Published:Updated:

காய்ந்து போகும் சாத்துக்குடி, எலுமிச்சை... என்னதான் தீர்வு?

சாத்துக்குடி
பிரீமியம் ஸ்டோரி
சாத்துக்குடி

தீர்வு

காய்ந்து போகும் சாத்துக்குடி, எலுமிச்சை... என்னதான் தீர்வு?

தீர்வு

Published:Updated:
சாத்துக்குடி
பிரீமியம் ஸ்டோரி
சாத்துக்குடி

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ப்யூலா கார்டனில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் ஸ்டீபன் ஜெபக்குமார். அங்கே காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில காய்கறி மற்றும் பழங்களை வாங்குவதற்காக அங்கே சென்றிருந்தோம். அப்படியே தோட்டத்தைப் பார்வையிட்டபோது, சாத்துக்குடி மரங்களைப் பற்றி நம்மிடம் பேசிய ஸ்டீபன், “மாமரங்களுக்கு இடையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் மொத்தம் 200 சாத்துக்குடி மரங்கள் இருக்கின்றன. 13 ஆண்டுகளுக்கு முன் நடவு செய்தோம். 12-க்கு 12 அடி மற்றும் 20-க்கு 20 அடி என இரண்டு விதமான இடைவெளிகளில் நடவு செய்துள்ளோம். இவை நாக்பூர் ரகத்தைச் சேர்ந்தவை. கன்றுகள் நடவு செய்த ஆரம்பத்தில் எரு மட்டுமே கொடுத்து வந்தோம். நன்கு மரமாக வளர்ந்த பிறகு, ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மரத்துக்கு 20 - 30 கிலோ வீதம் மாட்டு எரு வைத்து வருகிறோம். இலை வழியாக வேஸ்ட் டீ கம்போஸர் மற்றும் பயோ உரங்களைக் கொடுப்போம். இவ்வளவுதான் சாத்துக்குடிக்கு நாங்கள் செய்யும் பராமரிப்பு.

சாத்துக்குடி
சாத்துக்குடி

கன்றுகள் நடவு செய்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு மகசூல் கொடுக்க ஆரம்பித்தது. என் அனுபவத்தில் எலுமிச்சை சாகுபடி செய்யும் நிலங்கள் அனைத்திலும் சாத்துக்குடி நன்கு வளர்கிறது. வடிகால் வசதி அவசியம். மழைநீர் தேங்கக்கூடாது. காய்களில் சில நேரங்களில் கறுப்பு நிறத்தில் தேமல் போல் இருக்கும். ஆனால், உள்ளே இருக்கும் பழத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இயற்கை விவசாயத் தோட்டங்களில் தொடர்ந்து வாங்குபவர்களுக்கு இது தெரியும். ஆனால், சந்தைக்குக் கொண்டு போனால் கறுப்பு நிற தேமலை காரணம் காட்டி குறைந்த விலைக்குக் கேட்பார்கள். அதனால், அங்கே கொண்டு செல்லாமல் தோட்டத்திலேயே வைத்து விற்பனை செய்து வருகிறேன்’’ என்று சொன்ன ஸ்டீபன்,

ஸ்டீபன் ஜெபக்குமார்
ஸ்டீபன் ஜெபக்குமார்

“சாத்துக்குடியில் வில்ட் என்ற நோய் தாக்குகிறது. இந்த நோய் தாக்கிய சில மாதங்களில் மரம் பட்டுபோய்விடுகிறது. இது எப்படி ஏற்படுகிறது என்பதே தெரிவதில்லை. ஆண்டுக்கு 2 முதல் - 3 சதவிகித மரங்கள் பட்டுபோய் விடுகின்றன. இந்தப் பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால், சாத்துக்குடி சாகுபடியில் விஷயம் தெரியாமல் இறங்கி விட்டோமோ என்கிற அச்சமும் வருகிறது” என்று வருத்தத்துடன் பகிர்ந்தார்.

சோழவரத்தில் நமக்குத் தெரிந்தவர்களின் பண்ணை இருக்கிறது. அங்கே, தென்னைக்கு நடுவே எலுமிச்சை போட்டுள்ளனர். அங்கேயும் இப்படித்தான் அந்த மரங்கள் பட்டுப்போய்விடுகின்றன என்று சொன்னார் அந்தப் பண்ணையைப் பார்த்துக் கொள்ளும் ராஜா. இதேபோல பெரம்பலூர், திண்டுக்கல் பகுதியிலிருக்கும் நமக்குத் தெரிந்த விவசாயிகளும் இத்தகைய பிரச்னையைச் சந்திப்பதாக சமீபத்தில் நம்மிடம் தெரிவித்திருந்தனர். என்னதான் பிரச்னை என்று தெரிந்துகொள்வதற்காக, பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி சங்கரனிடம் கேட்டோம்.

சங்கரன்
சங்கரன்

“சிட்ரஸ் வகை மரங்களான சாத்துக்குடி, எலுமிச்சை மட்டுமல்ல, ஆரஞ்சு, பப்ளிமாஸ் போன்றவற்றிலும் மரம் காய்ந்து போகும் பிரச்னை உண்டு. இதைச் ‘சிட்ரஸ் வீரிய குறைபாடு’ (Citrus Decline) என்று குறிப்பிடுவோம்” என்று சொன்ன சங்கரன், இப்பிரச்னை பற்றியும் அதற்கான தீர்வு குறித்தும் விரிவாகவே நம்மிடம் விளக்கினார்.

