Published:Updated:

மாவுப்பூச்சிக்கு எதிரி உலக விவசாயிகளுக்கு நண்பன்!

வெளிநாட்டு விவசாயம்- 15

பிரீமியம் ஸ்டோரி

ண்பதுகளில் நான் பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் எங்கள் தோட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு ஏக்கரிலாவது மரவள்ளியைப் பயிரிட்டு விடுவோம். எங்களைப் போலவே சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெரும்பாலான விவசாயிகள் ஒன்றிரண்டு ஏக்கரில் மரவள்ளியைச் சாகுபடி செய்துவிடுவார்கள். அதற்கு முதன்மையான காரணம், மரவள்ளிச் சாகுபடி அதிக பிரச்னையைத் தராது. குறிப்பாகப் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் என்று எதுவுமே கிடையாது. அதனால் பூச்சிக்கொல்லி பயன்பாடு என்பதே தேவையில்லை என்பதால், விவசாயிகளின் அபிமானப் பயிராக மரவள்ளி விளங்கியது. பின்னாளில் மரவள்ளியில் தேமல் நோய் தலைதூக்க ஆரம்பித்தது எனினும், விதைக் கரணை களைக் கவனத்துடன் தெரிவு செய்வதாலும், சரியான சமயத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதாலும் அந்நோய் பெரும் பிரச்னையாக உருவெடுக்கவில்லை. ஆனால், மரவள்ளிச் சாகுபடியில் சமீப காலத்திய வில்லனாகத் தலையெடுத்திருப்பது மாவுப்பூச்சிகள் (mealybug).

மரவள்ளி மாவுப்பூச்சி மிகப்பெரும் வில்லனாக நமக்குத் தோன்றினாலும், அது மிக எளிதாகக் கட்டுப்படுத்தக்கூடியதே. இதை நான் ஏதோ மேம்போக்காகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திய கதைகளைக் கொண்டே விளக்குகிறேன்.

மரவள்ளியின் தாயகம் தென் அமெரிக்கா. அங்கிருந்தே உலகெங்கும் பரவியது. தென் அமெரிக்காவில் 1,400 ஆண்டு களுக்கு முன்னரே எல் சால்வடோர் நாட்டில் மாயர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இடத்தில், அவர்களின் முக்கிய உணவுப் பொருளாக மரவள்ளி இருந்திருக்கிறது என்பதற் கான ஆதாரங்கள் கிடைத்திருக் கின்றன. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மரவள்ளி, 16-ம் நூற்றாண்டில் பிரேசிலிலிருந்து வந்த போர்த்துக் கீசிய மற்றும் ஸ்பானிய வணிகர் களால் ஆப்பிரிக்காவுக்குள் நுழைந்தது.

இலைகள் உதிர்ந்தும், செடிகளின் வளர்ச்சி குன்றியும் காணப்படும் மரவள்ளி வயல்கள்
இலைகள் உதிர்ந்தும், செடிகளின் வளர்ச்சி குன்றியும் காணப்படும் மரவள்ளி வயல்கள்

50 கோடி மக்களின் அடிப்படை உணவு

இன்றைக்கு உலக அளவில் மரவள்ளிதான் நெல் மற்றும் மக்காச் சோளத்துக்கு அடுத்தபடியாக விளங்கும் மூன்றாவது முக்கிய உணவுப் பொருள். அதிக மண்வளம் இல்லாத இடங்கள் மற்றும் மிக அதிக அளவில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரவள்ளி, உலக அளவில் சுமார் 50 கோடி மக்களின் அடிப்படை உணவாக விளங்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஆப்பிரிக்காவின் ஒரு சில நாடுகளில் மரவள்ளிதான் மிக முக்கிய உணவுப் பயிர். உலக அளவில் நைஜீரியா தான் மரவள்ளி உற்பத்தியில் முதன்மையான நாடு. மேலும், காங்கோ, கானா, ஐவரி கோஸ்ட், தான்சானியா மற்றும் உகாண்டா ஆகியவையும் மரவள்ளியைப் பிரதானமாக உற்பத்தி செய்யும் ஆப்பிரிக்க நாடுகளாகும்.

உணவுப் பஞ்சம்

ஆப்பிரிக்கா மக்கள் மரவள்ளியைப் பெரிதும் நம்பியிருந்த சமயத்தில்தான், 1973-ம் ஆண்டு காங்கோ நாடுகளின் கின்ஷாசா மற்றும் பிராசா பகுதிகளில் மாவுப்பூச்சிகளின் தாக்குதல் முதன்முதலில் தென்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு இது எந்தவகை மாவுப்பூச்சி, எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் குழம்பி இருந்தனர். அதற்குப் பிறகுதான், இது மரவள்ளி மாவுப்பூச்சி என்றும், தென்அமெரிக்கக் கண்டத்தின் வெப்பமண்டலப் பகுதிகளில்... குறிப்பாக, பராகுவே போன்ற நாடுகளிலிருந்து வந்திருக் கலாம் என்றும் கண்டுபிடித்தனர். அந்தக் காலகட்டத்தில் நிலவிய மிகக் கடுமையான வறட்சியும், மரவள்ளி மாவுப்பூச்சியும் சேர்ந்து பல ஆப்பிரிக்க நாடுகளின் உணவுப் பஞ்சத்துக்கு வித்திட்டது. எனவே, உடனடி யாக மரவள்ளி மாவுப்பூச்சிக்குத் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் விஞ்ஞானிகள் இருந்தனர்.

மரவள்ளியில் மாவுப்பூச்சி
மரவள்ளியில் மாவுப்பூச்சி


இலைகள் சிறுத்துப் போய்விடும்

பொதுவாகவே மாவுப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக, நூற்றுக்கணக்கில், ஏன் ஆயிரக்கணக்கில்கூட வரும். மரவள்ளியின் தண்டுப் பகுதிகளிலும், இலைகளிலும், வளர்நுனிகளிலும் இருக்கும் மாவுப்பூச்சிகள், செடியின் சாற்றை உறிஞ்சி வளரக்கூடியவை. அதன் காரணமாக, இலைகள் கோணல் மாணலாகவும், சிறுத்தும் போய்விடும். மாவுப்பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகும் சூழலில் இலைகள் உதிரவும் செய்யும். மேலும், வளர்நுனிகள் கருகவும் ஆரம்பிக்கும். ஆகவே, செடிகளின் வளர்ச்சி மிக அதிக அளவில் பாதிக்கப்படும். இப்படிப் பாதிக்கப் பட்ட செடிகளிலிருந்து அடுத்த பயிருக்கான விதைக்கரணைகளை எடுக்கவும் முடியாது. எந்த விளைச்சலும் இருக்காது. மழைக்காலம் மட்டுமே மாவுப்பூச்சிகளுக்குத் தொல்லை தரும் காலம் ஆகும்.

ஒரு பெண்பூச்சி தன் வாழ்நாளில் சராசரியாக 500 முட்டைகள் இடும். எனவே, மரவள்ளி மாவுப்பூச்சி ஆண்டின் பெரும்பாலான பகுதியில் கணக்கின்றி உருவாகிக்கொண்டே இருக்கும். ஒரு மாதத்துக்குள்ளாகவே ஒரு தலைமுறை உருவாகிவிடும் என்பதால், ஓர் ஆண்டில் மரவள்ளி மாவுப்பூச்சி குறைந்தபட்சம் ஒன்பது தலைமுறைகளை உருவாக்கும். அப்படியானால், சரியான சமயத்தில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றாவிட்டால் மரவள்ளியில் பெருத்த சேதம் உருவாவதைத் தடுக்க முடியாது.

இலையிலும் இலையின் நுனிகளிலும் மாவுப்பூச்சியின் தாக்குதல்
இலையிலும் இலையின் நுனிகளிலும் மாவுப்பூச்சியின் தாக்குதல்

மெழுகு உறைக் கவசம்

இது போன்று புதிய பூச்சித் தொல்லைகள் உருவாகும்போது, உடனடியாக விவசாயிகளின் மனதில் உதிப்பது பூச்சிக்கொல்லிகள் மட்டுமே. அதைத்தான் ஆப்பிரிக்க விவசாயிகளும் செய்தனர். வித விதமான பூச்சிக்கொல்லிகள் தெளித்தாலும் உலகில் உள்ள எந்த பூச்சியினையும் கட்டுப்படுத்த முடியாது. அதன் பாதிப்பை வேண்டுமானால் குறைக்க முடியும். அதிலும் மாவுப்பூச்சி தனிரகம். அதற்குக் காரணம் அவற்றைச் சுற்றியிருக்கும் மெழுகு உறை. மாவுப்பூச்சி களுக்கு மெழுகுச் சுரப்பிகள் இருக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் குஞ்சுகளுக்கு அவ்வளவாக மெழுகு உறைகள் இருக்காது. ஆனால், அவை வளர வளர மெழுகு நுண்துகள்களைச் சுரந்து உறைகளை உருவாக்க ஆரம்பிக்கும். அந்த மெழுகு நுண்துகள்கள் தான் நமக்கு மாவைப்போலத் தோன்றும். அதனால்தான் அவற்றை மாவுப்பூச்சிகள் என்று அழைக்கிறோம். எனவே, பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும்போது அவை இந்த மெழுகுக் கவசத்தைத் தாண்டி, மாவுப்பூச்சிகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

செடியின் தண்டுப்பகுதியில் மாவுப்பூச்சிகளின் தாக்குதல்
செடியின் தண்டுப்பகுதியில் மாவுப்பூச்சிகளின் தாக்குதல்

மாவுப்பூச்சியைக் காக்கும் எறும்புகள்

மாவுப்பூச்சிகள், அடிப்படையில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஆகும். சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கே உரித்தான ஒரு குணாதிசயம் அவை வெளியேற்றும் ‘தேன் துளிகள்’ (Honeydew). திரவ நிலையில் வெளியேறும் அவற்றின் கழிவுப்பொருள்களில் சர்க்கரையும், அமினோ அமிலங்களும் அதிக அளவில் காணப்படும். எனவே, இந்தத் தேன் துளிகளை நாடி, எறும்புகள் வரும். அதனால்தான் மாவுப்பூச்சிகளின் தாக்கம் அதிகம் இருக்கும் செடிகளில், ஏராளமான எறும்புகள் சுற்றித் திரியும். மாவுப்பூச்சிகளைத் தாக்கக்கூடிய இயற்கை எதிரிகளிடமிருந்து, மாவுப்பூச்சிகளைக் காக்கக்கூடிய கவசமாகவே இந்த எறும்புகள் திகழ்கின்றன. இவையனைத்தும் ஒன்று சேர்ந்த காரணத்தால் மரவள்ளி மாவுப்பூச்சி ஆப்பிரிக்கா கண்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. எனவே, அடுத்த 15 ஆண்டுகளில், மரவள்ளி பெருமளவில் சாகுபடி செய்யப்படக்கூடிய 26 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மாவுப்பூச்சி பரவி, மிகப்பெரும் அழிவை உருவாக்கியது.

அப்போதுதான் நைஜீரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கக்கூடிய, சர்வதேச வெப்பமண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் (International Institute of Tropical Agriculture) மரவள்ளி மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியைக் கையிலெடுத்தது. அந்நிறுவனத்தில் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த, ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஹான்ஸ் ருடால்ப் ஹெர்ரென்’ (Hans Rudolf Herren) என்ற பூச்சியியல் விஞ்ஞானிதான் இந்தத் திட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர். ஓர் உயிரினம் எங்கு முதன்முதலில் உருவாகி, பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கிறதோ அங்குதான் அதன் எதிரிகளும் அதிக அளவில் இருப்பார்கள். அந்த அடிப்படையில், மரவள்ளி மாவுப்பூச்சியின் எதிரிகளைத் தேடி ஹெர்ரென் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு தென் அமெரிக்காவுக்குள் நுழைந்தது.

அனாகைரஸ் லோபெஸி ஒட்டுண்ணி
அனாகைரஸ் லோபெஸி ஒட்டுண்ணி

அனாகைரஸ் லோபெஸி

மிகுந்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, லத்தீன் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ‘அனாகைரஸ் லோபெஸி’ (Anagyrus lopezi) என்ற ஒட்டுண்ணியைப் பராகுவே நாட்டில் கண்டுபிடித்தனர். மரவள்ளி மாவுப்பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்த இந்த ஒட்டுண்ணி, 1981-ம் ஆண்டின் இறுதியில் நைஜீரியாவுக்குள் கொண்டு வரப் பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் சிறப்பு அனுமதியுடன் தடுப்புக் காப்பகத்தில் (Quarantine) நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் மற்ற நன்மை தரும் பூச்சிகளுக்கு இந்த ஒட்டுண்ணியால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது முடிவானது. உடனடியாக மரவள்ளி விவசாயிகளிடம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஒட்டுண்ணியின் பயணம், ஒரு சிறு புள்ளியில் தொடங்கி, அடுத்த மூன்றே ஆண்டு களில் நைஜீரியாவில் மட்டுமே 2 லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாகப் பரவியது.

மாவுப்பூச்சிகளால் சேதம் அதிகமாகி, கருகிய நிலையில் இருக்கும் மரவள்ளிச்செடி
மாவுப்பூச்சிகளால் சேதம் அதிகமாகி, கருகிய நிலையில் இருக்கும் மரவள்ளிச்செடி

பிறகு, ஆப்பிரிக்காவில் எங்கெல்லாம் மரவள்ளி மாவுப்பூச்சியின் தாக்குதல் இருந்ததோ அங்கெல்லாம் இந்த ஒட்டுண்ணி அறிமுகம் செய்யப்பட்டது. காட்டுத் தீயென ஆப்பிரிக்கா கண்டமெங்கும் பரவிய இந்த ஒட்டுண்ணி, அடுத்த சில ஆண்டுகளில் மரவள்ளி மாவுப் பூச்சியைத் தன் முன்னால் சரணடையச் செய்து, அங்கிருக்கும் மக்களின் உணவு மற்றும் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தது. ஒரு சிறிய ஒட்டுண்ணியைக் கொண்டு, கோடிக்கணக்கான மக்களை உணவுப் பஞ்சத்திலிருந்து காப்பாற்றிய ஹெர்ரென் அவர்களுக்கு, விவசாயத் துறைக்கான நோபல் பரிசாகக் கருதப்படும் உலக உணவுப் பரிசு (World Food Prize) 1995-ம் ஆண்டு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இலைகள் உதிர்ந்தும், செடிகளின் வளர்ச்சி குன்றியும் காணப்படும் மரவள்ளி வயல்கள்
இலைகள் உதிர்ந்தும், செடிகளின் வளர்ச்சி குன்றியும் காணப்படும் மரவள்ளி வயல்கள்

தவித்துப் போன தாய்லாந்து

அதற்குப் பிறகு, இருக்கும் இடம் தெரியாமல் இருந்த மரவள்ளி மாவுப்பூச்சி, எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என்பதே தெரியாமல் 2008-ம் ஆண்டு, தாய்லாந்து நாட்டுக்குள் நுழைந்தது. உலக அளவில் மரவள்ளி உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கும் தாய்லாந்துதான், மரவள்ளி மாவு (Starch) ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடு. எனவே, மரவள்ளி மாவுப் பூச்சியின் வரவு, தாய்லாந்து விவசாயிகளுக்கும், மரவள்ளி மாவுத் தொழிலுக்கும் பேரிடியாக அமைந்தது.

அப்படி வந்த பூச்சி தாய்லாந்து மட்டுமன்றி, மரவள்ளியை அதிகம் விளைவிக்கும் மற்ற அண்டை நாடுகளான கம்போடியா, வியட்நாம் நாடுகளுக்கும் அடுத்த நான்கே ஆண்டுகளில் பரவியது. நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த தாய்லாந்து அரசாங்கம் துரிதகதியில் செயல்பட்டு, ‘அனாகைரஸ் லோபெஸி’ ஒட்டுண்ணியை 2009-ம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்தது. அடுத்த 6 மாதங்களில் கோடிக்கணக்கான ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தாய்லாந்தின் லட்சக்கணக்கான மரவள்ளி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அத்தோடு, கம்போடியா மற்றும் வியட்நாம் நாட்டிலும் இந்த ஒட்டுண்ணி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விளைவாக, தென்கிழக்கு ஆசியாவிலும் மரவள்ளி மாவுப் பூச்சி அறிமுகமான ஒரு சில ஆண்டுகளுக் குள்ளாகவே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மாவுப்பூச்சிகளின் தாக்குதலுக்கு இலக்காகி, கிழங்குகள் உருவாகாத செடி
மாவுப்பூச்சிகளின் தாக்குதலுக்கு இலக்காகி, கிழங்குகள் உருவாகாத செடி

இன்றைய தேதியில், ஒரு மில்லிமீட்டர் அளவிலான இந்த ஒட்டுண்ணி, உலகப் பொருளாதாரத்தை 1,36,000 கோடி ரூபாய் அளவுக்குக் காப்பாற்றி இருக்கிறது.

ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா என்று தாண்டவமாடிய மரவள்ளி மாவுப்பூச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் அதன் கோரமுகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சுமார் 50 லட்சம் ஹெக்டேரில் மரவள்ளிச் சாகுபடி நடை பெற்றாலும், கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள்தான் முன்னணி உற்பத்தியாளர்கள். அதிலும், தமிழகம்தான் 29 லட்சம் ஹெக்டேருடன் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது. எனவே, தமிழகத்தின் சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மரவள்ளி மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகம் இருக்கிறது. உடனடியாகக் களத்தில் குதித்த இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் (Indian Council of Agricultural Research) கீழ் இயங்கும் வேளாண் பூச்சி வளங்களுக்கான தேசிய பணியகம் (National Bureau of Agricultural Insect Resources), ‘அனாகைரஸ் லோபெஸி’ ஒட்டுண்ணியை இந்தியாவுக்குள் கொண்டுவரும் முயற்சியை முன்னெடுத்தது.

தாய்லாந்து அரசாங்கம் துரிதகதியில் செயல்பட்டு, ‘அனாகைரஸ் லோபெஸி’ ஒட்டுண்ணியை 2009-ம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்தது.


இடையில் வந்த கொரோனா பெருந்தொற்று இந்த முயற்சியில் ஒரு சிறிய தொய்வை ஏற்படுத்தினாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த ஒட்டுண்ணி ஆப்பிரிக்காவிலிருந்து வெற்றிகரமாகப் பெங்களூரு வந்து சேர்ந்தது. தற்போது தடுப்புக்காப்பகத்தில் (Quarantine) ஆய்வு செய்யப்படும் இந்த ஒட்டுண்ணிகள், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தின் வயல்வெளிகளில் சுற்றித்திரிந்து, தனது மாயாஜாலத்தால் மரவள்ளி மாவுப்பூச்சியை மண்டியிடச் செய்யும் என்று நம்புவோம்.

- வளரும்

முனைவர் சீனிவாசன் ராமசாமி
முனைவர் சீனிவாசன் ராமசாமி

உலக உணவுப் பரிசு

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ‘நார்மன் போர்லாக்’ என்ற வேளாண் விஞ்ஞானி, மெக்ஸிகோவில் இருக்கும் சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக, உயர் விளைச்சல் கோதுமை ரகங்களை உருவாக்கி அறிமுகம் செய்தார். உலகில் அறிவியலுக்கான மிக உயர்ந்த பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசு விவசாயத் துறைக்கு வழங்கப்படுவதில்லை. எனவே, நார்மன் போர்லாக்கின் பங்களிப்பைக் கௌரவிக்கும் விதமாக 1970-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர்தான், வேளாண் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், உலக உணவுப் பரிசை ஏற்படுத்தினார். வேளாண் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் இந்த உலக உணவுப் பரிசை 1987-ம் ஆண்டு முதன்முதலில் பெற்றவர் மூத்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன்தான். வெண்மைப் புரட்சிக்கு வழிகாட்டிய வர்கீஸ் குரியனும் இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறார். ஒரு சிறிய ஒட்டுண்ணியைக் கொண்டு மரவள்ளி மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்திய ஹெர்ரென், இந்த உயரிய பரிசைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு