Published:Updated:

விஸ்வரூப வைரமுதுகுப் பூச்சி... விரட்டி அடித்த விஞ்ஞானம்!

வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டு விவசாயம்

வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்-13

விஸ்வரூப வைரமுதுகுப் பூச்சி... விரட்டி அடித்த விஞ்ஞானம்!

வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்-13

Published:Updated:
வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டு விவசாயம்

முட்டைக்கோஸ் குடும்பத் தில் பல்வேறு வகையான காய்கறிகள் இருக் கின்றன. பூக்கோஸ், புரக்கோலி மற்றும் முள்ளங்கி போன்றவை முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும். வட இந்தியாவில் பெருமளவில் பயிரிடப்படும் கடுகும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பயிர்தான். ஆனால், இந்தக் குடும்பத்தில் சீன முட்டைக்கோஸ், பக்சோய் (Pakchoy), பரட்டைக் கீரை (Kale) மற்றும் இலைக்கடுகு (Green Mustard) போன்ற நிறைய கீரை வகைகள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் பயிரிடப்படுகின்றன.

புற்றுநோயைத் தடுக்கும் சத்துப் பொருள்கள்

இந்தக் குடும்பத்தில் இருக்கும் பயிர்களின் இன்னொரு சிறப்பு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,500 மீட்டர் உயரமுடைய மலைப்பகுதிகளிலும் இவற்றைப் பயிரிடலாம். அது மட்டுமன்றி, குளிர் பிரதேசங்கள் முதல், மிதவெப்ப மண்டலம் மற்றும் வெப்பமண்டலப் பகுதிகள் வரையிலும் இப்பயிர்களைப் பயிரிடலாம். மேலும், நமது உணவில் முட்டைக்கோஸ் குடும்பக் காய்கறி களைச் சேர்த்துக்கொள்வதால், பல்வேறு வகையான வைட்டமின்கள், தாது உப்புகள், நார்ச்சத்து மற்றும் கரோடீனாய்டு வகை நிறமிகள் போன்ற முக்கியச் சத்துப் பொருள்கள் கிடைப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களும் வராமல் தடுக்கப்படுகின்றன.

வைரமுதுகுப் பூச்சியின் அந்துப் பூச்சி
வைரமுதுகுப் பூச்சியின் அந்துப் பூச்சி


எனவே, உலகின் பல நாடுகளிலும் முட்டைக்கோஸ் குடும்பத்தில் இருக்கும் காய்கறிகள் முக்கிய உணவுப் பொருளாகப் பயிரிடப்பட்டு உட்கொள்ளப்படுகின்றன. இவற்றை மூன்று மாதங்களில் அறுவடை செய்து விடலாம் என்பதால், குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் லாபகரமான பயிர்களாகவும் விளங்குகின்றன. அதிலும், கீரை வகைப் பயிர்கள் சுமார் 45 முதல் 50 நாள்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிடும்.

வைரமுதுகுப் பூச்சி

முட்டைக்கோஸ் குடும்பத்தில் இருக்கும் அத்தனை வகையான காய்கறிகளையும் தாக்கி அழிக்கக்கூடிய முதல் எதிரி, வைரமுதுகுப் பூச்சி (Diamondback Moth). இதன் அந்துப் பூச்சியின் முன்னிறக்கையின் அடிப்பகுதியில் முக்கோண வடிவிலான வெண்ணிற பொட்டுக்கள் வரிசையாக இருக்கும். அவை ஓய்வு நிலையில் இருக்கிறபோது, இரண்டு இறக்கைகளும் ஒன்றோடொன்று பொருந்துவதால் முக்கோண பொட்டுக்கள் இணைந்து வைரத்தின் வடிவில் அதன் முதுகுப் பகுதி தோன்றும். அதனால்தான், இவை வைரமுதுகுப் பூச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பூச்சி எங்கு உருவானது என்று தெரியவில்லை. ஆனால், உலகில் இவை இல்லாத நாடுகளே இல்லை எனலாம். அதிக பாலைவனப் பகுதிகளைக் கொண்டிருக்கும் அதிவெப்ப நாடான சிரியாவிலும் இதைப் பார்க்கலாம். வருடத்தின் சில மாதங்கள் உறைபனியில் சிக்கித் தவிக்கும் கொரியாவிலும் இதைக் காணலாம். அதே போல உயர்ந்த மலைப்பகுதிகளிலும் இருக்கும்; கடல் மட்டத்திலும் இருக்கும். எனவே, அங்கிங்கெனாதபடி உலகெங்கும் பரவியிருக்கும் இப்பூச்சி முட்டைக்கோஸ் குடும்பத்தில் பலத்த சேதத்தை உருவாக்கும். சரியான சமயத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், பயிர்களை முற்றிலுமாக அழித்து விவசாயிகளுக்குப் பெரும் சேதத்தை உருவாக்கவல்லது.