“மரம் காய்ந்துபோவதற்கு மூன்று காரணங்கள் உண்டு. தண்டு துளைப்பான், நூற்புழுக்கள் தாக்குதல், சத்துப் பற்றாக்குறை ஆகியவைதான். மரத்தின் தண்டுப்பகுதியைப் பார்த்தால் ஓட்டைகள் இருக்கும். மரத்தின் தண்டுப் பகுதியை தட்டிப் பார்த்து தண்டு துளைப்பான் தாக்குதலைக் கண்டுபிடித்துவிடலாம்.

சத்துப் பற்றாக்குறையை மண் பரிசோதனை மூலமாகத் தெரிந்துகொள்ளலாம் அல்லது இலைகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதை வைத்தும் அறிந்து கொள்ளலாம். ஆனால், நூற்புழுக்கள் தாக்குதலை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதுபற்றித் தெரியாமல் சாத்துக்குடி சாகுபடிக்கு வர சிலர் தயங்குகிறார்கள்.

சாத்துக்குடி
சாத்துக்குடி

சாத்துக்குடி மரங்களின் வேர்களில் வேர் முடிகள் இல்லாததால், மண்ணிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் தன்மை, குறைவாகத்தான் இருக்கும். இந்த நிலையில் நூற்புழுக்கள் தாக்கினால் சாத்துக்குடி மரங்களின் வேர்கள் மண்ணிலிருந்து சத்துகளை உறிஞ்சி மரத்துக்கு அளிக்கும் தன்மை மிகவும் குறைந்து விடுகிறது. இந்த நூற்புழுக்களை ஆங்கிலத்தில் நெமடோட்ஸ் (Nematodes) என்று அழைப்போம். உயிர் உரங்களைப் பயன்படுத்தி இப்பிரச்னையை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.

1,000 கிலோ வேப்பம் பிண்ணாக்கு அல்லது புங்கன் பிண்ணாக்கை (இது 200 மரங்களுக்கான அளவு) எடுத்துக்கொள்ள வேண்டும். வேப்பம் பிண்ணாக்கு வாங்க வசதி இல்லாதவர்கள், மண்புழு உரம் அல்லது எரு எடுத்துக்கொள்ளலாம். இதனுடன் தலா 2 கிலோ பேசில்லோமைசிஸ், சூடோமோனஸ், ட்ரைக்கோ டெர்மா விரிடியை கலந்துகொள்ள வேண்டும். இதை நன்றாகக் கலக்கி நிழல் பாங்கான இடத்தில் வைத்து 25 சதவிகிதம் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளித்து 20 நாள்கள் பராமரித்து வந்தால், சத்துகள் நிறைந்த இயற்கையான கலப்பு உயிர் உரம் தயாராகிவிடும். இந்த உரத்தில் 50 கிலோ எடுத்துக்கொண்டு அதை 1,000 கிலோ மட்கிய தொழுவுரத்தோடு கலந்து மரத்தைச் சுற்றித் தலா 20 கிலோ அளவுக்கு வைத்து வர வேண்டும். மரத்திலிருந்து 3 அடி தள்ளி வட்டமாக 15 செ.மீ ஆழத்தில் வாய்க்கால் போன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உரத்தை வைத்துத் தண்ணீர் விட வேண்டும். தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை இதுபோல் வைத்து வர வேண்டும்.

சாத்துக்குடி
சாத்துக்குடி

அதேபோன்று தண்டு துளைப்பான் சாத்துக்குடி மரங்களை அதிகம் தாக்குகிறது. அதற்கு முதலில் மரத்தைக் கவாத்து செய்துவிட வேண்டும். ஜிங்க், போரான், காப்பர் சத்து பற்றாக்குறையைத் தீர்க்க நுண்ணூட்டச்சத்துகள் கொடுக்க வேண்டும். எங்கள் மையம் சார்பாக வெளியிடப்படும் அர்கா சிட்ரஸ் ஸ்பெஷல் 75 கிராம் (நுண்ணூட்ட கலவை உரம்), 30 கிராம் காதி சோப்பு, 2 எலுமிச்சை பழங்களின் சாறு ஆகியவற்றை 15 லிட்டர் சுத்தமான தண்ணீரில் கலந்து ஒரு மரத்துக்கு அரை லிட்டர் என்ற கணக்கில் 3 மாதங்களுக்கு ஒருமுறை தெளித்து வந்தால் நுண்ணூட்டச்சத்துப் பற்றாக்குறை தீர்க்கப்படுவதோடு விளைச்சலும் நன்றாக இருக்கும். சிட்ரஸ் வகைகளான எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு, பப்ளிமாஸ் உள்ளிட்ட அனைத்து மரங்களுக்கும் மேற்சொன்னவை பொருந்தும்” என்றார்.


தொடர்புக்கு,

முனைவர் சங்கரன்,

செல்போன்: 96207 73809