் உறையும் பாலித்தீனால் ஆனவை. வெளிப்புறத்தில் இருக்கும் உறைகள் நைலான் அல்லது பாலிப்ரோபைலீன் இழைகளால் நெய்யப்பட்ட உறைகள். உட்புறமாக இருக்கும் பாலித்தீன் உறைகள் சுமார் 80 ‘மைக்ரான்’ தடிமனில் இருப்பதால், வெளிப் புறத்திலிருந்து இந்தப் பைகளின் உட்புறத் துக்குக் காற்றுப் பரிமாற்றம் நடப்பது பெருமளவில் தடுக்கப்படுகிறது. நாம் சேமிக்க வேண்டிய பயறுகளின் மணிகளை நன்கு உலர்த்திய பிறகு, உட்புறத்தில் இருக்கும் உறைக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டி, கைகளால் அழுத்தி அழுத்தி நிரப்ப வேண்டும். அப்படிச் செய்கையில், மணிகளுக்கு இடையில் இருக்கும் காற்று வெளியேற்றப்படுகிறது. முக்கால் பைக்கு மேல் மணிகளை நிரப்பிய பிறகு, உள்ளிருக்கும் இரண்டு பாலித்தீன் உறைகளையும் நன்கு முறுக்கி, ‘ப’ வடிவில் மடித்து, இறுகக் கட்டிவிட வேண்டும். இறுதியில், வெளிப் புறத்தில் இருக்கும் நைலான் உறையையும் அதே போல முறுக்கி இறுகக் கட்டி வைத்து விட வேண்டும்.

முனைவர் சீனிவாசன் ராமசாமி
முனைவர் சீனிவாசன் ராமசாமி

இப்போது உள்ளே இருக்கும் பயறு வண்டுகளின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப் புழுக்கள் மற்றும் அந்துப் பூச்சிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல், இறந்து போகும். எனவே அடுத்தடுத்த தலைமுறைகள் உருவாவது முற்றிலும் தடுக்கப்படும். இருக்கின்ற பூச்சிகளும் எவ்விதத் தாக்குதலும் நடத்த முடியாமல், கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களது உயிரை விட்டுவிடும். அதனால் மணிகள் எவ்வித சேதமும் இல்லாமல், நாம் உள்ளே கொட்டும்போது எப்படி இருந்ததோ அதே வடிவில், ஒன்பது-பத்து மாதங்களுக்குப் பிறகும் இருக்கும்.

எப்போது நமக்கு நல்ல சந்தைவிலை கிடைக்கிறதோ, அப்போது விற்பனை செய்து கொள்ளலாம். நமது சொந்த தேவைக்கும், மாதக் கணக்கில், ஏன் வருடக் கணக்கில் கூட சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இந்த எளிய தொழில்நுட்பம் இன்றைக்குப் பெரும்பான்மையான ஆப்பிரிக்க நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. நம்மூரிலும் இந்த மிக எளிமையான தொழில்நுட்பத்தைப் பயறுவகைகள் மட்டுமன்றி, பல்வேறு வகையான தானியங்களுக்கும், சிறுதானியங் களுக்கும்கூட பயன்படுத்த முடியும். அதன் மூலம் தானிய சேமிப்பில் தாக்குதலை நடத்தும் பல்வேறு வகையான பூச்சிகளை மிக எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.

அடுத்ததாக, விவசாயத்தின் ஆதார சுருதியாக இருக்கும் மண்ணைப் பற்றியும், அந்த மண்ணின் வளத்தைப் பேணிக் காப்பதைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம். தொடர்ந்து பேசுவோம்.

- வளரும்