இலையின் மேற்புறத்தில் இடப்பட்டிருக்கும் வைரமுதுகுப் பூச்சியின் முட்டைகள்
இலையின் மேற்புறத்தில் இடப்பட்டிருக்கும் வைரமுதுகுப் பூச்சியின் முட்டைகள்


எதிர்ப்புத்திறன் அதிகம்

ஆரம்பகாலத்தில் இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் வழக்கம்போலப் பூச்சிக்கொல்லிகளைத்தான் நாடினார்கள். ஆனால், இந்தப் பூச்சி அவற்றுக்கு எதிராக உருவாக்கப்படும் அத்தனை பூச்சிக்கொல்லிகளுக்கும் எதிர்ப்புத்திறனை உருவாக்கிக் கொண்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்தப் பூச்சி தனது முட்டைகளை இலைகளின் மேற்புறத்தில்தான் வைக்கிறது. முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்களும் இலைகளின் மேற்புறத்திலும், அடிப்புறத்திலும் இருந்தவாறே உண்கின்றன. கூட்டுப்புழுக்கள் இலைப்பரப்பிலோ, செடிகளின் தண்டுப் பகுதியிலோ மிக மிகத் தளர்வாகப் பின்னப்பட்ட கூடுகளில்தான் வாழ்கின்றன. இறுதியில், அந்துப் பூச்சிகளும் செடிகளில், மிக எளிதாக நமது கண்ணில் படும்படியாகத்தான் வசிக்கின்றன. அவை வேகமாகவோ, அதிக தொலைவோ பறக்க இயலாதவை. எனவே, அவை மிக எளிதாக இயற்கை எதிரிகளால் வேட்டையாடப் படலாம் அல்லது மழை, வெயில் மற்றும் காற்று போன்ற இயற்கைக் காரணிகளால் கொல்லப்படலாம். ஆனால், அந்துப் பூச்சி மிக எளிதாக அனைத்தையும் கடந்து விடுகின்றன. அதனால்தான் வைரமுதுகுப் பூச்சிகள் எளிதில் அழிக்க இயலாத வில்லன் களாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. போதாக்குறைக்கு, இவற்றின் ஒரு தலைமுறை உருவாக ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே போதுமானது.

எனவே, இந்தியா போன்ற குளிர் அதிகமற்ற நாடுகளில், ஆண்டுக்குக் குறைந்தபட்சம் பத்து தலைமுறைகளையாவது உருவாக்கி விடும். அதுவே, அவை பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத்திறனை மிகக் குறுகிய காலத்தில் அதிகரித்துக் கொள்வதன் ரகசியம். ஆகவே, விவசாயிகள் இந்தப் பூச்சியை அழிக்கும் வழியறியாமல் தவித்துப் போய் இருந்தார்கள். அப்போது, அவர்களுக்குக் கைகொடுத்த முறைதான் ‘உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு.’

வைரமுதுகுப் பூச்சியின் புழுக்கள்
வைரமுதுகுப் பூச்சியின் புழுக்கள்


உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு

உயிரியல் பூச்சிக்கட்டுப்பாடு என்பது, பூச்சிகளின் இயற்கை எதிரிகளான இரைவிழுங்கிகள் (Predators) மற்றும் ஒட்டுண்ணிகளை (Parasitoids) கொண்டு நாசகரப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை. இயற்கை எதிரிகளில், இரைவிழுங்கிகளை விட, ஒட்டுண்ணிகளுக்குத்தான் முன்னுரிமை. ஏனென்றால், இரைவிழுங்கிகள் வயல்வெளியில் கண்ணில்படும் பூச்சிகளையெல்லாம் பிடித்துத் தின்னும். உதாரணத்திற்கு, பொறிவண்டுகள் (Ladybird Beetles), அசுவினி, இலைப்பேன்கள், வெள்ளை ஈக்கள் என அனைத்தையும் வேட்டையாடும்.

வைரமுதுகுப் பூச்சியின் கூட்டுப்புழு
வைரமுதுகுப் பூச்சியின் கூட்டுப்புழு


ஒட்டுண்ணிகள்

மாறாக, ஒட்டுண்ணிகள் மிக மிகப் பிரத்யேகமான இரைகளையே உண்ணும். அசுவினியைத் தாக்கி உண்ணும் ஒட்டுண்ணிகள், வெள்ளை ஈக்களை அறவே தவிர்த்துவிடும். படைப்புழுக்களைத் தாக்கும் ஒட்டுண்ணிகள் காய்ப்புழுக்களின் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்காது. எனவே, ஒரு குறிப்பிட்ட ஒட்டுண்ணியை நமது வயலில் விட்டால், நமது பிரதான இலக்கு எதுவோ அந்தப் பூச்சியை தாக்கி அழிக்கும். எனவே நியூசிலாந்து விஞ்ஞானிகள் அப்படிப்பட்ட ஒட்டுண்ணியைத்தான் தேடி அலைந்தார்கள்.இறுதியில், ‘டையடிக்மா’ (Diadegma) என்ற ஒட்டுண்ணியை 1936-ம் ஆண்டு இங்கிலாந்தி லிருந்து நியூசிலாந்துக்குள் அறிமுகம் செய்து, வைரமுதுகுப் பூச்சியைக் கட்டுப் படுத்தினார்கள். இந்த வெற்றிகரமான உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டைக் கண்ட இந்தோனேசிய விஞ்ஞானிகள், ‘டையடிக்மா’ ஒட்டுண்ணியை 1950-களில் நியூசிலாந்தி லிருந்து இந்தோனேசியாவுக்குள் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், நியூசிலாந்தில் நடந்த மாயாஜாலம் இந்தோனேசியாவில் நடக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம், இந்தோனேசிய விவசாயிகள் இந்த ஒட்டுண்ணியை அறிமுகம் செய்த பிறகும் தங்களது முட்டைக்கோஸ் குடும்பக் காய்கறிப் பயிர்களில் பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதை நிறுத்தவில்லை. அந்தப் பூச்சிக்கொல்லிகளுக்கு நாசகரப் பூச்சிகளும், நன்மை தரும் ஒட்டுண்ணிகளும் ஒன்றுதான். அதனால், அவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ‘டையடிக்மா’ ஒட்டுண்ணிகளையும் கொன்று குவித்தன. இறுதியாக, 1970-களில் இந்தோனேசியாவில் ‘பேசில்லஸ்’ உயிரியல் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்தபோது, ‘டையடிக்மா’ வின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், இந்த உயிரியல் பூச்சிக்கொல்லிகள் குறிப்பிட்ட நாசகரப் பூச்சிகளை மட்டுமே தெரிவு செய்து அழிக்கக் கூடியவை. ஆக, இந்தோனேசியாவிலும் வைரமுதுகுப் பூச்சிகளின் உயிரியல் கட்டுப்பாடு பெரும் வெற்றிப் பெற்றது.

முட்டைக்கோஸ் செடிகளின் இலைகளில் வைரமுதுகுப் பூச்சியின் தாக்குதல்
முட்டைக்கோஸ் செடிகளின் இலைகளில் வைரமுதுகுப் பூச்சியின் தாக்குதல்


டையட்ரோமஸ்

இதைக் கண்ட சர்வதேச காய்கறி ஆய்வு மையம், 1980-களின் ஆரம்பத்தில் ‘டையடிக்மா’ ஒட்டுண்ணியைத் தைவானில் அறிமுகம் செய்தது. முதன்முதலில் வடக்குத் தைவானின் மலைப்பகுதிகளில் முட்டைக்கோஸ் வயல்வெளிகளில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஒட்டுண்ணிகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்கிப் பெருகி தாமாகவே மத்திய தைவானின் மலைப்பகுதிகளை வந்தடைந்தன. ஆனால், ‘டையடிக்மா’ ஒட்டுண்ணிகளால், ஒரு வயலில் இருக்கும் 100 சதவிகித வைரமுதுகுப் பூச்சிகளின் புழுக்களையும் அழிக்க முடியவில்லை. பாதிக்குப் பாதிப் புழுக்கள் கூட்டுப் புழுக்களாக மாறின. எனவே, அவை கூட்டுப்புழு பருவத்தை அடையும் வரை தொடர்ந்து பயிர்களில் சேதத்தை உருவாக்கிக் கொண்டேதான் இருந்தன. எனவே, தொடர்ந்து எடுத்த முயற்சியின் பயனாக ‘டையட்ரோமஸ்’ (Diadromus) என்ற, வைரமுதுகுப் பூச்சியின் கூட்டுப்புழுக்களைத் தாக்கும் ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது ஒரே வயலில் ‘டையடிக்மா’வும், ‘டையட்ரோமஸு’ம் இணைந்து செயலாற்ற ஆரம்பித்தன. ஒன்று புழுப் பருவத்தையும், மற்றொன்று கூட்டுப்புழுப் பருவத்தையும் குறிவைத்துத் தாக்கியதால், அவற்றுக்குள் போட்டியில்லாமல் ஒருங்கிணைந்து செயலாற்றின. விளைவு, அடுத்தடுத்த தலைமுறைகளில் வைரமுதுகுப் பூச்சிகளின் எண்ணிக்கைக் குறைந்துகொண்டே வந்து, ஒருகட்டத்தில் அவற்றின் தாக்கம் பொருளாதாரச் சேத நிலைக்குக் கீழே சென்றது.

வைரமுதுகுப் பூச்சியைத் தாக்கி அழிக்கும் ஒட்டுண்ணிக் குளவிகள்
வைரமுதுகுப் பூச்சியைத் தாக்கி அழிக்கும் ஒட்டுண்ணிக் குளவிகள்


நீலகிரியில் அறிமுகமான ஒட்டுண்ணி

இந்த இமாலய வெற்றியைக் கண்ட சர்வதேச காய்கறி ஆய்வு மையம், இந்த இரண்டு ஒட்டுண்ணிகளையும் கொரியா, சீனா, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் அறிமுகம் செய்தது. இந்தியாவில், குறிப்பாக நீலகிரி போன்ற மலைப் பகுதிகளில் இந்த ஒட்டுண்ணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்படி ஆரம்பித்த இந்த உயிரியல் கட்டுப்பாட்டுப் பயணம், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கென்யா, எத்தியோப்பியா மற்றும் தான்சானியா ஆகிய கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகள்வரை நீண்டது. அறிமுகம் செய்யப்பட்ட அத்தனை நாடுகளிலும், இந்த இரண்டு ஒட்டுண்ணிகளும் வைரமுதுகுப் பூச்சியை விரட்டி விரட்டித் துவம்சம் செய்தன. ஆனால், முக்கியமான விஷயம், ஒட்டுண்ணிகள் அறிமுகம் செய்யப்பட்ட வயல்களில் விவசாயிகள் ரசாயன பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கக் கூடாது. அப்படித் தெளித்தால், இந்த ஒட்டுண்ணிகள் அழிந்து போகும். ஒட்டுண்ணிகளின் பயன்பாட்டால் முட்டைக்கோஸ் வகையறாக்களின் உற்பத்தியில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மிக அதிக அளவில் குறைந்து போனது.

வைரமுதுகுப் பூச்சியின் புழுக்களைக் கொன்று, அவற்றின் உடலிலிருந்து வெளியான ஒட்டுண்ணிக் குளவியின் கூட்டுப்புழு
வைரமுதுகுப் பூச்சியின் புழுக்களைக் கொன்று, அவற்றின் உடலிலிருந்து வெளியான ஒட்டுண்ணிக் குளவியின் கூட்டுப்புழு


பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் மலைப்பகுதிகளில் முட்டைக்கோஸ் வகையறா பயிர்களில், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு 50 முதல் 85 சதவிகிதம் வரை குறைந்ததாக ஓர் ஆய்வின் முடிவு சொல்கிறது. அப்படியானால், இப்போது வைரமுதுகுப் பூச்சி நம்மிடமிருந்து முற்றிலும் மறைந்துவிட்டதா என்ற கேள்வி உங்களுக்கு எழும். அதற்கான விடை, வைரமுதுகுப் பூச்சி இன்னும் நம்மிடையே இருக்கிறது என்ற கசப்பான உண்மைதான். ஆனால், அவை இருக்கும் இடம் சுருங்கியிருக்கிறது. புரியவில்லையா? சற்றே விளக்கமாகச் சொல்லுகின்றேன்.

முனைவர் சீனிவாசன் ராமசாமி
முனைவர் சீனிவாசன் ராமசாமி

கொட்டேசியா

‘டையடிக்மா’ மற்றும் ‘டையட்ரோமஸ்’ ஆகிய இரண்டும் குறைந்த வெப்பநிலையை விரும்புபவை. ஏனென்றால் அவை உருவான மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் குளிர் பிரதேசங்கள். ஆகவேதான், மலைப்பகுதிகளில் ஆண்டு முழுவதும், சமவெளிப் பகுதிகளில் குளிர்காலங்களிலும் இவை அதிசயிக்கத்தக்க வகையில் வைரமுதுகுப் பூச்சியைக் கட்டுப்படுத்தின. ஆனால், சமவெளிப் பகுதிகளில், குறிப்பாக வெப்பநிலை உயர்கின்ற காலங்களில் இவை அதிக வெப்பத்தைத் தாங்க முடியாமல் அழிந்து போகின்றன. எனவேதான் நீலகிரியில் இருக்கும் இந்த ஒட்டுண்ணிகள் ஒட்டன் சத்திரத்திலோ, திருச்சியிலோ இருக்க முடியவில்லை. ஆகவே, அதிக வெப்ப நிலையைத் தாங்கி, சமவெளிப் பகுதிகளில் பயிரிடப்படும் முட்டைக்கோஸ் வகையறாக்களில் இருக்கும் வைரமுதுகுப் பூச்சியைக் கொல்லும் ஒட்டுண்ணிகளைத் தேடும் முயற்சி தொடங்கியது. ஆச்சர்யப் படத்தக்க வகையில், ‘டையடிக்மா’ அல்லது ‘டையட்ரோமஸ்’ போல வெளியிலிருந்து அறிமுகம் செய்ய வேண்டிய தேவையே இல்லாமல், நமது ஆசிய கண்டத்திலேயே ‘கொட்டேசியா’ (Cotesia) என்ற ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டது.

‘டையடிக்மா’வினைப்போல இதுவும் வைரமுதுகுப் பூச்சியின் புழுப்பருவத்தைத் தாக்கக்கூடியது. ஆனால், ‘டையடிக்மா’ வினை போலவே இதுவும் பாதிக்குப் பாதிப் புழுக்களைத்தான் கொல்லும். மீதிப் புழுக்கள் தங்களது தாக்குதலைத் தொடர்ந்து, கூட்டுப் புழுவாகவும், அந்துப் பூச்சிகளாகவும் மாறும். எனவே, சமவெளிப் பகுதிகளுக்கு ஏற்ற, அதிக வெப்பநிலையைத் தாங்கும், குறிப் பாகக் கூட்டுப்புழுவைத் தாக்கக்கூடிய ஒட்டுண்ணியைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட ஓர் ஒட்டுண்ணியைத் தேடிய எனது பயணம் 2005-ம் ஆண்டுத் தொடங்கியது. இது போன்ற ஒட்டுண்ணிகள் மத்திய தரைக்கடலைச் சுற்றியிருக்கும் நாடுகளில் இருப்பதற்கான அறிவியல் தரவுகள் எனக்குக் கிடைத்தன. அதை வைத்துக்கொண்டு, முதன்முதலாக 2006-ம் ஆண்டுச் சிரியாவுக்குள் காலடி எடுத்து வைத்தேன். அதிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகள் சிரியாவில் சல்லடை போட்டுத் தேடினேன். அந்தத் தேடல் வெற்றியில் முடிந்ததா? காத்திருங்கள், தொடர்ந்து பேசுவோம்!

- வளரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism